மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மீண்டும் கனவு - 40 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

வளமும் வாய்ப்பும்
பிரீமியம் ஸ்டோரி
News
வளமும் வாய்ப்பும்

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம், முன் எப்போதையும்விட இப்போது இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் உங்களை எழுத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘கனவு’ தொடரில், திருநெல்வேலி மாவட்டத்துக்குப் பிறகு விழுப்புரத்திலிருந்து தொடங்குகிறேன்!

சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

ஓரிடத்தில் ஓர் ஆலமரம் பரந்து விரிந்து கிளை பரப்பியிருந்தால், அதனருகில் சில அடிகளுக்கு வேறெந்த மரமும் வேரூன்றாது. அப்படியாக, பிரமாண்ட வளர்ச்சியிலிருக்கும் சென்னை மாவட்டத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பெரிய வளர்ச்சிகள் ஏதுமில்லாமல் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார முன்னேற்றத்துக்கான அனைத்துச் சாத்தியங் களும் சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலேயே அமைந்துவிடுவதால், விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் கடந்துபோகிற ஒரு வழிச் சாலையாக மட்டுமே கிடக்கிறது.

பெரும் பரப்பளவைக்கொண்டிருக்கும் (7,22,203 ஹெக்டேர்) விழுப்புரம் மாவட்டத்தில், பெரிய அளவில் தொழிற்சாலைகள்தான் இல்லையே தவிர, வளங்களுக்குப் பஞ்சமில்லை. கரும்பு, நெல், நிலக்கடலை, உளுத்தம் பயறு, பாசிப்பயறு, பெரிய கொய்யா என விவசாயப் பயிர்கள் இங்கு ஏராளம். இவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றினாலே பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். ஆனால், தங்களுடைய மாவட்டத்தின் வளங்களை எப்படி வாய்ப்புகளாக மாற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வைப் பெரிய அளவில் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கவில்லை. படித்து முடித்த ஏராளமான இளைஞர்கள் நிறைந்த விழுப்புரத்தை, பொருளா தாரரீதியில் வெற்றிகரமான மாவட்டமாக மாற்ற வேண்டும். மாற்றுவோம். வாருங்கள்!

பாசிப்பயறு புரோட்டீன் பவுடர்!
பாசிப்பயறு புரோட்டீன் பவுடர்!

பாசிப்பயறு புரோட்டீன் பவுடர்!

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம், முன் எப்போதையும்விட இப்போது இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்திருக்கிறது. மாநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஃபிட்னெஸ் சென்டர்கள், இப்போது திரும்பும் திசையெங்கும் கிளை பரப்பியிருக்கின்றன. அதையொட்டிய பல்வேறு தொழில்களும் வளர்ச்சியின் பாதையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், புரோட்டீன் பவுடர். உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வோர், தாங்கள் பயிற்சி செய்வதற்கான ஆற்றல் சக்தியை அளவுக்கு அதிகமாக இது தருவதால், ஃபிட்னெஸ் பிரியர்களின் விருப்பமான உணவாக இது இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஊட்டச்சத்துக்காகச் சைவ உணவுப் பிரியர்களும், பல மணி நேரம் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களும் புரோட்டீன் பவுடரைத் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்வதால் சந்தையில் புரோட்டீன் பவுடர் விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

