``திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்தத் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம்" என்று காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் கடந்த புதன்கிழமையன்று சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் கிராமப் பஞ்சாயத்தார் கீழ்க்காணும் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.
``காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமலும், முகச்சவரம் செய்யாமலும் திருமணம் செய்து கொள்கின்றனர். இது நமது பாரம்பர்ய பண்பாடு இல்லை. இது குறித்து பெண் வீட்டாரோ, மாப்பிள்ளை வீட்டாரோ கவலைகொண்டதாகவும் தெரியவில்லை.
நமது பாரம்பர்ய பண்பாட்டின்படி திருமணத்தின்போது தாடி வைத்திருப்பது என்பது ஏற்புடையது அல்ல. எனவே, நமது பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் கிராம பஞ்சாயத்தார் ஒன்று கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

அதன்படி இனி வரும் காலங்களில் மணமகன் திருமணத்தின்போது தாடி வைத்திருந்தால், அந்தத் திருமண விழாவில் கிராமப் பஞ்சாயத்தார் யாரும் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். இதைக் கிராமத்தினர் அனைவருக்கும் அறிவித்துவிட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.