
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
ஒருவர் கைவசம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், கொஞ்சம் தண்ணீரும் இருந்தால் பசி பறந்தோடிவிடும் இல்லையா... இன்றைய அவசர வாழ்வில் பசியின் உடனடித் தீர்வுக்கு பிஸ்கட், பலரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. இப்போது பிஸ்கட்டுகள், பல்வேறு வகைகளில், சுவைகளில் மார்க்கெட்டுகளில் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றுக்கு நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பும் இருப்பதால், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் பெரும் வருமானம் ஈட்டிவருகின்றன. பல கோடி ரூபாய் வருமானம் தரும் இந்த பிஸ்கட்டுகளை உண்பதால், உடலுக்குப் போதுமான அளவுக்குச் சத்துகள் கிடைப்பதில்லை. காரணம், இவற்றில் புரோட்டீன் மிகக் குறைவாகவும், கார்போஹைட்ரேட்டும் சர்க்கரையும் அதிகமாகவும் இருப்பதுதான்!

பொதுவாக உணவுகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), புரதம் (Protein), கொழுப்பு (Fat), நார்ச்சத்து (Fiber) உள்ளிட்ட நான்கு சத்துகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சந்தையில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட்டுகளில் பெரும்பாலும் கார்ப்ஸ், நார்ச்சத்து இவற்றோடு கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கப்படும் பிஸ்கட்டுகளே முன்னணியில் நிற்கின்றன. மார்க்கெட்டில் உடல்நலனுக்கு உகந்த ஒரு பிஸ்கட் இல்லை என்பதால், அந்த இடத்தைக் கைப்பற்றி, ஆரோக்கியம் நிறைந்த ஒரு பிஸ்கட்டை உருவாக்க வேண்டும். இந்த வகை பிஸ்கட்டில் புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்க வேண்டும். கூடவே, சர்க்கரைக்கு பதிலாகக் கருப்பட்டியைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதேபோல சுவை நிறைந்த பிஸ்கட்டாக மாற்றி, பிஸ்கட்டின் நிறம் மற்றும் தோற்றத்தில் புதுமையைப் புகுத்தலாம்.

ஒரு புராடக்ட் வசீகரமானதாகவும், கவர்ந்திழுக்கும் வகையிலும் பிராண்ட் செய்யப்பட்டால், நிச்சயமாக அந்தப் பொருள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் சென்றடைந்துவிடும். அந்த வகையில், பாசிப்பயறு பிஸ்கட்டின் மீது சாக்லேட் துண்டுகளைத் தூவி, பிஸ்கட்டை இன்னும் அழகாக்கி, சுவையைக் கூட்ட வேண்டும். மேற்கண்டவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு பிராண்டாக மாற்றி, பாசிப்பயறு பிஸ்கட் தொழிற்சாலையை விழுப்புரம் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில், மிகப்பெரிய அளவில் பாசிப்பயறு இருபோகம் விளைவிக்கப்படுவதால், ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 650 கிலோ அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து சுமார் 30 சதவிகிதம் மட்டும் எடுத்துக்கொண்டால் 1,200 டன் கிடைக்கும். இதை ஊறவைத்தால் அதிலிருந்து 3.6 மடங்கு என்ற அடிப்படையில் கூடுதலாகப் பாசிப்பயறு மாவாக சுமார் 4,300 டன் கிடைக்கும். இந்த மாவிலிருந்து 200 கிராம் கொண்ட பிஸ்கட் பாக்கெட்டுகளாக சுமார் 2 கோடியே 60 லட்சத்தை உற்பத்தி செய்யலாம். ஒரு பாக்கெட் பிஸ்கெட்டின் விலை 60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, மார்க்கெட்டில் விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்குச் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். மேலும், அருகிலுள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து உற்பத்தியாகும் பாசிப்பயறையும் பயன்படுத்திக்கொண்டால், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம். நேரடியாகவும் மறைமுகமாகவும் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். இதனால் அந்தப் பகுதி, பொருளாதார முன்னேற்றம் அடைவதோடு, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடையும்.
பாசிப்பயறு வாஃபிள்
`மெக்டொனால்ட்ஸ்’, `கேஎஃப்சி’, `பீட்ஸாஹட்’, `பர்கர் கிங்’, `ஸ்டார்பக்ஸ்’, `ஐபாகோ’, `டாக்கோ பெல்’... இவையெல்லாம் 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான மேற்கத்திய உணவுகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள். `பீட்ஸா’, `பர்கர்’, `ரோஸ்ட் சிக்கன்’, `டாகோஸ்’ (Tacos), `டிம் சம்’ (Dim Sum), `திராமிசு’ (Tiramisu), `சாப் சூயி’ (Chop Suey), `ஸ்பெகட்டி’ (Spaghetti), `ரெட் சாஸ் பாஸ்தா’ (Red Sauce Pasta), `பெஸ்தோ’ (Pesto), `டோனட்’ (Doughnut) இவையெல்லாம் அதே கிட்ஸ்களின் ஃபேவரைட் உணவு வகைகளில் சில. இவை எதுவும் இந்தியத் தயாரிப்புகள் அல்ல. முழுக்க முழுக்க மேற்கத்திய உணவுகள். இந்தப் பட்டியல் மிக நீளம். சுருக்கமாக, சிலவற்றையே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருப்பது `பெல்ஜியன் வாஃபிள்’ (Belgian waffle). நம்மூர் திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய்போல, பிரான்ஸிலுள்ள பெல்ஜியனில் இந்த உணவு பிரபலமானதால் அதையே பெயராகச் சூட்டியிருக்கிறார்கள்.

