மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்

கனவு
News
கனவு

சுரேஷ் சம்பந்தம் - ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஏட்டுவை நோக்கி “உங்களை ராமநாதபுரத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணப்போறாங்க…” என்று எஸ்.பி சொல்வார். உடனே அந்த ஏட்டு “ஐயோ சார் ராமநாதபுரமா? வேணாம் சார்…” என்று பதறி மயங்கிக் கீழே விழுவார். அந்தப் படம் முழுவதுமே ராமநாதபுரம் என்றாலே வறட்சியான பகுதி, வன்முறைக்குப் பேர்போன பகுதி என்கிற பிம்பத்திலேயே சித்திரிக்கப்பட்டிருக்கும். அந்தப் படம் மட்டுமல்ல, 90 சதவிகிதத் தமிழ்த் திரைப்படங்கள் ராமநாதபுரத்தை அப்படித்தான் மக்களுக்குக் காட்டியிருக்கின்றன. மிகைப்படுத்தி சினிமாவில் சொல்லப்படும் இந்த மாவட்டத்தைப் பற்றிய விஷயங்களை, மற்ற மாவட்ட மக்களும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்

ஆனால், ராமநாதபுரம் தமிழ்நாட்டின் வளம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. பனைமரம், மிளகாய், மல்லிகை, சூரிய ஆற்றல், கடல், மீன், உப்பு, சுற்றுலா என ஏராளமான வருவாய் வாய்ப்புகள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. தமிழ்நாட்டில், பனைமரம் அதிகம் வளரும் மாவட்டங்களில் ராமநாதபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. கடலாடி, திருப்புல்லாணி, மண்டபம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்தப் பனைமர அடர்த்தியை நம்மால் காண முடியும். ஆனால் இந்தப் பனைவளம், ராமநாதபுரம் மாவட்ட மக்களால் இதுவரை மேம்பட்ட வழியில் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. சில குறு விவசாயிகளும் பனைத் தொழிலாளர்களும் மட்டுமே பனை வெல்லத் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், இந்தப் பனை வெல்லம் என்பது பழைய தயாரிப்புப் பொருள். இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னால் மகாத்மா காந்தியே, “பனை வெல்லத் தயாரிப்பை ஊரகப் பகுதிகளில் ஊக்குவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு எழுதிய அளவுக்குப் பழைமையானது!

கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்
கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்

மதிப்புக்கூட்டுப் பொருள்களை உருவாக்குவோம்!

ஆகவே, இனிமேலேனும் பனை சார்ந்த புதியவகை மதிப்புக்கூட்டுப் பொருள்களை நோக்கி ராமநாதபுரத்தை நாம் நகர்த்த வேண்டும். அதற்கு முதன்மையாக, பனை மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து, சந்தைப்படுத்துவதற்கு என்று ‘Palm Products Commercial Corporation (PPCC)’ என்ற அமைப்பை தமிழ்நாடு அளவில் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே, `Tamilnadu Palm Products Development Board’ என்ற அமைப்பு இருக்கிறது. இதன் கீழேயே PPCC அமைப்பைக் கொண்டுவந்துவிடலாம். ஆனால், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற மரபுசார்ந்த பனைப் பொருள்களை உருவாக்காமல், புதிய வகை மதிப்புக்கூட்டுப் பொருள்களை உருவாக்கும் நவீன அமைப்பாக PPCC அமைய வேண்டும்.

