
சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
பயோ பிரிக்கெட்ஸ் (Bio-Briquettes)
ஆண்டுதோறும் 2,500 கோடி ரூபாய் வருமானம் தரும் சோளம் மற்றும் பருத்தித் தட்டைகளைத் தங்களின் அறியாமையால் எரித்துக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா... `பயோ பிரிக்கெட்ஸ்’ (Bio-Briquettes) சோளம், பருத்தித் தட்டைகளைக்கொண்டு உருவாக்கப்படும் நிலக்கரிக்கு மாற்றான ஓர் எரிபொருள். பொதுவாக, நிலக்கரியை எரிப்பதால் அது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும். ஆனால், பயோ பிரிக்கெட்ஸைச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத (Eco Friendly) ஓர் எரிபொருளாகப் பயன்டுத்த முடியும்.


பயோ பிரிக்கெட்ஸ் எரிபொருளுக்கான தேவை என்பது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. குறிப்பாக, சர்க்கரை ஆலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், ரசாயன மற்றும் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் பயோ பிரிக்கெட்ஸ் எரிபொருளையே நாடுவதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இதற்கான தொழிற்சாலையை நிறுவலாம். பயோ பிரிக்கெட்ஸ் விலை மலிவானது. அதேபோல, அதற்கான மூலப்பொருள்களும் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க இயலும். ஒன்றிய அரசு பயோ பிரிக்கெட்ஸ் தொழிற் சாலையை நிறுவுவதற்கு மானியம் மற்றும் வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது என்பதால் அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகைத் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை பாதிக் காததால் மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து எளிதில் அனுமதி கிடைத்துவிடும். அது மட்டுமின்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்தோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்தோ தொழிற்சாலை நிறுவுவதற்கான கடன்களை எளிதாகப் பெற முடியும். இந்த வகைத் திட்டங்களுக்கு அவை முதல் உரிமை அளிக்கின்றன.


பெரம்பலூர் மாவட்டத்தில் சோளமும் பருத்தியும் சுமார் 2,45,000 ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு, பருத்தி மற்றும் சோளத்தட்டைகள் சுமார் 4 லட்சம் டன் அளவுக்குக் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து 50 சதவிகிதம் மட்டும் எடுத்துக்கொண்டால், ஆண்டொன்றுக்குச் சுமார் 1,35,000 டன் அளவுக்கு பயோ பிரிக்கெட்ஸைத் தயாரிக்க முடியும். ஒரு டன் பயோ பிரிக்கெட்ஸின் விலையை 6,500 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்குச் சுமார் 88 கோடி ரூபாயும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்தால் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 176 கோடி ரூபாய் அளவுக்கும் வருமானம் ஈட்ட முடியும். அதுமட்டுமின்றி, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கலாம். இதனால், பெரம்பலூர் பகுதி மக்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

டெக்ஸ்ட்ரோஸ் (Dextrose)!
பெரம்பலூர் மாவட்டத்தின் முதன்மையான வளம் சோளம். இதை மதிப்புக்கூட்டி `டெக்ஸ்ட்ரோஸ்’ எனும் மருந்தைத் தயாரிக்கலாம். இதை மருத்துவத்தில் பொதுவாக `டி-குளூக்கோஸ்’ (D - Glucose) என்று அழைக்கிறார்கள். ஒருவருக்கு உடல்நிலை மோசமாகி, அவரது ஆற்றல் முழுவதுமாகச் செயலிழக்கும்போது மருத்துவர் களால் தரப்படும் குளூக்கோஸ்தான் இது. சோளத்திலிருந்து பெறப்படும் குளூக்கோஸைத் தயாரிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. இதற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருப்ப தால், இதற்கான தொழிற்சாலையை பெரம்பலூர் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.

