மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 52 - சேலம் - வளமும் வாய்ப்பும்

வாட்டர் ரைடு சென்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
வாட்டர் ரைடு சென்டர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

வாட்டர் ரைடு சென்டர்

மலைகள், குன்றுகள், நீரோடைகள் என இயற்கையை வாரி அணைத்துக்கொண்டிருக்கும் மாவட்டங்களில் சேலமும் ஒன்று. பச்சைப் பசேலென இருக்கும் ஏற்காடு மலை, சில்லென்ற காற்றை அனுபவித்தவாறே காலாற நடைபோடக் காத்திருக்கும் மேட்டூர் அணை எனப் பொழுதுபோக்கச் சிறந்த இடங்கள் உண்டு. ஆனால், இவையெல்லாம் சுற்றுலாவுக்குப் போதுமானதாக இல்லை என்பதால், ஆண்டுதோறும் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. காரணம், குதூகலிக்கவும், துள்ளி விளையாடவும், சாகசம் செய்யவும் ஏற்றதாக அத்தகைய இடங்கள் உருவாக்கப்படவில்லை. முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் அதிகமாக வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வைத்திருக்கவே இன்றைய தலைமுறை விரும்புகிறது எனும் உண்மையை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்றாற்போல மாற்றங்களைக் கொண்டுவந்தால் கைமேல் பலன் உண்டு!

தமிழ்நாட்டின் மிகப் பெரிய மேட்டூர் அணை 1,700 மீட்டர் நீளம், 171 அடி அகலம்கொண்டது. 9,347 கோடி கன அளவுள்ள நீரைத் தேக்கிவைக்க முடியும். அணையில் இரண்டு நீர்மின் நிலையங்கள் உண்டு. இந்த பிரமாண்ட கட்டமைப்பைத் தாண்டி அங்கே பொழுதுபோக்க வேறெதுவும் இல்லை. ஆனால், பரந்து விரிந்து கிடக்கும் அணையின் நீர்ப்பரப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு வாட்டர் ரைடு சென்டரை (Water Ride Center) உருவாக்கினால் சாகசப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல், ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ராணுவப் பயிற்சி மையங்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கனவு - 52 - சேலம் - வளமும் வாய்ப்பும்

ஐரோப்பியப் பிரதேசங்களில் ஒன்றான வேல்ஸின் கார்டிஃப் (Cardiff) நகரத்தில் அமைந்திருக்கிறது, `கார்டிஃப் இன்டர்நேஷனல் வொயிட் வாட்டர் ராஃப்டிங்’ (Cardiff International White Water Rafting). இதை முன்மாதிரியாகக்கொண்டு, சேலம் மாவட்டத்தில் வாட்டர் ரைடு சென்டரை உருவாக்க வேண்டும். அங்கே வாட்டர் ராஃப்டிங் (Water Rafting), கேனோயிங் (Canoeing), கயாக்கிங் (Kayaking), ரிவர்போர்டிங், ஹைட்ரோஸ்பீடு (Riverboarding / Hydrospeed), ஸ்டாண்ட் அப் பாடில் போர்டிங் (Standup Paddle Boarding), ஃபேமிலி வாட்டர் டியூபிங் (Family Water Tubing) உள்ளிட்ட விளையாட்டுகளை அளிக்க வேண்டும்.

வாட்டர் ராஃப்டிங்: பாய்ந்து செல்லும் நீரோடையில், இன்ஃபிளாட்டபுள் ராஃப்டில் (Inflatable raft) அமர்ந்து, ஒரு குழுவாகச் சேர்ந்து, பாதுகாப்பு உடைகள், கவசங்களை அணிந்துகொண்டு படகைச் செலுத்தி, இலக்கை அடையும் விளையாட்டு. அதிவேகமாகப் பாய்ந்தோடும் நீரோட்டத்தில் படகைச் செலுத்துவதே சவாலானது. `சவாலே... சமாளி’ என்று குழுவினர் போட்டி போட்டுக்கொண்டு துடுப்பைச் செலுத்தும்போது குதூகலத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவிருக்காது.

