
கண்முன் நிகழ்ந்த சாதனை... விழித்துக்கொள்ளுமா தமிழகம்?
கடும் வறட்சியில் தவிக்கிறது தமிழகம். சென்னையில் குளிக்க மட்டுமல்ல... குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. இந்தியாவிலேயே ரத்தநாளங்களைப் போல பின்னிப்பிணைந்த நீர்நிலை வழி மேலாண்மை தமிழகத்தைப் போல வேறு எங்கும் இல்லை. தமிழகத்தின் ஒவ்வோர் ஏரியும் கண்மாயும் ஆறும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்று நிரம்பினால், மற்றொன்று... அதுவும் நிரம்பினால் அடுத்து என்று இறுதியாகக் கடல் தாய் வரையிலும் தாகம் தணிக்கும் நமது நீர் நிலைகள். கழுகுப் பார்வையில், ரத்தநாளங்களைப் போலிருக்கும் இந்த நீர் வழிப்பாதைகள், செல்லும் வழி எல்லாம் நிலத்தடி நீரையும் செழிப்புடன் தக்கவைத்திருந்தன. ஆனால், இன்றோ அத்தனையையும் சிதைத்துவிட்டோம். இன்று கான்கிரீட் காட்டுக்குள் அடைபட்டு, குடிநீருக்கு கையேந்தி நிற்கிறோம். இவ்வளவு நெருக்கடியிலும் கடந்த கால் நூற்றாண்டில் தமிழகத்தில் பெயர் சொல்லும்படியாக ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால், பக்கத்து மாநிலங்கள் விழித்துக்கொண்டுவிட்டன. இதன் பின்னணியில் இந்தக் கட்டுரை...
விவசாயம் நெருக்கடியிலிருக்கும் மாநிலங்களில் ஒன்று தெலங்கானா. விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாக நிகழும் மாநிலமும்கூட. இதைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் பெரிதாகப் பலன் இல்லை. இதனால் 2007-ம் ஆண்டு அப்போதைய பிரிக்கப்படாத ஆந்திரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான், ‘பிரனஹிதா செவலா’ நீர்ப்பாசனத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி, தடுப்பணைகள் கட்டி 16.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி விவசாய, குடிநீர் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2014-ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமான பிறகு, ஆட்சிக்கு வந்தார் சந்திரசேகர ராவ். புதியதாக ஒரு திட்டத்தைத் தீட்டினார். அதுவே, ‘காலேஸ்வரம்’ நீர்ப்பாசனத் திட்டம். 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டத்துக்கு 25,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ.80,196 கோடி வரை செலவாகியிருக்கிறது. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை 2019, ஜூன் 21-ம் தேதி திறந்துவைத்திருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். எப்படி செயல்படுகிறது இந்தத் திட்டம்?
ஏழு இணைப்புகள்... 75 சதவிகிதம் பயன்!
தெலங்கானாவின் முக்கிய நதி கோதாவரி. சுமார் 1,450 கி.மீ நீளம் கொண்டது. நதியின் குறுக்கே ஏற்கெனவே நிசாமாபாத் மாவட்டத்தில் ஸ்ரீராம் சாகர் அணை கட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதிக மழைப் பொழிவு காலங்களில் வெள்ளநீர் பாதிப்பை ஏற்படுத்திவந்தது. இதைத் தடுக்கும் வகையில்தான் மேற்கண்ட திட்டத்தை ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில் தொடங்கினார் சந்திரசேகர ராவ். இந்தத் திட்டத்துக்கு ஆரம்பக் கட்டமாக மத்தியச் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியது. கோதாவரி ஆறும் பிரனஹிதா ஆறும் இணையும் ஜெய்சங்கர் மாவட்டத்தின் மெட்டிகடா அணைதான் இந்தத் திட்டத்தின் ஆரம்ப இடம். இங்குதான் பிரமாண்டமான அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து கோதாவரி ஆற்றின் எல்லம்பள்ளி, சுண்டிலா, அண்ணபுரம், ஸ்ரீராம் சாகர் அணைகளிலிருந்து இரண்டு மிகப் பெரிய கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மிட் மன்னார் மற்றும் லோயர் மன்னார் ஆகிய நீர்த்தேக்கங்களில் விடப்படுகிறது.