என் பரிந்துரை என்னவென்றால், PPCC அமைப்பு முற்றிலும் அரசின் பங்களிப்போடு மட்டும் இயங்காமல், தனியார்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாக இயங்குவது நல்ல பயனளிக்கும். ஏனென்றால், தனியாருக்கு வாய்ப்பளிக்கும்போதுதான், புதிய சிந்தனைகளும் செயல்திட்டங்களும் உள்ளே வரும். அது நமக்குப் பல திசைகளிலும் வணிகரீதியிலான வாசல்களைத் திறக்கும். சுருக்கமாக, TIDCO (Tamilnadu Industrial Development Corporation) மாடலைப்போல வடிவமைக்கலாம். அதாவது, TIDCO ஓர் அரசு நிறுவனம் என்றாலும், அது ஒரு Public Financial Institution. அப்படியென்றால், தனியார்களும் உடன் இணைந்து நிறுவனங்களைத் தொடங்க முடியும். உதாரணத்துக்கு, டாட்டா நிறுவனம் TIDCO-வுடன் இணைந்தே ‘டைட்டன்’ நிறுவனத்தைத் தமிழ்நாட்டின் ஓசூரில் தொடங்கியது. அந்தப் பெயரிலுள்ள TI என்ற எழுத்துகள் Tata Industries என்பதையும், TAN என்ற எழுத்துகள் Tamilnadu என்பதையும் குறிக்கும் என்று விளையாட்டாகச் சொல்வார்கள். இப்போது டைட்டன் நிறுவனத்தின் 27.88% பங்குகள் TIDCO-விடமும் 25.02% பங்கு டாட்டாவிடமும் இருக்கின்றன. இதே போலத்தான் PPCC-யும் உருவாக வேண்டும். இதன் தலைமையில் பல Brand-கள் ஒவ்வொன்றாகத் தொடங்கப்பட வேண்டும்.

கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்
கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்

உலகச் சந்தைக்கு பனை சாக்லேட்!

PPCC-ன் முதல் முன்னெடுப்பாக, சாயல்குடியில் பனை சாக்லேட் (Palm Chocolate) தொழிற்சாலையைத் தனியாருடன் இணைந்து உருவாக்கலாம். Expert Market Research அமைப்பின் தரவுகளின்படி, 2021-ம் ஆண்டில் சாக்லேட்டின் உலகச் சந்தை மதிப்பு 10,660 கோடி ரூபாயாக இருக்கிறது. இது 2027-ம் ஆண்டுக்குள் 14,700 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரபல சாக்லேட்டுகளின் தரம் மற்றும் மாதிரியில், நாம் பனை சாக்லேட்டுகளை உள்ளூரில் தயாரித்து, உலக அளவில் சந்தைப்படுத்தலாம். முக்கியமாக, வெள்ளைச் சர்க்கரை கலந்து உருவாக்கப்படும் சாக்லேட் வகைகளால் உடல் பருமன், நீரிழிவு, இதயப் பிரச்னைகள், புற்றுநோய், கல்லீரல் பிரச்னைகள், பல் பிரச்னைகள் உள்ளிட்டவை மக்களை பாதிக்கும் அபாயங்கள் உள்ளன. ஆனால், பனை சாக்லேட் உடல்நலத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத உணவுப்பொருள். இதைப் பிரதானப்படுத்தி விளம்பரம் செய்து, பனை சாக்லேட்டை சர்வதேச Brand-ஆக நாம் வளர்த்தெடுக்கலாம்.

நுங்கு ஜூஸ்... பனை ஒயின்!

அடுத்த பனை சார்ந்த மதிப்புக் கூட்டுப்பொருள், நுங்கு ஜூஸ்! இதற்கு, லிச்சி ஜூஸ் (Lychee Juice) ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். லிச்சி என்பது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் பீகார் போன்ற மாநிலங்களிலும் விளையும் ஒரு பழம். சிவப்பாக Strawberry-போல இருக்கும். அதை நன்றாக ஜூஸ் செய்து கலர் பாட்டிலுக்குள் அடைத்து, சில கவர்ச்சிகர விளம்பர வாசகங்களை ஸ்டிக்கராக ஒட்டி விற்பனை செய்கின்றன ஜூஸ் நிறுவனங்கள். அதில் முன்னணியில் இருப்பது Paper Boat நிறுவனம். இந்த பேப்பர் போட் நிறுவனம், 150 மில்லிலிட்டர் லிச்சி ஜூஸை 20 ரூபாய்க்குச் சந்தையில் விற்கிறது. மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு 235 கோடி ரூபாய் வரை வருமானமும் ஈட்டுகிறது. இதே பேப்பர் போட் நிறுவனத்தின் வழிமுறையைப் பயன்படுத்தி அல்லது Paper Boat நிறுவனத்துடன் ஒரு கூட்டணி ஒப்பந்தம் போட்டு, நாம் நுங்கு ஜூஸ் நிறுவனங்களை ராமநாதபுரத்தில் உருவாக்கலாம். லிச்சி ஜூஸில் பெரும்பாலும் 10 - 12% வரை மட்டுமே லிச்சி சேர்க்கிறார்கள். ஆனால், நுங்கு ஜூஸில் 100 சதவிகிதம் நுங்கு இருக்கும்படி நாம் உருவாக்க வேண்டும். அதுவே வாடிக்கையாளர்களின் உடல்நலத்துக்கு உகந்தது.