பொதுவாக, சுமார் 65 கிலோ எடையுள்ள ஆணுக்கு 54 கிராம் புரதமும், சுமார் 55 கிலோ எடையுள்ள பெண்ணுக்கு 46 கிராம் புரதமும், உடற்பயிற்சி செய்வோருக்குக் கூடுதலாகப் புரதமும் நாளொன்றுக்குத் தேவைப்படும். உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் சராசரியாக 30 கிராம் அளவுக்கு புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறார்கள். சோயா பீன்ஸ், முட்டை, உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவற்றில் தேவையான அளவுக்கு புரோட்டீன் இருக்கிறது. இத்தகைய உணவுப் பொருள்களிலிருந்தே பெரும்பாலும் புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 100 கிராம் முட்டையில் 13 கிராமும், குறைந்தபட்சமாக 100 கிராம் உருளைக்கிழங்கில் 2 கிராமும் புரோட்டீன் நிறைந்திருக்கிறது. இதில் முட்டைக்கு நிகராக அதிக அளவில் புரோட்டீன் சத்தைக் கொண்டிருக்கும் ஓர் உணவுப்பொருள் `பச்சைப்பயறு’ என்றழைக்கப்படும் பாசிப்பயறு.

மீண்டும் கனவு - 40 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

100 கிராம் பாசிப்பயறில் 24 கிராம் புரோட்டீன், 16 கிராம் ஃபைபர் (Fiber), 63 கிராம் கார்போஹைட்ரேட் (Carbohydrate) நிறைந்துள்ளன. உடல்நலனுக்கு கார்போ ஹைட்ரேட் தேவை என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடும். எனவே, பாசிப்பயறிலிருந்து புரோட்டீன் ஐசோலேஷனை மட்டும் தனியாகப் (Extract) பிரித்து எடுக்க வேண்டும். அப்போதுதான் புரோட்டீன் பவுடர் தயாரிக்க முடியும் என்பதால், இதற்காக ஒரு `புரோட்டீன் எக்ஸ்ட்ராக்‌ஷன் பிளான்ட்டை (Protein Extraction Plant) அந்த மாவட்டத்தில் நிறுவி, அதை ஒரு பயோ டெக்னாலஜி சார்ந்த உற்பத்தி நிறுவனமாக மாற்றவேண்டியது அவசியம்.

பாசிப்பயறிலிருந்து `புரோட்டீன் ஐசோலேட்’ எனும் புராடக்டைப் பிரித்து எடுப்பது குறித்த ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தொழிற்சாலையை உருவாக்குவது முக்கியமானதாகும். அமெரிக்காவைச் சேர்ந்த `ஹாம்ப்டன் க்ரீக்’ (Hampton Creek) நிறுவனம் இதில் வெற்றி கண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தார் முட்டைக்கு பதிலாக பாசிப்பயறிலிருந்து புரோட்டீன் ஐசோலேட்டைப் பிரித்தெடுத்து, அதையே தங்களது பல்வேறு உணவுப் பண்டங்களில் (Food Products) பயன்படுத்தி வருகிறார்கள். இந்த புரோட்டீன் ஐசோலேஷன் வழியாகப் பாசிப்பயறிலிருந்து 87.8 சதவிகித புரோட்டீன் கான்சன்ட்ரேட் (Protein Concentrate) கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதால், இதையும் பரிசீலிக்கலாம். இந்த முறையில் 100 கிராம் பாசிப்பயறிலிருந்து 21 கிராம் அளவுக்கே புரோட்டீன் கிடைக்கும்.

புரோட்டீன் பவுடர் தயாரிக்கும்போது அவற்றில் சர்க்கரை, செயற்கை ஊட்டிகள் (Artificial flavours), திக்கெனர்ஸ் (Thickeners), வைட்டமின்ஸ் (Vitamins), மினரல்ஸ் (Minerals) போன்றவற்றைச் சேர்த்துத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அது பலராலும், குறிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபடுவோர்களால் விரும்பி உண்ணப்படும். இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் பாசிப்பயறு புரோட்டீன் பவுடர் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவலாம்.

