பா.ஜ.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். சி.ஏ.ஏ போராட்டம் உச்சத்தில் இருந்தபோது கார்த்தி சிதம்பரத்துக்கும் ஹெச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது. கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாகப்போகிறார் என ஆவேசம் பொங்கினார் ஹெச்.ராஜா. அதற்கு பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம், ``3,32,244 என்கிற எண் ராஜாவுக்கு நினைவிருக்கிறதா?” என்று கிண்டலடித்தார். அதாவது, தன்னிடம் 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜா தோல்வியடைந்ததைத்தான் குறிப்பிட்டுக் கிண்டலடித்தார் கார்த்தி சிதம்பரம். அப்போதே, மீண்டும் ஹெச்.ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க-வுக்குள் அனல் கிளம்பியது. ஆனால், ஹெச்.ராஜா அசரவில்லை.

தனது சொந்த ஊர் காரைக்குடி என்பதால், நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியை அ.தி.மு.க கூட்டணியில் கேட்டுப் பெற்று ஹெச்.ராஜா போட்டியிட்டார். அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் ஹெச்.ராஜா தோல்வியைத் தழுவினார். தன்னுடைய தோல்விக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் சரியாகப் பணியாற்றாததே காரணமென ஹெச்.ராஜா கட்சித் தலைமையிடம் புகாரளித்ததாகக் கூறப்படுகிறது. இது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி, சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு சீரியஸாகியிருக்கிறது. முதல் ஆளாக ராஜினாமா செய்திருக்கும் பா.ஜ.க-வின் காரைக்குடி பெருநகரத் தலைவர் சந்திரன், தலைமைக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், “நான்காண்டுகளாக நகரத் தலைவராக நான் பணியாற்றிய காலத்தில் கட்சிக்காக எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்திருக்கிறேன். காரைக்குடியில் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹெச்.ராஜா, தன்னுடைய தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுய பரிசோதனை செய்துகொள்ளாமலும் தன்னுடைய தவற்றை மறைப்பதற்காக நகர் கமிட்டிமீது குற்றம்சாட்டுகிறார்.
ஹெச்.ராஜாவின் மருமகன் சூரியநாராயணன் பல்வேறு நபர்கள் மூலமாக என்னை மிரட்டிவந்தார். பதவியில் நான் தொடர்ந்து நீடித்தால் என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழும் என்று அஞ்சுகிறேன். ஆகவே, காரைக்குடி நகரத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் சந்திரன். சந்திரன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஒன்றிய நிர்வாகிகளும், தேவகோட்டை நகர நிர்வாகிகளும் தங்கள் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வராஜும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதால், மாவட்ட கமிட்டி கலைந்துவிட்டது. “ஹெச்.ராஜா மீது ஏன் இவ்வளவு கோபம்?” எனப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சந்திரனிடம் பேசினோம்.
“கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு காரைக்குடி நகருக்குள் 8,000 வாக்குகள் அதிகமாகத்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். தேர்தலில் நாங்கள் கடுமையாக உழைத்ததால்தான் இது சாத்தியமானது. ஆனால், மக்கள் ஹெச்.ராஜாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது வாக்கு இருக்கும் 67-வது பூத்திலேயே, 78 வாக்குகள்தான் ராஜாவுக்கு கிடைத்திருக்கின்றன. இந்தத் தோல்விக்கு அவர்தான் காரணம். ஏதோ நாங்கள் சரியாகத் தேர்தல் பணியாற்றவில்லை என்று எங்கள்மீது பழியைப் போடுகிறார் ஹெச்.ராஜா. தேர்தல் சமயத்தில் செலவுக்காக, கட்சி மேலிடத்திலிருந்து பெரும் தொகை அளிக்கப்பட்டது. அந்தப் பணத்தை பூத் கமிட்டிக்குக்கூட ராஜா செலவழிக்கவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டார். காரைக்குடி நகருக்குள் இருக்கும் 93 பூத்களுக்கும் தொண்டர்கள்தான் செலவழித்து கட்சி மானத்தைக் காப்பாற்றினார்கள்.
இப்போது, சுப்பிரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டிவருகிறார் ஹெச்.ராஜா. எருமைப்பட்டியில் அவருக்கு சொந்தமாக 40 ஏக்கர் தோட்டம் இருக்கிறது. அங்கும் பண்ணை வீடு ஒன்றை எழுப்பிவருகிறார். இதற்குப் பணம் எங்கேயிருந்து வந்தது? அவர் தேர்தலில் போட்டியிடுவதே, கட்சிப் பணத்தை சுருட்டுவதற்காகத்தான். தேர்தலில் ஜெயிப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவே இல்லை. பணத்தைச் சுருட்டிவிட்டு இப்போது தொண்டர்கள் மீது பழியைப் போடுகிறார். பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்த மாங்குடியிடம் தோற்றுப்போன ஹெச்.ராஜாவுக்கு எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. எங்கள் மனக்குமுறலையெல்லாம் கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்துவிட்டோம். எங்கள் பதவியைத்தான் ராஜினாமா செய்திருக்கிறோமே தவிர, கட்சியைவிட்டு யாரும் செல்லவில்லை. இனி கட்சிக்குள் ஹெச்.ராஜாவின் தலையீடு இருந்தால் கட்சி உருப்படாது. அவர்மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பொங்கினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமறிய ஹெச்.ராஜாவைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் பலனளிக்கவில்லை. அவர் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “ஹெச்.ராஜா பணத்தைச் சுருட்டிவிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வாய்க்கு வந்த குற்றச்சாட்டை விஷமம் படைத்த சிலர் திட்டமிட்டே பரப்புகிறார்கள். தன்னுடைய தோல்விக்கு உரிய காரணத்தைக் கட்சி மேலிடத்துக்கு ராஜா தெரியப்படுத்திவிட்டார். இனி தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.
ஹெச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட அமைப்பே அடுத்தடுத்து ராஜினாமா கடிதங்களை கமலாலயத்துக்கு பறக்கவிடுகிறது. இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தி அறிக்கையளிக்க, டெல்லி மேலிடமும் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச்.ராஜாவுக்கு ‘செக்’ விழுமா அல்லது வழக்கம்போல இந்தக் கண்டத்திலிருந்தும் அவர் தப்பிப்பாரா? வரும் வாரங்களில் தெரிந்துவிடும்!