
ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்
ஜி.கௌதம்
‘படிக்கப் படிக்க `பகீர்’ என்றிருக்கிறது. பாவம் கோயம்பேடு வியாபாரிகள். அவர்கள் ஏன் நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் பெற முயற்சி செய்யவில்லை?’ எனக் கேட்டு, ஜூனியர் விகடன் வாசகர்கள் பலரும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.
உணவு தானிய வணிகர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். இரண்டு முறை வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, கோயம்பேடு மார்க்கெட்டை ஏன் திறக்கக் கூடாது என்று எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இதுவரை விளக்கம் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் வழக்கு முடிவுக்கு வரவில்லை.
அதன் பிறகு வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. `உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று கோரி அடுத்தடுத்து மூன்று புதிய மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் உணவு தானிய வணிகர்கள். ஆனாலும், நீதி கிடைத்தபாடில்லை.
வணிகர்களில் இதர தரப்பினர்களான காய்கறி, பழம், மலர் வணிகர்கள் நீதிமன்றப் படியேறவில்லை. காரணம், பயம்! `அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நம்மீது கோபம் கொண்டுவிடுவார்களே... அதன் பின்னர் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பார்களே...’ என்ற பயம். அப்பாவி வியாபாரிகளின் இந்த பயம்தான் அதிகாரக் குளறுபடிகள் தொடர்வதற்குக் காரணம். ஆனால், சாது மிரண்டால் காடு கொள்ளுமா? இப்போது விழித்துக்கொண்டிருக்கிறார்கள் வியாபாரிகள். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் நடத்தத் தயாராகிவருவதாகத் தகவல் கிடைக்கிறது.

சரி... நானே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? வியாபாரிகளின் குரல்களையும் கேட்போம்.
மணிவண்ணன், காய், கனி, மலர் அங்காடி வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் மற்றும் உணவு தானிய வணிகர்கள் சங்கச் செயலாளர்
கோயம்பேடு மார்க் கெட்டைத் திறக்குறதுக்காக ஆக்கபூர்வமான யோசனைகள் பலவற்றை அதிகாரிகள்கிட்ட சொன்னோம். அதையெல்லாம் மாதவரத்துலயும் திருமழிசையிலயும் அமல்படுத்த முயற்சி செஞ்சாங்களே ஒழிய, கோயம்பேட்டைத் திறக்க அவங்களுக்கு மனசே இல்லை. அதிகாரிகள் செஞ்ச முயற்சிகளெல்லாமே படுதோல்வியிலதான் முடிஞ்சிருக்கு. யாருக்கும் பலனில்லை. கோயம்பேடுங்கிறது யானை மாதிரி. மாதவரம், திருமழிசையெல்லாம் பூனை மாதிரி. `யானையும் பூனையும் ஒண்ணுதான்’னு பிடிவாதம் பிடிச்சபடி இருக்காங்க அதிகாரிகள். வறட்டுப் பிடிவாதம் இது. வணிகர்களுக்கு மட்டுமில்லை... அரசுக்கும் இதனால கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு. மொத்த வியாபாரிகள், சிறு மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் எல்லாருக்கும் இழப்பு. யாரும் இப்போ நிம்மதியா இல்லை. வியாபாரிகளெல்லாம் நிம்மதியா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி மூணு மாசமாச்சு. வியாபாரிகளை நம்பியிருக்கும் நூத்துக்கணக்கான பணியாளர் களும், ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர் களோட குடும்பமும் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துட்டு பரிதவிச்சிக்கிட்டு இருக்காங்க.
ராஜசேகர், தலைவர், அனைத்துக் காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
ஐயாயிரம் வியாபாரிகள் குடும்பங்களும், அவர்களிடம் பணிபுரியும் சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் குடும்பங்களும், சுமார் இருபத்தைந்தாயிரம் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டன. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கிட்டே இருக்கு. எங்க கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாம நாள்களைக் கடத்திக்கிட்டே இருக்காங்க. வறுமையின் காரணமா, தெய்வாதீனமா இதுவரை விபரீதம் எதுவும் நடக்கலை. இனியும் நடக்காம இருக்கணும். அதுக்கு அரசு மனம் இரங்கணும். போர்க்கால அடிப்படையில கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க முன்வரணும். அதிகாரிகளும் வியாபாரிகளும் கூடிப் பேசி ஒரு கமிட்டி அமைக்கணும். அந்த கமிட்டி மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கணும். எல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும்னு நம்பறேன்.

