மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 48 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

கோரையாறு அருவி
பிரீமியம் ஸ்டோரி
News
கோரையாறு அருவி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

பேக்கேஜிங் இண்டஸ்ட்ரி!

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, சோளம், சின்ன வெங்காயம் போன்றவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, சந்தையில் விற்பனை செய்யும்பட்சத்தில் நிச்சயமாக அவற்றைத் தரமான முறையில் வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் ஏற்றுமதி செய்யவேண்டியிருக்கும். அந்தத் தேவையை நிறைவேற்ற பெரம்பலூர் மாவட்டத்தில் பேக்கேஜிங் இண்டஸ்ட்ரி (Packging Industry) ஒன்றை நிறுவுவது அவசியம். சோளத்திலுள்ள ஸ்டார்ச்சைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத பேக்குகளைத் தயாரிக்க முடியும் என்பதால் அதையும் இங்கே தயாரித்து, விற்பனையை மேம்படுத்தலாம். இதற்குக் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு தேவைப்படும். இதனால் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்க்கு வருமானம் பெறலாம். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, பெரம்பலூர் மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி, அந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலாம்.

ஜுமான்ஜி தீம் பார்க்!

பெரம்பலூர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்று சுமார் 34,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் பச்சைமலை, கடல் மட்டத்திலிருந்து தோராயமாக 1,000 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஓர் அங்கமாக விளங்கும் இந்த மலையில் நெல், கம்பு, கேழ்வரகு, இஞ்சி, மாம்பழம், கொய்யா, பலா உள்ளிட்ட பயிர்களும், பலவிதமான மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. பெரிய அளவில் சுற்றுலாப்பயணிகளின் வருகையின்றி இந்தப் பகுதி இருக்கிறது. இந்த மலைப்பகுதியிலுள்ள பயிர்களையும் பூக்களையும் அப்படியே பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பகுதியில் வாழும் உயிரினங்களையும் தொந்தரவு செய்யாமல் ஒரு தீம் பார்க்கை அமைத்தால் ஆண்டுதோறும் கோடிகளில் வருமானம் ஈட்டுவதோடு, சுற்றுலாப்பயணிகளின் வருகையையும் அதிகரிக்க முடியும்.

கனவு - 48 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 48 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற அட்வென்ச்சர் திரைப்படம் `ஜுமான்ஜி’ (Jumanji). இந்தப் படம் பல பகுதிகளைக்கொண்டிருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் சிக்கிக்கொள்வார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டாஸ்க் தரப்படும். அந்த டாஸ்க்கைக் கடக்க சவால்கள் ஒவ்வொன்றாகக் காத்திருக்கும். அந்தச் சவால்களைத் தாண்டி, இறுதியில் யார் வெளியேறும் பகுதிக்கு (Exit Point) வருகிறாரோ அவரே வெற்றியாளர். இது படத்தில் இடம்பெறும் காட்சியமைப்பு. அதே காட்சியமைப்பைப் பச்சைமலையில் நிஜமாக்க முடியும். எப்படி?

கோரையாறு அருவி
கோரையாறு அருவி

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள Theme-ஐ மையமாகவைத்து ஏற்கெனவே, இத்தாலி நாட்டிலுள்ள ரோஞ்சி பகுதியில் `கார்டாலாண்ட் ரிசார்ட்’ (Gardaland Resort) எனும் பெயரில் தீம் பார்க்கை அமைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க 3D மாடலில் வடிவமைக்கப்பட்ட இந்த தீம் பார்க், உலக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக மாறிவருகிறது. இது போன்றதொரு தீம் பார்க்கை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பச்சைமலையில் அமைக்க வேண்டும். மலையிலுள்ள ஒரு பகுதியை மட்டும் ஒதுக்கி, தனிப்பாதை அமைத்து ஜுமான்ஜி தீம் பார்க் (Jumanji Theme Park) என்ற பெயரிலேயே உருவாக்க வேண்டும். மேலும், இந்த மலையில், மங்களம் அருவி, மயில் ஊற்று அருவி, கோரையார் அருவி என மூன்று அருவிகள் இருக்கின்றன. இந்த மூன்று அருவிகளையும் தீம் பார்க்குக்குள் கொண்டுவந்து அவற்றை வெளியேறும் பகுதிகளாகப் (Exit Point) பயன்படுத்த முடியும்.

பச்சைமலையில் ஜுமான்ஜி தீம் பார்க் அமைக்கச் சுமார் 60 ஏக்கர் அளவுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தீம் பார்க்கை அமைக்க சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு தேவைப்படும். குழந்தைகளுக்கு 1,000 ரூபாய், பெரியோருக்கு 1,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, இந்த தீம் பார்க்கை நிர்வாகம் செய்தால் ஆண்டொன்றுக்குச் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். ஓரிரு வருடங்களிலேயே முதலீட்டையும் திரும்பப் பெற முடியும்.

