'100 கோடி ரூபாய் வசூல் சாதனை', 'அசுரன்' படம் அல்ல; பாடம்', 'நில உரிமையைப் பேசும் அசுரனுக்கு வாழ்த்துகள்' எனப் பல தரப்பிலுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன, அசுரன் திரைப்படத்துக்கு. அதேசமயம், படத்தில் இடம்பெற்றிருந்த 'ஆண்ட பரம்பரை' குறித்தான வசனம் நீக்கப்பட்டிருப்பது தற்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.

அசுரன் திரைப்படத்தில், 'ஆண்ட பரம்பரை என்று எத்தனை நாள்களாகத்தான் சொல்லிக்கிட்டே இருப்பீங்கடா...' என்று ஒரு வசனம் உண்டு. இந்த குறிப்பிட்ட வசனம், தங்களது முக்குலத்தோர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதால், படத்திலிருந்து இந்த வசனத்தை மட்டும் நீக்க வேண்டும்' என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்கிவிட்டார்.
கருணாஸின் மகன் கென், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் இந்த விவகாரத்தில் இணைத்துப் பேசுபவர்கள், ''முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த சிலரே, 'நம் இனத்தை அவமானப்படுத்துகிற மாதிரியான படத்தில் கருணாஸின் மகன் நடித்திருக்கலாமா...' என்று கருணாஸுக்கு அழுத்தம் தந்திருக்கின்றனர். இதையடுத்தே, குறிப்பிட்ட வசனத்தை நீக்கியே ஆகவேண்டும் என்று கருணாஸும் அறிக்கை வெளியிடவேண்டியதாயிற்று'' என்கிறார்கள்.
வெற்றிமாறனுக்கும் இது விஷயமாகத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்றும் செய்திகள் படபடக்கின்றன.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய 'புதிய தமிழகம் கட்சி'யின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ''அசுரன் படத்தில், 'ஆண்ட பரம்பரை குறித்து வெளிவரும் வசனம் எங்கள் சமூகத்தினரைப் புண்படுத்துகிறது' என்று குறிப்பிட்ட ஓர் எம்.எல்.ஏ அறிக்கை கொடுத்த உடனே, அந்த வசனத்தையே நீக்கிவிட்டார், படத்தின் இயக்குநர் வெற்றிமாறன். இத்தனைக்கும் எந்தக் குறிப்பிட்ட சாதியையும் அந்த வசனம் குறிக்கவில்லை.
'கொம்பன்' திரைப்படம் வெளியானபோது, 'அப்படம் பல்வேறு சமூகத்தினரையும் தாழ்த்தி வன்முறையை வளர்க்கிறது' என்றுகூறி தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினோம். அப்போது, 'படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது; ஊடகக் கருத்துரிமையைத் தடுக்கக்கூடாது' என்றெல்லாம் எங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார், இயக்குநர் வெற்றிமாறன். ஆனால், இப்போது அவரே ஆதிக்க சாதிகளிடம் இப்படி அடங்கிப் போய்விட்டாரே ஏன்...?'' என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அசுரனைச் சுற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் விளக்கம் கேட்டு நடிகர் கருணாஸைத் தொடர்புகொண்டு பேசினோம்... ''எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை நானும் படித்துப் பார்த்துவிட்டுத்தான் 'அசுரன்' படத்தில் என் மகனை நடிக்கவைக்கவே ஒப்புக்கொண்டேன்.
தென் தமிழகத்தின் சில பகுதிகளில், 'அசுரன்' வெளியான சில தியேட்டர்களில், 'ஆண்ட பரம்பரை' என்ற அந்தக் குறிப்பிட்ட வசனம் வந்ததும் தியேட்டரைவிட்டு சிலர் எழுந்துபோய்விடுகிறார்கள் என்ற தகவல் எனக்கும் வந்தது. இதற்கிடையில், எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரே, தொலைபேசி மூலமாக வெற்றிமாறனிடம் பேசியபோது, குறிப்பிட்ட அந்த வசனத்தை எடுத்துவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வெற்றியும் என்னிடம் சொன்னார்.

உடனே நானும், 'சரி... என் தரப்பிலுள்ளவர்கள்தானே பேசுகிறார்கள். அப்படியென்றால், கட்சியிலிருந்து நானே ஓர் அறிக்கை கொடுத்துவிடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...' என்று கேட்டேன். அவரும் 'நான் ஓர் இயக்குநர். எல்லோருக்கும் பொதுவானவன். யாரையும் வருத்தப்பட வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் எனக்கு இல்லை' என்று வெளிப்படையாகப் பேசினார். அதன்பிறகே அறிக்கை வெளியிடப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட வசனமும் நீக்கப்பட்டது.
என்னிடம் இதுவரையில் ஒரேயொருவர் மட்டும்தான் இந்தப் பிரச்னை சம்பந்தமாகப் பேசி 'வசனத்தை நீக்க வேண்டும்' என்று கோரிக்கையும் வைத்தார். எம்.எல்.ஏ, கட்சித் தலைவர் என்பதெல்லாம் எனக்கு இப்போது கிடைத்த பதவிகள். ஆனால், ஆரம்பத்திலிருந்தே நான் ஒரு கலைஞன். பாடகனாக, நடிகனாக நான் மக்களிடத்தில் அறிமுகமான பின்னாடிதான் இவையெல்லாம் எனக்குக் கிடைத்தன. எனவே, நான் உருவான இடமே மேடைதான்.

சாதிவெறி பிடித்தவன் நான் அல்ல. அப்படியிருந்தால், நான் எதற்கு என் மகனை இந்தக் கேரக்டரில் நடிக்க வைக்கப்போகிறேன்? இந்த எளிய விஷயத்தைக்கூட இந்த உலகம் புரிந்துகொள்ளவில்லை என்றால், அது என் தப்பு அல்ல!'' என்றார்.