மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

சித்த வைத்தியசாலை
பிரீமியம் ஸ்டோரி
News
சித்த வைத்தியசாலை

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

இயற்கை வளம்மிக்க மாவட்டம். கல்வியில் சிறந்த மாவட்டம். ஒன்றிய, மாநில அரசுகளின் பதவிகளில் அதிகமானோர் பங்கேற்றுள்ள மாவட்டம். இப்படியாக, கன்னியாகுமரியின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேயொரு சிப்காட்கூட இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கேரளா என்றாலே ஆயுர்வேதமும், தென்னை மரங்களும், கதகளியும் எல்லோரின் நினைவுக்கும் இயல்பாக வரும். அந்த அளவுக்கு, அவை அந்த மாநில அரசாலும், பல்வேறு கலை அமைப்புகளாலும் பிரபலப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, `ஆயுர்வேதம் என்றாலே கேரளம்தான்’ என்கிற அளவுக்கு எல்லோருடைய மனங்களிலும் பரவியிருக்கிறது. ஆனால், உண்மையில் கேரள ஆயுர்வேதத்துக்கான மூலிகைகள் கன்னியாகுமரியிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்துதான் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

“உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, போதுமான ஓய்வு, சிறந்த சுற்றுச்சூழல் உள்ளிட்டவையே ஆரோக்கியம்” என்று வரையறுக்கிறது உலக சுகாதார நிறுவனம். ஒரு மாவட்டத்தின் முன்னேற்றம் என்பது இவற்றையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே கன்னியாகுமரியை நாம் அணுக வேண்டும். இயற்கையின் இருப்பிடமான குமரியை, சுற்றுச்சூழல் காரணங்களுக்காகப் பாதுகாக்கப்படவேண்டிய மாவட்டமாகக் கருத வேண்டும். அந்தப் பகுதியில் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க முனையும்போது, அங்கே இருக்கும் இயற்கை வளங்களைச் சிதைக்காமல், அந்த வளங்களை அடிப்படையாகக்கொண்டே வளர்ச்சியைத் திட்டமிட வேண்டும். அந்த வகையில் இயற்கைப் பொருளாதாரத்தை, குமரியில் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம்.

சித்த வைத்தியசாலை!

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளங்களில் முதன்மையானவை அரிய வகை மூலிகைகள். இங்குள்ள மலை களில் கிடைக்கும் அரிய வகை மூலிகைகளைப் பயன்படுத்தித்தான் கேரளாவில் ‘கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலா’, ‘சோமதீரம் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவமனை’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக் கின்றன. குமரியின் வளங்களைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்கிறது கேரளா. ஆகவே, அதே அரிய மூலிகைகளைப் பயன்படுத்தி, நாமும் உலகத்தரம் வாய்ந்த ஒரு சித்த வைத்திய சாலையை நிறுவினால், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும். எப்படி?

கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

குமரியில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவான காடுகள், தாடக மலை, பொய்கை மலை, மகேந்திரகிரி, வேளி மலை, வீரப்புலி, கிழ மலை உள்ளிட்ட மலைகளில் வேறு எங்கும் காணக் கிடைக்காத சுமார் 607 வகையான மூலிகை மரங்களும், மூலிகைச் செடிகளும் வளர்கின்றன. இவற்றில் அரிய மூலிகைகளாக 73 வகை மூலிகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, எந்தவொரு கொடிய விஷத்தைச் சாப்பிட்டாலும் அதை முறியடிக்கும் குணம்கொண்ட எட்டி மரம் இங்குதான் இருக்கிறது. அதேபோல, தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஆற்றல்கொண்ட காட்டு மஞ்சள் சிரத்தை, சிறு கொழிஞ்சி போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இத்தகைய அரியவகை மூலிகைகளைக்கொண்டு `குமரி சித்த வைத்தியசாலை’யை நிறுவி, அங்கே தரமான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இந்த வைத்தியசாலையை, கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைப்பது முக்கியம். கூடுதலாக, அங்கே பாரம்பர்யமும் நவீனமும் கலந்த உயர்தரமான தங்கும் விடுதிகளையும் அமைக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது ஓய்வின் மூலம், தங்களைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் சுற்றுலாப்பயணிகளும் அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவர்களுக்கு அங்கே ஆயுர்வேத உணவுகளுடன் யோகா, தமிழ்நாட்டின் பாரம்பர்ய நடனம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்க வேண்டும்.

