Published:Updated:

தமிழக அரசுப்பேருந்துகளிலே `இந்தி'யா? - கொதிக்கும் கனிமொழி!

கலிலுல்லா.ச

தமிழக அரசு சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசுப்பேருந்துகளில் தமிழ் அல்லாத இந்தி மொழியில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி
கனிமொழி ( தி.மு.க )

தமிழகம் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அண்மையில் மும்மொழிக்கொள்கைக்கு எதிராகவும் தமிழகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. பின் அது திரும்பப் பெறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். இதில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்துக்கு 150 பேருந்துகள், விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 10 பேருந்துகள், சேலம் அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 20 பேருந்துகள், கோவை - 30 பேருந்துகள், கும்பகோணம் - 110 பேருந்துகள், மதுரை - 50 பேருந்துகள் நெல்லை - 30 என பிரிக்கப்பட்டது.

இப்படியிருக்க விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன.

ஹிந்தி
ஹிந்தி

இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ``தமிழக மக்களின் வரிப் பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அ.தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம். #stopHindiImposition” என்று பதிவிட்டுள்ளார்.