மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

கறுப்பு உளுந்து பாஸ்தா!
பிரீமியம் ஸ்டோரி
News
கறுப்பு உளுந்து பாஸ்தா!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

ஹைட்ரஜன் பவர் பிளான்ட்!

மாற்று எரிசக்தியில் பல்வேறு வகையான புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், காற்றாலை மின்சக்தி, சூரியமின்சக்தி, அணுமின்சக்தி, நீர்மின்சக்தி போன்றவை முக்கியப் பங்குவகிக்கின்றன. இதேபோல, நிலக்கடலையின் ஓட்டிலிருந்தும் மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியும். நிலக்கடலையின் ஓட்டில் தோராயமாக 6 சதவிகிதம் அளவுக்கு ஹைட்ரஜன் அடங்கியிருக்கிறது. அதை `பைராலிசிஸ்’ (Pyrolysis) செயல்முறைக்கு உட்படுத்தினால் ஹைட்ரஜன் எரிபொருள் கிடைக்கும். அதைக்கொண்டு ஒரு ஹைட்ரஜன் பவர் பிளான்ட்டை உருவாக்கி, மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியும்.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 1,25,000 ஏக்கர் அளவுக்கு நிலக்கடலை பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. ஒரு டன் நிலக்கடலையிலிருந்து தோராயமாக 250 கிலோ நிலக்கடலை ஓடு கிடைக்கும். ஒரு நிலக்கடலையின் ஓட்டில் சுமார் 6 சதவிகிதம் அளவுக்கு ஹைட்ரஜன் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக் கிறது. பொதுவாக, ஒரு டன் ஹைட்ரஜனிலிருந்து தோராயமாக 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியும். இந்த அளவுகோலின்படி விழுப்புரம் மாவட்டத்தின் நிலக்கடலை உற்பத்தியிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை ஓட்டைப் பயன்படுத்தி, ஆண்டொன்றுக்குச் சுமார் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம். ஒரு மெகாவாட் மின்சாரத்தை 7,000 ரூபாய்க்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கு (TANGEDCO) வழங்குவதன் வழியாக, ஆண்டுக்குச் சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். மேலும், அருகிலுள்ள மாவட்டங்களான கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நிலக்கடலை ஓட்டைப் பயன்படுத்தும்போது, உற்பத்தியை இன்னும் அதிகரித்து சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டொன்றுக்கு வருமானம் பெற முடியும்.

கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்
கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு மின்சாரம் அளிப்பதன் வாயிலாக மாநிலத்தின் மின்தேவையைப் பூர்த்திசெய்யலாம். அதோடு பொருளாதாரரீதியான முன்னேற்றத்தை அடைவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். தேவையற்றது என எண்ணி குப்பையில் வீசும் நிலக்கடலை ஓட்டிலிருந்து பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வர்த்தகம் ஒளிந்திருப்பது எவ்வளவு பெரிய நகைமுரண்!

கறுப்பு உளுந்து பாஸ்தா!

இன்றைய இளம் தலைமுறையினரின் உணவுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் மேற்கத்திய உணவு வகைகளில் பாஸ்தாவும் ஒன்று. பொதுவாக, கோதுமை மற்றும் மைதாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா வாழ் இந்தியரான ரோக்ஸானே ராணி, தன் தாய் இந்தியாவிலிருந்து கொண்டுவரும் உளுந்தைக்கொண்டு தயாரித்த உணவுகளைச் சுவைத்துப் பார்த்தார். அதன் சுவை இதுவரை அவர் அறியாதது. பிறந்ததிலிருந்தே அமெரிக்க உணவு வகைகளையே சாப்பிட்டு வளர்ந்த அவர், உளுந்தின் சுவையை அமெரிக்கர்களும் சுவைக்க வேண்டும் என விரும்பினார். அதன் விளைவாக, அவர் கறுப்பு உளுந்தைப் பயன் படுத்தி பாஸ்தா, சிப்ஸ் ரெசிபிகளை உருவாக்கி `பேம் ஸ்நாக்ஸ்’ (Bam Snacks) எனப் பெயரிட்டு பிராண்டாக மாற்றினார். ரோக்ஸானே ராணி செய்ததுபோல கறுப்பு உளுந்திலிருந்து பாஸ்தா எனும் புராடக்டை உருவாக்கலாம்.

கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்
கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் வகைகளில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கறுப்பு உளுந்துதான். சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, ஆண்டுதோறும் தோராயமாக 70,000 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. இந்தக் கறுப்பு உளுந்தைப் பயன்படுத்தி `ரிகதோனி பாஸ்தா’ (Rigatoni Pasta), `பென்னே பாஸ்தா’ (Penne Pasta), `ரவியோலி பாஸ்தா’ (Ravioli Pasta) போன்ற மாறுபட்ட பாஸ்தா வகைகளை உருவாக்கலாம். கூடவே, அவற்றை எளிய முறையில் சமைத்து உண்பதற்கு ஏற்றவாறு, ஒவ்வொரு வகை பாஸ்தாவுடனும் மசாலா பாக்கெட்டும் சேர்த்து, பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனை செய்தால் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும்.

கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 340 கிலோ (ஒருபோகம்) அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஏறக்குறைய 70,000 டன் கறுப்பு உளுந்து உற்பத்திசெய்யப்படுகிறது. இந்த மொத்த விளைச்சலிருந்து 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், தோராயமாக 20,000 டன் அளவுக்கு உளுந்து கிடைக்கும். 200 கிராம் கொண்ட பாஸ்தா தயாரிக்க 100 கிராம் உளுந்து தேவைப்படும் என்ற அளவுகோலின்படி, சுமார் 22 கோடி பாஸ்தா பாக்கெட்டுகளை ஆண்டொன்றுக்கு உற்பத்திசெய்ய முடியும். ஒரு பாஸ்தா பாக்கெட்டின் விலை 125 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 2,700 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். இந்த மாவட்டத்தில் இதற்கான தொழிற்சாலையை உருவாக்கும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், விழுப்புரம் மாவட்ட மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

(இன்னும் காண்போம்)

கனவு - 43 - விழுப்புரம் - வளமும் வாய்ப்பும்

கனவு நிஜமாகிறது!

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் இயங்கிவரும் உணவுப்பொருள்கள், வீட்டுத் தூய்மைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உற்பத்திசெய்யும் தனியார் நிறுவனத்தில், சீனியர் சயின்ட்டிஸ்ட்டாகப் பணியாற்றிவருகிறார் செளந்தர்யா சந்திரன். அண்மையில் அமெரிக்காவுக்கு என் நிறுவனத்தின் பணி நிமித்தமாக நான் சென்றிருந்தபோது, இவரைச் சந்திக்க நேர்ந்தது. ஜூனியர் விகடனில் வெளியாகும் `கனவு’ தொடரை வாசித்துவரும் அவர், அதுசார்ந்த காணொளிகளையும் தவறாமல் பார்வையிட்டுவருகிறார். அவர் பேசியபோது, “ஜூனியர் விகடனில் நீங்கள் எழுதும் கனவு தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வளங்களை நீங்கள் வாய்ப்புகளாக மாற்றுவதை உன்னிப்பாக கவனிக்கிறேன். குறிப்பாக, விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டல் செய்து, புராடக்டாக மாற்றி அறிமுகப்படுத்துவதைக் கண்டு வியப் படைந்திருக்கிறேன். காரணம், விவசாயப் பொருள்களிலிருந்து ஒரு புராடக்டுக்கான ஐடியாவை உருவாக்குவதற்கு முன்னால் பல மணி நேரம் அது குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். அப்போதுதான் ஆழமாகவும் துல்லியமாகவும் எழுத முடியும்.

உதாரணத்துக்கு, `கனவு கிருஷ்ணகிரி’யில், ‘வீடு தேடிவரும் நறுக்கப்பட்ட காய்கறிகள்... ஆவின் பாணி... 500 கோடி!’ என்ற தலைப்பில் (24.04.2022) ஜூ.வி-யில் வெளியாகியிருந்த ஐடியா என்னை மிகவும் கவர்ந்தது. நறுக்கப்பட்ட காய்கறிகளை எப்படி வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை முழு ஆய்வு மனப்பான்மை இருந்தால் மட்டுமே எழுத முடியும். உங்களுடைய பிற ஐடியாக்களும் தனித்துவமாக இருக்கின்றன. அது தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இருக்கின்றன. தொடரின் வழியே நீங்கள் தரும் ஐடியாக்களுக்கு உயிரூட்டும்விதமாகவும், தமிழ்நாட்டுக்கு எதையாவது செய்ய முடியுமா என்பது குறித்தும் நாங்கள் யோசித்தோம். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஓர் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை (Food Processing Factory) தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார். அவரது `கனவு’ நிஜமாகட்டும்!