
வெடிக்கும் கெளரி காமாட்சி
‘‘தேவைகள் அதிகரித்துக்கொண்டே சென்றால், அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்’’ - காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பொன்மொழி இது. அவர் வளர்த்த காஞ்சி காமகோடி பீடத்துக்கு இன்று இந்தப் பொன்மொழி சரியாகப் பொருந்துகிறது.
காமகோடி பீடத்துக்குச் சொந்தமாக திருவனந்தபுரத்தில் ஸ்ரீ உத்திராடம் திருநாள் (எஸ்.யூ.டி) மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு விற்க மடத்தின் சார்பில் சிலர் சென்றதாகவும், ‘கொரோனா காலத்தில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது’ என திருவனந்தபுரம் கலெக்டர் இதற்குத் தடையாணை விதித்ததாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. எஸ்.யூ.டி மருத்துவக் கல்லூரியின் சி.இ.ஓ-வான கெளரி காமாட்சிக்கும், மடத்தின் டிரஸ்ட் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே ஏற்கெனவே முரண்பாடுகள் உள்ள நிலையில், அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்துக் கிளம்புகின்றன. என்னதான் பிரச்னை? கெளரி காமாட்சியிடமே சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘உங்களை சி.இ.ஓ மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் பொறுப்புகளி லிருந்து நீக்கிவிட்டதாக மடம் சார்பில் கூறப்படுகிறதே?’’

‘‘மடத்தைப் பொறுத்தவரை ஆச்சார்யாருக்குத்தான் முழு அதிகாரம். 2011-ல் ஆச்சார்யார் ஜெயேந்திரர்தான் என்னை அழைத்து எஸ்.யூ.டி நிர்வாகத்தைப் பார்த்துக்கச் சொன்னார். 2016-ல் ‘காஞ்சி காமகோடி பீடம் சாரிடபிள் டிரஸ்ட்’லயும் உறுப்பினரா இருக்கச் சொன்னார். இது மத்த டிரஸ்ட் மெம்பர்களுக்குப் பிடிக்கலை. ஏன்னா, டிரஸ்ட்ல நடக்குற குளறுபடிகளை நான் கேள்வி கேட்பேன்னு அவங்களுக்கெல்லாம் பயம். அதனால என்னை நீக்கிட்டதா சொல்றாங்க. காஞ்சி மடத்துக்கும் பெரியவருக்கும் எதிரா நான் போக மாட்டேன். என்னை நியமிச்சது ஜெயேந்திரர்தான். என்னை நீக்குறதுக்கு உண்டான அதிகாரம் இப்போ இருக்குற பெரியவர் விஜயேந்திரருக்குத்தான் இருக்கு. அவர் என்னை நீக்கலை. என் தரப்பு நியாயத்தையும் கேட்டு அவர் முடிவெடுக்கட்டும்.’’
‘‘காமகோடி பீட அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜயேந்திரரின் கட்டுப்பாட்டில் இல்லை என்கிறீர்களா?’’

‘‘விஜயேந்திரருக்குத் தெரிஞ்சுதான் எல்லாம் நடக்குதுனு நான் நம்பலை. இல்லைன்னா, அவங்க எஸ்.யூ.டி காலேஜை விற்க திருவனந்தபுரம் வரைக்கும் விமானத்துல வர மாட்டாங்க. 2015-ல சிலர் எஸ்.யூ.டி காலேஜை 300 கோடி ரூபாய்க்கு விலைக்குக் கேட்டாங்க. கடைசி வரைக்கும் காலேஜை விற்க அப்போ இருந்த பெரியவர் ஜெயேந்திரர் ஒப்புக்கலை. 300 கோடிக்கு விலை பேசப்பட்ட காலேஜை இப்போ வெறும் 122 கோடிக்கு ஏ.சி.சண்முகத்துக்கு முடிக்கப் பார்க்குறாங்க. 2011-ல இருந்து இப்போ வரைக்கும் இந்த காலேஜின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட நான் இது பத்திக் கேள்வி கேட்கக் கூடாதா?’’
‘‘மடத்துக்குச் சொந்தமான 700 ஏக்கர் திருமலை எஸ்டேட், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலுள்ள பள்ளிகள், காமாட்சியம்மன் கோயில் வாசலிலுள்ள மண்டபம் எல்லாவற்றையும் நீங்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே..?’’

