சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.ஆர்.ராமசாமி. 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள கப்பலூர் என்னும் சிறிய கிராமம். அதற்குப் பக்கத்தில் விளங்குடி எனும் சிற்றூர் உள்ளது.

அங்கு கோயில் கும்பாபிஷேகத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களில், எம்.எல்.ஏ. ராமசாமியின் படம் போட்ட பேனர்கள் மட்டும் 3 இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த யாரோதான் இந்தச் செயலைச் செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அந்தப் பகுதில் பரபரப்பு உண்டானது. ஆனால், கிராம மக்களோ நாங்கள் செய்யவில்லை என அடியோடு மறுத்து வருகிறார்கள்.
அதோடு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலுக்குத் தனிப்பேருந்தில் சென்று, `பேனரைக் கிழித்தது நாங்கள் இல்லை' என சத்தியம் செய்ய உள்ளனர். கே.ஆர்.ராமசாமி அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் செல்வாக்கு மிக்கவர், அதனால் எழுந்த அச்சத்தின் காரணமாகத்தான் கிராம மக்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்க, எம்.எல்.ஏ ராமசாமியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவரின் உதவியாளர் நாகராஜ் என்பவர் நம்மிடம் பேசினார்.``பேனர் கிழிக்கப்பட்டது உண்மைதான். கோயிலுக்குச் சென்று சத்தியம் செய்யவிருப்பது அந்தக் கிராம மக்கள் எடுத்த முடிவு. அதற்கும், எம்.எல்.ஏ-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல் வேலைகளில் எம்.எல்.ஏ பிசியாக இருப்பதால், அவரிடம் இதுகுறித்து எந்தத் தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை'' என்றார் அவர்.