கடைசியாக, பனை ஒயின் (Palm Wine)! நன்றாக கவனிக்கவும். இது கள்ளு இல்லை. ஆனால், கள்ளுடன் ஒயின் நுரைமத்தை (Wine Yeast) கலந்து நன்றாகக் கொதிக்கச் செய்து ஒயினாகப் பரிமாற்றம் செய்வது. இதற்கு எடுத்துக்காட்டாக Wilson Creek Sparkling Coconut Wine நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த நிறுவனம் கலிஃபோர்னியாவில் பெரிய ஒயின் கிளப்பையே நடத்திவருகிறது. கூடவே, ஒயினை பாட்டில்களில் அடைத்து உலகம் முழுக்க விற்பனையும் செய்துகொண்டிருக்கிறது. இவர்கள் அதிகமாகத் தென்னங்கள்ளிலிருந்து ஒயினை உருவாக்குகிறார்கள். நாம் அப்படியே பனங்கள்ளுக்கு அதை ‘மரம்' மாற்றிக்கொள்ளலாம்.

Wilson Creek நிறுவனம் 750 மில்லிலிட்டர் அளவு கொண்ட தென்னை ஒயினை, இந்திய ரூபாய் மதிப்பில் 1,332 ரூபாய்க்கு விற்கிறது. நாம் பனை ஒயினைக் கூடுதலாக 500 ரூபாய் வைத்து விற்க முடியும். ஏனென்றால், பனை ஒயின் துறையில் கொடிகட்டிப் பறக்கும் கம்போடியா நிறுவனமான Confiral, 750 மில்லிலிட்டர் ஒயினை இந்திய ரூபாய் மதிப்பில் 1,756 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் செய்ய தமிழ்நாடு அரசு பனங்கள் இறக்குவதற்கு விதித்திருக்கும் தடையை விலக்கிக்கொள்ள வேண்டும். கூடவே, தமிழ்நாடெங்கும் ஒயின் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதியும் வழங்க வேண்டும். சில அரசியல் காரணங்களால், உள்ளூரில் (Domestic) நாம் பனை ஒயினை விற்கக்கூடிய சூழ்நிலை இல்லை. எனவே, வெளிநாடுகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

கனவு - 1 - முதலில் ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும் - புதிய தொடர்

கைவினைப் பொருள்களும், மரமேறும் ரோபோவும்!

உணவுப்பொருள்களைத் தாண்டி, பனை நமக்கு அளிக்கும் முக்கியப் பொருள் பனை ஓலை மற்றும் பனைமட்டை. இவற்றை அழகான கைவினைப் பொருள்களாக உருமாற்றிச் சந்தைப்படுத்தும் வாய்ப்பு நமக்கு உள்ளது. இது இன்றைய ‘China Goods’ தமிழ்நாட்டில் சாத்தியமா என்றால், சத்தியமாகச் சாத்தியம். ஏற்கெனவே ‘பிளாஸ்டிக் தடை’ அமலானபோது பனை ஓலைப் பைகளும், பனைமட்டைக் கோப்பைகளும் நம்மூரில் அதிகமாக விற்றுத் தீர்ந்தன. ஆனால், நாம்தான் அதைச் சில வாரங்களுக்குள் கைவிட்டுவிட்டு மீண்டும் சீன பிளாஸ்டிக் பொருள்களுக்கே திரும்பிவிட்டோம். ஆனால், சீனாவில் பனை ஓலை மற்றும் பனைமட்டை கைவினைப் பொருள்களையே விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். என்னிடம் உரையாடிய சில ராமநாதபுரம் பனை ஆர்வலர்கள், “இங்கிருந்து பனை ஓலையும், பனைமட்டையும் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்றுமதியாகின்றன. அவர்கள் அதை அங்கே அலங்காரப் பொருள்களாக மாற்றி வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பயன்படுத்துகிறார்கள். மூலப்பொருளை வைத்திருக்கும் நமக்கு மூளையே இல்லை...” என்று வருத்தப்பட்டார்கள்.

