மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

தேனி
பிரீமியம் ஸ்டோரி
News
தேனி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு தேனி மாவட்டத்துக்கு உண்டு. அது, தமிழ் சினிமாவை தரம் உயர்த்திய திரைக்கலைஞர்களால் அதிகம் நிரம்பியிருப்பதுதான்! அந்தவகையில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து ஆகிய மூவரும் தமிழ் சினிமாவை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தியவர்கள். அத்தகையோர் தங்கள் படைப்புகளில் மண்ணையும் மனிதர்களையும், காட்சிகளாகவும், எழுத்தாகவும், இசையாகவும் பதிவுசெய்ததில் முன்னோடிகள் என்றாலும்.. அதன் பிறகு வந்த பாலா, தேனி ஈஸ்வர் என அதை மேலும் மெருகூட்டி உலகத் தரத்துக்கு நகர்த்திக்கொண்டு செல்வதில் முதன்மையானவர்கள். இந்தப் பட்டியல் நீளம் எனும் வகையில், இந்த மாவட்டத்தின் வளங்களில் முக்கியமானதாகத் திரைக்கலைஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மேலும், சி.சு.செல்லப்பா, மு.மேத்தா, நா. காமராசன், இரா.முத்துநாகு, உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான தமிழ் இலக்கிய ஆளுமைகளும் நிறைந்த மாவட்டம் தேனி.

வழக்கமாக ஒவ்வொரு மாவட்டத்தின் வளங்களை, வாய்ப்புகளாக மாற்றும்போதும் முதலில் அங்கே இருக்கும் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை எப்படித் தொழிற்சாலைகளாக மாற்ற முடியும், அதாவது, `From Produce to Products’ என்ற கண்ணோட்டத்தில்தான் ஆய்வு நடக்கும்; பிறகு அங்கே இருக்கும் கனிம வளங்கள், இறுதியாக சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்று போய் முடியும். இதைத் தேனியில் அப்படியே மாற்றி அமைத்திருக்கிறோம். அந்தவகையில், முதலில் சுற்றுலா!

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

தேனிவுட் (Theniwood)

மதுரையிலிருந்து பிரிந்த மாவட்டமாக தேனி அறியப்பட்டாலும், அந்த மண்ணின் மைந்தர்களே மதுரையின் முகங்கள். `தேவர் மகன், `விருமாண்டி’, `பருத்திவீரன்’, `மைனா’, `கும்கி’, `கண்டேன் காதலை’ என மண் சார்ந்த கதைகளைப் படமாக்க வேண்டுமென்றால், இயக்குநர்களின் படப்படிப்புத்தளங்கள் பட்டியலில் (Location Scouting List) முதலில் `டிக்’ அடிக்கப்படுவது தேனிதான். காடு, மலை, அருவி, ஓடை என இயற்கைக் காட்சிகள் ஒருபுறமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறட்சியைத் தாங்கிப் பிடித்திருக்கும் நிலம் மறுபுறமும் என நாணயத்தின் இரு பக்கம்போல வளமும் வறட்சியும் ஒன்றாகக் காணக் கிடைக்கும் என்பதால், திரைப்பட இயக்குநர்களின் படப்பிடிப்புத்தளத்துக்கான சிறந்த இடங்களில் ஒன்றாக தேனியும் முன்னணியில் நிற்கிறது.

தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான பாடல் காட்சிகள் தேனியில் படம்பிடிக்கப்படு கின்றன. அந்தவகையில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, மேகமலை, வெள்ளிமலை, குரங்கணி, டாப் ஸ்டேஷன் எனப் படப்பிடிப்பு நடத்துவதற்குச் சிறந்த இடங்கள் ஏராளம் உண்டு. இவற்றைப் படப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல், சுற்றுலாத்தலமாகவும் பயன்படுத்த வேண்டும். இதை பிற மாவட்ட, மாநில மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளவேண்டும்.

