மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 62 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

சித்தரால் ஜெயின் பாறைவெட்டு கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தரால் ஜெயின் பாறைவெட்டு கோயில்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

நிலம்சார் சுற்றுலா!

கன்னியாகுமரியில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் விடுப்பில் சுற்றிப் பார்க்க சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. அவை எல்லாமே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலேயே அடங்கிவிடுவது அதன் மற்றொரு சிறப்பம்சம். இத்தகைய சுற்றுலாத்தலங்களை எளிதாகச் சென்றடையவும், குறைந்த நேரத்தில் அதிக இடங்களைப் பார்வையிடவும் வசதியாக அங்கே ஒரு சுற்றுலாவுக்கான வரைபடம் (Tourist Circuit Map) இல்லை. அதை உருவாக்கி, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், முக்கியச் சுற்றுலாத்தலங்களின் அருகே காட்சிப்படுத்தினால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பொருளாதாரமும் செழித்தோங்கும். எனவே, குமரி மாவட்டச் சுற்றுலாவுக்கான ஒரு வரைபடத்தைத் தயாரிப்பது அவசியம். அதுமட்டுமன்றி, லண்டனில் புகழ்பெற்ற இரண்டடுக்குப் பேருந்து சேவையைப் (London Double Decker Bus) போன்ற ஒன்றை இங்கே பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். குமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எளிதாக குமரி இரண்டடுக்குப் பேருந்தைப் (Kumari Double Decker Bus) பயன்படுத்தி நிறைய இடங்களைப் பார்வையிட முடியும்!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

சுற்றுலாப்பயணிகளுக்கான வரைபடம்!

குமரி பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில், 8 கிலோமீட்டர் தொலைவில், வட்டக்கோட்டையிலிருந்து சுமார் 10 நிமிட பயணத் தூரத்தில் சுற்றுச்சூழல் பூங்காவைச் சென்றடைய முடியும். அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அடைய முடியும். அங்கிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் முட்டம் கடற்கரையை 30 நிமிடங்களில் சென்றடையலாம். அதன் தொடர்ச்சியாக 15 கிலோமீட்டர் தொலைவில் குளச்சல் துறையையும், அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உதயகிரிக் கோட்டையை ஏறத்தாழ 30 நிமிடங்களில் சென்றடையலாம். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையை ஐந்து நிமிடங்களில் சென்றடையலாம்.

சுற்றுலாப்பயணிகளுக்கான வரைபடம்!
சுற்றுலாப்பயணிகளுக்கான வரைபடம்!

பத்மநாபபுரம் அரண்மனையில், இளைப்பாறுதலுக்கான உணவகங்கள், விடுதிகள் இருக்கின்றன. அங்கே இளைப்பாறிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து 30 நிமிடங்களில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சித்தரால் ஜெயின் பாறைவெட்டு கோயிலை அடையலாம். அதன் தொடர்ச்சியாக 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திற்பரப்பு அருவியையும், தொடர்ந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேச்சிப்பாறை அணையையும் காணலாம். இறுதியாக, ஒரு மணி நேரப் பயண தூரத்தில் சுமார் 30 கிலோமீட்டர் மாத்தூர் தொங்கும் பாலத்தை அடைந்துவிட முடியும். அங்கிருந்து தேவைப்பட்டால் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அடுத்த ஒரு மணி நேரத்தில் உலக்கை அருவிக்குச் சென்று நீராடிவிட்டு, அங்கிருந்து திரும்பி குமரியை வந்தடைந்து சுற்றுலாவை நிறைவுசெய்ய வேண்டும்.

குமரியில் சுற்றுலாவுக்கு நிறைய இடங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்!

திருவள்ளுவர் சிலை!

தமிழின் பெருங்கொடைகளில் ஒன்றான திருக்குறளை உலகுக்கு அளித்த திருவள்ளுவரின் நினைவைப் போற்றும்விதமாக, குமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் நிறுவப்பட்டிருக் கிறது திருவள்ளுவர் சிலை. கடல்நீர் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரமுள்ள பாறையின்மீது அமைக்கப்பட்டிருக்கும் இது, ஏறக்குறைய 133 அடி உயரம்கொண்டது. திருக்குறளிலுள்ள அதிகாரங்கள் 133 என்பதால், அதை நினைவூட்டும்விதமாகச் சிலையின் உயரமும் வடிவமைக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

விவேகானந்தர் நினைவு மண்டபம்!

தமிழ்நாட்டின் தென்கோடியிலிருக்கும் பாறைமீது அமைந்திருக்கும் இது, கடற்கரை யிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குமரிக்கு வந்த விவேகானந்தர் கடலில் நீந்திச் சென்று, இந்தப் பாறைமீது அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதால், புகழ்பெற்றது.

சுற்றுச்சூழல் பூங்கா!

குமரியிலிருந்து சுமார் அரை மணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சுற்றுச்சூழல் பூங்கா. செயற்கை நீரூற்றுகள், மூங்கில் பூங்கா, வண்ண வண்ண மலர்கள் கொண்ட பூந்தோட்டம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும் இது, சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சித்தரால் ஜெயின் பாறைவெட்டு கோயில்!

குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சித்தரால் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெயின் பாறைவெட்டு கோயில். சமணத் துறவிகள் இந்தப் பாறைக்கு வந்து தியானத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இயற்கையாக உருவான குகையில் செதுக்கப்பட்ட கோயில் இது. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் அடிவாரத்தில், இதய வடிவத்தில் உருவான குளமும் அமைந்திருப்பது சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கும் விருந்து படைக்கும்!

