
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
‘கனவு’ தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து பலதரப்பட்ட ஆரோக்கியமான விமர்சனங்கள் என்னை வந்து சேர்ந்தவண்ணம் இருக்கின்றன. அந்த விமர்சனங்களில் ஒருசிலர் கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ‘ஒவ்வொரு மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் முன்னெடுக்கும் வகையில் நீங்கள் பல்வேறு பயனுள்ள புராடக்டுகளை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். அவற்றில் ஏதேனும் ஒரு வகையில் மதுவும் சேர்ந்து நுழைந்துவிடுகிறதே?’.

நம் ஊரில்தான் மது, அரசியல் மயமாக்கப்பட்டிருக்கிறது. மது குறித்த அச்சம் பெரும்பாலானோருக்குத் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. அண்மையில், சோஷியல் மீடியாவில் மது பற்றிப் பதிவிட்ட என் டேட்டா ஒன்று வைரலானது. பலரும் அதைப் பகிர்ந்திருந்தீர்கள். அந்த டேட்டாவை வைத்து, பலவிதமான விமர்சனங்களும் விவாதங்களும் நிகழ்த்தப்பட்டன. பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அந்த `டேட்டாவை ஒட்டி முன்னும் பின்னுமாகப் பல விஷயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தேன். இதையே மறுபடியும் இங்கே விரிவாக நான் எழுதப்போவதில்லை. அவற்றை யாரேனும் தவறவிட்டிருந்தால் என் சோஷியல் மீடியா பக்கத்தில் இப்போதும் இருக்கிறது. அவற்றைப் பார்த்து, படித்துவிடுங்கள் ப்ளீஸ்!
ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது, ஏதேனும் ஒரு மது வகையை இந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சூளுரைத்துக்கொண்டெல்லாம் நானும், எனது குழுவும் இயங்குவதில்லை. உண்மையைச் சொல்லட்டுமா... பல மாவட்டங்களில் மேற்கண்ட விமர்சனத்தை கருத்தில்கொண்டே நாங்கள் பல மது சார்ந்த புராடக்டுகளைக் கைவிட்டிருக்கிறோம். ஆனாலும், சில நேரங்களில் எனது குழுவின் பரிந்துரையை என்னால் நிராகரிக்க முடிவதில்லை. காரணம், அவை மது சார்ந்து மட்டும் இருப்பதில்லை. அந்த மாவட்டத்தில் அது அபரிமிதமான வளமாக இருப்பதும்... அவற்றைக் கைவிடுவதால் பல ஆயிரம் கோடி வருமானத்தை இழக்கவேண்டி வரும் என்பதாலும்தான். மது குறித்த என் பதிவை இத்துடன் நிறுத்திக்கொண்டு, நேரடியாக சேலம் மாவட்டத்தின் வளங்களை எப்படி வாய்ப்புகளாக மாற்றலாம் என்பது குறித்துக் காணலாம் வாருங்கள்...
சப்ரா சில்க் வகை தரைவிரிப்பான்!
இயற்கையின் கொடைகளில் ஒன்றுதான் ‘அகேவ்’ (Agave) எனப்படும் நீலக்கற்றாழை. வறண்ட நிலப்பரப்புகளிலும், பாலைவனங்களிலும் எளிதில் காணக்கிடைக்கும் இந்த நீலக்கற்றாழையிலிருந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி வருமானம் பெற முடியும். கற்றாழையில் பல ரகங்கள் உண்டு என்றாலும், அவற்றில் அகேவ் வகையை வறண்ட நிலப்பரப்பில் மிக மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி, வளர்க்க முடியும். இந்த வகை நீலக்கற்றாழையிலிருந்து ‘டகிலா’ என்கிற உயர்வகை மது, சப்ரா பட்டு, தரைவிரிப்பான்கள், கயிறுகள், பைகள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றைத் தயாரிக்க முடியும்.

சேலம் மாவட்டத்தின் வளங்களில் ஒன்று மேக்னசைட் தாது. இந்தத் தாதுவைக் கண்டறிந்து, சுமார் 4,200 ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தியது தமிழ்நாடு அரசு. ஏனோ சில காரணங்களால் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பகுதியில் தாது எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவேயில்லை. கருவேல மரங்கள் நிறைந்து கிடக்கும் அந்தப் பகுதியைக் கைப்பற்றி, கருவேல மரங்களை அகற்றி அங்கே நீலக்கற்றாழையைப் பயிரிட வேண்டும். பொதுவாக, இது நெகிழ்ச்சித் தன்மையையும், ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையையும் கொண்டிருக்கும். இங்கே உற்பத்தியாகும் நீலக்கற்றாழையை மட்டும் பயன்படுத்தி, சப்ரா சில்க் வகை தரை விரிப்பான்களை (Sabra Silk based Rug) உருவாக்க முடியும். இதற்கான தொழிற்சாலையை இங்கே நிறுவுவது அவசியம்.

ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 2.5 டன் அளவுக்கு நீலக்கற்றாழை இழை கிடைக்கிறது. அந்தவகையில் சுமார் 4,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டால், ஆண்டொன்றுக்குத் தோராயமாக 10,200 டன் நீலக்கற்றாழை இழை கிடைக்கும். 3 அடிக்கு 5 அடியுள்ள ஒரு தரைவிரிப்பான் தயாரிக்க 3 கிலோ அளவுக்கு இழை தேவைப்படும். அந்தவகையில் ஆண்டொன்றுக்குச் சுமார் 34 லட்சம் தரைவிரிப்பான்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு தரைவிரிப்பானை, குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தால், ஆண்டொன்றுக்குச் சுமார் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 2,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
டாபியாகோ கப் அண்ட் மீல்பாக்ஸ்!
வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம் மேம்பாடு போன்ற பல காரணங்களுக்காக சென்னை போன்ற மாநகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர். இதனால், பல பிரச்னைகள் உண்டு என்றாலும், அவற்றில் முக்கியமானது பிளாஸ்டிக் பயன்பாடும், அதனால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க அரசு பல முன்னெடுப்புகளையும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் தொடர்ந்து நடத்திவந்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளைக் கட்டுக்குள் வைப்பது பெரும் சவாலான காரியமாக மாறியிருக்கிறது. `இதற்குக் காரணம் நுகர்வோரா, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களா?’ என்கிற விவாதங்களும் ஆங்காங்கே நடந்தவண்ணம்தான் இருக்கின்றன. உண்மையில், இதைத் தடுக்க முடியுமா?
முடியும். உலகம் முழுக்கவிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒரே இடத்தில் குவித்து, அவற்றில் வகை பிரித்தால், ஏறக்குறைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் 10 பெயர்களிலேயே அடக்கிவிடலாம். தன்னுடைய புராடக்டுகளின் வழியே பெரும் பிளாஸ்டிக் குப்பைகளை இத்தகைய நிறுவனங்களே உருவாக்குகின்றன. உண்மை இப்படியிருக்கும்போது, நுகர்வோரின்மீது குற்றம்சாட்டுவதால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. அதனால்தான், இப்போது ‘எக்ஸ்டெண்டட் புரொட்யூசர் ரெஸ்பான்சிபிலிட்டி’ (Extended Producer Responsibility) எனும் கருத்தாக்கம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமின்றி, மிகப் பரவலாக விவாதிக்கப்படும் ஒன்றாக மாறிவருகிறது. பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்களைப் பயன்படுத்துவதில் நுகர்வோரும் அரசும் ஆர்வம்காட்டத் தொடங்கிவிட்டனர். இந்த மாற்றத்தில் அங்கம் வகிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரவள்ளிக் கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் `டாபியாகோ கப் அண்ட் மீல்பாக்ஸ்’களைத் (Tapioca Cup and Mealbox) தயாரிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் சுமார் 54,000 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கில் மாவுச்சத்து (Starch) அதிகம். இதை மறுசுழற்சி (Recyclable) செய்து மீண்டும் பயன்படுத்தலாம். மேலும், இது 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைத் தாங்கக்கூடும் என்பதால், மைக்ரோவேவ் அவனிலும் பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி இந்த டாபியாகோ கப் அண்ட் மீல்பாக்ஸில் பிரின்ட் செய்துகொள்ள இயலும். இதனால், தங்கள் நிறுவனத்தை பிராண்டிங் செய்து, பிரபலப்படுத்த இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்வழியே நிறுவனங்கள் மறைமுகமாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் பங்கு வகிக்க முடியும். இந்த டாபியாகோ கப் அண்ட் மீல்பாக்ஸுகளைத் தேவைக்கேற்ப பல்வேறு அளவுகளில் தயார் செய்து, விற்பனை செய்தால் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
காஸ்டர் ஆயில் பயோ பாலியெஸ்டர்!
ஆமணக்குக் கொட்டையிலிருந்து பெறப்படுவது ஆமணக்கு எண்ணெய். இதை விளக்கெண்ணெய் என்று சொன்னால் எளிதில் எல்லோருக்கும் புரியும். இதையே ஆங்கிலத்தில் காஸ்டர் ஆயில் (Castor oil) என்கிறார்கள். இந்த எண்ணெயுடன் மேலும் சில எண்ணெய்களைச் சேர்த்து, விளக்கு எரிக்கும் எண்ணெயாகப் பயன்படுத்தலாம். ஆனால், அதே ஆமணக்கு எண்ணெயிலிருந்து பயோ பாலியெஸ்டர் (Castor oil Bio Polyester) தயாரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பாலிஸ்யெடர் பெரும்பாலும் ஆடைகள் தயாரிப்பில் பயன்படுகிறது. ஆனால், அதே பாலியெஸ்டரை மருத்துவத்துறையில் பயன்படுத்துகிறார்கள். வழக்கமாக, உடலில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய இவை உபயோகிக்கப்பட்டாலும், அதனால் சிலருக்கு பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதைச் சரிசெய்ய, பெட்ரோலியத்துக்கு மாற்றாக ஆமணக்கு எண்ணெயிலிருந்து பயோ பாலியெஸ்டரை உருவாக்கலாம். இது உடலில் இணைந்து செயல்படும் என்பதால் பின்விளைவுகள் பெரும்பாலும் இருக்காது. பொதுவாக, பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் ஒன்றுதான் பாலியெஸ்டர். பெட்ரோலியத்திலிருந்து எளிதாக பாலியெஸ்டர் தயாரிக்க முடியும் என்றாலும், அது சுற்றுச்சூழலுக்கு பெரும் பிரச்னைகளை உருவாக்கும் என்பதால், அதற்கு மாற்றாக ஆமணக்கு எண்ணெயிலிருந்து பாலியெஸ்டரைத் தயாரிப்பது சுற்றுச்சூழலை அதிக அளவில் பாதிக்காது.

பெட்ரோலியம் குறிப்பிட்ட வருடங்களில் தீர்ந்துபோக வாய்ப்பு உண்டு. ஆனால், ஆமணக்கைத் தேவையான அளவுக்குப் பயிரிட்டு, தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், இதைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் ஒரு பயோ பாலியெஸ்டர் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். மேக்னசைட் தாது எடுக்க ஒதுக்கப்பட்ட 4,200 ஏக்கரில் ஒரு பகுதியை ஆமணக்குப் பயிரிட பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் வழியாக ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்க முடியும். இதனால், சேலம் மாவட்ட மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் மேம்படும்!
(இன்னும் காண்போம்)