அலசல்
Published:Updated:

தமிழ் அறிஞர்களையும், அரசையும் ஒதுக்கிவிட்டு தமிழுக்கு விழாவா? -காசி தமிழ்ச் சங்கம சர்ச்சை!

காசி தமிழ்ச் சங்கமம்
பிரீமியம் ஸ்டோரி
News
காசி தமிழ்ச் சங்கமம்

தமிழ்நாட்டில் நடத்த முடியாத ஆர்.எஸ்.எஸ் மாநாட்டை ரயில் டிக்கெட் புக் செய்து காசியில் கொண்டுபோய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது” என்று காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்ததை அடுத்து, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ விழா கடந்த 19-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசு ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி., பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பர்ய நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

உ.பி முதல்வர் யோகி அந்த மேடையில் இருந்ததும், தமிழ்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் மேடையேற்றப்படாதது சர்ச்சையானது. கூடவே, ‘தமிழ்நாடு அரசு மற்றும் தமிழறிஞர்களை ஒதுக்கிவிட்டு தமிழுக்கு விழாவா... இதற்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்று ஒன்று இருப்பதுகூடவா தெரியாமல் போய்விட்டது?!’ என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

தமிழ் அறிஞர்களையும், அரசையும் ஒதுக்கிவிட்டு தமிழுக்கு விழாவா? -காசி தமிழ்ச் சங்கம சர்ச்சை!

இந்த விமர்சனம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “கல்லூரி நிர்வாகம், தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறை, கல்வித்துறை என யாருடைய சம்பந்தமுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவதன் நோக்கம் என்ன... கல்வித்துறை மூலம் அழைத்து செல்லப்படுவதாகச் சொன்னாலும், மாநில அரசை இணைத்துக் கொள்ளாமல் எப்படி இந்த முடிவுகளை எடுக்க முடியும்... நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள். அவர்களைத் தேர்வு செய்பவர்கள் யார்... இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ஏறத்தாழ ரூபாய் 50,000 செலவு ஏற்படும் என்ற நிலையில், 2,500 பேருக்கு ஆன செலவு மத்திய அரசின் நிதியா... கல்வி நிறுவனங்களின் நிதியா... இரண்டு கலாசாரங்களை ஒன்றிணைக்கிறீர்கள் என்றால் இரு மாநில அரசு சம்பந்தப்பட வேண்டாமா... மேடையில் உ.பி முதல்வர் இருக்கிறார். தமிழ்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் எங்கே... மாநில அரசுக்குச் சம்பந்தமே இல்லாமல் ஆளுநர் தனியாகச் செயல்படுகிறார். அவருக்கு உதவ சில அமைப்புகள் இருக்கின்றன என்றால் அது எந்த அமைப்பு... ஆக, இது தமிழுக்கான விழா அல்ல. ஆன்மிகம், கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ் ஊழியராக மாற்றுவதற்கான முயற்சி என்றே தெரிகிறது” என்றார் காட்டமாக.

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, “தமிழ்நாட்டில் நடத்த முடியாத ஆர்.எஸ்.எஸ் மாநாட்டை ரயில் டிக்கெட் புக் செய்து காசியில் கொண்டுபோய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயெல்லாம் பாரம்பர்யம் விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதைக் கையிலெடுத்து அதன் மூலமாக தன் இயக்கத்தை அடையாளப்படுத்த நினைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் தந்திரம். அந்த வகையில் தமிழுக்காக என்று அரிதாரம் பூசிக்கொண்டு இந்த விழாவில் சம்ஸ்கிருதத்தை முன்னிறுத்துகிறார்கள். சம்ஸ்கிருதத்தை `தேவ பாஷை’ என்றும், தமிழை `நீச பாஷை’ என்றும் சொன்னவர்கள் இன்று அரசியலுக்காக, சம்ஸ்கிருதமும் தமிழும் சிவனின் வாயிலிருந்து வந்தன என்கிறார்கள். சிவன் வாயிலிருந்து வந்த மொழி என்று சொல்பவர்கள் அந்தத் தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அந்தஸ்து கொடுக்கவும், தேசிய மொழியாக, வழக்காடு மொழியாக அறிவிக்கவும் ஏன் தயங்குகிறார்கள்... காசிக்கு ஈ.வெ.ராமசாமியாகப் போனவர் அங்கிருந்து வெறுத்து பெரியாராகத்தான் திரும்பினார். காசியிலிருந்த சாதிய ஆதிக்கம், சனாதன தர்மத்தை பாரதியார் தெள்ளத் தெள்ளிவாக எழுதி இருக்கிறார். எனவே, காசியைக் காட்டி தமிழர்களை ஏமாற்றும் பா.ஜ.க-வின் எண்ணம் பலிக்காது” என்கிறார்.

இது தொடர்பாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்ட பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் பேசும்போது, “இங்கு வந்திருப்பவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா... நாங்களும் அக்மார்க் தமிழர்கள்தான். என்னவோ தி.மு.க-வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும்தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல் அறிக்கை கொடுப்பது அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சியை நடத்தித்தான் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. இது மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சி. இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். வெளிப்படையாக, மக்கள் பங்கேற்போடு நடக்கும் இந்த விழாவுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து இதுபோல் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்” என்றார்.

கே.பாலகிருஷ்ணன், தமிழன் பிரசன்னா, வானதி சீனிவாசன், பொ.வேல்சாமி
கே.பாலகிருஷ்ணன், தமிழன் பிரசன்னா, வானதி சீனிவாசன், பொ.வேல்சாமி

ஆய்வாளர் பொ.வேல்சாமியிடம் பேசினோம். “இதுவரை தமிழுக்காகச் செய்தவர்கள் எல்லோருமே அரசியல் லாபத்துக்காகத்தான் செய்திருக்கிறார்கள். அதனால், இன்னொருவரைச் சுட்டிக்காட்டி, `நீ குற்றவாளி’ என்று சொல்வதற்கான தகுதி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. காசி நிகழ்ச்சியில் தமிழ் நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் பரப்பும் வேலையைச் செய்திருக்கிறார்கள். இதைவைத்து பா.ஜ.க தமிழை வளர்க்கும் என்றெல்லாம் நம்ப முடியாது. ஏனென்றால் தி.மு.க-வோ, பா.ஜ.க-வோ எந்த அரசியல்வாதி தமிழை வளர்க்கிறேன் என்று சொன்னாலும் அது அவர்களை வளர்க்கத்தான் என்பதுதான் இந்திய வரலாறு. அகில இந்திய அளவில் சிந்தனை மரபுகள், கலை மரபுகள், அரசியல் மரபுகள், வணிக மரபுகள் எல்லாமே கலந்ததாகத்தான் தமிழ்நாட்டு வரலாறு இருக்கிறது. எனவே, காசியோடு தொடர்பு இருந்ததா என்றால்... இருந்தது. எப்போதும் நெருக்கமாக இருந்ததா... என்றால் இல்லை என்பதே பதில். அதனால் இவர்கள் முன்னெடுப்பில் நல்லது இருந்தால் வரவேற்போம். இல்லையென்றால் விமர்சிப்போம்” என்றார்.