சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

தனிப்பெருந்துணையே...

கார்த்திக் நேத்தா
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திக் நேத்தா

சினிமா

`காதல் கண்ணீரில் சிலந்தி

காதல் விண்மீனின் மெகந்தி

காதல் மெய்யான வதந்தி

காலந்தோறும் தொடரும் டைரி...’

கார்த்திக் நேத்தாவின் `96' பாடல் வரிகள் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிக்க, புது மாப்பிள்ளை கார்த்திக் நேத்`தா மட்டுமன்றி, வந்திருந்த ஜோடிகள் அனைவரின் முகங்களிலும் வெட்கச் சிவப்பு. புன்னகை ததும்பும் முகத்துடன் கார்த்திக் நேத்தாவின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டிருந்தார் அவரின் காதல் மனைவி கீதா. பலரின் காதல் நாஸ்டாலஜியைத் துளிர்க்கவைத்த கவிஞர் கார்த்திக் நேத்தாவின் காதல் திருமணம் முடிந்த சில தினங்களில், அவரை அவர் குடும்பத்தினருடன் சந்தித்தோம்.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

``கார்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எங்க எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம்ப்பா. கல்யாணமே பண்ணிக்காம இருந்திடுவானோன்னு நினைச்சோம். `கல்யாணம்லாம் வேணாம்’னு சொல்லிட்டுத் திரிஞ்சவன்... அவன் `லவ் மேரேஜ்' பண்ணிக்கிட்டதுலதான் எங்களுக்கு அதிக சந்தோஷமே...’’ என்றபடி மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் கார்த்திக் நேத்தாவின் அம்மா ஜெயமணி. அவர் கூறியதை மொத்தக் குடும்பத்தினரும் தலையசைத்து ஆமோதித்தார்கள்.

``எங்க குடும்பத்துல எல்லாருமே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதான். நான், என் மூத்த பையன் அசோக் பிரசன்னா, கடைசிப் பையன் விவேக் பிரசன்னா எல்லாருடைய கதைகளுமே காதல் கதைகள்தான். இப்போ கார்த்திக் பிரசன்னாவுக்கும் (கார்த்திக் நேத்தா) காதல் கல்யாணம்’’ என்கிறார் பிரசன்னாக்களின் அப்பா இரத்தினம். 1978-ம் ஆண்டு சாதிப் பிரச்னைகளை எதிர்கொண்டு தன் காதலியைக் கரம்பற்றியவர்.

தனிப்பெருந்துணையே...

``யார் முதல்ல காதலைச் சொன்னீங்க... சொல்லுங்க கவிஞரே...’’ என்று குடும்பத்தினர் கார்த்திக் நேத்தாவுக்கு `கேள்வி ட்யூன்' கொடுக்க பதிலெழுதினார் கார்த்திக் நேத்தா.

`` `96' படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் ஃபேஸ்புக்ல எனக்கு நிறைய பேர் நட்பழைப்பு விடுத்திருந்தாங்க. ஆனா, இவங்களோட முகநூல் விவரக்குறிப்பு பார்த்துட்டு நான்தான் இவங்களுக்கு நட்பழைப்பு கொடுத்தேன். இவங்க புகைப்படம் பார்த்தப்பவே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. `சரி, பேசிப் பார்ப்போமே’ன்னு பேசினப்போதான் தெரிஞ்சது, இவங்க `96' படமே பார்க்கலைங்கிறது. என்னை யாருன்னே இவங்களுக்குத் தெரியலை. நான் பாடலாசிரியர். இவங்க தமிழ் ஆசிரியை. தமிழ் படிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சதும், இவங்களைத்தான் திருமணம் பண்ணிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன். `லவ்’வெல்லாம் சொல்லலை. `கல்யாணம் பண்ணிக்கலாமா?’ன்னு கேட்டேன். `யோசிச்சுச் சொல்றேன்'னு சொன்னாங்க. மறுநாள் `சரி'ன்னு சொல்லிட்டாங்க. திருமணம் பண்ணிக்கிட்டோம். அவங்ககிட்ட பேச ஆரம்பிச்சு நாலு மாசம்தான் ஆகுது. நிச்சயதார்த்தம் பண்ணினப்போதான் முதல் தடவை நேர்ல சந்திச்சோம். எங்க ரெண்டு பேரைவிட எங்க ரெண்டு குடும்பமும்தான் அதிகமா பேசிக்கிட்டாங்க. இனிமேதான் நிறைய காதலிக்கணும்’’ - தன் காதல் கதையைக் கண்கள்விரிய கார்த்திக் நேத்தா சொல்ல ``காதலிப்போம்’’ என்று வழிமொழிந்தார் கீதா.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

