
ஓர் உயிர்... ஒரு வழக்கு... ஒரு தேசம்
இந்திய தேசத்தின் கறுப்பு நாள் 2012 டிசம்பர் 16... யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது இந்த நாளை.
தெற்கு டெல்லியின் முனிர்கா பேருந்து நிலையத்தில் இரவு 9:30 மணிக்குத் தன் நண்பருடன் பேருந்துக்காகக் காத்திருந்தார் 23 வயதான அந்த இளம்பெண். முனிர்காவுக்குச் செல்வதாக வந்து நின்ற தனியார் பேருந்தில் இருவரும் ஏறிக்கொண்டார்கள்.
வெறும் ஆறே பேர் அமர்ந்திருந்த அந்தப் பேருந்தின் கதவு ஜன்னல்கள் உடனடியாக அடைக்கப்பட்டு, வேறு வழியாகப் பேருந்தைத் திருப்பினார் டிரைவர். என்ன நடக்கிறது என்பதைக் கணிப்பதற்குள் அந்தப் பெண்ணுடன் வந்தவரைத் தாக்கி, அந்தப் பெண்ணைக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர் அந்த ஆறு மிருகங்களும். அதோடு நில்லாமல், அந்தப் பெண்ணையும் வாலிபரையும் பேருந்தில் இருந்து தூக்கி சாலையில் வீசிவிட்டுச் சென்றார்கள். உயிருக்குப் போராடிய அந்த இருவரும் மீட்கப்பட்டு இரவு 11 மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது இந்தச் சம்பவம். குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கானோர் நடத்திய பேரணி காவல்துறையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பல நகரங்களில் வன்முறை வெடித்தது. அந்தளவுக்கு மக்கள் கொதித்துப் போயினர். மறுபுறம் கருப்பை மற்றும் குடல் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோச மானது. பின்னர் அவரை விமானம் மூலம் சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது இந்திய அரசாங்கம்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ‘நிர்பயா’ என்று அழைக்கப்பட்டார். ‘நிர்பயா’ என்றால், ‘பயம் அற்றவள்’ என்று பொருள். சிங்கப்பூர் சிகிச்சையும் பலனளிக்காமல் 2012 டிசம்பர் 29 அன்று உயிரிழந்தார் நிர்பயா.
நிர்பயாவுக்கு ஏற்பட்ட வன்கொடுமையும், அதன் பின்னான மரணமும் இந்தியாவுக்குச் சர்வதேச அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தின. சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே, குற்றவாளிகளைக் கைது செய்தது டெல்லி காவல்துறை. ராம் சிங், முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா ஆகிய ஐவரும், 17 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வழக்கு விசாரணையின்போது, சிறையில் இருந்த குற்றவாளி ராம் சிங் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.
குற்றவாளிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மா “வன்கொடுமை நிகழ்ச்சிகளில் அப்படியான சூழல்கள் உருவாவதற்குக் காரணம் அந்தப் பெண்களே. திருமணமாகாத நிர்பயா, இரவில் ஆண் நண்பருடன் சுற்றிக்கொண்டிருந்தார்'' என்று கூறி, பலரின் வெறுப்புக்கு உள்ளானார். அவரை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு நிறைவேற்றப்படவில்லை.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது விரைவு நீதிமன்றம். குற்றவாளிகளுள் ஒருவனான சிறுவனுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, 2015-ம் ஆண்டு விடுதலை அளிக்கப்பட்டது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்த நான்கு குற்றவாளிகளும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். டெல்லி உயர் நீதிமன்றமோ, `மக்கள் திரண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள அரிதான சம்பவங்களுள் அரிதானது இது’ என்று கூறி, தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் குற்றவாளிகள்.
தூக்குத் தண்டனையை நிறை வேற்றிய காவலாளி பவன், “என் வாழ் நாளில் முதன்முறையாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நால்வரின் தூக்குத் தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 2017-ம் ஆண்டு, இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றதோடு, தண்டனையையும் உறுதி செய்தது. `குற்றவாளிகள் நால்வரும் செய்தது காட்டுமிராண்டித்தனமான குற்றம்' என்றும் `இது சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கியுள்ளது' என்றும் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.
குற்றவாளிகள் நால்வரும் தனித்தனியே ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் அளித்த கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. கடந்த ஜனவரி 7 அன்று, `குற்றவாளிகள் நால்வருக்கும் ஜனவரி 22 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்' என வாரன்ட் பிறப்பித்தது டெல்லி உயர் நீதிமன்றம். குற்றவாளிகளுள் முகேஷ் என்பவர் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லையென்றும் பேருந்தை மட்டுமே ஓட்டியதாகவும் குடியரசுத் தலைவரின் கதவைத் தட்டினார். மற்றொரு குற்றவாளியான பவன், குற்றத்தை நிகழ்த்தியபோது தான் சிறுவன் எனவும், அதனால் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
சிறை விதிகளின்படி, தூக்குத் தண்டனை குற்றவாளிகள் நால்வரில், யாரேனும் ஒருவரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், அந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்படாது. இந்தச் சூழலில் கருணை மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன.
கடந்த மார்ச் 4 அன்று, நால்வருக்கும் மீண்டும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, மார்ச் 20 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய குற்றவாளிகள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 2020 மார்ச் 20 அன்று, டெல்லி திகார் சிறையில், `நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.
ஐந்து குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் உத்தரப்பிரதேசத்தின் படாவுன் மாவட்டத்திலுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் செய்த குற்றத்தைக் கேள்விப்பட்ட குடும்பம் அவனைக் கைகழுவியது.
சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடிய மக்கள், ‘நிர்பயா ஜிந்தாபாத்’ என்ற முழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தன் மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏழு வருடங்களாகப் போராடி வந்தவர் நிர்பயாவின் தாய் ஆஷா சிங், “நிர்பயாவின் படத்தைக் கட்டியணைத்து அழுதேன். தாமதமாக நடந்த போதும், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று மகிழ்ந்தார்.
நிர்பயா சம்பவம் `டெல்லி க்ரைம்' என்ற பெயரில் நெட்ஃப்ளிக்ஸ் தொடராக வெளிவந்துள்ளது.