மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 42 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

சால்ட் லேம்ப் (Salt Lamp)
பிரீமியம் ஸ்டோரி
News
சால்ட் லேம்ப் (Salt Lamp)

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

நிலக்கடலை பால் (Peanut Milk)

“பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் உடற்பருமன்” என்கின்றார்கள் மருத்துவர்கள். அதனால்தான், உடல் எடையைக் குறைப்பதில் பெரும்பான்மையானோரின் அன்றாட கவனமிருக்கிறது. அதற்காக அவர்களின் தேர்வாக இருப்பது உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு. பல்வேறு வகையான டயட்டுகள் இருந்தாலும், கொரோனா பெருந்தொற்றின் போது பலரும் பின்பற்றியது `குளூட்டன் ஃப்ரீ டயட்’ (Gluten Free Diet) அல்லது `கேஸின் ஃப்ரீ டயட்’ (Casein Free Diet) என்ற வகையைத்தான். இது உடல் எடையைக் குறைப்பதில் பெரிய அளவில் உதவுவதால், பலர் இந்த வகையான டயட்டுக்கு மாறினர்.

கனவு - 42 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

குளூட்டன் என்பது ஒரு வகையான புரதம். இது பால், முட்டை, காய்கறிகள், அனைத்து வகையான மீன்கள் உள்ளிட்ட பொருள்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றைவிட அதிகம் புரதச்சத்து நிறைந்தது நிலக்கடலை. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் இ, வைட்டமின் பி1, பி3 உள்ளிட்ட சத்துகள் அடங்கியிருக்கின்றன. நிலக் கடலையிலிருந்து தயாரிக்கப்படும் `நிலக்கடலை பால்’ (Peanut Milk) குளூட்டன் ஃப்ரீ வகையில் சேருவதால், இதைப் பெரும்பாலானோர் விரும்பிக் குடிக்கின்றனர். எலும்புகள் வலுவாக, சருமம் பளபளப்பாக... என அளப்பரிய பலன்களை நிலக்கடலை பால் கொண்டிருப் பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் நிலக்கடலை பாலுக்கு கிராக்கி ஏற்படும். இதை `டெட்ரா பாக்’ (Tetra Pak) முறையில் பேக்கிங் செய்தால், ஆறு மாதங்கள் வரைகூட இருப்பில் வைத்திருந்து பயன்படுத்த முடியும் என்பதால், உள்ளுர் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைப்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

கனவு - 42 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 1,25,000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப் படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 1 டன் வீதம், ஆண்டொன்றுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் டன் அளவுக்கு நிலக்கடலை விளைச்சல் கிடைக்கிறது. மொத்த விளைச்சலிலிருந்து 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், சுமார் 1 லட்சம் டன் நிலக்கடலை கிடைக்கும். இதிலிருந்து தோராயமாக 33 கோடி லிட்டர் ‘பீனட் மில்க்’ தயாரிக்க முடியும். ஒரு லிட்டர் பீனட் மில்க்கை 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 1,650 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இவற்றோடு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் நிலக்கடலையையும் பயன்படுத்திக் கொள்ளும் போது, பாலின் அளவும் அதிகரிப்பதோடு, வருவாயும் பன்மடங்கு பெருகும். இதனால் சுமார் 6,000 பேருக்கு நேரடியாகவும் மறைமு கமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதால், விழுப்புரம் மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்ந்து, வாழ்க்கைத்தரம் மேம்படும்.

சால்ட் பிரிக்ஸ் இண்டஸ்ட்ரி (Salt Bricks Industry)

பெரும்பாலும் உப்பு, உணவில் பயன்படுத்தப்படும் ஒரு சுவையூட்டியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே உப்பைப் பயன்படுத்தி ‘சால்ட் பிரிக்ஸ்’, ‘சால்ட் லேம்ப்’ போன்ற பொருள்களையும் உருவாக்க முடியும். சால்ட் பிரிக்ஸ் குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள், விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பலவற்றின் இன்டீரியர்களில் பயன்படுத்தலாம். இன்டீரியர் டெகரேஷனில் `மினிமலிசம்’ (Minimalism) கான்செப்ட்தான் இப்போதைக்கு டிரெண்ட். ஒரு விஷயத்தை பிரமாண்டமானதாகவும் அழகானதாகவும் காட்டுவதற்குப் பயன்படுவதுதான் மினிமலிசம். இந்த மினிமலிசத்துக்கு உதவுவதில் சால்ட் பிரிக்ஸும் ஒன்று. மேலும், சால்ட் பிரிக்ஸ், சால்ட் தெரபியாக உடல்நலனைக் காக்கவும் செய்கிறது.