வாரத்தின் கடைசி நாள்களான சனி, ஞாயிறு உள்ளிட்ட நாள்களில் தங்கி சிகிச்சை பெறவும், உணவுகள் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து 20,000 ரூபாய் தொடங்கி 25,000 ரூபாய் வரை வசூலிக்க வேண்டும். இதே போன்ற பல பேக்கேஜுகளாகப் (Package) பிரித்து, சேவைகளுக்கு ஏற்றாற்போல கட்டணம் வசூலித்தால், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். இதனால், குமரி மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்ந்து, வாழ்க்கைத்தரம் மேம்படும்!

பிளாக் பெப்பர் ஷாம்பூ (Black Pepper Shampoo)

‘மசாலாவின் அரசன்’ என்று உணவுப் பிரியர்களால் புகழப்படும் மிளகில் கறுப்பு, வெள்ளை என இரு வகைகள் உண்டு. இவற்றில் வெள்ளை மிளகைப் பயன்படுத்தி ஷாம்பூ மட்டுமின்றி கண்டிஷனரையும் தயாரிக்கலாம். பிளாக் பெப்பர் ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது, தலைமுடியின் வேர்களுக்கு நல்ல ஊட்டம் அளித்து, சிகையை வலுப்படுத்தும். பொடுகைக் குறைக்கும். தலைமுடி உதிர்வுப் பிரச்னையைத் தீர்க்கும்.

கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

கன்னியாகுமரியில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் வெள்ளை மிளகு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 500 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி, ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிக்க வேண்டும். இதற்காக, குமரி மாவட்டத்தில் ஷாம்பூ தொழிற்சாலையை நிறுவுவதோடு, அதை பிராண்ட் செய்து உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும். சந்தையில் 250 எம்.எல் பெப்பர் ஷாம்பூவை 2,300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்கிறார்கள். இவ்வளவு அதிகமாக விலை இருந்தபோதும்கூட கூந்தல் பராமரிப்புக்கு நிறைய பேர் அதிகம் செலவு செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மார்க்கெட்டைக் கைப்பற்றி ஆண்டுதோறும் பல கோடிகளில் வருமானம் ஈட்டுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கலாம்!

கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்
கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

ரப்பர் மேட்ரெஸ் தொழிற்சாலை (Rubber Mattress Industry)

கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் பொருள்கள் தயாரிப்பில் சுமார் 2,000 பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு, ரப்பர் தயாரிப்புக்காக மட்டும் சுமார் 14,000 ஏக்கர் பரப்பளவை அரசு ரப்பர் கழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது. பொதுவாக, ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் ஷீட்டுகளைத் தயாரித்து, பின்னர் அவற்றைத் தரம் பிரித்து உள்ளுர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த ரப்பர் ஷீட்டுகளைப் பயன்படுத்தி, குமரி மாவட்டத்தில் ரப்பர் மேட்ரெஸ்ஸைத் தயாரிக்க முடியும். இந்த வகை மெத்தைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதற்கான தொழிற்சாலையை, குமரி மாவட்டத்தில் நிறுவி, அதற்காக ஒரு பிராண்டையும் உருவாக்கி, பிரபலப்படுத்த வேண்டும்.

கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்
கனவு - 59 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 1,700 கிலோ வீதம் தோராயமாக 1 லட்சம் டன் ரப்பர் கிடைக்கிறது. இதிலிருந்து சுமார் 20 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ரப்பர் மேட்ரெஸ் தயாரிக்கலாம். இவற்றைப் பல்வேறு வகைகளில் உருவாக்க முடியும்.

Firm Mattress

2 x 1.8 x 0.18 x 75 = 48.6kg,

Medium mattress

2 x 1.8 x 0.18 x 70 = 45.36kg,

Soft mattress

2 x 1.8 x 0.18 x 65 = 42.12kg

வழக்கமாக, ஒரு ரப்பர் மேட்ரெஸ் தயாரிக்க 11 கிலோ ரப்பர் தேவைப்படுகிறது எனக் கொண்டால், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 20 லட்சம் மெத்தைகளை உருவாக்கலாம். ஒரு ரப்பர் மேட்ரெஸின் விலையை 9,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தால், ஆண்டுக்கு சுமார் 1,800 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம். இதனால் குமரி மாவட்ட மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் உயரும்!

(இன்னும் காண்போம்)