
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கவர்ந்திழுக்கும் மூக்கனேரி!
நவீன வாழ்க்கை முறை இதுவரை இல்லாத அளவுக்கு மனநலப் பிரச்னைகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, பெரும்பாலான இளைஞர்களைப் பரபரப்பு மிக்க வாழ்க்கைச் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. இதிலிருந்து ஒதுங்கி, இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குவது, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தரும்!
சேலம் மாவட்டம் இயல்பாகவே இரு புறமும் மலைகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பு. சில மணி நேரத்துக்குள்ளாகவே குளுகுளு காற்றை அனுபவிக்க ஏற்காடு மலைக்குப் படையெடுக்க முடியும். அதற்கெல்லாம் நேரம் இல்லையென்றால், சில மணித்துளிகளில் மூக்கனேரியை அடைந்துவிட முடியும். சுமார் 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஏரியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட 47 சிறு தீவுகள் இருக்கின்றன. சுமார் 12,000 மரங்களும் அதில் அடக்கம். மரங்கள் இருந்தால் பறவைகளும் இருக்கும்தானே... 200 வகையான பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது மூக்கனேரி. இவ்வளவு சிறப்புகளைக்கொண்டிருக்கும் ஏரி, முறையாகப் பராமரிக்கப்படாததால் பாழடைந்துகொண்டிருக்கிறது. அதைச் சீர்செய்து, சுற்றுலாப்பயணிகளால் நிறைந்து வழியும் இடமாக மாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அந்தக் கனவை நிறைவேற்றும்விதமாகச் சில முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.
மூக்கனேரியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மக்களைக் கவர்ந்திழுக்கும்படியான சில மாற்றங்களைச் செய்தாலே, சுற்றுலாப் பயணிகளைக் கவருவதோடு, பல கோடி ரூபாய் வருமானமும் ஈட்ட முடியும். நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இப்போது பலருக்கும் ஏற்பட்டுவிட்டது. அதை இன்னும் மேம்படுத்தும் வகையில் மரத்தால் செய்யப்பட்ட நடைமேடை, பாலங்களை (Wood walk and Bridges) குறிப்பிட்ட தூரத்துக்கு அமைக்கலாம். அதேபோல, உடற்பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள, தனியாக ஒரு பகுதியை மெடிட்டேஷன் ஸ்பாட்டாக (Meditation Spot) அமைக்க வேண்டும். இங்கே, அரிய பறவைகளைக் காண ஒரு டவரையும் (Bird Watching Tower) அமைத்துத் தர வேண்டும். அதோடு பறவைகளை மிக நெருக்கமாகக் காணும் வகையில் தொலைநோக்கிகளையும் (Telescopes) அங்கு நிறுவ வேண்டும்.

ஏரியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட 47 சிறு தீவுகளைப் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு படகுப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப் படகுகள் சத்தம் எழுப்பாத (Soundless Boating) வகையில் எலெக்ட்ரிக் படகுகளாக இருப்பது அவசியம். அப்போதுதான் பறவைகளைத் தொந்தரவு செய்யாமல் அவற்றின் இயல்பைக் கண்டு ரசிக்க முடியும். அதேபோல அங்கு வரும் பறவைகள் உண்பதற்கு (Bird Feeding Area) ஏற்ற உணவுகளை விற்பனைக்கு வைத்து, அவற்றைப் பயணிகள் வாங்கி, அளிக்கும் ஏற்பாட்டையும் அமைத்துத் தரலாம். பறவைகள் ஒவ்வொன்றையும் குறித்த அரிய தகவல்கள்கொண்ட சிறிய அளவிலான இன்ஃபர்மேஷன் சென்டரை (Information Centre) அமைத்தால், சுற்றுலாப்பயணிகளோடு மாணவர்களுக்கும் பயன்படும்படியாக இருக்கும். அதையொட்டியே மூக்கனேரி ஏரிக்கு வரும் அரிய வகை பறவைகளின் மாதிரி மெழுகு வடிவங்களைக்கொண்டு பறவை அருங்காட்சியகத்தையும் (Bird Museum) அமைக்கலாம்.
இவை மட்டுமின்றி, இயற்கை அழகோடுகூடிய புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றாற்போல ஏரியில் பூங்காக்களை வடிவமைக்க வேண்டும். கூடுதலாக, தரமான உணவுகள் கிடைப்பதற்கும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும் ஏற்றவாறு நவீன வசதிகளை ஏற்படுத்தி, அனைவரும் செலுத்தக்கூடிய வகையில் கட்டணம் நிர்ணயம் செய்தால், மூக்கனேரி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும்!
டாபியாகோ ஸ்லைம்!
சேலத்தின் வளங்களில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கை மதிப்புக்கூட்டி, குழந்தைகள் விளையாடும் ஸ்லைம் தயாரிக்க வேண்டும். யுடியூப் வந்ததற்குப் பிறகு, குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாகியிருக்கிறது. குறிப்பாக, க்ளே, ஸ்லைம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுப் பொருள்களில் முதன்மையானவற்றில் சில. இவை, சந்தையில் அதிக விலை வைத்தே விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பதால், குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதல்ல. இவற்றுக்கு மாற்றாக மரவள்ளிக்கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் ஸ்லைம்களைத் தந்து, விளையாட ஊக்குவிக்கலாம். இவை குழந்தைகளுக்குப் பாதுகாப்பானவை. இயற்கைக்கும் கேடு விளைவிக்காதவை.

