அலசல்
அரசியல்
Published:Updated:

துணைவேந்தர் நியமனத்தை ஏன் நிராகரித்தார் கவர்னர்?

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
News
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் குவியும் சர்ச்சைகள்...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை நிராகரித்ததுடன், பரிந்துரை செய்த தேடுதல் குழுவையும் (Searching Committee) அதிரடியாகக் கலைத்துவிட்டு புதிய குழுவை அமைக்கும்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருப்பது, உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பலத்த சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. தமிழக பல்கலைக்கழக வரலாற்றில், துணைவேந்தர் தேர்வுக்காக கவர்னரால் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை அவரே கலைத்திருப்பது இதுவே முதன்முறை என்கிறார்கள் கல்வியாளர்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இயங்கிவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரனின் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். அந்தக் குழுவில், கவர்னரின் பிரதிநிதியாக ஆந்திரா சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா கன்வீனராகவும், அரசுப் பிரதிநிதியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மணிவேலும், செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீனாவும், சிண்டிகேட் பிரதிநிதிகளாக சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துரைசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.

துணைவேந்தர் நியமனத்தை ஏன் நிராகரித்தார் கவர்னர்?

ஒருபோதும் இல்லாத வகையில் துணைவேந்தரின் பதவிக்கு 162 விண்ணப்பங்கள் குவிந்தபோதே இந்த விவகாரம் பலத்த விவாதங்களைக் கிளப்பியது. அப்படி விண்ணப்பித்தவர்களில் 20 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரும் விண்ணப்பித்திருக்கிறார். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த தேடுதல் குழு, ஏழு பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் மூவரை இறுதி செய்து, ஆகஸ்ட் 11-ம் தேதி ஆளுநருக்குப் பரிந்துரைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், ‘தேடுதல் குழு பரிந்துரைத்த மூவரையும் நேர்காணல் செய்த கவர்னர், அவர்கள் துணைவேந்தர் பதவிக்குப் பொருத்த மில்லாதவர்கள் என்று நிராகரித்துவிட்டார். தேடுதல் குழுவையும் கலைத்துவிட்டு, புதிய குழு அமைக்க உத்தரவிட்டிருக்கிறார்’ என்று கவர்னரின் உதவியாளர் ஆனந்தராவ் பாட்டில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

துணைவேந்தர் நியமனத்தை ஏன் நிராகரித்தார் கவர்னர்?

“துணைவேந்தர் தேர்வு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை” என்று கூறும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் பாண்டியன் நம்மிடம், ‘‘ஆந்திர சட்டக் கல்லூரியின் முன்னாள் துணைவேந்தரான சத்தியநாராயணாவின் தலைமையில் தேடுதல் குழுவை அமைத்ததிலிருந்தே சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக்கு, ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை கன்வீனராகப் போட வேண்டிய தேவை என்ன... தமிழ்நாட்டில் தகுதியானவர்கள் இல்லையா? விண்ணப்பங்களை எந்த அடிப்படையில் பரிசீலனை செய்தார்கள், என்ன மதிப்பெண்கள் கொடுத்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை.

162 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றிலிருந்து ஏழு பேரைத் தேர்வுசெய்து நேர்காணல் செய்ததாகவும், அவர்களில் மூவரை இறுதி செய்ததாகவும் தகவல் பரவுகிறது. அந்த மூவரின் பெயர்கள் பரவலாகப் பேசப்பட்டாலும், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது கவர்னர் புதிய குழுவை அமைக்க உத்தரவிட்டிருக்கிறாரே தவிர, அதற்கான காரணத்தையும் குறிப்பிடவில்லை. எனவே, தேடுதல் குழு பரிந்துரைத்தவர்களின் பெயர்களையும், அவர்கள் நிராகரிக்கப் பட்டதற்கான காரணத்தையும் கவர்னர் சொல்ல வேண்டும். கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகுதான், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுவிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அல்லது மூத்த நிர்வாகிகள் கன்வீனராக இருக்க வேண்டும் என்று சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். அப்படி இருக்கும்போது, துணைவேந்தர் பதவிக்கான தகுதிகளையும் நிர்ணயித்திருக்கலாமே... அதை விடுத்து, அனைத்தையும் ரகசியமாகச் செய்வதன் நோக்கம் என்ன?’’ என்று படபடத்தார்.

நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத பேராசிரியர் ஒருவர், ‘‘தேடுதல் குழுவில் இடம்பெறுபவர்கள் கடந்த காலங்களில் சர்ச்சைகளில் சிக்காதவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரைத் தவிர, அனைவரின் சர்ச்சைகள் குறித்தும் தனிப் புத்தகமே போடலாம். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர்தான், துணைவேந்தர் நியமனங்களில் முக்கிய புரோக்கராக வலம்வருகிறார். குறிப்பிட்ட சிலரைத் தேடுதல் குழுவில் நுழைப்பதிலிருந்து, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த வர்களிடம் டீல் பேசி முடிப்பதுவரை அனைத்தும் இவர்தான். இவரால்தான் தகுதியுள்ளவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்; தகுதியற்றவர்கள் துணைவேந்தர் பதவிகளில் இருக்கிறார்கள். தேடுதல் குழுவில் இடம்பெறுபவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் துணைவேந்தர் களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தகுதியானவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் புதிய அரசும் மெளனம் காப்பது ஏன் என்று புரியவில்லை’’ என்றார் வேதனையுடன்.

பாண்டியன்
பாண்டியன்

இன்னொரு பக்கம், ‘‘அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, தமிழர் அல்லாத வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இவர்களின் விண்ணப்பங்களை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக ராஜ்பவனின் அதிகாரபூர்வ மெயில் ஐ.டி-க்கு மெயில் அனுப்பியிருக்கிறோம். அவர்கள் தரப்பிலிருந்து பதில் வரும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.