கனவு - 42 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

இமயமலையின் பல பகுதிகளில் பாறை உப்புகள் காணப்படுகின்றன. அந்தப் பாறைகளை உடைத்து, அவற்றிலிருந்து சால்ட் பிரிக்ஸ் தயாரிக்கிறார்கள். `சால்ட் பிரிக்ஸில் வெளிச்சம் பாயும்போது அனைவரையும் ஈர்க்கக்கூடிய வண்ணங்களில் அது ஒளிரும். இதனால் உருவாக்கப்படும் வண்ணமயமான ஒளிமிக்க சூழல்களால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். அவர்களது மனம் குதூகலமடையும், அமைதி பெறும்’ என்கின்றனர் சால்ட் பிரிக்ஸ் உற்பத்தியாளர்கள். சால்ட் பிரிக்ஸைப் பல்வேறு நிறங்களில், அளவுகளில் (8 x 4 அளவுகளில் 1 இன்ச்சில் ஆர்க்கிடெக்சுரல் கிரேடு பிங்க் 4 x 4, 8 x 12 ) தயாரிக்கிறார்கள். மரக்காணத்தில் உற்பத்தியாகும் உப்பிலிருந்தும் சால்ட் பிரிக்ஸைத் தயாரிக்க முடியும். அந்த உப்புடன் தேவையான ரசாயனங்களைச் சேர்த்து உருவாக்க வேண்டும். அப்படிச் செய்வதால் சால்ட் பிரிக்ஸ் உறுதித்தன்மையும் நீண்ட நாள்களுக்கு உழைக்கும்தன்மையும் பெறும். அதேபோல, தேவையான நிறமிகளைச் சேர்த்து பல்வேறு வண்ணங்களிலும் தயாரிக்க முடியும். கனடா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் சால்ட் பிரிக்ஸை இன்டீரியர்களில் பெருமளவு பயன்படுத்துகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணத்திலும் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு உப்பு உற்பத்தியில் 3-வது இடத்தை வகிக்கிறது என்பதால், இதைப் பயன்படுத்தி இங்கே ஒரு சால்ட் பிரிக்ஸ் தொழிற்சாலையை நிறுவ வேண்டும்.

கனவு - 42 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

மரக்காணத்தில் தோராயமாக 4,000 ஏக்கர் அளவுக்கு உப்பளம் இருக்கிறது. இங்கிருந்து ஆண்டொன்றுக்கு 6,800 டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகிறது. இதிலிருந்து 50 சதவிகிதம் மட்டும் எடுத்துக்கொண்டால் 3,400 டன் உப்பு கிடைக்கும். 25 கிலோ சால்ட் பிரிக்ஸின் (10 கற்கள்) விலை மார்க்கெட்டில் 12,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். அதே விலையைக்கொண்டு ஒரு டன் சால்ட் பிரிக்ஸை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அந்த வகையில் ஆண்டொன்றுக்கு சுமார் 170 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். இதனால் அந்தப் பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு, வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

சால்ட் லேம்ப் (Salt Lamp)

21-ம் நூற்றாண்டில், பெரும்பான்மையான மக்களின் பிரச்னைகளில் மன அழுத்தம் முக்கியப் பங்கை வகித்திருக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் எனப் பல்வேறு ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மன அழுத்தத்தைக் குறைப்பதில் உப்புகளால் உருவாக்கப்படும் சால்ட் லேம்ப்புகளும் பயன்தருவதாகக் கருதப்படுகின்றன. இது மட்டுமின்றி, சால்ட் லேம்ப்புகள் அறையில் ரம்மியமான சூழலை உருவாக்குவதோடு, காற்றைத் தூய்மைப்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றனர். உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, சுவாசத்தை மேம்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்தைத் தருவதாகவும் கூறுகிறார்கள். இவற்றை வீடுகள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் எனப் பல இடங்களில் பயன்படுத்த முடியும் என்பதால் இதற்கான சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கனவு - 42 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

சால்ட் லேம்ப்புகள் மிக மெதுவாகக் காற்றில் கரையும் தன்மை உடையவை. அவை தொடர்ச்சியாக எரிந்தால், சுமார் 42 நாள்கள் வரை நீடிக்கும். இதில் 15 வாட்ஸ் திறனுள்ள ஒளிரும் பல்பைப் பயன்படுத்தப்படுவதால் அதிக மின்சாரம் தேவைப்படாது என்பதால் மின் சிக்கனத்தையும் கூடுதல் பலனாகப் பெறலாம். பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிற சால்ட் லேம்ப்புகளே மார்க்கெட்டில் காணக் கிடைக்கின்றன. குறைந்தபட்சமாக 1,200 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3,500 ரூபாய் வரை வைத்து விற்கிறார்கள். இவற்றோடு இன்னும் சில நிறங்களிலும் சால்ட் லேம்ப்புகளை உருவாக்குவது அவசியம்.

இயற்கையாகவே உப்பு மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா, சிவப்பு, ஆரஞ்சு எனப் பல நிறங்களில் கிடைக்கிறது என்பதால் பல்வேறு நிறங்களில் சால்ட் லேம்ப்பைத் தயாரித்து, சந்தைப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைக்கும். சால்ட் லேம்ப் தொழிற்சாலையை இந்த மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியிலேயே அமைக்க வேண்டும். இங்கே தயாரிக்கப்படும் சால்ட் லேம்ப்பைச் சந்தையில் விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்குப் பல கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும். சால்ட் லேம்ப் தொழிற்சாலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விழுப்புரம் மாவட்டம் பொருளாதார மேம்பாடு அடைவதோடு, அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும்!

(இன்னும் காண்போம்)