‘‘திருமலை எஸ்டேட்டை நான் லீஸுக்கு எடுத்து வெச்சிருக்கேன். அதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. ஜெயந்திரரின் தம்பி ராமகிருஷ்ணன்தான் மடத்துக்குச் சொந்தமான சங்கரா பள்ளிகளை நிர்வகிக்கிறார். கிருஷ்ணகிரி, தர்மபுரில இருக்குற பள்ளிகளை நடத்த முடியாம அவர் விற்க முற்பட்டப்போ, என்னுடைய சொந்த டிரஸ்ட் மூலமா சொந்தப் பணத்துல அந்தப் பள்ளிகளை வாங்கினேன். இது தப்பா... திருவனந்தபுரத்துல இருக்குற நான் எப்படி காஞ்சிபுரத்துல இருக்குற மண்டபத்தை ஆக்கிரமிக்க முடியும்?
இன்னைக்கு இவ்வளவு குற்றச்சாட்டை சொல்றவங்க, பெரியவர் ஜெயேந்திரர் இருக்கும்போதே இதைச் சொல்லி இருக்கலாமே... கேட்டா, நான் ஜெயேந்திரருக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்றாங்க. அப்படி நெருக்கமா இருந்திருந்தா, என்னோட டிரஸ்ட் பெயரிலேயே காலேஜ் உட்பட இந்தச் சொத்தையெல்லாம் நான் எழுதி வாங்கியிருக்க முடியுமே!’’
‘‘டிரஸ்ட் உறுப்பினர்கள் தவறு செய்பவர்களாக இருந்தால், விஜயேந்திரர் அவர்களை ஏன் இன்னமும் மடத்தில் வைத்திருக்க வேண்டும்?’’

‘‘பெரியவர் விஜயேந்திரருக்கும் சில பிரஷர் இருக்கு. அவருக்குத் தெரியாமதான் பல விஷயங்கள் நடக்குது. பல தடவை டிரஸ்ட் மீட்டிங் நடத்த விஜயேந்திரர் அழைச்சும் ஒருத்தரும் வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனா, ஜெயேந்திரர் முக்தி ஆனதுல இருந்து காஞ்சி மடம் ஆடிட்டர் குருமூர்த்தி கன்ட்ரோலுக்குப் போயிடுச்சு. அதற்கான ஏகப்பட்ட ஆதாரங்களை நான் வெச்சிருக்கேன். 2018-க்குப் பிறகு விஜயேந்திரரை நான் நாலு முறை சந்திச்சேன். ஒரு தடவைகூட என்னை விரோதமா அவர் நடத்தலை. காலேஜை விக்கறது சம்பந்தமா பேச்சு வந்தப்போ, ‘கெளரி காமாட்சிக்கு எப்படி அனுகூலமா இருக்குமோ, அப்படியே செய்யுங்கோ’னுதான் சொன்னார்.’’
‘‘மட விவகாரங்களில் ஆடிட்டர் குருமூர்த்தி தலையிடுவதாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். இதில் அவருக்கு என்ன லாபம்?’’
‘‘அதை அவர்தான் சொல்லணும். அவர் தூண்டுதல்ல டி.ஜி.பி வரைக்கும் என் மேல புகார் கொடுத்திருக்காங்க. அவருக்கு என்கிட்ட என்ன பிரச்னைனும் எனக்குத் தெரியலை. அவருக்கு எஸ்.யூ.டி காலேஜ் நிர்வாகத்துல ஏதாவது சந்தேகம் இருந்தா, என்னை நேர்ல அழைச்சு கேட்டிருக்கலாமே... மடத்துல ஒரு பெரிய சதிவலை பின்னப்படுது. அதை எதிர்த்து நான் தனியாத்தான் போராடுறேன். விஜயேந்திரர் வாய் திறந்தால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு பிறக்கும்!’’
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்!
