மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 45 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

சின்ன வெங்காயத்தூள்
பிரீமியம் ஸ்டோரி
News
சின்ன வெங்காயத்தூள்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’ - என்ற பாடல் வரிகள், படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சூழலுக்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் வளத்தை கவனத்தில்கொண்டே கவிஞர் எழுதியிருக்கிறார் என்பது பெரம்பலூரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது தெரியவந்தது!

பெரம்பலூர் மாவட்டம், மிக மிகப் பின்தங்கிய மாவட்டம். இந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளிடம் பேசியபோது ஓர் உண்மை என்னை ஆச்சர்யப்படவைத்தது. “விலை உயர்ந்தாலும், வீழ்ந்தாலும் விட மாட்டேன் சின்ன வெங்காயத்தை” என்று கூறும் அளவுக்கு இந்தப் பகுதி விவசாயிகள் சுமார் 20,000 ஏக்கர் அளவுக்கு ஆண்டுதோறும் மூன்று போகமாகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் பிரதான விவசாயப் பயிரும் இதுதான். மிகக்குறுகிய நிலப்பரப்பேகொண்ட இந்த மாவட்டத்தில் ஆலத்தூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் இதை அப்படியே சந்தைக்கு அனுப்பிவைத்துவிடுகிறார்கள். சின்ன வெங்காயத்தைச் சேமித்துவைப்பதற்கான கிடங்குகள் இல்லாததால், பல நேரங்களில் இயற்கைச் சீற்றங்களில் பெருமளவில் அவை அழுகி, விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக (சின்ன வெங்காயத்தூள், ஆனியன் ஃப்ளேவர்டு ஆயில், ஆனியன் சால்ட்டடு ஸ்பைஸ்) மாற்றி, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.

கனவு - 45 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

சின்ன வெங்காயத்தூள் (Small Onion Powder)

நீங்கள் சின்ன வெங்காயத்தை நறுக்கும்போது உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கான காரணத்தை யோசித்திருக்கிறீர்களா? `அலைல் புரோபைல் டைசல்ஃபைடு’ (Allyl propyl disulfide) என்ற காரத்தன்மை மிக்க எண்ணெய்தான் அதற்குக் காரணம். பெயர்தான் `சின்ன’ வெங்காயம். ஆனால், அதன் பலன்களோ ரொம்ப பெரியவை. என்னதான் நிறைய மருத்துவப் பலன்கள் நிறைந்திருந்தாலும், சின்ன வெங்காயத்தை நறுக்கிப் பயன்படுத்த இளைய தலைமுறையினர் சிணுங்கவே செய்கிறார்கள். இனி அவர்கள் சிணுங்கவோ, கண்ணீர் சிந்தவோ வேண்டியதில்லை. அவர்களுக்கான புராடக்ட்தான் சின்ன வெங்காயத்தூள்.

சமையலறையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சின்ன வெங்காயத்தூளை வறுவல், சூப், க்ரீமி டிப்பிங் சாஸ், சாலட் உள்ளிட்ட பலவற்றின் தேவைக்கு அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், சந்தையில் எப்போதும் இதற்கு வரவேற்பு இருந்துகொண்டே இருக்கும். இதை உருவாக்குவதும் எளிது. சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, நறுக்கி அவற்றை `டிஹைட்ரேட்’ (Dehydrate) செய்து அரைத்தால், வெங்காயத்தூள் தயார். இதற்கான தொழிற்சாலையை பெரம்பலூர் மாவட்டத்தில் நிறுவ வேண்டும். 2007-ம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக, சுமார் 3,800 ஏக்கர் அளவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது பயன்பாடின்றி இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அங்கே பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். அதில் ஒன்றாகச் சின்ன வெங்காயத்தூள் தொழிற்சாலையை அமைப்பது அவசியம்.