சுமார் 250 பேருக்கு நேரடியாகவும், அதைச் சார்ந்த பிற தொழில்களின் வழியே 750 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பச்சைமலை சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிவதோடு, அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரமும் பொருளாதாரமும் முன்னேற்றம் காணும்.

கனவு - 48 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

டர்ட் ரேஸிங்!

உலக அளவில் டர்ட் ரேஸிங்கை (Dirt Racing) நடத்துவதில் முன்னணியில் இருப்பது ரெட் புல் நிறுவனம். இது பல்வேறு நாடுகளில் டர்ட் ரேஸிங்கை நடத்திவருகிறது. டர்ட் ரேஸிங்கில் புகழ்பெற்றவர், அமெரிக்காவைச் சேர்ந்த எலி டொமாக் (Eli Tomac). உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

29 வயதேயான இவருடைய டர்ட் ரேஸிங்கைக் காண உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்தியாவிலும்கூட ரெட் புல், டர்ட் ரேஸிங் நடத்தியிருக்கிறது. பெங்களுரில் ‘ரெட்புல் ஏஸ் ஆஃப் டர்ட்’ என்ற பெயரில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 32 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை யுவகுமார் என்பவர் வென்றார். டர்ட் ரேஸிங் மீதான ஆர்வம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதற்கு இது ஒரு சான்று.

கனவு - 48 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

டர்ட் ரேஸிங்கில் பயன்படுத்தப்படுவது 2 ஸ்ட்ரோக் வகை பைக்குகள். இவற்றிலுள்ள இன்ஜினின் இழுதிறன் மிக மிக அதிகம். அதனால்தான் இவை டர்ட் ரேஸிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. 2 ஸ்ட்ரோக் வகை பைக்குகள் அதிக அளவில் கார்பனை உமிழும் என்பதால் பொது இடங்களில் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பந்தயம் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தலாம். அதற்குத் தடையில்லை. டர்ட் ரேஸிங்கில் பங்கேற்கும் வகையில் 2 ஸ்ட்ரோக் வகை பைக்குகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இந்த வாகனங்களில் நீளமான சஸ்பென்ஷன் (Suspension) பொருத்தப்பட்டிருப்பதால், பந்தயத்தில் ஈடுபடும் வீரர்களுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பைக்குகளே கரடு முரடான பாறைகள் அல்லது பெரிய மணல்பரப்புகளில் நடத்தப்படும் டர்ட் ரேஸிங்கில் பயன்படுத்தப்படுகின்றன.

கனவு - 48 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் டர்ட் ரேஸிங் நடத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. கொளக்காநத்தம் பகுதியில் காணப்படும் மணல் பரப்பானது சுமார் 1,000 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. இந்த மணல் பரப்பில் பாலைவனத் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் ‘டர்ட் ரேஸிங்’ போட்டிகள் நடத்தலாம். அதற்காக, ரெட் புல் அல்லது வேறு தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கலாம். அதனால், அந்தப் பகுதிக்குச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யலாம். இப்போது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் கல்ச்சுரல் அவுட்டிங்ஸ் (Cultural Outings) அதிகரித்திருக்கிறது. வாரத்தில் ஓரிரு நாள்கள் வெளியிடங்களுக்குச் சென்று அட்வென்ச்சரில் ஈடுபடுகின்றனர். அத்தகையோரை இந்த ‘டர்ட் ரேஸிங்’கில் பங்குபெற ஊக்குவிக்கலாம். பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு அவர்களைக் குழுவாக ரேஸிங்கில் பங்கெடுக்கச் செய்யலாம்.

அதுமட்டுமின்றி, டர்ட் ரேஸிங்கில் புதிதாக ஈடுபடுபவர்களுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் அங்கேயே ஒரு டர்ட் ரேஸிங் பயிற்சி மையத்தையும் நிறுவ வேண்டும். சுற்றுலா வரும் பயணிகளுக்கு அரை நாள் பயிற்சி மற்றும் டர்ட் ரேஸிங்கில் ஈடுபட வழிசெய்யலாம். பைக் ரேஸிங் மட்டுமின்றி டர்ட் கார் ரேஸிங்கும் நடத்தலாம். இதற்கெல்லாம் உரிய கட்டணம் நிர்ணயம் செய்து, வசூலிக்க வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு, பல நூறு பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.கொளக்காநத்தம் பகுதிக்குச் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால், பிற இடங்களையும் அவர்கள் நாடிச்செல்லும் சூழல் உருவாகும். இதனால் அந்த மாவட்டத்தில், நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவிதப் பயன்பாடுமின்றி கிடக்கும் `1,000 ஏக்கர் மணல்மேட்டை 1,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பொன்மேடாக மாற்ற’ தொழில்முனைவோர்களே முன்வாருங்கள்!

(இன்னும் காண்போம்)

அடுத்த கனவு... சேலம்