
அரசு இடமாக இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம். அது அவர்களது பட்டா நிலம்.
நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் சிலை சத்தியமூர்த்தி பவனில் திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், ‘கக்கன் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தரைமட்டமாக்கிவிட்டனர்’ என்றொரு அதிர்ச்சிப் புகார் கிளம்பியிருக்கிறது!
என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள மதுரை மாவட்டம், தும்பைப்பட்டிக்குச் சென்றோம். கக்கனின் தம்பி பெரியகருப்பனின் மகளும், புகார் கொடுத்தவருமான தவமணி நம்மிடம், “எங்கள் குடும்பத்தினர் இறந்தால் அடக்கம் செய்வதற்கும், அவர்களின் அஸ்தியை வைப்பதற்கும் 5 சென்ட் நிலத்தைத் தனியாக எழுதிவைத்திருக்கிறார் எங்கள் தாத்தா பூசாரி கக்கன். அந்த இடத்தில்தான் கக்கன் பெரியப்பாவின் அஸ்தி உட்பட குடும்பத்தில் இறந்துபோன 18 பேரின் அஸ்தியையும் வைத்து வழிபட்டுவந்தோம்.

இந்த நிலையில், எங்கள் தாத்தாவின் இரண்டாவது தாரத்தின் பேரனான பாஸ்கர பூபதி, கடந்த ஜூலை மாதம் புனிதமான அஸ்தி இருந்த இடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, அதில் ஒரு லிங்கத்தையும் நட்டுவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அஸ்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து சென்ட் நிலத்தோடு, அருகில் இருக்கும் நிலங்களையும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் செய்வதே அவரது நோக்கம். இது குறித்து கக்கனின் மருமகள் பூமாலை காசிவிஸ்வநாதனும், நானும் முதலமைச்சர் வரைக்கும் புகார் அனுப்பினோம். ஆனால், பாஸ்கர பூபதி பா.ஜ.க-வில் இருப்பதால், அவர்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகிறார்கள்” என்றார்.
குற்றம்சாட்டப்படும் பாஸ்கர பூபதியிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது, “கக்கன் ஜி அஸ்தியை மட்டுமல்ல... எங்க அப்பா உட்பட உறவினர்கள் பலரின் அஸ்தியையும் அங்குதான் வைத்திருந்தோம். அங்கு எல்லோரும் சென்று வர வசதியாக நான்தான் அதிகாரிகளிடம் சொல்லி பேவர் பிளாக் கற்கள் பதித்தேன். அதேநேரத்தில், குடும்பத்தில் தொடர்ச்சியாக இளம் வயது மரணங்கள் நிகழ்ந்தன. இதனால் குடும்பத்தினர் நிம்மதி இல்லாமல் தவித்தனர். ஜோசியர்களிடம் விசாரித்ததில், ‘இனி அஸ்தியை வழிபடாதீர்கள். அதனால்தான் தொடர்ந்து மரணங்கள் நிகழ்கின்றன’ என்று பரிகாரம் கூறினார்கள். குடும்பத்தினரின் நலன் கருதிதான், அங்கு ஆத்ம லிங்கத்தை வைத்தோம். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார்.

முதல்வருக்குப் புகார் சென்றதைத் தொடர்ந்து மேலூர் தாசில்தார் தரப்பிலும் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தும்பைப்பட்டி வி.ஏ.ஓ-விடம் இது குறித்துப் பேசியபோது, ‘‘அரசு இடமாக இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம். அது அவர்களது பட்டா நிலம். குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் தனிப்பட்ட பிரச்னை என்பதால், எங்களால் தலையிட முடியவில்லை’’ என்றார்.