
எமர்ஜென்சி சூழல் ஏற்படுமானால் செயலியில் உள்ள சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டும்.
ஹைதராபாத்தில் பிரியங்கா, காஞ்சிபுரத்தில் ரோஜா ஆகிய இருவருக்கும் நடந்த கொடுமைகள் எளிதில் கடக்க முடியாதவை. இதுபோன்ற அசம்பாவிதங்களின்போது காவலர்களை உதவிக்கு அழைக்க, தமிழ்நாட்டில் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ (KAVALAN SOS) என்ற கைப்பேசிச் செயலி (Mobile App) உள்ளது. இது, தமிழகக் காவல்துறையின் பிரத்யேக குடிமக்கள் பாதுகாப்புச் செயலி.
பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலியை அவசரத் தேவை உள்ளோர் அனைவரும் பயன்படுத்தலாம். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பயன்படுத்தும் வசதி உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்தபின், கைப்பேசி எண் மற்றும் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். மற்றொரு எண் இருந்தால் அதையும் பதிவு செய்யலாம். பாலினம், வீட்டின் முகவரி, விருப்பமிருந்தால் புகைப்படத்தையும் பதிவிடலாம். இவற்றுடன் அவசர கால எண்ணாக உங்களுக்கு மிகவும் நெருக்கமான மூன்று நபர்களின் எண்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
எமர்ஜென்சி சூழல் ஏற்படுமானால் செயலியில் உள்ள சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டும். உங்களுக்குப் பொத்தானை அழுத்தச் சிரமம் எனில் செயலியைத் திறந்து உங்கள் மொபைலை மூன்று முறை வேகமாக அசைத்தாலே போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல், தமிழ்நாடு காவல் அவசர உதவி மையத்துக்குச் செயலியின் வழியாகத் தன்னிச்சையாக அனுப்பப்பட்டுவிடும். இதற்கு உங்கள் கைப்பேசியில் இணைய சேவை மற்றும் ஜிபிஎஸ் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு இணைய சேவை கிடைக்கவில்லையென்றால் செயலியில் இருக்கும் சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் கடைசியாக இருந்த இருப்பிடத்தின் தகவல் காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இவ்வாறு தகவல் கிடைத்த பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் காவலர்கள் உங்களுக்கு உதவ வந்துவிடுவர்.

அவசர காலங்களில் கொஞ்சம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு செயலியைப் பயன்படுத்தினால் போதும்... உங்களின் பாதுகாப்பைக் காவல்துறை நிச்சயம் உறுதி செய்யும்!