மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 60 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

கன்னியாகுமரி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னியாகுமரி

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

குமரி கைவினைப்பொருள்கள் வளாகம் மற்றும் கைவினைக் கண்காட்சி!

மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் சுற்றுலாவுக்கு மட்டும் பெயர்போனதல்ல... அங்கே விற்கப்படும் கைவினைப் பொருள் களுக்கும் கூடத்தான். அந்தப் பொருள்களுக்காகவே `கோலாலம்பூர் கைவினைப்பொருள்கள் வளாகம்’ (Kualalumpur Crafts Complex) கட்டப்பட்டிருக்கிறது. அங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் அவற்றைப் பார்வையிட்டு, தேவையானவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதே போன்றதொரு வளாகத்தை கன்னியாகுமரியிலும் ‘கைவினைப்பொருள்கள் வளாகம் மற்றும் கைவினைக் கண்காட்சி’ (Kumari Crafts Complex and Crafts Exhibition) என நிறுவ வேண்டும். ஏனெனில், அந்த வளாகம் முழுக்க நிரப்பும் அளவுக்கு அந்த ஊரில் கைவினைப் பொருள்களும், கைவினைக் கலைஞர்களும் அதிகளவில் இருக்கிறார்கள்!

குமரி கைவினைப்பொருள்கள் வளாகம்!

குமரி மாவட்டத்திலுள்ள வடசேரி, கைவினைப்பொருள்களுக்குப் புகழ்பெற்ற ஒன்று. அலங்கார நகைகளைத் தயாரிப்பதை இந்த ஊர் மக்கள் குலத்தொழிலாகத் தொடர்ந்து செய்துவருகின்றனர். அழகிய வேலைப்பாடு களுடன்கூடிய நகைகள், ஜரிகைகள், எம்பிராய்டரிப் பொருள்கள், புல் பாய்கள், பனை ஓலைப் பொருள்கள், மரச் சிற்பங்கள், உலோக வார்ப்புகள், கடலிலிருந்து பெறப்படும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப்பொருள்கள், நார்ப் பொருள்கள், இசைக்கருவிகள் என இங்கே உருவாக்கப்படுபவை ஏராளம் உண்டு. அதேபோல, ‘மைலாடி’ என்கிற கிராமம், `ஸ்டோன் கார்விங்ஸ்’ (Stone Carvings) எனப்படும் கற்களைக்கொண்டு செய்யப்படும் கைவினைப்பொருள்களுக்குப் புகழ்பெற்றது.

கனவு - 60 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

இவை மட்டுமன்றி, தென்னை விவசாயம் முதன்மையான தொழிலாக இங்கே இருந்துவருகிறது. ஏறக்குறைய 58,000 ஏக்கர் அளவில் தென்னை வளர்க்கப்படுகிறது. தென்னையிலிருந்து கிடைக்கும் மட்டையைப் பயன்படுத்தி கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்ட பலவற்றை உருவாக்க முடியும். மேலும், குமரி மாவட்டக் கடற்கரையோரம் ஒதுங்கும் பல்வேறு வகை சிப்பிகளைக்கொண்டும் கைவினைப் பொருள்களை உருவாக்கலாம். இவற்றையெல்லாம் குமரி கைவினைப்பொருள்கள் வளாகத்தில் விற்பனைக்கு வைக்க வேண்டும்.

கைவினைப்பொருள்கள் கண்காட்சி!

குமரி கைவினைப்பொருள்கள் வளாகத்தில் ஒரு பகுதியை நிரந்தரமாகக் கண்காட்சிக்காக ஒதுக்க வேண்டும். அங்கே ஒவ்வொரு மாதமும் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். நெல் வகைகள், வாழை வகைகள், பலா, நறுமணப்பொருள்கள், மரச்சீனி, மூலிகைகள், பனை பொருள்கள், பாக்கு வகைகள் உள்ளிட்டவற்றைக்கொண்டு வாரம் அல்லது மாதத்துக்கு ஒரு முறை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் குமரி கைவினைப்பொருள்கள் வளாகத்தில் செயல்படுத்தும்போது, குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வளாகத்தையும் சுற்றிப் பார்த்து, ஏராளமான பொருள்களை அள்ளிச் செல்வார்கள். இதனால் அந்நியச் செலாவணி அதிகரிக்கும். உணவு சார் மற்றும் சுற்றுலாப் பொருளாதாரம் மேம்படுவதோடு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் பெற முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். குமரி மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்ந்து, வாழ்க்கைத்தரம் மேம்படும்.

கனவு - 60 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

கிராம்பு எண்ணெய் முகப்பூச்சு!