சுமார் 1,70,000 ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிரிடப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில், ஏக்கர் ஒன்றுக்கு 1.5 டன் வீதம் ஆண்டுக்குத் தோராயமாக 2,50,000 டன் உற்பத்தி கிடைக்கிறது. இதிலிருந்து 30 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு டெக்ஸ்ட்ரோஸ் தயாரிக்க வேண்டும். டெக்ஸ்ட்ரோஸ் தொழிற்சாலையை உருவாக்க, தோராயமாக 3 கோடி ரூபாய் தேவைப்படும். இதிலிருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 10,000 பாட்டில் (100 ml) உற்பத்தி செய்ய முடியும். சந்தையில் ஒரு டெக்ஸ்ட்ரோஸ் (100 ml) பாட்டிலை 30 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்வதன் வழியே, ஆண்டுக்குத் தோராயமாக 16 கோடி ரூபாய்க்கு வருமானம் பெற முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதன் வழியே பெரம்பலூர் மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலாம்!
(இன்னும் காண்போம்)
நீங்களும் சாதிக்கலாம்!
பெரம்பலூர் மாவட்டத்தின் நம்பிக்கையளிக்கும் தொழில்முனைவோர் சொல்லின் செல்வன். `இ-சந்தை’ (e-Santhai) எனும் பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரி. இந்த மாவட்டத்தில் முக்கிய வளமான சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல ஃப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸை இணையச் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்துவருகிறார். அவரிடம் பேசினோம். “சின்ன வயதிலிருந்தே தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்பது என் கனவு. 2011-ல் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது, சோளம் 11 ரூபாயிலிருந்து 12 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சந்தையில் 18 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்தது. அதன் வேல்யூ அடிஷன் 1:2 -ஆக இருந்தது. அதே சோளத்தை மதிப்புக்கூட்டி, `கார்ன் ஃப்ளேக்ஸ்’-ஆக (Corn flakes) மாற்றி, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யும்போது, அதன் வேல்யூ அடிஷன் 1:30 -ஆக மாறியது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கார்ன் ஃப்ளேக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்க முடிவெடுத்தேன். மத்திய, மாநில அரசுகளிடம் நிதியுதவி பெற்று, சீனாவிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்தேன்.

பெரம்பலூரில் சின்ன வெங்காயமும் அதிக அளவு விளைச்சல் கிடைப்பதால், சோளம் சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து `கார்னியன்ஸ்’ (Cornions) எனும் புதிய பிராண்டை ஏற்படுத்தினோம், ஒரு பிரபல உணவகத்தைச் சேர்ந்தவர் கொடுத்த ஐடியாவால், சின்ன வெங்காயத்தை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதாவது, சின்ன வெங்காயத்தை உரித்து, தேவையற்ற பகுதிகளை நீக்கி, சுத்தப்படுத்தி, சமையலுக்கு ஏற்றவகையில் கெட்டுப்போகாமல் பேக் செய்து அதிகாலையில் கடைகளில் கிடைப்பதுபோலத் தயாரித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதுதான் விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையே இருக்கும் சப்ளை செயின் கேப்பைக் கண்டுபிடித்தோம்.
இருவருக்கும் பயனளிப்பதுபோல, கடந்த 2021-ம் ஆண்டில் இ-சந்தை என்ற புது பிராண்டை உருவாக்கினோம். இன்று சென்னையிலிருக்கும் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் ஆன்லைனில் பிரபலமாக இருக்கும் ‘ஃபுட் புராடக்ஸ் டெலிவரி’ நிறுவனங்களோடு இணைந்து எங்களின் விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறோம். தற்போது பிடுபி (B2B - Business-to-Business Service) மாடலில் ஆறு மாவட்டங்களுக்குப் பழங்கள், காய்கனிகளை இ-சந்தை மூலம் சப்ளை செய்கிறோம். ஊட்டியிலிருக்கும் ஒரு விவசாயி விளைவித்த கேரட் 24 மணி நேரத்தில், அது 2 கிலோவாக இருந்தாலும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு குக்கிராம வாடிக்கையாளருக்குக் கிடைக்கும்படி எங்கள் டெலிவரி மாடலை வளர்த்திருக்கிறோம். இதற்கெல்லாம் என்னுடைய கோ ஃபவுண்டரான மகாலட்சுமியின் ஆதரவும், எங்கள் டீமின் அர்ப்பணிப்பும்தான் காரணம். இ-சந்தையின் பிறப்பிடம் பெரம்பலூர்தான். ஆனால், அதைத் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தி, உலகம் முழுக்கக் கொண்டுபோக வேண்டும் என்பதுதான் எங்களின் பெருங்கனவு” என்கிறார் நம்பிக்கையுடன்!