கேனோயிங்: ஒற்றை பிளேடு கொண்ட பிளாஸ்டிக் துடுப்பைக்கொண்டு செலுத்தக்கூடிய கனமற்ற ஒடுக்கமான படகு வகையை `கேனோ’ (Canoe) என்று அழைக்கிறார்கள். இருவர் அமர்ந்து, பெரும் நீர்ப்பரப்பில் மெல்லிய அலைகளுக்கு இடையே இதமாகத் துடுப்பைச் செலுத்தி, இன்பமாகப் பொழுதைக் கழிக்க உகந்த விளையாட்டு இது.

கனவு - 52 - சேலம் - வளமும் வாய்ப்பும்

காயாகிங்: இரட்டை பிளேடு கொண்ட, பிளாஸ்டிக் துடுப்பைக்கொண்டு செலுத்தக்கூடிய வகையிலும், ஒருவர் மட்டுமே அமரும் வகையிலும் வடிவமைக்கப் பட்டிருக்கும். இதில் அமர்ந்து ஒய்யாரமாகத் தண்ணீரைப் பின்னுக்குத் தள்ளி முன்னால் நகர்ந்து செல்லலாம். இதுவே `காயாகிங்’ விளையாட்டு. தனிமை விரும்பிகளுக்குப் பிடித்த விளையாட்டு இது!

ரிவர்போர்டிங் மற்றும் ஹைட்ரோஸ்பீடு: பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலுள்ள வாய்க்கால், குளம், ஏரிகளில் தட்டையான பொருள்களைப் பயன்படுத்தி, அதில் சாய்ந்துகொண்டு கால்களைத் தண்ணீரில் உந்தித் தள்ளி நீச்சல் பழகுவார்கள். அதைத்தான் மேற்குலக நாடுகளில் `ரிவர்போர்டிங்’ மற்றும் `ஹைட்ரோஸ்பீடு’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

இது ஒரு பலகை விளையாட்டு. இதில் பங்கேற்பவர், தன்னுடைய கால்களில் துடுப்புகளை அணிந்திருப்பார். இது பலகையை உந்தித்தள்ளவும் திசை மாற்றத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. உடலும் மனமும் மகிழ்ச்சியில் திளைக்கும்!

ஸ்டாண்ட்அப் பாடில் போர்டிங்: மிதக்கும் பலகைமீது நின்று, ஒரு துடுப்பைப் பயன்படுத்தித் தண்ணீரை உந்தித் தள்ளி விளையாடுவதே ஸ்டான்ட்அப் பாடில் போர்டிங். அமைதியான நதியினிலே ஓடம்... என்று இனிமையாகப் பாடிக்கொண்டே விளையாடலாம்!

கனவு - 52 - சேலம் - வளமும் வாய்ப்பும்

ஃபேமிலி வாட்டர் டியூபிங்: காற்று நிரப்பப்பட்ட, வட்ட வடிவ, பெரிய அளவிலான ரப்பர் படகில் குடும்பமாகவோ அல்லது குழுவாகவோ சாய்வாக அமர்ந்துகொண்டு கைகளாலும் கால்களாலும் தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் பீய்ச்சி அடித்துக்கொண்டு விளையாடும் உற்சாகத்துக்குக் குறைவில்லாத விளையாட்டு இது.

இந்த விளையாட்டுகளைப் பாதுகாப்பு அம்சங்களுடன்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளோடு அளிப்பது முக்கியம். இந்த ஸ்டேஷனில் கிடைக்கப்பெறும் விளையாட்டுகளைச் சுற்றுலாப்பயணிகள் தங்களின் விருப்பத்துக்கேற்றவாறு பேக்கேஜ் முறையில் தேர்வுசெய்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளை அமைத்துத் தருவது அவசியம். விளையாட்டுக்கு ஏற்ப 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்து, வசூலிக்க வேண்டும். கூடுதலாக, அங்கே வரும் பயணிகளுக்கு அறுசுவையுடன்கூடிய உணவு வகைகள், நவீன வசதிளுடன்கூடிய தங்கும் அறைகள் போன்றவற்றையும் உருவாக்கித் தரும்போது, சாகசத்துக்குத் தயாராகி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஆண்டுதோறும் கோடிகளில் வருமானம் ஈட்ட முடியும்!

(இன்னும் காண்போம்)