`` `சூரரைப் போற்று' பட ஷூட்டிங்ல இருந்தேன் நான். கார்த்திக், `கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னதும், ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருந்தது. கார்த்திக்கு `96' படம், திருமணம்னு தொடர்ச்சியா நல்லது நடக்குது. இதுக்காகத்தான் நாங்க எல்லாருமே இத்தனை வருஷமா காத்துக்கிட்டு இருந்தோம். வீட்ல அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வாசிக்கற பழக்கம் உண்டு. அதனால, சின்ன வயசிலிருந்தே எங்களுக்கும் புத்தகம் வாசிக்கிற பழக்கம் இருந்தது. நான், கார்த்திக் ரெண்டு பேருமே சினிமாத் துறைக்கு வந்துட்டோம். எங்க பெரிய அண்ணன் அசோக் பிரசன்னா ஃபேமிலிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினார். கார்த்திக் ரொம்பத் திறமைசாலி. எல்லா விஷயத்தையும் ரொம்ப நுட்பமா கவனிப்பாரு. திடீர்னு சொல்லாமக் கொள்ளாம எங்கேயாவது போயிடுவாரு. அவரோட பார்வை, அவர் கற்பனை பண்ணிவெச்சிருக்கிற உலகம் வேற மாதிரி இருந்தது. கார்த்திக்கோட லைஃப் நல்லபடியா அமையணும்னு எனக்கு அவ்வளவு ஆசை. கார்த்திக்கு ரொம்ப லேட்டா கிடைச்ச வெற்றி இது. இதை அவர் தக்கவெச்சுக்கணும்.’’ -அண்ணனின் வெற்றி குறித்துப் பெருமிதப்படுகிறார், நடிகர் விவேக் பிரசன்னா.

`` `லைஃப் ஆஃப் கார்த்திக் நேத்தா' ரொம்ப சுவாரஸ்யம் நிறைஞ்சது. கார்த்திக் ஆறாவது படிக்கிறப்பவே லவ் லெட்டர்லாம் எழுதிக் கொடுப்பான். அதனால, இன்னைக்கு அவன் பாட்டு எழுதறதுல எனக்கு பெரிசா ஆச்சர்யம் இல்லை. அப்பா, அம்மா ரெண்டு பேருமே எங்களுக்கு ரொம்ப சப்போர்ட். என் மனைவி சூர்யா, விவேக்கோட மனைவி ராஜலட்சுமி ரெண்டு பேருமே திருமணத்துக்கு முன்னாடி இருந்தே எங்க அம்மா, அப்பாகூட நல்லாப் பேசுவாங்க. எங்க லைஃப் இந்த அளவுக்கு சந்தோஷமா இருக்குறதுக்கு அப்பா, அம்மா முக்கியமான காரணம்.’’ - அண்ணன் அசோக் பிரசன்னா பேசியதும் கார்த்திக் நேத்தா தொடர்ந்தார்.

