கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், இன்று அதிகாலை, ஹுலந்தா கிராமத்திலிருந்து, 22 பக்தர்கள் அப்பகுதியிலுள்ள பிரசித்திபெற்ற சவுந்தட்டி எல்லம்மா கோயிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி லிஃப்ட் கேட்டிருக்கின்றனர். டிரைவர் அந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு, ஹுலந்தா கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வாகனத்தை அதிவேகமாக இயக்கிய டிரைவர், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமிருந்த புளியமரத்தில் இடித்தார்.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த, சிறுமிகள் சுப்ரீத்தா (11), சவிதா (16), ஹனுமவ்வா (25), தீபா (31), இந்திரவ்யா (24) மற்றும் மாருதி (42) ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி சஞ்சீவ் பட்டில் சம்பவம் குறித்து விசாரித்துவருகிறார், காயமடைந்தோர் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முதல்வர் பசவராஜ் பொம்மை, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் காயமடைந்தோரின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமென அறிவித்திருக்கிறார். சாமி தரிசனத்துக்குச் சென்ற ஆறு பேர் இறந்த சம்பவம், கர்நாடகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.