2019-ம் ஆண்டு வாக்கில், வளர்ந்துவரும் இந்திய உணவுப் பழக்கம் என்கிற தலைப்பில் சந்தை ஆய்வு நிறுவனமான இப்சாஸ், 14 நகரங்களிலிருந்து சுமார் 1,000 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் தெரியவந்த உண்மை, அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் வகையில் இருந்தது. `79 சதவிகித இந்தியர்கள் மேற்கத்திய உணவுகளை விரும்புகிறார்கள்’ என்பதுதான் அது. அதுமட்டுமல்ல, 19 சதவிகிதம் பேர் காலை உணவுக்கு மேற்கத்திய உணவுகளையே நாடுகின்றனர் என்றும் அது அறிவித்தது. மேலும், 52 சதவிகிதக் குழந்தைகள் விரும்பி உண்பதாகவும், சமைப்பதற்கு எளிதாக இருப்பதாகவும் 68 சதவிகிதம் பேரும், விருந்தினர்கள் வரும்போது உபசரிக்க ஏதுவாக இருப்பதாக 46 சதவிகிதம் பேரும், குடும்பத்தோடு சேர்ந்து உணவருந்த ஏற்றதாக 57 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது இதன் சதவிகிதம் ஒவ்வொன்றும் கூடவே செய்திருக்கும். அதனால்தான் சென்னை, கோவை, திருச்சி எனப் பெருநகரங்களில் மட்டுமே இருந்த `மெக்டொனால்ட்ஸ்’, `பீட்ஸா ஹட்’, `கேஎஃப்சி’ போன்ற உணவு நிறுவனங்களின் கிளைகளை இப்போது மாவட்டத் தலைநகரங்களிலும், அதற்கு அருகிலுள்ள நகரங்களிலும்கூட காண முடிகிறது.
மேற்கத்திய உணவுகள் மீதான இந்த மோகத்தை முதலீடாகக்கொண்டு, பெல்ஜியன் வாஃபிள் (Belgian waffle) போன்ற ஒரு வாஃபிள் பிராண்டை நாம் பாசிப்பயறிலிருந்து உருவாக்கலாம். ‘வூங் வாஃபிள்’ (Voong Waffle) என்று அதற்குப் பெயரிட்டு `கேஎஃப்சி’, `பீட்ஸா ஹட்’ போல உலகெங்கும் `வூங் வாஃபிள்’ கிளைகளுக்கான உரிமத்தை வழங்கலாம். இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். பேக்கிங் சோடா, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைச் சேர்த்துத்தான் பெல்ஜியன் வாஃபிள் தயாரிக்கப்படுகிறது.
நாம் முட்டைக்கு பதிலாக பாசிப்பயறைச் சேர்த்துக்கொண்டு உருவாக்கலாம். முட்டையைவிட புரதச்சத்து இதில் அதிகம் என்பதால் உணவுப் பிரியர்களும் விரும்பி உண்ணுவார்கள். வழக்கமாக, செர்ரி, புளு பெர்ரி பழங்களை நறுக்கி இந்த வாஃபிளின் மீது தூவி, அதனுடன் கொஞ்சம் தேன் கலந்து காலை உணவாகச் சாப்பிடுகிறார்கள். கண்களுக்கு மட்டுமல்ல, நாவிலும் சுவைகூட்டும் பெல்ஜியன் வாஃபிள் ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 277 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது.

பெல்ஜியன் வாஃபிள் போன்றதொரு பிராண்டை, விழுப்புரம் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். அதற்கான தொழிற்சாலையை அந்தப் பகுதியில் நிறுவ வேண்டும். மொத்தப் பாசிப்பயறு விளைச்சலான 4,000 டன்னிலிருந்து சுமார் 30 சதவிகிதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால் தோராயமாக நமக்கு 1,200 டன் பாசிப்பயறு கிடைக்கும். இதிலிருந்து 1 கோடியே 20 லட்சம் வாஃபிள் தயாரிக்க முடியும்.
ஒரு வாஃபிளின் சராசரி விலை 250 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். இதனால், அந்தப் பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதோடு, மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பாடு அடையும்.
(இன்னும் காண்போம்)