சினிமா
Published:Updated:

“கருவாடு விற்க இன்ஜினீயர் வேலையை உதறினேன்!”

கருவாடு
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாடு

எனது ஐடியாவை என் நண்பன் கிருஷ்ணசாமியிடம் சொன்னேன். `நல்ல விஷயம். செய்யலாம்... நானும் கூட இருக்கிறேன்' என உற்சாகமூட்டினான்

`` `இருக்கிற வேலையை விட்டுட்டு கருவாடு விற்கப் போறியா..?' எனச் சிரித்த மேலாளரிடம், ‘ஆமாம், நான் கருவாடுதான் விற்கப் போகிறேன்' எனச் சொல்லி ராஜினாமா கடிதம் கொடுத்தேன்'' எனச் சிரித்தபடியே அறிமுகம் செய்துகொண்ட கலைக்கதிரவனின் சொந்த ஊர், ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு வாணி என்ற கிராமம். பட்டதாரியான இவரது தொழில், ஆன்லைன் மூலம் வெளிநாடு வரை கருவாட்டு வியாபாரம் செய்வது.

“இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னை, கடலூர் என தனியார் நிறுவனங்களில் வேலை செய்தேன். நல்லது கெட்டது, தீபாவளி, பொங்கல் என எதற்குமே ஊருக்கு வர முடியாது. மாதம் ஐம்பதாயிரம் சம்பாதித்தாலும் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிற மனஅழுத்தம் அதிகமாக இருந்தது. அப்போதே இதையெல்லாம் விட்டுவிட்டு ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.

கலைக்கதிரவன்
கலைக்கதிரவன்

எல்லாரும் ஆண்ட்ராய்டு போன் வந்த பிறகுதான் ஆப், வெப்சைட் எனப் பேசுகிறார்கள். நான் 2012-ல் வெப்சைட் உருவாக்கி, அதில் ராமநாதபுரத்தில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் விளைவிக்கும் பொருள்களை ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தும் முயற்சியை அப்போதே செய்தேன். ஆனால், என்னுடைய முயற்சி பெரிதாக பலன் கொடுக்கவில்லை. சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள், நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் என்னை கருவாடு வாங்கிவரும்படி கூறுவார்கள். இந்த வேலையை விட்டுவிட்டு, பேசாமல் கருவாடு விற்பனை செய்யலாமே எனத் தோன்றியது. அதற்கான முயற்சியும் செய்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

எனது ஐடியாவை என் நண்பன் கிருஷ்ணசாமியிடம் சொன்னேன். `நல்ல விஷயம். செய்யலாம்... நானும் கூட இருக்கிறேன்' என உற்சாகமூட்டினான். மறுநாளே என்னுடைய ராஜினாமா கடிதத்தை என் கம்பெனி பொதுமேலாளரிடம் கொடுத்தேன். அவரோ ‘இதெல்லாம் சக்சஸ் ஆகாது. பேசாம வேலையைப் பார்' எனச் சொல்லிவிட்டு என் ராஜினாமா கடிதத்தை வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பிறகு, இமெயிலில் அதை அனுப்பி வைத்துவிட்டேன். என் குடும்பத்தில் நான் வேலையை விட்டுவிட்டு வந்ததை நினைத்துக் கவலைப்படவில்லை. மாறாக, உற்சாகப்படுத்தினார்கள். அந்த உற்சாகத்தோடு நானும் என் நண்பரும் ஆன்லைன் மூலம் எப்படி கருவாடு விற்பனை செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்தோம்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் `லெமூரியன் ஃபுட்ஸ்' என்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கி, அதில் கருவாட்டுப் பட்டியலை வெளியிட்டோம். அதன் மூலம் கணிசமான ஆர்டர்கள் வரத் தொடங்கின. ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர் இல்லாததால், பயம் வரத் தொடங்கியது. மேலும், என் நண்பருக்கும் குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஐ.டி கம்பெனி வேலைக்குச் சென்றுவிட்டார்.

“கருவாடு விற்க இன்ஜினீயர் வேலையை உதறினேன்!”

2020-ல் ஊரடங்கு போட்டதால், இனி எங்களது தொழில் அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால், ஊரடங்கின்போது மட்டும் மாதம் மூன்று லட்ச ரூபாய் வரை ஆன்லைனில் கருவாடு விற்பனையாகி நல்ல லாபமும் கிடைத்தது. வீட்டிலிருந்தபடியே பாம்பன் பகுதி மீனவர்களிடம் நெத்திலி, வஞ்சரம், கனவா, திருக்கை, பால்சுறா, வெள மீன், சூறை உள்ளிட்ட 31 வகையான மீன்களில் என்னென்ன மீன்கள் எத்தனை கிலோ வேண்டும் என்பதை முன்கூட்டியே பட்டியலைக் கொடுத்துவிடுவோம். அவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துத் திரும்பியவுடன், நேரடியாக பாம்பன் கடலோரப் பகுதிக்குச் சென்று எங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கி வருவோம்.

அவற்றை வீட்டில் சுத்தம் செய்து, எந்தெந்த மீனுக்கு எவ்வளவு மஞ்சள், உப்பு சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து, அதற்குத் தேவையானவற்றைச் சேர்த்துக் காய வைப்போம். அதன்பின் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு ஏற்ப 100 கிராம் முதல் இரண்டு கிலோ வரை கருவாட்டு வாசனை வெளியில் வராத அளவுக்கு காற்றுப்புகாத பெட்டியில் அடைத்து பேக்கிங் செய்துவிடுவோம்.

“கருவாடு விற்க இன்ஜினீயர் வேலையை உதறினேன்!”

மதுரை வேளாண் வணிகப் பாதுகாப்பு மையத்தில், எங்கள் வியாபார முறையைத் தெரிவித்தோம். எங்களுடைய வியாபார நுணுக்கத்தைப் பார்த்து, அந்த மையத்தில் எங்களை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டனர்.‌ இதேபோல் பாபநாசம் மலைப்பகுதியில் வாழும் காணி இன மக்களின் பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த வேண்டும் என எங்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, அவர்களுக்கு என்று தனி வெப்சைட் ஒன்றை உருவாக்கி, மலைவாழ் மக்களின் தேன், அத்திப்பழம், மிளகு உள்ளிட்ட 24 வகையான பொருள்களை ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தினோம். தற்போது வெளி வியாபாரிகளிடம் ஏமாறாமல், நேரடியாக ஆன்லைன் மூலம் அவர்களே தங்கள் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

தற்போது மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான் போன்றவை மூலம் கைகோத்து, ராமநாதபுரம் கருவாட்டை அமெரிக்கா வரை விற்பனை செய்துவருகிறோம். இந்த நிலையில், மதுரை வேளாண் வணிகப் பாதுகாப்பு மையத்தின் மூலம், நபார்டு உதவியுடன் ராமநாதபுரத்தில் விளையும் விவசாயப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்'' என உற்சாகமாகக் கூறினார் கலைக்கதிரவன்.