
‘காஞ்சி’ என்றால் ‘ஒட்டியாணம்’ என்று பொருள்.
காஞ்சிபுரம், பூமித்தாய் தன் இடையில் அணிந்திருக்கும் அணி என்கிறது தலவரலாறு. கோயில் நகரமென்று பேறுபெற்ற இந்நகரில் பார்க்கும் இடமெங்கும் பரமனின் ஆலயங்கள். நோக்கும் திசையெங்கும் திவ்ய தேசங்கள். பட்டுநெசவுக்குப் புகழ்பெற்ற இந்த நகரம், தற்போது திருவிழாக்கோலம் பூண்டு பளபளக்கிறது.
திருவிழாக்களில் பல வகைகள் இருக்கின்றன. வருடத்திற்கொருமுறை நிகழும் ‘மதுரை சித்திரைத் திருவிழா’, ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை நிகழும் ‘ஆயிரம்காளி உற்சவம்’, பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் ‘மகாமகம்’ என்று விழாக்கள் நிகழும் கால இடைவெளிக்கு ஏற்ப வேறுபடும். காஞ்சியில் தற்போது நடந்து கொண்டிருப்பதோ, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அற்புதம். தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடி தரிசனம் செய்யும் வைபவம். ஆம், அனந்த சரஸ் தீர்த்தத்தில் துயில்கொண்டிருந்த அத்திவரதர் எழுந்தருளி, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் ‘அத்திவரதர் வைபவம்’ நடைபெற்றுவருகிறது.

இவருக்கு ஆதிஅத்திவரதர் என்று பெயர். அத்திமரத்தினால் செய்யப்பட்ட வரதர் திருமேனி என்பதால் ‘அத்திவரதர்’ என்று பெயரானது. தற்போது மூலவராக இருக்கும் சிலாரூபத் திருமேனி, வழிபாட்டிற்கு வருவதற்கு முன்பு அந்தத் தலத்தில் மூலவராக அருள்பாலித்தவர் இந்த அத்திவரதர்தான் என்கின்றனர். அத்திவரதர், அனந்தசரஸ் குளத்தில் இடப்பட்டதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பெருமாளே தன் உடல் வெப்பம் நீங்க அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளச் செய்யச் சொன்னதாகச் சொல்லப் படுகிறது. அதே போன்று, கோயில் புனரமைக்கும் பணியின்போது செய்யப்படும் பாலாலயப் பெருமாள் திருமேனியே இது என்கிற கருத்தும் உண்டு. இவை தவிர்த்து வரலாற்று ரீதியிலான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.
17-ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருக்கும் இறைவனின் விக்ரகங்களைச் சேதப்படுத்திவிடாமல், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது இறைத் திருமேனிகளை நீர்நிலைகளில் இட்டும், மண்ணில் புதைத்தும் வைத்தனர். அப்படி அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் இடப்பட்டு 40 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட திருமேனியே அத்திவரதர். அதன் பின் அந்த 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரை வெளியே எடுத்து தரிசனத்திற்கு வைக்கப்படும் சம்பிரதாயம் ஏற்படுத்தப்பட்டு பின் அது பின்பற்றப்பட்டது என்கின்றனர் கோயில் ஆய்வாளர்களும் ஆன்மிகப் பெரியவர்களும்.
ஆன்மிகத் தளத்திலும், வரலாற்றுத் தளத்திலும் வரதராஜப் பெருமாள் கோயிலின் முக்கியத்துவம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில் கி.பி 1053-ம் ஆண்டு கட்டப்பட்டு பிற்காலச் சோழர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. விஜயநகரப் பேரரசர் காலத்தில் இந்தக் கோயில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதிருக்கும் நிலையில் முழுமை ஆக்கப்பட்டது. 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் திருப்பணிகளைப் பல்வேறு மன்னர்கள் முன்னெடுத்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அதிகாரிகளான ராபர்ட் கிளைவ், விலையுயர்ந்த ‘மகரகண்டி’ ஒன்றையும், பிளேஸ் ‘தலையில் அணியும் தங்க ஆபரணம்’ ஒன்றையும் வரதராஜப் பெருமாளுக்கு வழங்கினர்.

