மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்

மில்லட் பான்கேக் மிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மில்லட் பான்கேக் மிக்ஸ்!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

மில்லட் பான்கேக் மிக்ஸ்!

சர்க்கரைக் குறைபாட்டுக்கு மட்டுமல்ல, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் முக்கியப் பங்குவகிக்கும் கேழ்வரகு, சேலம் மாவட்டத்தில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று. கேழ்வரகுபோலவே வெள்ளைச் சோளமும் மிகப் பெருமளவில் பயிரிடப்படுகிறது. இவை இரண்டையும் சேர்த்து, ஒரு மதிப்புக்கூட்டப்பட்ட ‘மில்லட் பான்கேக் மிக்ஸ்’-ஆக (Millet Pancake Mix) மாற்றினால் கேழ்வரகு... இனி கேர் (Care)வரகு!

சேலம் மாவட்டத்தில் வெள்ளைச் சோளம் சுமார் 1,25,000 ஏக்கர் பரப்பளவிலும், கேழ்வரகு சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்படுகிறது. அதிக அளவு சத்துகள்கொண்ட இவை இரண்டுமே மானாவாரிப் பயிர்கள். கேழ்வரகு ஆண்டொன்று ஒரு போகமும் வெள்ளைச் சோளம் மூன்று போகமும் பயிரிடப்படுகின்றன. இவற்றிலிருந்து `மில்லட் பான்கேக் மிக்ஸ்’ என்ற புராடக்டை உருவாக்க வேண்டும்.

கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்

பான்கேக் இன்ஸ்டன்ட் மிக்ஸை (Pancake Instant Mix) பொறுத்தவரைக்கும், பெரும்பாலும் மைதாவைக்கொண்டே தயாரிக்கிறார்கள். உடல்நலனுக்கு மைதா உகந்ததல்ல என்பதால், அவற்றின் அளவைக் குறைத்து கேழ்வரகு மாவையும் வெள்ளைச் சோளத்தின் மாவையும் அந்த இடத்தில் நிரப்புவது அவசியம். பான்கேக் இன்ஸ்டன்ட் மிக்ஸ் தயாரிக்க வெள்ளைச் சோளமும், கேழ்வரகும் சம அளவில் கலக்கப்பட்ட மாவு தேவைப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட மிக்ஸை அப்படியே விற்பனைக்கு வைத்தால், பெரும்பாலானோர் இதை விரும்பி உண்ண மாட்டார்கள் என்பதால் இதன் சுவையைக் கூட்டுவதோடு, எல்லோரும் ருசிக்கும்விதமாக தேன் (Honey), சாக்லேட் (Chocolate), புளுபெர்ரி (Blueberry), பட்டர்ஸ்காட்ச் (Butterscotch) போன்றவற்றை அதில் தேவைக்கேற்ப சேர்த்து, உருவாக்க வேண்டும்.

பெரியோர்களை மட்டுமின்றி, இளைஞர்கள், குழந்தைகளையும் ஈர்க்கும் வகையில் பான்கேக் மிக்ஸுடன், ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அறிவை வளர்த்தெடுக்கும் வகையிலான விளையாட்டுகளை அதில் இணைத்து, விற்பனை செய்தால் வருமானம் பல்கிப் பெருகும்.

கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்

இந்த மாவட்டத்தில் வெள்ளைச் சோளம் ஏக்கர் ஒன்றுக்கு (3 போகம்) ஒரு டன்னிலிருந்து ஒன்றரை டன் வரையும், கேழ்வரகு ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் (ஒரு போகம்) அளவிலும் விளைச்சல் கிடைக்கிறது. ஆண்டொன்றுக்கு இரண்டும் சேர்த்து சுமார் 4,80,000 டன் அளவுக்குக் கிடைக்கும் இவற்றிலிருந்து ஒரு சதவிகிதம் அளவுக்கு (தோராயமாக 4,800 டன்) எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, 500 கிராம் கொண்ட பான்கேக் இன்ஸ்டன்ட் மிக்ஸ் செய்ய 125 கிராம் (வெள்ளைச் சோளம், கேழ்வரகு சம அளவில்) மாவு தேவைப்படும். இதிலிருந்து தோராயமாக ஆண்டொன்றுக்கு 38,500 டன் அளவுக்கு பாக்கெட்டுகளை உருவாக்க முடியும். சந்தையில் ஒரு 500 கிராம் பாக்கெட்டின் விலை 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தாலே, ஆண்டுக்குச் சுமார் 960 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடிவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, சேலம் மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.

சில்வரசென்ட் ஃபேப்ரிக் ஆடைகள்!

ஃபிட்னெஸ் சென்டர்களில் வொர்க்அவுட்டில் ஈடுபடுபவர்களுக்கு வியர்வை அதிகமாகச் சுரக்கும். அளவுக்கதிகமான வியர்வை, துர்நாற்றத்தை உருவாக்கும். இந்தத் துர்நாற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டதே சில்வரசென்ட் ஃபேப்ரிக் ஆடைகள் (Silverescent Fabric dresses).