கனவு - 45 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 45 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் மூன்று போகம் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 12 டன் அளவுக்கும், மொத்தப் பரப்பளவில் ஏறக்குறைய 2,40,000 டன் அளவுக்கும் சின்ன வெங்காயம் விளைச்சலாகிறது. இதிலிருந்து 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, சின்ன வெங்காய பவுடர் ஒரு கிலோ தயாரிக்க 5 கிலோ அளவுக்குச் சின்ன வெங்காயம் தேவைப்படுகிறது. இதைக் கணக்கில்கொண்டு 70,000 டன் சின்ன வெங்காயத்திலிருந்து தோராயமாக 14,000 டன் அளவுக்கு பவுடரை உற்பத்திசெய்ய முடியும். ஒரு கிலோ பவுடரை 500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்றால், ஆண்டொன்றுக்கு சுமார் 700 கோடி அளவுக்கு வருமானம் பெறலாம். மேலும் அருகிலுள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங் களிலிருந்து உற்பத்தியாகும் சின்ன வெங்காயத்தில் 50 சதவிகிதத்தைக் கைப்பற்றி பவுடர் தயாரித்தால், சுமார் 1,500 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெறும். இதனால் அந்தப் பகுதி மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

கனவு - 45 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

சின்ன வெங்காய எண்ணெய் (Small Onion Oil)

வீட்டின் சமையலறையில் வெங்காயம் முக்கியப் பங்கை வகிக்கிறது. எல்லா உணவுப் பொருள்களிலும் ஏதாவது ஒருவகையில் வெங்காயம் சேர்ந்துவிடுகிறது. அது சுவையூட்டியாக இருப்பதும் அதற்கு ஒரு காரணம். சிலருக்கு உணவில் வெங்காயம் சேர்ந்திருப்பது பிடிக்காது. சாப்பிடும்போது வெங்காயத்தை மட்டும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். அவர்களுக்கு உணவில் சின்ன வெங்காய எண்ணெயைக் கலந்து பரிமாறும் போது அதன் சுவையோடு, அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும். சமையல் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், சுவையூட்டியாகவும், அழகுசாதனப் பொருள்களிலும் எனப் பலவிதங்களில் இந்த எண்ணெயைப் பயன்படுத்த முடியும். சின்ன வெங்காயத்திலிருந்து ‘ஸ்டீம் டிஸ்டிலேஷன் புராசஸ்’ (Steam Distillation Process) வழியாக எண்ணெயைப் பிரித்தெடுக்கிறார்கள். இந்த எண்ணெயைச் சுத்திகரித்து, பயன்பாட்டுக்கு ஏற்ப அதில் தேவையான ரசாயனங்களைக் கலந்து பயன்படுத்தலாம்.

கனவு - 45 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

`பீட்ஸா சாஸ்’, `பாஸ்தா சாஸ்’, `என்சிலாடா சாஸ்’ (Enchilada sauce) உள்ளிட்ட சாஸ் தயாரிக்கும்போது சுவையூட்டியாகவும் சின்ன வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணெயில் `வைட்டமின் சி’ இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, தோல் மற்றும் முடி உதிர்வுப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சார்ந்த பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த எண்ணெயின் தேவை அதிகரித்திருக்கிறது. அதுபோலவே ஆல்கஹாலிக் மற்றும் நான் ஆல்கஹாலிக் தயாரிப்பிலும் சுவையூட்டியாக இந்த எண்ணெயைத் தேவையான அளவுக்குச் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய வளங்களுள் ஒன்றான சின்ன வெங்காயத்திலிருந்து சின்ன வெங்காய எண்ணெய் புராடக்டை உருவாக்கி, அதற்கான தொழிற்சாலையை இந்த மாவட்டத்தில் நிறுவுவது அவசியம்.

பெரம்பலூர் மாவட்டத்தின் விளைச்சலில் 10 சதவிகிதத்தை மட்டும் எண்ணெய் தயாரிப்புக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் 24,000 டன் அளவுக்குச் சின்ன வெங்காயம் கிடைக்கும். அதிலிருந்து 6,800 டன் அளவுக்கு எண்ணெய் தயாரிக்க முடியும். ஒரு கிலோ சின்ன வெங்காய எண்ணெயை 3,000 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். சுமார் 250 பேருக்கு நேரடியாகவும், அதைச் சார்ந்த பிற தொழில்களின் வழியே 750 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதனால் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரமும் பொருளாதாரமும் முன்னேற்றம் காணும்!

(இன்னும் காண்போம்)