
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
தமிழ்நாட்டில் ஏராளமான கோட்டைகள் இருந்தன. பல்வேறு காலகட்டங்களில் நடந்த அந்நியப் படையெடுப்புகளால் அவை துண்டாடப்பட்டு, காலப்போக்கில் காணாமல்போயின. ஆனால், அவற்றில் சில மட்டும் இப்போதும் கம்பீரமாக நெஞ்சுயர்த்தி நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக்கோட்டை. இந்தக் கோட்டையைக் கொஞ்சம் கிரியேட்டிவாகச் சிந்தித்து, பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் `பணக்கோட்டை’யாக மாற்றி, சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழியச் செய்யலாம்!

கடந்த வருடம் பாலிவுட் நட்சத்திரங்களான விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் ஜோடியின் திருமணம் ராஜஸ்தானிலுள்ள பழம்பெரும் பார்வாரா கோட்டையில் ராஜவம்சத்துக்கே உரிய பாணியில் நடந்தது. இந்தக் கோட்டையை `தி இன்டர்கான்டினென்ட்டல்’ ஹோட்டல் நிறுவனத்தின் பிராண்டுகளில் ஒன்றான `சிக்ஸ் சென்சஸ்’, அரசிடமிருந்து கைப்பற்றி, புதுப்பித்து, ராஜஸ்தானியருக்கே உரிய பாரம்பர்ய முறைப்படி மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. கோட்டையில் 48 படுக்கையறைகளைக்கொண்ட இரண்டு அரண்மனைகள் சீரமைக்கப்பட்டு, அவை நட்சத்திர அந்தஸ்துகொண்ட ஹோட்டலாக மாற்றப்பட்டன. இங்கே ஓர் இரவு தங்குவதற்கு குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,25,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த அரண்மனையில்தான் விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் ஜோடியின் திருமணம் நடந்தேறியது.

பார்வாரா கோட்டை நவீனப்படுத்தப்பட்டு கோடிகளில் வருமானம் ஈட்டுவதைப் போன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டையையும் மறுசீரமைப்பு செய்து, கோடிக்கணக்கில் வருமானம் பெறலாம். தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டுவரும் இந்தக் கோட்டை உறுதிமிக்கதாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது. இந்தக் கோட்டையின் அடிவாரத்தில் கல்யாண மஹால் உள்ளது. இந்த மஹாலில்தான் அந்தப் பகுதிகளை ஆட்சி செய்தவர்களின் இல்லத் திருமணங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. இதே இடத்தை இப்போது பார்வாராபோல மாற்றியமைக்க வேண்டும். இந்த மஹாலில் பெண்கள் தங்குவதற்கான அறைகள், புனிதக்குளம், வராண்டாக்கள் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பார்வாராவில் 48 அறைகள் இருந்ததால் அதை ஹோட்டலாக மாற்றியிருந்தார்கள். இங்கே எட்டு அறைகள் மட்டுமே இருப்பதால், இவற்றை ஹோட்டலாக மாற்ற இயலாது என்பதால், திருமண மஹாலாக (Wedding Venue) மட்டுமே பயன்படுத்தலாம். இதையொட்டி உணவுக்கான சேவை (Catering Service), திருமணப் பத்திரிகை அச்சகம் (Wedding Invitation Printers), புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய ஸ்டூடியோ (Studio), மெகந்தி மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள் (Mehandi and Makeup Artists), அழகிய மலர்களுக்கான கடைகள் (Flower Boutiques) மற்றும் பாதுகாப்பு, தூய்மைப் பணியாளர்கள் (Cleaning Service Company) சேவை உள்ளிட்டவையும் இங்கேயே கிடைக்குமாறு மாற்ற வேண்டும்.
இந்தத் திருமண மஹாலில் பெரும் பொருளாதாரம் ஈட்டும் பிரிவினர் மட்டுமே தங்களுடைய சுபகாரியங்களை நடத்த இயலும். அவர்களை மையப்படுத்தியே இந்தக் கோட்டையை மாற்றம் செய்ய வேண்டும். கோட்டையிலுள்ள திருமண மஹாலை நடுத்தரம், உயர்தரம் என இரு வகையாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சராசரியாக ஒரு திருமணத்துக்கு 500 பேர் வருகை புரிவதாக வைத்துக் கொண்டால், அதில் திருமண மஹாலில் தங்குபவர்களின் எண்ணிக்கை தோராயமாக 100 பேர் என்பதாகக் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு திருமணத்தின் வழியாக சுமார் 60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெறும். நேரடியாகவும் மறைமுக மாகவும் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். இதனால், அந்தப் பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்பாடும்; வாழ்க்கைத்தரம் உயரும்!
களிமண் காதணி மற்றும் நெக்லஸ்!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர், முண்டியப் பாக்கம் பகுதிகளில் அதிக அளவில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு, உலகின் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே பகுதியில் கிடைக்கும் களிமண்ணைப் பயன்படுத்தி களிமண் ஜுவல்லரிகளை (களிமண் காதணி - Clay Earrings), களிமண் நெக்லஸ் (Clay Necklace) தயாரித்து, கோடிகளில் கல்லாகட்டும் பிசினஸை இங்கு அமோகமாக நடத்தலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இங்கே சிறு, குறு தொழில்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.

தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் 2K கிட்ஸ்களிடம் மட்டுமல்ல... இப்போது அனைத்துத் தரப்புப் பெண்களிடமும் பரவியிருக்கிறது. அழகுபடுத்திக்கொள்வதில் தங்கத்துக்கு மாற்றாக சில்வர், பிளாஸ்டிக் போன்றவற்றில் அழகிய வேலைப்பாடுகளுடன் பிறர் கண்களைக் கவரும் வகையிலான காதணிகள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்றவற்றை வாங்குவதில் அவர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. விலை மலிவானது என்பதும் அதன் மவுசுக்குக் கூடுதல் காரணம். அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருக்கிறது களிமண் ஜுவல்லரி.
களிமண் ஜுவல்லரிகளுக்கு முதலீடு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இங்கே தயாராகும் களிமண் காதணிகளைச் சுமார் 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும், நெக்லஸ்களை 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரைக்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம். இதைத் தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இயங்கும் கடைகளைக் கைப்பற்றி, விற்பனை வாய்ப்பை உருவாக்குவதோடு, பிற ஜுவல்லரி கடைகளுக்கும் வழங்கலாம். மேலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். களிமண் ஜுவல்லரி செய்வதைப் பெண்கள் கற்றுக்கொண்டு, இந்தத் தொழிலில் கவனம் செலுத்தி, பெரும் வருமானம் ஈட்டி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது நாட்டின் பொருளாதாரத்துக்கும் வலுசேர்க்கலாம்!
(இன்னும் காண்போம்)
****
நீங்களும் சாதிக்கலாம்!
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்த சகீலா ஃபரூக், பனிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இன்று மண்பாண்டத் தொழிலில் ஆண்டுக்குக் கோடிகளில் வருமானம் ஈட்டுவதாடு பலருக்கு வேலைவாய்ப்பளித்து, புதிய தொழில்முனைவோரையும் உருவாக்கிவருகிறார். அவரிடம் பேசினோம்.

“வங்கிக் கடன் பெற்றுத்தான் மண்பாண்டத் தொழில் தொடங்கினேன். மண்பாண்டங்களில் ஓவியங்கள் வரைந்து முண்டியம் பாக்கத்திலிருந்து அமெரிக்கா வரைக்கும் வியாபாரம் செய்தேன். சுமார் 100 பேர் என்னிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இடையில் கொரோனா பேரிடர் வந்து, என் மொத்த வியாபாரத்தையும் முடக்கிப் போட்டது. பல இடங்களிலிருந்து வரவேண்டிய பணம் வரவில்லை. என்னிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தேன். ஆனாலும், நான் செய்யும் உதவி மட்டுமே அவர்களின் வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவந்து விடாது. அவர்களுக்கு ஒரு தொழிலைக் கற்றுக்கொடுத்தால் அவர்கள் முன்னேறுவார்கள் என்று தோன்றியது. அப்போதுதான் ‘ரைஸ் ஆஃப் த ஆந்த்ரபிரனர்’
(Rise of the Entrepreneur) என்கிற டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அதன் வழியே களிமண்ணைப் பயன்படுத்தி, மண்பாண்டம் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுப்பதோடு, அவற்றை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லித்தருகிறேன். இந்தப் பயிற்சியின் வழியாக 50-க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருக்கிறார்கள். இன்னும் நிறைய பெண்களைத் தொழில்முனைவோராக்க வேண்டும் என்கிற கனவும் எனக்கு இருக்கிறது. இங்கே தரப்பட்டிருக்கும் (9486515132) எண்ணில் எங்களைத் தொடர்புகொண்டால், அவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.