``சினிமாவுல பாட்டு எழுதுறக்காக சென்னை கிளம்பி வந்தப்போ, `ஒரு வருஷத்துல சம்பாதிக்க ஆரம்பிக்கணும்’னு நினைச்சேன். ஆனா அது நடக்கலை. அம்மா, அப்பா ரெண்டு பேரும்தான் பணம் அனுப்பினாங்க. அப்பா வழக்கறிஞர். அவருக்கு திராவிடக் கொள்கைகள் மேல ஈர்ப்பு ஜாஸ்தி. தத்துவம், இலக்கியம்னு பலவிதமான புத்தகங்கள் வீட்ல நிறைஞ்சு கிடக்கும். அது என்னை வாசிப்பை நோக்கி இயல்பா உந்தித் தள்ளிடுச்சு. சென்னைக்கு வந்த புதுசுல நிறைய சினிமா நிறுவனங்களுக்கு வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்கேன். அது நல்லபடியா அமையலை. அதுக்கப்புறம் நான் வாய்ப்பு தேடியே போகலை. `நம்ம கவிதைகள், பாடல்கள் பிடிச்சு கூப்புடுறவங்களுக்கு மட்டும் எழுதலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். வீட்ல என்னை நினைச்சு நிறைய கஷ்டப்படுவாங்க. அதை என்கிட்ட காட்டிக்க மாட்டாங்க. நானும் விரக்தி அடையாம, `திறமை இருக்கு. நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்’னு ஆழமா நம்பினேன்.

`` `எளிமையா எழுதணும்’னு முத்துக்குமார் அண்ணா சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவருக்கு நான் நிறைய பாடல்கள் எழுதணும்னு ஆசை.”

`தொட்டி ஜெயா' படத்துல யுவன் சார் இசையமைச்ச ஒரு பாடல், நான் எழுதினதுதான். அதுதான் முதல் பாடல். அதுக்கப்புறம் `வெண்ணிலா கபடிக்குழு' படத்துல நான் எழுதின `பட பட' பாடல்தான் என்னை நா.முத்துக்குமார் அண்ணாகிட்ட அறிமுகப்படுத்திவெச்சுது. அந்தப் பாடல் வரிகள் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோடு இணைஞ்சு ஏழு வருடப் பயணம். அவரோடு நிறைய ஊர்களைச் சுத்தியிருக்கேன். நிறைய புத்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொல்லுவாரு. அவர் பாட்டு எழுதி வெளியான பாடல்களோட மெட்டுக்கு என்னைப் பாட்டு எழுதச் சொல்வாரு. நானும் எழுதிக் கொடுப்பேன். அவருக்குப் புடிச்ச வரிகளுக்கு `குட்' சொல்லுவாரு. அந்த நேரத்துல `நெடுஞ்சாலை', `வாகை சூட வா', `திருமணம் என்னும் நிக்காஹ்' படங்கள்ல நான் எழுதின பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. `எளிமையா எழுதணும்’னு முத்துக்குமார் அண்ணா சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவருக்கு நான் நிறைய பாடல்கள் எழுதணும்னு ஆசை.

`96' பாடல் வெற்றிபெறும்னு நினைச்சேன். ஆனா, இவ்வளவு பெரிய அடையாளத்தைக் கொடுக்கும்னு எதிர்பார்க்கலை. யார், என்னன்னு தெரியாதவங்கல்லாம் பாராட்டுறப்போ என் தொழில் மேல எனக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூடுது. கொஞ்ச நாள் வாழ்க்கைல `ஃபோகஸ்' இல்லாம இருந்துட்டேன். நிறைய பேரை மதிக்காம, அவங்க சொன்னதைக் கேட்காம இருந்துட்டேன். இனிமே அப்படி இருக்கக் கூடாது. இவ்வளவு நாள் என குடும்பம் எனக்குக் கொடுத்த ஆதரவு ரொம்பப் பெரிசு” எனக் கார்த்திக் கூற, “என்னப்பா இவ்ளோ சீரியஸா பேசிட்டிருக்க?” என்று விவேக் பிரசன்னா கலாய்க்க, வெடித்துச் சிரித்த குடும்பத்தினரின் அன்பில், சிதறின மகிழ்ச்சி மத்தாப்புகள்.