கெளரி காமாட்சியின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பில் பேசினோம். “ `அரசியல் நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஆன்மிகப் பணிகளில் மடம் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கருதும் மடத்தின் பக்தர்களில் குருமூர்த்தியும் ஒருவர். அவ்வளவு தானே தவிர, அவர் மடத்தைக் கட்டுப் படுத்துகிறார், மடத்தின் சொத்துகளை கபளீகரம் செய்யப் பார்க்கிறார் என்பதெல்லாம் அர்த்தமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். ஜெயந்திரர் மறைவுக்குப் பிறகு, வருடத்திற்கு ஓரிரு முறைதான் அவர் மடத்துக்கே செல்கிறார். பிறகு எப்படி அவர் மடத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூற முடியும்... கெளரி காமாட்சியிடம் பேச வேண்டிய அவசியம் அவருக்கு என்ன இருக்கிறது... `மடத்துக்குத் தீங்கிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கடவுள் தண்டிப்பார்’ என்பதில் குருமூர்த்தி தெளிவாக இருக்கிறார்” என்றனர்.
ஏ.சி.சண்முகம் தரப்பில் பேசினோம். எஸ்.யூ.டி கல்லூரியை விலைபேசச் சென்ற தாகக் கூறப்படும் தகவலை மறுத்தவர்கள், “ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி, தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி என இரண்டு மருத்துவக் கல்லூரிகள் ஏ.சி.சண்முகத்துக்கு உள்ளன. இவற்றை கவனிப்பதற்கே அவருக்கு நேரம் போத வில்லை. சமீபத்தில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏகப்பட்ட பணம் செலவழித்துவிட்டார். புதிதாகக் கல்லூரி வாங்கும் நிலையில் அவர் இல்லை” என்று விளக்கமளித்தனர்.
‘‘கௌரி காமாட்சி விரைவில் சிறை செல்வார்!’’
கெளரி காமாட்சியின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமறிய மடத்தைத் தொடர்பு கொண்டோம். ‘விஜயேந்திரர் அனுமதியில்லாமல் பேச முடியாது’ என முதலில் மறுத்தவர்கள், பின்னர், `பெயர் வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கையுடன் பேசினர். ‘‘2002-ம் ஆண்டு ஒரு விவகாரத்தில் கெளரி காமாட்சி சிக்கிக்கொண்டு போலீஸ் கேஸ் வரை சென்றதால், மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், தமிழக தணிக்கை அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக மடத்துக்குள் மீண்டும் என்ட்ரி ஆனார். அவரின் பரிந்துரையில்தான் எஸ்.யூ.டி கல்லூரியின் சி.இ.ஓ பொறுப்பும் கெளரி காமாட்சிக்குக் கிடைத்தது.
மடத்தைப் பொறுத்தவரை கையெழுத்திடும் அதிகாரம் ஆச்சார்யார்களுக்குக் கிடையாது. அதற்குப் பதிலாக `கார்யம்’ என்கிற பொறுப்பில் ஒருவரை நியமிப்பார்கள். மடத்தின் டிரஸ்ட் உறுப்பினர்களை `கார்யம்’ நியமிப்பார். மடத்தின் சொத்துகளை நிர்வகிக்கத் தேவைப்படும் நபர்களை டிரஸ்ட் உறுப்பினர்கள் நியமிப்பார்கள். இப்படி, எஸ்.யூ.டி கல்லூரியை நிர்வகிக்க டிரஸ்ட் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டவர்தான் கெளரி காமாட்சி. மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். ஆனால், வம்படியாக சி.இ.ஓ பொறுப்பிலிருந்து விலகாமல் பிரச்னை செய்துகொண்டிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னர் மடத்துக்கு கெளரி காமாட்சி வந்தபோதுகூட, அவரைப் பார்க்க விஜயேந்திரர் விரும்பவில்லை.
மடத்தில் எவ்வித ஆதிக்கத்தையும் குருமூர்த்தி செலுத்தவில்லை. அவர் நினைத்தால் பெரிய நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் ஃபீஸ் வாங்க முடியும். பணம் அவருக்கு ஒரு பிரச்னையே அல்ல. குருமூர்த்தி, மடத்தின் ஒரு பக்தர்... அவ்வளவே. கெளரி காமாட்சி கூறுவதுபோல யாருக்கும் எஸ்.யூ.டி கல்லூரியை விற்க முற்படவில்லை. எஸ்.யூ.டி கல்லூரியை வாங்க ஏ.சி.சண்முகமும் முற்படவில்லை. தன்மீது கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மடத்தில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதான பிம்பத்தை உருவாக்கவும் இது போன்ற நாடகத்தை கெளரி காமாட்சி நடத்துகிறார். அவர்மீது வருமானவரி குற்ற புலனாய்வுத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் சிறை செல்வார்’’ என்றனர்.