எல்லம்பள்ளி தடுப்பணை நீரானது, ஸ்ரீராம் கால்வாயில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து பல அணைகளுக்குக் கொண்டு செல்லப்படும். அதில், மெட்டிகடா அணையிலிருந்து தெலங்கானா மாநிலத்தின் 70 சதவிகிதப் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும். அதற்காக 1,832 கி.மீட்டர் தொலைவுக்குக் கால்வாய்கள், குழாய்கள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கப் பகுதியின் நீளம் மட்டும் 203 கி.மீட்டர். இதன் மூலம் வரும் ஜூலை மாதத்திலிருந்து தெலங்கானாவில் 13 மாவட்டங்கள் பயன்பெறத் தொடங்கும். இந்தத் திட்டம் மொத்தமாக ஏழு இணைப்புகள் கொண்ட தொகுப்பாக இருக்கிறது. அதாவது, ஏழு இணைப்புகள் மூலம் ஓர் அணையிலிருந்து மற்றொரு தடுப்பணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 180 டி.எம்.சி தண்ணீர் விநியோகிக்கப்படும். அத்துடன் 20 அணைகள் ஆழப்படுத்தப்பட்டு, 13 மாவட்டங்களில் 145 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படும். இந்தத் திட்டமானது தெலங்கானா மாநிலத்தின் 75 சதவிகித குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.
81 கி.மீ சுரங்கப்பாதை!
பல கிலோ மீட்டர் தூரத்துக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனால் தரைக்கு அடியில், தரைக்கு மேலே என எட்டு நீரேற்று நிலையங்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ராமடுகு நீரேற்று நிலையம் பூமிக்கடியில் 330 மீட்டர் ஆழத்தில் அமைக்கப் பட்டுள்ளது. தரைக்கு அடியில் நீரேற்று நிலையம் எப்படிச் சாத்தியம் என்று நமக்குச் சந்தேகம் வரலாம். இந்தத் திட்டத்தை அறிவிக்கும் முன்னரே லிடார் (LIDAR) தொழில் நுட்பம் மூலம் முழு மாநிலத்தையும் அளந்து விட்டனர். இடத்தின் தன்மை, எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது, எப்படி தண்ணீர் கொண்டு செல்ல லாம் என்று அனைத்து விதமான பணிகளையும் முடித்த பின்னரே இந்தத் திட்டத்தைத் தொடங்கினர். இந்தத் திட்டத்துக்காக 4,000 பொறியாளர்கள், 25,000 வேலையாள்கள் மூன்று ஷிஃப்ட் முறையில் இரவு பகலாக உழைத்தார்கள்.

உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சுரங்க வழி நீரேற்று நிலையமும் இந்தத் திட்டத் துக்காகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பயன்பாட்டிலுள்ள எல்லம்பள்ளி தடுப்பணைக்கும் புதிதாகக் கட்டப்படவிருக்கும் மல்லண்ணா சாகர் நீர்த்தேக்கத்துக்கும் இடையில் சுமார் 81 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஒரே சமயத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் மிக நீளமான மற்றும் மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் என்று சாதனை படைத்துள்ளது காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம். சுமார் 1,832 கி.மீட்டர் நீளமுள்ள பாசன நீர் வழிப்பாதையை உருவாக்கி 203 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வடிகால்கள் மூலமாக இதன் பாசனப் பாதை நிறுவப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் 13 மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும் 17 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மறைமுகமாகவும் பலனடையும்.
தெலங்கானாவில் விவசாயம் காரணமாகத் தற்கொலைகள் இனி இருக்காது. தமிழகமும் விரைவில் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் ஆவல்.
வனத்தை அழித்து அணை... எங்கிருந்து வரும் தண்ணீர்?
வரவேற்புக்கு இணையாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து மோட்டார்களையும் இயக்க சுமார் 4,100 மெகா வாட் மின்சாரம் தேவை. இதன் வருடாந்தர மின்சாரக் கட்டணம் 11,000 கோடி ரூபாய். இந்தத் திட்டத்துக்காக அழிக்கப்பட்ட வனப்பகுதி 3,168 ஹெக்டேர். அழிக்கப்பட்ட வனத்துக்கு மாற்றாக ஏழு மாவட்டங்களில் வறண்ட நிலப்பகுதிகளில் 2,153 ஹெக்டேர் நிலத்தை வனமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், வனத்தை அழித்துவிட்டு நீர்ப்பாசனத் திட்டத்தை உருவாக்கினால், தண்ணீர் எங்கிருந்து வரும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். திட்டம் ஆரம்பிக்கும்போதே, ‘2019-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்’ என்று சொல்லி, அதன்படி முடித்திருக்கிறார்கள்தான். ஆனாலும், கட்டுமானம் முழுவதுமாக முடிய 2022-ம் ஆண்டு வரை ஆகும்.

நிலப் பயன்பாட்டு முறை ஆராய்ச்சியாளரும், பெண் விவசாயிகளுக்கான மஹிளா கிஷான் ஆதிகார் மஞ்ச் (MAKAM) அமைப்பின் உறுப்பினருமான உஷா சீதாலட்சுமி, “வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வந்த பெரிய பகுதிகள் விவசாயம் சாராத பணிகளுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. தொழிற்சாலைகள், வீட்டுமனை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்காகக் காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன” என்று விமர்சித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி பெரும் பரப்பிலான நிலப்பகுதிகள் அணைக்குள் மூழ்கும். இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டது. ஆனாலும் மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு, ‘இந்த நீர்ப்பாசனத் திட்டத்தால் திட்டப் பகுதிகளில் ஏற்பட உள்ள நுண் - கால நிலை மாற்றங்களில் (micro-climatic conditions) கவனம் செலுத்தும்படி தெலங்கானா அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.