சித்தரால் ஜெயின் பாறைவெட்டு கோயில்
சித்தரால் ஜெயின் பாறைவெட்டு கோயில்

மாத்தூர் தொட்டிப் பாலம்!

`ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம்’ என்ற சிறப்பைப் பெற்றது மாத்தூர் தொட்டிப் பாலம். கணியான் பாறை மலையையும், கூட்டுவாயுப்பாறை மலையையும் இணைத்து, தொட்டி வடிவிலான பாலம் அமைத்து அதன் வழியே தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மாத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் இது, குமரியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலும், குழித்துறை ரயில் நிலையத்திலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. தோராயமாக 1,200 அடி நீளமும், தரைமட்டத்தி லிருந்து சுமார் 100 அடி உயரமும் கொண்டது. பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் 28 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் சுமார் 30 அடிச் சுற்றளவைக் கொண்டிருக்கிறது.

குமரி மாவட்டத்தின் சுற்றலாத்தலப் பட்டியல் இத்துடன் முடிந்துவிடவில்லை!

(இன்னும் காண்போம்)

கனவு நிஜமாகிறது!

சமூக வலைதளங்களில் பரவலாகக் காணப்படும் மீம்ஸ்களில், “ஐடி வேலையை விட்டுவிட்டு நான் விவசாயியா மாறப்போறேன். மாதம் பல லட்சம் சம்பாதிக்கப்போறேன்” என்பதும் ஒன்று. இந்த மீம்ஸ்கள் இப்போது நடைமுறையில் நிஜமாகிக்கொண்டிருப்பதுதான் நகைமுரண். அதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் தன் ஐடி பணியைத் துறந்து, `ஆர்கானிக் பாஸிட்டிவ்’ (Organic Positive) எனும் நிறுவனத்தை நிறுவி, அதன் சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்று, வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் கிருத்திகா பிரபாகரன். ``எனது இந்த வெற்றி கைகூடுவதற்கு ‘கனவு’ தொடரும் உதவியிருக்கிறது’’ என்றபடியே பேசத் தொடங்கினார்.

கிருத்திகா பிரபாகரன்
கிருத்திகா பிரபாகரன்

“ஐடி துறையில் எம்பெடடு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக (Embedded Software Engineer) வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு எனது கர்ப்ப காலத்தில், பிறக்கப்போகும் குழந்தைக்காகவும், எனக்காகவும் பாரம்பர்ய அரிசி, சிறுதானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டேன். அப்போது, பாரம்பர்ய அரிசி, சிறுதானியங்களைச் சமைப்பதிலிருக்கும் சிரமத்தை உணர்ந்தேன். அதைச் சரிசெய்யும்விதமாக உதித்த யோசனைதான் `ஆர்கானிக் பாஸிட்டிவ்.’ இதன் வழியாக நாம் மறந்துபோன, கைவிடப்பட்ட `மாப்பிள்ளை சம்பா’, `காட்டுயானம்’, `கிச்சிலி சம்பா’, `பூங்கார்’, `குதிரைவாலி’, `குள்ளக்கார்’, `குருவிக்கார்’, `கருங்குறுவை’ போன்ற பாரம்பர்ய அரிசிகளையும், சிறுதானியங்களையும் மீண்டும் மீட்டெடுத்தோம்.

கனவு நிஜமாகிறது!
கனவு நிஜமாகிறது!

சென்னை, கோயம்பேடு பகுதியில் எங்களுடைய தொழிற்சாலையை அமைத்திருக்கிறோம். சுமார் 200-க்கும் மேற்பட்ட புராடக்ட்டுகளை மக்களுக்குக் கிடைக்கும்படி நேரடியாகவும், சிலவற்றை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்துவருகிறோம். இப்போது சுமார் 3,500 வாடிக்கையாளர்களைச் சென்றடைந்திருக்கிறோம். இதில், சிறுதானிய தோசை மாவுத் தயாரிப்புக்கு நாங்கள் முயற்சி செய்தபோது, அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியை நிறுத்திவைத்திருந்தோம். அந்தச் சமயத்தில், `ஜூனியர் விகடன்’ 02.02.2023 தேதியிட்ட இதழில் வெளியான ‘கனவு’ தொடரில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பொருளாதார மேம்பாடு பற்றிய விஷயங்களைப் படித்தேன்.

அதில் `பெருவணிகம் கொண்ட சிறுதானிய தோசை மாவு’ எனும் தலைப்பில் சாமையை எவ்வாறு தோசை மாவாக மதிப்புக்கூட்டல் செய்து, ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம் என்பது குறித்து எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகு எங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்தது. உடனடியாக நாங்கள் கைவிட்டிருந்த சிறுதானிய மாவுத் தயாரிப்பை மீண்டும் கையிலெடுத்தோம். திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்களின் வழிகாட்டலும் எங்களுக்குக் கிடைத்தது. இப்போது, `பாரம்பர்ய சிவப்பு அரிசி மாவு’, `பாரம்பர்ய வெள்ளை அரிசி மாவு’, `சிறுதானிய மாவு’

கனவு - 62 - கன்னியாகுமரி - வளமும் வாய்ப்பும்

(ராகி, கம்பு, சோளம், சாமை, கேழ்வரகு) ஆகிய மூன்று வகையான மாவுகளைத் தயாரித்து விற்பனையைத் தொடங்கியிருக்கிறோம். இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடையும் கனவுடன் உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் கிருத்திகா.

அவரின் கனவு நிஜமாகட்டும்!