மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

கிரேப் போமஸ் டீ!
பிரீமியம் ஸ்டோரி
News
கிரேப் போமஸ் டீ!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கிரேப் போமஸ் டீ!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடுவதில் தேநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம், இதய நோய்களிலிருந்து காப்பதிலும் அது உதவிபுரிவதால் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அருந்துவதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். டீயில் பல வகை உண்டு. `வொயிட் டீ’ (White Tea), `ஹெர்பல் டீ’ (Herbal Tea), `கிரீன் டீ’ (Green Tea), `பிளாக் டீ’ (Black Tea), `ஊலாங் டீ’ (Oolong Tea) என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் உடல் எடையைக் குறைக்க விரும்பும் பலரின் விருப்பத் தேர்வாக இருப்பது கிரீன் டீ. இந்தப் பட்டியலில் இனி கிரேப் போமஸ் டீயையும் (Grape Pomace Tea) சேர்த்துக்கொள்ளலாம்!

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

திராட்சையிலிருந்து ஒயின் (Wine) தயாரிக்கும்போது, எஞ்சும் சக்கையே கிரேப் போமஸ் (Grape Pomace). இதிலிருந்து இரு வகையான டீயைத் தயாரிக்க முடியும். ஒன்று கிரேப் ஃபிளேவர்டு டீ (Grape Flavoured Tea) மற்றொன்று கிரேப் போமஸ் இன்ஃபியூஸ்டு டீ (Grape Pomace Infused Tea). வழக்கமாகத் தயாரிக்கும் தேநீரில், திராட்சையின் சுவையைப் பெற வேண்டுமென்றால் இரண்டாவது வகையைப் பயன்படுத்தித் தயாரிக்க வேண்டும். முதல் வகை டீயைத் தயாரிக்க கிரேப் போமஸை நன்கு காயவைத்து, அதைப் பதப்படுத்தி, தரமான சிறிய அளவிலான டீ பேக்குகளில் வைத்து உருவாக்க வேண்டும். கிரீன் டீ தயாரிப்பு செயல்முறையே இதற்கும் பொருந்தும். கிரீன் டீ பேக்குக்கு பதிலாக கிரேப் போமஸ் டீ பேக்கைப் பயன்படுத்த வேண்டும். இந்த வகை டீயில் கஃபைன் கன்டென்ட் (Caffeine Content) இல்லாததால், உடல்நலனை மேம்படுத்தும். டீ பிரியர்களுக்கு மாற்றாக இதை பிராண்டிங் செய்து, விளம்பரப்படுத்த வேண்டும். இதற்கான தொழிற்சாலையை தேனி மாவட்டத்தில் நிறுவுவதும் அவசியம்.

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

தேனி மாவட்டத்தில் சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் திராட்சை பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 8 டன் வீதம் ஏறக்குறைய 38,400 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து 30 சதவிகிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டால் தோராயமாக 11,500 டன் அளவுக்கு திராட்சை கிடைக்கும். பொதுவாக, ஒரு டன் திராட்சையிலிருந்து 200 கிலோ அளவுக்கு போமஸ் கிடைக்கும். இந்தக் கணக்கீட்டின்படி சுமார் 11,500 டன் திராட்சையிலிருந்து சுமார் 2,200 டன் அளவுக்கு கிரேப் போமஸ் கிடைக்கும். ஒரு டன் போமஸிலிருந்து 3 லட்சம் தேநீர் பைகளைத் தயாரிக்க முடியும். எனில், 2,200 டன்னிலிருந்து சுமார் 70 கோடி தேநீர் பைகளைத் தயாரிக்கலாம். ஒரு பாக்கெட்டில் 10 பைகள் என அடுக்கினால், ஏறக்குறைய 7 கோடி பாக்கெட்டுகள் இருக்கும். ஒரு பாக்கெட்டின் விலையை 100 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டுக்குச் சுமார் 700 கோடி ரூபாய்க்கு வருமானம் பெற முடிவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். இதனால் தேனி மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பட்டு, வாழ்க்கை சிறக்கும்!

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

கிரேப் போமஸ் பிரவுனி!

2k கிட்ஸுகளுக்குப் பிடித்த நொறுக்குத்தீனி வகைகளில் பிரவுனியும் (Brownie) ஒன்று. கோதுமையில்தான் பெரும்பாலும் பிரவுனி தயாரிக்கப்படுகிறது. பிரவுனி ஒரு கேக் வகை என்பதால் அப்படியே சாப்பிடலாம். கூடுதல் சுவை வேண்டுவோர் ஐஸ்க்ரீமை (அவரவர் விருப்பத்துக்கேற்ற ஃப்ளேவர்) பிரவுனிமீது வைத்து, அதன்மீது பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற விதைகளைத் (Nuts) தூவி, பிறகு அதன்மேல் சாக்லேட் ஃப்ளேவரை வழியவிட்டு, அதன்மீது பழத்துண்டுகளை (சீஸனுக்கு ஏற்றாற்போல மாம்பழம், அன்னாசி, மாதுளம்...) அழகாக அடுக்கிச் சாப்பிட்டால் சுவை கூடும்!

