
விசாரணை நடத்தி ரிப்போர்ட்டை சி.இ.ஓ-வுக்கு அனுப்பிவிட்டேன். இனி சி.இ.ஓ-தான் இது பற்றிச் சொல்ல வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு மேனிலைப் பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு அக்கவுன்டன்ஸி ஆசிரியர் ஒருவர் செக்ஸ் பாடம் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தகராறு செய்யவே, போலீஸ் வந்து சமாதானப்படுத்தியிருக்கிறது. இந்தப் புகார் குறித்துக் கல்வித்துறை விசாரணையும் நடந்திருக்கிறது!
இந்த நிலையில், ‘வகுப்பறையில் என்ன நடந்தது...’ என்று புகாரளித்த மாணவி ஒருவரிடம் பேசினோம். “அக்கவுன்டன்ஸி ஆசிரியர் கிறிஸ்துதாஸ், பாடத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் குழந்தை எப்படிப் பிறக்கிறது என கிளாஸ் எடுக்கிறார். அப்போ நாங்க முகம் சுளிச்சதால, ‘நீங்களெல்லாம் அங்க இருந்துதானே வந்தீங்க’னு தப்புத் தப்பாப் பேசி கிளாஸ் எடுப்பார். எப்போதுமே அவர் டபுள் மீனிங்லதான் கிளாஸ்ல பேசுவார். கிளாஸ் எடுக்கும்போது பசங்க கவனிக்காம சும்மா இருந்தா, ‘அங்க பாரு உனக்கு க்ரீம் வருது... கழுவிட்டு வா’ன்னு சொல்லுவார். மாணவர்கள் சட்டையை இன் பண்ணலைன்னா ‘உள்ள என்ன வெச்சுருக்க... இன் பண்ணு’ன்னு சொல்லுவாரு. அவன் இன் பண்ணும்போது எங்ககிட்ட ‘இப்ப அவனோடதைப் பார்த்தீங்களா’ன்னு கேட்பாரு. பசங்க ஏதாவது சேட்டை பண்ணினா ‘பொம்பளைங்க நம்பர் வேணும்னா வாங்கித் தாரேன். அவங்ககூட ஸ்கூலுக்குப் பின்னாடி போங்க’ன்னு சொல்லுவார். ஒரு மாணவன் தேர்வு நோட்டில் குரோமோசோம்னு எழுதிவெச்சுருந்தான். அதைப் படிச்சுட்டு குரோமோசோம் பத்தி பாடம் எடுத்தார். ‘உனக்குள்ளது மட்டும் இருந்தா போதாது... அங்க இருந்தும் வரணுமில்லா’ என வகுப்பறையில் வைத்தே மாணவனிடம் சொன்னார்.


போன வருடம் கடைசியில் இந்த ஸ்கூலுக்கு மாற்றலாகி வந்தார். எங்களுக்கு முந்தின பேஜ்ல உள்ள அக்காமாருங்ககிட்டயும் தப்பான வீடியோ போட்டுக் காட்டியிருக்கிறார். அது பற்றி கம்ப்ளெயின்ட் கொடுத்ததால், வந்த இரண்டாவது நாளிலேயே இவரை மாத்திட்டாங்க. இப்ப மறுபடியும் இங்க வந்து சில மாதங்கள் ஆகுது. எங்க வகுப்பறையில மொத்தம் 47 பேர். நாங்க 10 பேர் மட்டும்தான் மாணவிகள். இவர் தொல்லை தாங்காம எங்க வீட்டில் சொன்னோம். எங்க பெற்றோர்கள் வந்து புகார் கொடுத்தாங்க. தலைமை ஆசிரியரும் நடவடிக்கை எடுக்கிறதா சொல்லி அனுப்பிவெச்சாங்க” என்றார்.
மாணவி ஒருவரின் உறவினரான சந்திரா என்பவரிடம் பேசினோம். “மாணவர்களிடம் அந்த ஆசிரியர் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடுகிறார். இது பற்றி நியாயம் கேட்க நாங்கள் சென்றபோது, எங்கள் முன்பு வைத்தே மாணவிகளை அடிக்க கை ஓங்கினார் ஆசிரியர் கிறிஸ்துதாஸ். ‘நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இப்படி அடிக்க கை ஓங்குறீங்களே...’ என நான் கேட்டதற்கு, ‘என்னைய கேக்க நீ யாருடீ...’ என ஒருமையில் பேசினார். நானும் ஒருமையில் அவரைப் பேசினேன். அதனால ஆசிரியருக்கும், எங்களுடன் வந்தவங்களுக்கும் வாக்குவாதம் ஆனது. அதன் பிறகு போலீஸ் வந்து சமாதானப்படுத்தியது. தலைமையாசிரியர் என்னிடம் ‘அவர் அப்படிப் பாடம் எடுத்துப் பழகிட்டார். நான் பேசுகிறேன்’ என்றார். ஆனால், நாங்க வெளியே வந்த பிறகு, புகார் சொன்ன இரண்டு பிள்ளைகளையும் ஸ்டாஃப் ரூமில் கொண்டுபோய் மிரட்டியிருக்கிறார்கள். அந்த ஆசிரியர், ஏற்கெனவே பூதப்பாண்டி பள்ளியில் இதே மாதிரி பாடம் எடுத்ததால்தான் அவரை வேறு பள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள். இப்போ எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு” என்றார் படபடப்பாக.

ஆசிரியர் கிறிஸ்துதாஸ் பற்றி சக ஆசிரியர்களிடம் விசரித்தோம். “தனக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால், சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு அவர்களைப் பற்றி எழுதுவார். அதனால் அவரிடம் அதிகாரிகள்கூட வம்பு வைத்துக்கொள்வது இல்லை” என்றனர்.
புகாருக்குள்ளான ஆசிரியர் கிறிஸ்துதாஸிடம் பேசினோம். “ஆசிரியர் சங்கங்களுக்கு இடையேயான போட்டியால் இது நடந்திருக்கிறது. ஆசிரியர்மீது தவறு இல்லை என எல்லாப் பிள்ளைகளும் டி.இ.ஓ விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இது பற்றி டி.இ.ஓ-விடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார் சுருக்கமாக.

தக்கலை டி.இ.ஓ எம்பெருமாளிடம் பேசினோம். “விசாரணை நடத்தி ரிப்போர்ட்டை சி.இ.ஓ-வுக்கு அனுப்பிவிட்டேன். இனி சி.இ.ஓ-தான் இது பற்றிச் சொல்ல வேண்டும்” என்றார். உடனே சி.இ.ஓ புகழேந்தியைத் தொடர்புகொண்டு கேட்டோம். “அந்த ஆசிரியர் கண்டிப்புடன் நடந்துகொள்வதாகவும், நோட்டில் சினிமா பாட்டு எழுதியதால் அந்த மாணவியை ஆசிரியர் கண்டித்திருப்பதாகவும், அதனால் இந்தப் பிரச்னை நடந்திருப்பதாகவும் டி.இ.ஓ விசாரணை நடத்தி ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். இதுக்கு மேல் ஏதாவது பிரச்னை என்றால், சமூக நலத்துறையும் போலீஸும் விசாரிக்கட்டும்” என்றார்.
அதிகாரிகளின் பதில்கள் நழுவும் வகையிலானவையாக இருக்கின்றன. அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை யார் உறுதிசெய்வது?