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தங்கள் முகப்பொலிவுக்காக ஃபேஸ் க்ரீமை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ரசாயன ஃபேஸ் க்ரீம்களைவிட ஆர்கானிக் ஃபேஸ் க்ரீமே சிறந்தது என்பதால், குமரியில் உற்பத்தியாகும் கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்தி, `கிராம்பு எண்ணெய் முகப்பூச்சு’ (Clove Oil Face Cream) எனும் புதிய புராடக்டை உருவாக்குவதோடு, அதற்கான தொழிற்சாலையை நிறுவி, அதை பிராண்ட் செய்து பிரபலப்படுத்த வேண்டும். உள்ளுரில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 350 கிலோ விளைச்சல் வீதம் ஆண்டொன்றுக்குத் தோராயமாக 650 டன் விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், சுமார் 200 டன் அளவுக்கு கிராம்பு கிடைக்கும். இதிலிருந்து, ஏறக்குறைய 33 டன் அளவுக்கு கிராம்பு எண்ணெயை உருவாக்க முடியும். இதிலிருந்து 30 கிராம்கொண்ட ஃபேஸ் க்ரீம் டியூபுகள் சுமார் 16 லட்சம் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியும். டியூபின் விலையை 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தால், ஆண்டொன்றுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும். இதனால் குமரி மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படும். நேரடியாகவும் மறைமுகமாகவும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்!

சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வெடிப்புகளைச் சரிசெய்ய கிராம்பு எண்ணெய் முகப்பூச்சு உதவிபுரிகிறது. கிராம்பு எண்ணெய் அதிக அடர்த்திகொண்டதால் நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. அதன் அடர்த்தியைக் குறைக்கும் வகையில் பிற எண்ணெயுடன் (வேப்பம் எண்ணெய்) சேர்த்தே பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், சுமார் 20 கிராம் கிராம்பு எண்ணெயை எடுத்துக்கொண்டால் அதன் அடர்த்தியைக் குறைக்க ஏறக்குறைய 9.5 கிராம் அளவுக்கு வேப்ப எண்ணெயும் சுமார் 0.5 கிராம் அளவுக்கு க்ரீம் பேஸ் (Cream Base) சேர்ப்பது அவசியம். இந்த விகிதத்தில் கலக்கப்பட்டு 30 கிராம்கொண்ட கிராம்பு எண்ணெய் ஃபேஸ் க்ரீம் தயாரிக்கப்பட வேண்டும்.

கனவு - 60 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்
கனவு - 60 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

கடல்சார் பல்கலைக்கழகம்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்று கடல். அதைச் சார்ந்த தொழில்களை வளர்த்தெடுத்தாலே அந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும் என்றாலும், அந்தத் தொழில்களுக்கான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள அந்த மாவட்டத்தில் கடல்சார் கல்லூரியோ அல்லது பல்கலைக்கழகமோ இல்லை. ஆகவே, இங்கே ஒரு கடல்சார் பல்கலைக்கழகத்தை நிறுவவேண்டியது அவசியம்.

கடல் சார்ந்த படிப்புகளில் மிகவும் முக்கியமானது மரைன் இன்ஜினீயரிங் (Marine Engineering) எனப்படும் பொறியியல் படிப்பு. இது பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டாலும், அந்தப் படிப்புக்கென்றே பிரத்யேக கல்லூரிகளும் உண்டு. அவற்றில் முதன்மையானது சென்னை, உத்தண்டியில் (ராஜீவ் காந்தி சாலை - கிழக்கு கடற்கரை சாலையில்) உள்ள மத்திய கடல் சார் பல்கலைக்கழகம். இங்கே நான்கு ஆண்டுகள் பயிலக்கூடிய பி.டெக் பொறியியல் படிப்புகளும், மூன்று ஆண்டுகள் பயிலக்கூடிய பி.எஸ்சி கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுநீக்கும் படிப்புகளும் சொல்லித்தரப்படுகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தோடு கடல் சார்ந்த கல்வியை வழங்கும் ஏழு முக்கியக் கல்வி நிறுவனங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

கடல்சார் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கும் படிப்புகள் துறைமுக மேலாண்மை, கடல்சார் அறிவியல், கடல்சார் சட்டங்கள், கடற்கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுதல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல் குறித்த வணிகக் கல்வி, கடல்சார் பொறியியல், கப்பல் செலுத்தும் அறிவியல், துறைமுக மேலாண்மை என 13 துறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறைகளைக்கொண்ட பல்கலைக்கழகத்தை கன்னியாகுமரியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும். இதற்கு ஏறக்குறைய 150 கோடி ரூபாய் தேவைப்படும். இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதால், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். பொதுவாகவே, தமிழ்நாட்டு அளவில் குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதால், இந்தப் பல்கலைக்கழகத்தால் அந்த மாவட்டத்தின் கடல்சார் கல்வியில் இன்னும் கூடுதல் திறமையான மாணவர்கள் கிடைக்கப்பெறுவார்கள். புதிய வேலைவாய்ப்புகளும், கடல்சார் நிறுவனங்களும் இதனால் கூடுதலாக அங்கே அமையப்பெறும். இதனால் அந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் தழைத்தோங்கும்!

(இன்னும் காண்போம்)