மீண்டும் கனவு - 40 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6,100 ஏக்கர் அளவுக்குப் பாசிப்பயறு பயிரிடப்படுகிறது. இதில், ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 650 கிலோ அளவுக்கு இரு போகம் விளைச்சல் கிடைக்கிறது. ஆண்டொன்றுக்குச் சுமார் 4,000 டன் அளவுக்கு அதன் மகசூல் இருக்கிறது. இதிலிருந்து 40 சதவிகிதத்தை மட்டும் புரோட்டீன் பவுடர் தயாரிக்க எடுத்துக்கொண்டால், நமக்குத் தோராயமாக 1,500 டன் கிடைக்கும். இதிலிருந்து சுமார் 400 டன் புரோட்டீன் பவுடரை உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ பவுடரைத் தோராயமாக 5,000 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டு வருமானமாகச் சுமார் 200 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உற்பத்தியாகும் பாசிப்பயறையும் சுமார் 20 சதவிகிதம் அளவுக்குக் கொள்முதல் செய்து, புரோட்டீன் எக்ஸ்ட்ராக்‌ஷன் பிளான்ட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இதனால் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பதோடு 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டுதோறும் வருமானம் பெற முடியும்.

புரோட்டீன் எக்ஸ்ட்ராக்‌ஷன் பிளான்ட், புரோட்டீன் பவுடர் தொழிற்சாலை ஆகியவற்றின் வழியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, படித்து முடித்து வேலைவாய்ப்புகளுக்காக அருகிலுள்ள நகரங்களுக்கே படையெடுக்கின்றனர். இந்த மாவட்டத்தில் புரோட்டீன் பவுடர் தொழிற்சாலையை நிறுவுவதால், இளைஞர்கள் பிற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் விகிதம் குறையும். மேலும் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதோடு பொருளாதார முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

(இன்னும் காண்போம்)

***

கனவு நிஜமாகிறது...

ஜூனியர் விகடன் 15.5.2022 தேதியிடப்பட்ட இதழில் வெளியான `கனவு திருவாரூர்’ தொடரில், வைக்கோலிலிருந்து ஆண்டுக்கு 330 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித்தரும் `ஸ்ட்ரா போர்டு’ குறித்து எழுதியிருந்தோம். அதை வாசித்த வாசகர்களில் பலர், கட்டுரையாசிரியரைத் தொடர்புகொண்டு, இந்த புராடக்டுக்கான தொழிற்சாலையை அமைப்பது பற்றி நிறைய சந்தேகங்களைக் கேட்டு, தெளிவுபெற்றனர். இதில், திருவாரூரைச் சேர்ந்த தொழில்முனைவோரும், மருத்துவருமான திலீபன் ஸ்ட்ரா போர்டு தொழிற்சாலையை நிறுவ ஏற்கெனவே திட்டமிட்டிருந்திருக்கிறார். இந்தக் கட்டுரை அவருக்கு மேலும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. நம்மிடம் பேசியவர், “நானும், என் நண்பர் இளவரசனும் இணைந்து `ஜிஐ இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ்’ (GI Import and Exports) எனும் நிறுவனத்தை நடத்திவருகிறோம். இதில் தரைவிரிப்புகள், கயிறுகள் உள்ளிட்ட பல பொருள்களைத் தயாரித்து, விற்பனை செய்துவருகிறோம். இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து சுமார் 1,000 பெண்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறோம். வைக்கோலிலிருந்து ஸ்ட்ரா போர்டு உருவாக்குவது பற்றிய திட்டம் எங்களிடம் ஏற்கெனவே இருந்தது. ஆனால், அதை உருவாக்கத் தேவைப்படும் பல்வேறு தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இணையத்திலும் அது குறித்த விரிவான தகவல்கள் இல்லை. இந்தச் சூழலில்தான் இந்தக் கட்டுரை எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. விகடன் வழியே சுரேஷ் சம்பந்தத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரிடமிருந்து தொழில்நுட்பத் தகவல்கள், சந்தை வாய்ப்புகள், மார்க்கெட்டிங், உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறோம். அரசுடன் இணைந்து ஸ்ட்ரா போர்டு கிளஸ்டரை திருவாரூரில் உருவாக்குவோம்” என்றார். கனவு நிஜமாகட்டும்!