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்
கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

ஒயின் தயாரிப்புக்காக எடுக்கப்படும் திராட்சைகளில் சுமார் 20 சதவிகிதம் அளவுக்குச் சக்கையாக (Pomace) மிஞ்சும். பெரும்பாலான ஒயின் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தச் சக்கையை மதிப்புக்கூட்டாமல், கழிவாகக் கருதி வீணடிக்கின்றன. இவற்றைக் கைப்பற்றி, கிரேப் போமஸ் மாவு (Grape Pomace Flour) தயாரிக்க முடியும். இந்த மாவைக்கொண்டு சுவையான பிரவுனி தயாரிக்க வேண்டும். முழுக்க முழுக்க கிரேப் போமஸ் மாவைப் பயன்படுத்தி மட்டுமே பிரவுனி தயாரிக்க முடியாது என்பதால், கோதுமை மாவைப் போதுமான அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்து அதிகம். உடலுக்குத் தேவையான அமிலங்களில் ஒன்றாக பினோலிக் தன்மையும் (Phenolic Content) சேர்ந்திருக்கும் என்பதால், வழக்கமான பிரவுனியைவிட இதில் கூடுதல் ஆரோக்கியப் பலன்கள் கிடைக்கும்.

வழக்கமாக, கோதுமையால் உருவாக்கப்படும் ஒரு துண்டு (Single Piece) பிரவுனியின் சராசரி எடை 70 கிராம் அளவுக்குச் சந்தையில் கிடைக்கிறது. அது ஏறக்குறைய 200 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைவிட சுவை வாய்ந்த திராட்சை போமஸ் பிரவுனியை (Grape Pomace Brownie) ஒரு கிலோ (16 துண்டுகள் அடங்கியது) 4,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, உள்ளுர் பேக்கரிக் கடைகள் முதல் பிற மாநிலங்கள், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தால் ஆண்டொன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும். இதற்கான தொழிற்சாலையை தேனியில் நிறுவ வேண்டும். இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தோராயமாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, பொருளாதார முன்னேற்றமும் மேம்படும்!

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

தேயிலை விதை சவர்க்காரம்!

தேயிலை என்றதும் டீ தயாரிக்கப் பயன்படும் ஒரு மூலப்பொருள் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால், அந்தத் தேயிலையின் உபரியான தேயிலை விதையின் தூளைக்கொண்டு இயற்கையாகவே சவர்க்காரம் (Detergent) தயாரிக்கலாம். தேயிலை விதைத்தூள், பிசுபிசுப்புத் தன்மை இல்லாதது என்பதால் கைகளில் ஒட்டிக்கொள்ளாது. இது சவர்க்காரம் பயன்படுத்துவோருக்கு ஓர் அருமையான வரப்பிரசாதம். அதேசமயத்தில் சுத்தம் செய்வதில் இதன் பங்கு அதிகம். மேலும், குறைவான நீரைக்கொண்டு சுத்தம் செய்யவும் ஏற்றது. இந்தத் தேயிலை விதைத்தூள் சவர்க்காரத்தைக் கொண்டு, ஆடைகளைச் சுத்தப்படுத்த மட்டுமன்றி காய்கறிகள், பழங்கள், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களைச் சுத்தம் செய்ய முடியும். அதுமட்டுமன்றி, தேயிலை விதைத்தூளைப் பூச்சிகள் அண்டாது. எனவே, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களில் பூஞ்சையை உண்டாக்காது. பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பை அகற்றுவதில் பெரிய அளவில் துணைபுரிவதோடு, குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தாது.

கனவு - 56 - தேனி - வளமும் வாய்ப்பும்

சந்தையில் பெரும்பாலும் ரசாயன சவர்க்காரங்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் எல்லோரும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்த வகை சவர்க்காரம் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் கேடு தருவதால் இவற்றுக்கு மாற்றாக, தேயிலை விதைத்தூளிலிருந்து உருவாக்கப்படும் சவர்க்காரத்தைச் சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும். இது உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு இழைக்காது என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கப்பெறும். இதற்கான தனி பிராண்டை உருவாக்கி, அதைப் பிரபலப்படுத்த வேண்டும். இதற்கான தொழிற்சாலை ஒன்றை தேனி மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டுதோறும் பல நூறு கோடிக்கு வருமானம் கிடைப்பதோடு, பல நூறு பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். இதனால், தேனி மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்வதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும்!

(இன்னும் காண்போம்)