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

அதேபோல, `தேனிவுட்’ (Theniwood) என்ற பெயரிட்டு, படப்பிடிப்புக்கான முக்கிய மாவட்டமாகவும் தேனியை அறிவிக்க வேண்டும். படப்பிடிப்புகளின் வழியாகவும், சுற்றுலாப்பயணிகளின் வருகையாலும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டலாம். இதனால் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

கொழுக்குமலை சூரிய உதயம் (Sunrise Viewpoint)

இன்றைய இளைய சமுதாயத்தினர் மத்தியில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. வார இறுதியில் குழுவாகச் சேர்ந்து மலையேற்றம், சைக்கிளில் செல்லுதல், சாகசப் பயணங்கள், அதிகாலை சூர்ய உதயம் என உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடிய பலவற்றை மேற்கொள்கின்றனர். அதற்காக, பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணம் மேற்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்தக் கலாசாரம் இப்போது பலரிடமும் பரவிவருகிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

தேனி மாவட்டத்தில் மலையேற்றத்துக்கும், சூரியன் உதிப்பதைக் காண்பதற்கும் சிறந்த இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது கொழுக்குமலை. இந்த மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. மலை உச்சியிலுள்ள சிங்கப்பாறை அழகிய புகைப்படங்களை எடுப்பதற்கு உகந்த இடமாக இருப்பதால், இளைஞர்களின் செல்ஃபி பாயின்ட்டாக (Selfie Point) இருக்கிறது. அதே போன்று கொழுக்குமலையின் உச்சியை அடைவதற்குச் சரியான வழிப்பாதை இல்லாததால், பலரும் ஆபத்தான பாதைகளில் பயணித்து வந்தே இந்த இடத்தை அடைகின்றனர். இதனாலேயே இந்தப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளோ, படப்பிடிப்புக் குழுவினரோ வருவது தடைப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை ஈர்க்கும் வகையில், இங்கே கேபிள் கார் போக்குவரத்தை ஏற்படுத்தினால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அதன் வழியாக ஆண்டுதோறும் வருமானம் ஈட்டுவதோடு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மலை மாடுகள் சரணாலயம்!

தேனி மாவட்டத்தின் மேகமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுபவை மலை மாடுகள். காண்போரை ஈர்க்கும் வகையில் புள்ளிமான்களைப்போல உடல் முழுக்க அழகிய புள்ளிகளும், விதவிதமான வண்ணங்களில் கொம்புகளும் மலை போன்ற உயர்ந்த திமிலும் இவற்றுக்கு உண்டு. `கரும்போர்’, `செம்போர்’ என இரு வகையான வண்ணங்களைக்கொண்டிருக்கும் இந்த மலை மாடுகள், தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மலையிலேயே கழிப்பதால் இவற்றுக்கு வலுவும் வேகமும் அதிகமாக இருக்கும். இந்த இனத்திலுள்ள காளைகள் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்குச் சிறந்தவை.

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்
கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு திருவிழா களை கட்டும். இதைக் காண உலகம் முழுவதிலிமிருந்தும் சுற்றுலாப்பயணிகள் மதுரையில் குவிந்துவிடுவார்கள். இந்தத் திருவிழாவில் பங்கேற்க மதுரை சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டுமல்ல... தேனியின் சுற்றுவட்டாரங்களில் வளர்க்கப்படும் காளைகளும் பங்கேற்கும். அந்தப் போட்டிகளில் இனி வரும் காலங்களில் மலை மாடுகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்
கனவு - 54 - தேனி - வளமும் வாய்ப்பும்

மலை மாடுகள் இனத்திலுள்ள காளைகள் இன்றுவரை கிராம அளவில் நடத்தப்படும் மஞ்சு விரட்டில் மட்டுமே பங்கேற்கின்றன. இவற்றைச் சரியாகப் பராமரித்து, தயார் செய்தால் ஜல்லிக்கட்டில் ஜொலிக்கவிடலாம். முன்பு, மலைப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு மாடுகள் அனுமதிக்கப்பட்டுவந்தன. அது, இப்போது வனத்துறையால் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தடையை நீக்கி மலை மாடுகளைக் காப்பதோடு, அதற்கான காப்பகம் ஒன்றையும் சரணாலயம் ஒன்றையும் அந்தப் பகுதியில் உருவாக்க வேண்டும். இதற்காக மேகமலையிலுள்ள சின்ன சுருளி அருவிக்கு அருகேயுள்ள பள்ளத்தாக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அங்கே நடவடிக்கைகளை மேற்கொண்டால், அந்தப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்க முடியும். இதனால், அந்தப் பகுதியில் பொருளாதார முன்னேற்றம் அடைவதோடு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தேனி மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம்.

(இன்னும் காண்போம்)