‘கண்மணி, நீ என் கண்ணின் மணி!’- குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைநீக்க மாவட்ட நிர்வாகத்தின் உன்னத முயற்சி

இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில், விருதுநகா் மாவட்டத்தில் 203 குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடை இல்லாதவா்களாக கண்டறியப்பட்டனர்
தமிழகத்தில் முன்னேற விழையும் மாவட்டங் களில் ஒன்று, விருதுநகர். நாளைய மனிதவள முதலீடான இன்றைய குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு, அங்கு மாவட்ட நிர்வாகம் மிக அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வரும் ‘கண்மணி’ திட்டம், அவசியமானது மற்றும் பாராட்டுக்குரியது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியின் முயற்சியினால் தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணியில் செயல்படுத்தப்படும் ‘கண்மணி’ திட்டம், கண்கூடான மாற்றத்தை தந்துள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவெனில், தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே ‘கண்மணி’ திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
என்ன அது ‘கண்மணி’ திட்டம்? விளக்கு கிறார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேக நாத ரெட்டி. ‘`குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதே திட்டத்தின் நோக்கம். ‘கண்மணி’ திட்டத்தின்படி, 0 - 5 வயது குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை கணக்கிட்டு, உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற எடை இல்லாத, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த உணவுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை மூன்று பிரிவுகளில் வழங்குகிறோம்’’ என்றவர், `கண்மணி’ திட்ட பயனாளிகளான குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவுத் தொகுப்பு பற்றி விளக்கினார்.

* எடை குறைபாடுடைய 0 - 6 மாதக் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு 200 கிராம் நெய், 200 கிராம் பேரீச்சம்பழம், 250 கிராம் நிலக்கடலை, 160 கிராம் புரதச்சத்து நிறைந்த பிஸ்கட் அல்லது முட்டை வழங்கப்படுகிறது.
* 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த 400 கிராம் சிறப்பு உணவுப் பொருள்கள், 100 கிராம் நெய், 160 கிராம் புரதச்சத்து நிறைந்த பிஸ்கட் அல்லது முட்டை வழங்கப்படுகிறது.
* 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 100 கிராம் நெய், 200 கிராம் பாதாம் பவுடா், 240 கிராம் புரதச்சத்து நிறைந்த பிஸ்கட் அல்லது முட்டை, 300 கிராம் கடலை மிட்டாய் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறப்பு உணவுத் தொகுப்புடன், தோட்டக்கலைத் துறை மூலம் கீரை விதைகள் மற்றும் கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டு வருகிறது’’ என்ற ஆட்சியர், இந்தத் திட்டத் துக்காக களத்தில் குழந்தைகள் கண்டறியப் பட்டதையும், அவர்கள் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டதையும், அதனால் கண்கூடான பலன் கிடைக்கப் பெற்றதையும் பகிர்ந்தபோது, அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை கூடியது.

``இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில், விருதுநகா் மாவட்டத்தில் 203 குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடை இல்லாதவா்களாக கண்டறியப்பட்டனர். இவா்களுக்கு, 15 நாள்களுக்கு ஒருமுறை என தொடா்ந்து நுண்ணூட்டச்சத்து பொருள்கள் வழங்கப் பட்டு, 15 நாள்களுக்கு ஒருமுறை அவர்களின் எடை மற்றும் உயரம் அளவிடப்பட்டு, அவா்களின் ஊட்டச்சத்து நிலை முன்னேற்றம் குறித்து திட்ட அலுவலர் களால் கண்காணிக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 579 குழந்தைகள் ‘கண்மணி’ திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இவர்களில் 243 பேருக்கு உடல் எடை குறைபாடு மற்றும் ஊட்டசத்து குறைபாடு பிரச்னையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உயரத்துக்கேற்ற கடுமை யான எடை குறைபாடுடைய குழந்தைகளில் 45 பேர் இயல்பு நிலைக்கும், 117 பேர் மிதமான வளர்ச்சி நிலைக்கும் திரும்பி யுள்ளனர். அதேபோல், வயதுக்கேற்ற கடுமையான எடை குறைபாடுடைய குழந்தைகளில் 32 பேர் இயல்பு நிலைக்கும், 49 பேர் மிதமான வளர்ச்சி நிலைக்கும் திரும்பியுள்ளனர்” - தரவுகளை தாயின் நிறைவுடன் பகிர்ந்தார் ஆட்சியர்.

திட்ட செயலாக்கம் குறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி ராஜம் பகிர்ந்தபோது, ``கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, சிறப்பு நிதி எதுவும் தனியே ஒதுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படவில்லை. சத்துணவு திட்டத் துக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாயை `கண்மணி’ திட்டத்துக்காக செலவிட்டாலே ஒரு வருடத்துக்கு, குழந்தை களுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்து பொருள்களை வழங்க முடியும். உடல் மெலிந்திருந்த குழந்தைகளை இப்போது கண்களில் ஆரோக்கியம் ஒளிர பார்க்கும்போது, உண்மையிலேயே மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் அக்கறையுடன்.

பயனாளி குழந்தைகளின் அம்மாக்கள், ``நம்ம புள்ளைக்கு உடம்பு தேறவேயில்லையே, உயரம் கூடலையே, நெஞ்சுக்கூடு துருத்திட்டு இருக்கேனு தோணும். ஆனா, அதுக்கு என்ன பண்ணுறதுனு தெரியாது. `கண்மணி’ திட்டத்துல எங்க பிள்ளைகளை தேடி வந்து உயரம், எடை பார்த்து, சாப்பாட்டுப் பொருள் எல்லாம் கொடுத்து, தொடர்ந்து கவனிச்சுக்குறாங்க. இப்போ புள்ளைங்க உடம்பு ஊறி வர்றதை பார்க்க நிம்மதியா இருக்கு’’ என்கின்றனர் நெகிழ்ச்சியுடன்.
கண்ணின் மணிகள் வளரட்டும் ஆரோக்கியமாக!