அரசியல்
அலசல்
Published:Updated:

‘குவாரியை எதிர்த்தால் கொலையா?’ - கரூர் கொடூரம்!

ஜெகநாதன், செல்வக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெகநாதன், செல்வக்குமார்

குவாரியில் முறைகேடாகப் பல அடி ஆழத்துக்கு கல்லை வெட்டியெடுத்து, விவசாயத்தை அழிச்சாங்க. அதுக்காகப் போராடிய எங்கப்பாவோட உசுரையே இப்போ எடுத்துட்டாங்க.

விதிமுறை மீறிய கல்குவாரிக்கு எதிராகப் போராடிவந்த சமூக ஆர்வலர் ஒருவர், சரக்கு வாகனம் ஏற்றித் துள்ளத்துடிக்கக் கொலைசெய்யப்பட்டிருப்பது தமிழகத்தையே பதைபதைக்க வைத்திருக்கிறது!

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகேயுள்ள குப்பம் கிராமத்தில், செல்வக்குமார் என்பவருக்குச் சொந்தமான ‘அன்னை புளூ மெட்டல்ஸ்’ கல்குவாரி செயல்பட்டுவந்தது. இந்த கல்குவாரியால், அப்பகுதி விவசாயம் பாதிக்கப்படுவதாகப் போராடிவந்திருக்கிறார் சமூக ஆர்வலர் ஜெகநாதன். உரிமக்காலம் முடிவுற்ற பிறகும் விதியை மீறி அந்த குவாரி இயங்கிவந்ததைக் கண்டுபிடித்த ஜெகநாதன், இது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்திருக்கிறார்.

‘குவாரியை எதிர்த்தால் கொலையா?’ - கரூர் கொடூரம்!

இந்த நிலையில்தான், கடந்த சனிக்கிழமை (10-9-2022) காருடையாம்பாளையம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஜெகநாதன் மீது, பொலேரோ பிக்கப் வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். விசாரணையில், இது விபத்தல்ல... கொலை என்று தெரியவர, செல்வக்குமார், டிரைவர் சக்திவேல், ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

இந்த நிலையில், ஜெகநாதனின் மகன் அபிஷேக்கிடம் பேசினோம். “குவாரியில் முறைகேடாகப் பல அடி ஆழத்துக்கு கல்லை வெட்டியெடுத்து, விவசாயத்தை அழிச்சாங்க. அதுக்காகப் போராடிய எங்கப்பாவோட உசுரையே இப்போ எடுத்துட்டாங்க. குவாரி பத்தி புகார் கொடுத்ததுக்காக, கடந்த 2019-ம் ஆண்டே எங்கப்பா மீது கூலிப்படையை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துனாங்க. அப்பவே கடுமையா நடவடிக்கை எடுத்திருந்தா, எங்கப்பா இன்னைக்கு உசிரோட இருந்திருப்பார்” என்று கலங்கினார்.

‘குவாரியை எதிர்த்தால் கொலையா?’ - கரூர் கொடூரம்!

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய ‘சாமானிய மக்கள் நலக்கட்சி’யின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம், “கரூரில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதியில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குவாரி அதிபர்கள் தரும் ‘கட்டிங்’கை வாங்கிக்கொண்டு, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஏற்கெனவே, 2019-ல் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி ஏரி ஆக்கிரமிப்புக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்களான வீரமலையையும், அவரின் மகன் நல்லதம்பியையும் வெட்டிக் கொன்றார்கள். இப்போது, குவாரியை எதிர்த்த ஜெகநாதனுக்கும் அதேநிலை ஏற்பட்டிருக்கிறது” என்றார் ஆதங்கத்துடன்.

செல்வக்குமார்
செல்வக்குமார்
அபிஷேக்
அபிஷேக்
சண்முகம்
சண்முகம்
சுந்தரவதனம்
சுந்தரவதனம்

இது பற்றி, கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசிய போது, ‘‘இப்போதுதான், முதன்முறையாக கரூரில் இதுபோல் கொலை நடந்திருக்கிறது. கொலை என்று தெரிந்தவுடனேயே ஜெகநாதன் குடும்பத்தைப் புகார் தரச்சொல்லி, மூவரைக் கைதுசெய்திருக்கிறோம். விசாரணை தொடர்கிறது” என்றார்.

சாமானியர்கள் மீதான இந்தக் கொடூரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் போலீஸார், அரசு அதிகாரிகளுக்கும் ஆபத்துதான்!