மரவள்ளிக்கிழங்கில் அதிக அளவு மாவுச்சத்து உண்டு. இதில் பேக்கிங் சோடா மட்டும் சேர்த்து ஸ்லைம் உருவாக்கலாம். சேலம் மாவட்டத்தில் சுமார் 42,000 ஏக்கர் அளவுக்கு மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 1.2 டன் வீதம் ஆண்டு ஒன்றுக்கு 50,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. பொதுவாக, ஒரு கிலோ மாவு எடுக்க ஏறக்குறைய 5 கிலோ அளவுக்கு மரவள்ளிக்கிழங்கு தேவைப்படும். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளான ஸ்லைம் தயாரிக்க மொத்த விளைச்சலிருந்து சுமார் 1 சதவிகிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டால், தோராயமாக 110 டன் கிடைக்கும். ஒரு டன்னிலிருந்து 8,000 ஸ்லைம்கள் தயாரிக்க முடியும். ஆண்டொன்றுக்கு 9 லட்சம் ஸ்லைம்களைத் தயாரிக்க முடியும். சந்தையில் ஒரு ஸ்லைமின் விலையை 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இதனால், சேலம் மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்வதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும்!
(இன்னும் காண்போம்)
தயாரானது ‘கேஷ்விடா’!
18.05.2022 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில் வெளியான ‘கனவு’ தொடரில், ‘கனவு நிஜமாகிறது’ என்கிற தலைப்பில் பண்ருட்டியைச் சேர்ந்த தொழில்முனைவர் சிவா என்பவர் முந்திரியிலிருந்து ‘கேஷ்விட்டா’ (Cashvita) எனும் முந்திரிப் பழச்சாறு தயாரிக்க முன்வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். தற்போது, அந்த புராடக்ட் அனைத்துப் பணிகளும் முடிந்து, விற்பனைக்குத் தயாராகியிருக்கிறது.
‘ஒரு மாவட்டம் ஒரு புராடக்ட்’ (One District One Product) எனும் அடிப்படையில் ஒன்றிய அரசு, திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருக்கும் பொருள் `முந்திரி.’ சிவா தயாரித்திருக்கும் முந்திரிப் பழச்சாறு, அந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதி பெற்றிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ‘ஒரு மாவட்டம் ஒரு புராடக்ட்’ எனும் பெயரில் நடந்த அரசு விழாவில், பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் முந்திரிப் பழச்சாற்றை, விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கு அறிமுகம் செய்தார். பின்னர் ‘கேஷ்விட்டா’ புராடக்ட்டை அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர், முந்திரிப் பழச்சாறு தயாரிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தித்தருவதாக சிவாவுக்கு உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டு, உற்பத்தியைத் தொடர உத்தரவிட்டிருக்கிறார். மேலும், நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், பண்ருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் தொழில் தொடங்குவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்துதர முன்வந்திருக்கிறார். இந்த நிலையில் சிவா தயாரித்திருக்கும் முந்திரிப் பழச்சாற்றை ‘அக்ரிகல்ச்சர் அண்ட் மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்’ ஆய்வு செய்திருக்கிறது. விரைவில் முந்திரிப் பழச்சாறு உற்பத்தித் தொழிற்சாலைக்குத் தேவையான நிதி உதவியும் கிடைக்கவிருக்கிறது.

தை மாதம் அடிக்கல் நாட்டி, யூனிட் செட்டப் செய்து, மார்ச் இறுதியில் திறப்புவிழாவுக்குத் திட்டமிட்டிருக்கிறார் சிவா. ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் இவரைத் தொடர்புகொண்டு “பெண்களுக்கு வாய்ப்பளிக்க முடியுமா?” என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு, “நிச்சயமாக, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் துணை நிற்பேன்” என்று உறுதியளித்திருக்கும் சிவா, தன் கனவு நனவாகக் காரணமான ‘கனவு தமிழ்நாடு’ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந் தத்தைச் சந்தித்து, நன்றியைத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா, துபாய், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கேஷ்விட்டாவை வாங்கி, விற்பனை செய்யப் பலர் முன்வந்திருக் கின்றனர். ஜூ.வி-யில் 16.02.2022 இதழில் வெளியான ஃபெனி புராடக்ட் இமேஜும், சிவா தயாரித்திருக்கும் கேஷ்விட்டா இமேஜும் ஒரே மாதிரியாக வந்திருப்பது கூடுதல் சிறப்பு!
- அடுத்த கனவு தேனி