பக்தித் தளத்தில், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 14 திவ்ய தேசங்களைக் கொண்ட நகரம் காஞ்சிபுரம். ஆழ்வார்கள் மட்டுமன்றி திருக்கச்சி நம்பிகள், ராமாநுஜர், நடாதுர் அம்மாள், வேதாந்த தேசிகர் முதலான ஆசார்யர்களும் வாழ்ந்து சிறப்பு செய்த தலம். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ‘கோயில்’, ‘பெருமாள் கோயில்’, ‘திருமலை’ என்று சொல்வது உண்டு. இதில் ‘பெருமாள் கோயில்’ என்பது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலையே குறிக்கும். வைணவ அடியார்கள் காஞ்சிபுரத்தைத் தம் பிறந்தவீடாகக் கருதுவர். அந்த அளவிற்கு, அவர்களின் உணர்வோடு இணைந்த தலம் காஞ்சிபுரம். எனவேதான் இங்கு நிகழும் அத்திவரதர் வைபவம் மிகவும் உணர்வுபூர்வ மானதாகக் கருதப்படுகிறது.
ஜூலை 1-ம் தேதி அத்திவரதர் தரிசனம் என்று முடிவானதும், பத்து நாள்களுக்கு முன்பாகவே அனந்தசரஸ் குளத்தில் இருந்த நீரை வெளியேற்றும் பணியைத் தொடங்கியது கோயில் நிர்வாகம். திருக்குளத்தில் இருக்கும் நீராழி மண்டபத்தில் தனித் தொட்டி ஒன்றில் நீரினுள் இருந்தது அத்திவரதர் திருமேனி. திருக்குளத்தில் மொத்தம் 24 படிகள். இந்த ஆண்டின் கடும் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் இருந்தது. 8 படிக்கட்டுகள் வரை நீரில் மூழ்கியிருந்தது. அதற்குக் கீழ் 4 அடி ஆழத்திற்குச் சேறு தேங்கியிருந்தது. எனவே முதலில் குளத்தில் இருக்கும் நீரையும் சேற்றையும் அகற்றினர். பின் அத்திவரதர் இருக்கும் தொட்டியில் நீர் இறைக்கும் பணியைத் தொடங்கினர். அத்திவரதர் எழுந்தருளியிருக்கும் அந்தத் தொட்டி 10 அடி ஆழம் கொண்டது. அதில் 8 அடிவரை நீரும் 2 அடிவரை சேறுமாக இருந்தது. ஜூன் 27 -ம் தேதி அதிகாலையில் இந்தப் பணி தொடங்கியது. அர்ச்சகர்கள் 30 பேரும், ‘ பாதம் தாங்கிகள்’ எனப்படும் சுவாமியை எழுந்தருளப் பண்ணும் 40 பேரும் இந்தப் பணியில் ஈடுபட்டனர். தன் தலைமுறையில் நிகழ்ந்த அந்த அற்புதமான திருப்பணி குறித்து, அதில் ஈடுபட்ட அனுபவத்தினை சிலிர்ப்போடு பகிர்ந்து கொண்டார் கிட்டு பட்டர்.

“அன்றைக்கு இரவு 2 மணி அளவில் இந்தப் பணிகளைத் தொடங்கினோம். மளமளவென வேலை நடந்தது. இரண்டரை மணிநேரம் நீர் இறைத்தபின் பெருமாளின் திருவடி தெரியத் தொடங்கியது. பெருமாளைச் சுற்றிலும் சேறு சூழ்ந்திருந்தது. அதனால் மிகவும் கவனமாக சேறு முழுவதையும் வெளியேற்றினோம். ஓரிரு நாள்களில் உருவாகும் சேறுகூட துர்நாற்றம் எடுக்கும். ஆனால், திருக்குளத்தில் மீன்கள் நிறைய இருந்ததால் அழுக்குகளையெல்லாம் அவை சுத்தம் செய்துகொண்டிருந்ததாலோ என்னவோ 40 ஆண்டுகள் ஆகியும் கொஞ்சமும் துர்நாற்றம் இல்லை. பெருமாள் மேனியில் இருந்த சேற்றை நீக்கித் திருமேனியை எழுந்தருளப் பண்ணினோம்.
இதில் அதிசயம் என்னவென்றால், நாங்கள் அந்தக் குளத்தில் இருந்து மேலே எடுத்துவரும் வரை 10 அர்ச்சகர்கள் சேர்ந்துதான் அந்தத் திருமேனியை எடுத்துவந்தோம். ஆனால் மேலே கொண்டுவந்தபின் அதைச் சுமக்க 32 பேர் தேவைப்பட்டனர். இன்னும் கொஞ்சநேரத்தில் எடை கூட, 40 பேர் சேர்ந்து கொம்புகள் எல்லாம் கொடுத்து வசந்த மண்டபம் வரை கொண்டு வந்தோம். மண்டபத்தில் வைத்து திருமஞ்சனம் செய்தோம். மறுநாள், சுவாமிக்குத் தைலக் காப்பிட்டோம். இவையனைத்தும் முடிந்த நிலையில், பெருமாள் தற்போது தரிசனத்திற்காகப் போடப்பட்ட மேடையில் எழுந்தருளச் செய்யும்போது, முதலில் தூக்கிய அதே பத்துப்பேர் மட்டுமே சேர்ந்து தூக்கி வைத்தோம். 40 பேர் சேர்ந்து தூக்க சிரமப்பட்ட சுவாமியா இது என்றிருந்தது. அத்திவரதர் இப்படியெல்லாம் அதிசயங்களை உடையவர் என்பதை என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் 1979-ம் ஆண்டு அத்திவரதரை தரிசித்தவர். அவர் சொன்னவை எல்லாம் உண்மை என்பதை என் வாழ்வில் நான் கண்டேன். என்வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாக அத்திவரதரை எழுந்தருளப் பண்ணின கைங்கரியத்தைத்தான் கருதுவேன்” என்று சிலிர்ப்போடு கூறினார்.

நாள்தோறும் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கானவர்கள் வந்துபோகிறார்கள். அத்திவரதரை தரிசித்த பரவசம் அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் தெரிகிறது. ஜூலை 1-ல் தொடங்கிய அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 17 வரை நடைபெற உள்ளது. எனவே வரும் நாள்களில் இன்னும் பக்தர்களின் வருகை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.