ஆகவே, நாளை முதல் நாம் மூன்று முக்கியக் காரியங்களைச் செய்ய வேண்டும். முதலாவது, PPCC-யில் பனை கைவினைப் பொருள்களுக்கு என்று தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது, அந்தப் பிரிவின் கீழ் ராமநாதபுரம் போன்ற தமிழ்நாட்டின் அத்தனை மாவட்ட பனை கைவினைஞர்களையும் ஒன்று திரட்டி பனை கைவினைப் பொருள்களைத் தரமாகவும் நவீனமாகவும் தயாரிக்க வேண்டும். மூன்றாவதாக, ‘பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, இயற்கையான மற்றும் சூழலுக்கு உகந்த பனை கைவினைப் பொருள்களையே பயன்படுத்துவோம்' என்று நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். இவை மூன்றையும் சிறப்பாகச் செய்து முடித்தால், அடுத்த சில வருடங்களுக்குள் கோ-ஆப்டெக்ஸ் போன்று பனை கைவினைப் பொருள்களுக்கும் தி.நகரிலும், ஒப்பனைக்கார வீதியிலும், மேலமாசி வீதியிலும் கடைகள் உண்டாகும்.

பனைப்பொருள் சார்ந்த நிறுவனங்களை உருவாக்கும் அதேநேரம், பனைத் தொழிலை நவீனப்படுத்துவதும் அவசியம். நவீனமயப் படுத்துவது என்றால் கணினிமயப்படுத்துவது இல்லை. ஏன் சொல்கிறேனென்றால், இரண்டு கணினிகளை வாங்கி வைத்துவிட்டு ‘நவீனமயப்படுத்திவிட்டோம்’ என்று கணக்கு காட்டிவிடுகிறார்கள் அதிகாரிகள். கணினிமயப்படுத்துவது என்பது Digitalize செய்வது. நான் சொல்வது Modernize செய்வது. அதாவது, Modernize செய்வது என்றால், பழைய வழிமுறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு முற்றிலும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது. உதாரணத்துக்கு, அன்று அம்மியில் அரைத்தோம், இன்று மிக்ஸியில் அரைக்கிறோம் அல்லவா? அதுதான் Modernize செய்வது. அதேபோல, பனைமரத் தொழிலிலும் பழைய வழிமுறைகளை நீக்கிவிட்டு, புதிய வழிமுறைகளை நாம் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

இன்றளவும் தென்னம்பாலையை முதுகில் மாட்டிக்கொண்டு, தலைநாரைக் காலில் கட்டிக்கொண்டு, பாளை வெட்ட ஓர் அரிவாள், மட்டை வெட்ட ஓர் அரிவாள் என்று உயிரைப் பணயம்வைத்தே ஒவ்வொரு பனைமரத் தொழிலாளியும் மரமேறுகிறார். இதை எளிதாக ஒரு வாரத்துக்குள் நம்மால் மாற்ற முடியும். பல பிரபல ஆன்லைன் விற்பனைத் தளங்களில், அதிநவீன மரமேறும் கருவிகள் விற்பனைக்கு இருக்கின்றன. ‘Palm Tree Climbing Machine’ என்று நான்கு வார்த்தையைப் போட்டு டைப் செய்தால் போதும். நான்காயிரம் ரூபாயிலிருந்து பனை மரமேறும் கருவிகள் நம் கண்முன் விரிகின்றன. அவற்றில் எது நடைமுறை சாத்தியமாக இருக்கும் என்பதை ஆராய்ந்து, அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து பனைமரத் தொழிலாளர்களுக்கு வழங்கலாம். சிறிது முயன்றால், பனைமரம் ஏறி பதநீர்ப் பானையை மாட்டுவதற்கும், மட்டை வெட்டுவதற்கும் ரோபோக்களைக்கூட நம்மால் உருவாக்க முடியும். இதை ஒரு Project-ஆக நம் கல்லூரி மாணவர்களுக்கு அளித்துச் செயல்படுத்திப் பார்க்கலாம்.

பனைக்கு அடுத்தபடியாக வேறு என்னென்ன வளங்களும் வாய்ப்புகளும் ராமநாதபுரத்தில் இருக்கின்றன என அடுத்த இதழில் பார்க்கலாம்!

(இன்னும் காண்போம்...)