மூக்கையா, தலைவர், கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கம்
எங்க மார்க்கெட்டை மூடி 76 நாளாச்சு. தொழில் பண்ண வேற இடமும் இன்னும் கொடுக்கலை. வாழ்வாதாரம் போச்சு. வருமானமும் போச்சு. அப்பப்போ அஞ்சு பத்துன்னு சேமிச்சுவெச்சிருந்ததால நானெல்லாம் எப்படியோ சமாளிச்சுட்டேன். இனிமேல் என்ன பண்றதுன்னு தெரியலை. சாதாரண சிறு வியாபாரிகளோட நிலைமையெல்லாம் ரொம்பவே பரிதாபம். அவங்கள்லாம் கடந்த ரெண்டு மாசமா தினமும் மூணு வேளை சாப்பிட்டிருக்க வாய்ப்பே இல்லை. இதுக்கு மேலயும் தாக்குப்பிடிக்க முடியாது. வானகரத்துல அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் ஒன்றை நாங்களே தேடிப்பிடிச்சு, அறநிலையத்துறை அதிகாரிகள்கிட்ட பேசி சம்மதம் வாங்கி, அதை சி.எம்.டி.ஏ அதிகாரிகள்கிட்டயும் சொல்லியிருக்கோம். துணை முதல்வரையும் சந்திச்சுப் பேசியிருக்கோம். அரசு நல்ல முடிவு எடுக்கும்னு உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டுக் காத்திருக்கோம். எல்லாத்துக்கும் மேல கோயம்பேடு மார்க்கெட்டை சீக்கிரம் திறக்கணும்ங்கிறதே எங்க கோரிக்கை!
செல்வராஜ், பொதுச் செயலாளர், கோயம்பேடு அனைத்து தக்காளி வியாபாரிகள் சங்கம்
போலீஸ்காரர்களுக்கு கொரோனா வந்திருக்கு. டாக்டர்களுக்கு கொரோனா வந்திருக்கு. கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு கொரோனா வந்திருக்கு. அவங்க இந்தப் பேரிடர் காலத்துல செய்யறது மக்கள் சேவை. அப்படித்தான் கோயம்பேடு வியாபாரிகளும். நாங்களும் உயிரைப் பணயம் வெச்சுத்தான் மக்கள் சேவை செய்யறோம். அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையில்லாம மக்களுக்குக் கிடைக்க உழைக்கிறோம். கோயம்பேடு கடைகளுக்கு நாங்க சொந்தக்காரங் கன்னாலும் மொத்த வளாகத்தையும் நிர்வாகம் பண்றது அங்காடி நிர்வாகக்குழு அதிகாரிகள்தான். மூடிய கோயம்பேடு மார்க்கெட்டைச் சுத்தப்படுத்தி, கிருமிநீக்கம் செய்யுற வேலையெல்லாம் செஞ்சுட்டாங்க. மறுபடியும் நாங்க கோயம்பேட்டுல இருந்தே செயல்பட அரசு அனுமதிக்கணும். அரசு வலியுறுத்தும் கட்டுப்பாடுகளையும், சமூக விலகலையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிச்சயம் கடைப்பிடிப்போம். அரசு முயற்சிகளுக்கு எப்போதும் துணையா இருப்போம்.
அரவிந்த், பழ வியாபாரி
வியாபாரிகளான நாங்க படும் வேதனைகளைச் சொல்லி மாளாதுங்க. வாழ்ந்து கெட்டவங்க மாதிரி இருக்கோம். வாங்கும் பழங்களை வைக்க இடம் இல்லை. விற்க முடியலை. விற்காததைப் பாதுகாத்து வைக்கவும் முடியலை. நாளுக்கு நாள் கஷ்டமும் நஷ்டமும் அதிகரிச்சுக்கிட்டே போகுது. படிச்ச படிப்புக்கு வேற தொழில் செய்யப் போயிருந்தா இப்படியெல்லாம் கஷ்டம் வந்திருக்காது. காலம் காலமா தாத்தா, அப்பான்னு பெரியவங்க செஞ்சு வந்த தொழில்... அத்தியாவசியப் பொருளை மக்களுக்கு விநியோகிக்கும் தொழில். அதனால மனசுக்கு நிறைவா இருக்கும்னு இந்தத் தொழிலுக்கு வந்தேன். இப்போ ஒவ்வொரு நாளுமே போராட்டமே வாழ்க்கைனு ஆகிடுச்சு. எங்களையே நம்பியிருக்கும் தொழிலாளிகள் படும் கஷ்டம் இன்னும் கொடுமை. கோயம்பேடு கான்கிரீட் கட்டடம். அங்கே இருந்தாலாவது ஒரு மூலையில கஞ்சியாவது காய்ச்சி சாப்பிட்டு, ஓரமா படுத்துக்குவாங்க. மாதவரத்திலும் திருமழிசையிலும் அதுக்கும் வழியில்லை!

முத்து, வாகன ஓட்டுநர்
சொந்த ஊர் கடலூர் மாவட்டம், ரெட்டக்குறிச்சி. பொழைப்புக்காக சென்னை வந்து பல வருஷங்களாச்சு. சின்னதா ஒரு சரக்கு வண்டி ஓட்டுறேன். கோயம்பேடு மார்க்கெட்டை நம்பித்தான் குடும்ப ஜீவனம் ஓடுது. மார்க்கெட்டை மூடினதும் மாதவரம் வந்துட்டேன். முன்னே மாதிரி வருமானம் இல்லைன்னாலும், அரை வயித்து சாப்பாட்டுக்காச்சும் வேலை கிடைச்சுது. பதினஞ்சு நாளுக்கு முன்னாடி அதுலயும் இடி விழுந்துடுச்சு. சரக்கு ஏத்த போறப்போ வழியில போலீஸ்காரங்க நிறுத்தினாங்க. ‘ஏன்டா வெறும் வண்டியோட போறே...’ன்னாங்க. ‘நான் போய்த்தான் சரக்கை எடுத்துக்கிட்டு மாதவரம் போகணும்’னு சொன்னேன். அவங்க நம்பலை. வண்டியைப் பிடுங்கிவெச்சுக்கிட்டாங்க. நேத்துதான் திரும்பக் கொடுத்தாங்க. வண்டி, வண்டியாவே இல்லை. சர்வீஸுக்குக் கொடுத்திருக்கேன். யார் கால்லயாச்சும் விழுந்து கடன் வாங்கி, வண்டியை எடுக்கணும். அப்புறம்தான் சோத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.
சரி, இதற்கெல்லாம் அதிகாரிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
(தொடரும்)
தொடர்புக்கு: editorGGowtham@gmail.com