இது 99.9 சதவிகிதம் சில்வர் நானோபார்டிக்கிள்ஸை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும். இவை துர்நாற்றத்தையும், அதனால் உருவாகும் பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷனையும் தடுக்கும். இந்த வகை ஆடைகளைத் தயாரிப்பதில் அமெரிக்க-கனடிய நிறுவனமான லுலுலெமன் அத்லெடிக்கா (Lululemon athletica inc.) முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சிப் வில்சன் (Chip Wilson). இவர் ஒரு முன்னாள் ஹாக்கி மற்றும் ஃபுட்பால் வீரர். இவர் கண்டுபிடித்ததுதான் சில்வரசென்ட் ஃபேப்பரிக். உலகம் முழுக்கவே இந்த வகை ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சேலம் மாவட்டத்தில் சில்வரசென்ட் ஃபேப்ரிக் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.

கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்
கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்

சில்வரசென்ட் ஃபேப்ரிக் ஆடைகள் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பது வெள்ளி (Silver). தமிழ்நாட்டில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் சேலம் முன்னிலை வகிக்கிறது. சுமார் 10,000 யூனிட்டுகள் இந்த மாவட்டத்தில் உள்ளன. பல வீடுகளில் குடிசைத் தொழிலாகவும் இது நடக்கிறது. கொலுசு தயாரிக்கும்போது சேதாரம் (Wastage) ஏற்படும். மாவட்டம் முழுக்கவுள்ள சேதாரத்தைச் சேகரித்தாலே பல டன் அளவுக்குக் கிடைக்கும். இதை சில்வரசென்ட் ஃபேப்ரிக் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்துக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்திக்கொண்டு ஆடைகளை உருவாக்க வேண்டும். மார்க்கெட்டில் ஒரு சில்வரசென்ட் வொர்க்அவுட் (Silverescent Workout) ஆடையைக் 5,500-லிருந்து 6,000 ரூபாய் வரை விலைவைத்து விற்க வேண்டும். வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதும் அவசியமானது. இவ்வாறு செய்யும்போது ஆண்டுதோறும் சுமார் 300 கோடிக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும். அது மட்டுமின்றி, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம். இதனால் சேலம் மாவட்டம் பொருளாதாரத்தில் மேலும் பலம்கொண்டதாக மாறும்.

நானோசெல்லுலோஸ் (Nanocellulose - Bio-Based Polymer)!

ஒரு தாவரம் உறுதியாக இருக்க வேண்டுமென்றால், அதன் செல்கள் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிப்பது செல்லுலோஸ். இது தாவரங்களில் இருக்கும் செல் சுவர்களில் (Cell Wall) காணப்படும். எல்லோருக்கும் புரியும் வகையில் கூற வேண்டுமென்றால் மரக்கூழ் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மரக்கூழிலிருந்துதான் நானோ செல்லுலோஸ் தயாரிக்கப்படுகிறது. இது சிறந்த இயந்திரப் பண்புகள் (Mechanical Properties), புதுப்பித்தல் (Renewability) போன்ற பல பண்புகளைக்கொண்டிருக்கிறது.

கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்

நவீனகாலத்தின் மிக முக்கியமான, பசுமையான பொருள்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், கார்பன் ஃபைபர், கண்ணாடி ஃபைபர் போன்றவற்றுக்கு மாற்றாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் இதைப் பயன்படுத்தி மருத்துவம், மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாப்கின்கள், கிச்சன் டவல்கள் போன்ற பல பொருள்களில் உறிஞ்சும் திறனை அதிகரிக்கவும் நானோ செல்லுலோஸ் பயன்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழலை பாதிக்காது.

சேலம் மாவட்டத்தில் சுமார் 14,000 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 70 டன் வீதம் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் டன் விளைச்சல் கிடைக்கிறது. அந்த வகையில் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 18 டன் அளவுக்குக் கரும்புக் கழிவு கிடைக்கிறது. பெரும்பாலும் இது விளைநிலங்களுக்கு உரமாகவும், பேப்பர் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகிறது.

கனவு - 50 - சேலம் - வளமும் வாய்ப்பும்

கரும்பின் கழிவுப் பொருளிலிருந்து (Sugarcane Bagasse) நானோ செல்லுலோஸ் தயாரிக்கலாம் என்பதால், இதற்கான தொழிற்சாலையை இந்த மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். இந்திய அளவில் 4 சதவிகிதம் மட்டுமே நானோசெல்லுலோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால், இதன் அளவை அதிகரித்து அதன் வழியே ஆண்டுதோறும் கோடிகளில் வருமானம் பெற முடியும். மேலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்க முடியும். இதனால் சேலம் மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்!

(இன்னும் காண்போம்)