பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@ராம்குமார்.

நடிகர் நம்பியார்-100... சங்கம் கொண்டாடுமா?

சங்கத்தில் திரும்பிய பக்கமெல்லாம் நிஜ வில்லன்களாக இருக்கும்போது, அந்த ‘வில்லாதி வில்லன்’ பற்றியெல்லாம் நினைக்க எங்கே நேரமிருக்கப் போகிறது!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

வேலூர் எம்.பி தேர்தலிலும் மோடி எதிர்ப்பு அலை தொடருமா, அல்லது தண்ணீர்ப் பஞ்சம் எதிரொலிக்குமா?

பொதுத்தேர்தலாக இருந்தாலும் இது ‘இடைத்தேர்தல்’தான். எனவே, இடைத்தேர்தலுக்கே உரிய தாரை தப்பட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இன்னபிற ‘விஷயங்கள்’ எல்லாம் களைகட்டவே செய்யும். அதைப் பொறுத்துத்தான் தீர்ப்பு எழுதப்படுமே தவிர, அலையோ... பஞ்சமோ பெரும்பாலும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றே தோன்றுகிறது.

எம்.டி. உமாபார்வதி, சென்னை.

‘வேலூரில் அ.ம.மு.க போட்டி இல்லை’ என டி.டி.வி தினகரன் கூறிவிட்டாரே?

பொருட்டே இல்லை!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.

பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ‘வேலூர் தொகுதியில் தி.மு.க தோல்வி அடையும். அதிலிருந்து அந்தக் கட்சியின் சரிவு ஆரம்பம் ஆகும்’ என்று கூறியுள்ளாரே?

முதலில் தங்கள்மீது பரிவு ஆரம்பமாகுமா என்பதைப் பற்றித்தான் ராஜா யோசிக்கவேண்டும்.

மல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

பி.ஜே.பி ஆட்சி செய்யாத மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்கள் விலை பேசப்படுவது தொடர்கிறது. இது ஜனநாயகத்துக்கு அழகா?

ஒரு காலத்தில் கதர் செய்த அதேவேலையைத்தான் தற்போது காவி செய்துகொண்டிருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று இந்திரா காந்தி போட்டுக் கொடுத்த அதேபாதையில் மோடியும் பயணிக்கிறார். என்ன... முன்பெல்லாம் நினைத்த நொடியில் 356-வது சட்டப்பிரிவை நீட்டி, ஆட்சியையே கலைத்து நேரடியாக ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது காங்கிரஸ். ஒருகட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிட ஆரம்பித்ததால், அந்தப் பிரிவை நீட்டுவது நின்றுபோனது. தற்போது, ஜனநாயகத் தற்கொலை என்கிற புதிய பாதையை ஏற்படுத்தியுள்ள பி.ஜே.பி, கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் இதில் மிக நன்றாகவே தேறிவிட்டது.

பி.சாந்தா, மதுரை-14.

செயல்படாத உயர் அதிகாரிகளுக்கு கல்தா கொடுக்கும் வேலைகளை மோடி அரசு தீவிரப்படுத்தியுள்ளது பற்றி?

நல்ல முயற்சி. கூடவே இன்னொரு முயற்சியையும் முன்னெடுப்பது மிக முக்கியம். அது, மூலையில் முடக்கிப் போடப்பட்டிருக்கும் செயல் வீரர்களான அதிகாரிகளுக்கு உரிய மரியாதையுடன் உரிய இடத்தைக் கொடுப்பதுதான். தமிழகத்தை எடுத்துக்கொண்டாலே... சகாயம், இறையன்பு, உதயச்சந்திரன், வள்ளலார், உமாசங்கர் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. இந்திய அளவில் இப்படி ஓரங்கட்டப் பட்டிருப்பவர்களைத் தேடிப்பிடித்து உசுப்பிவிட்டாலே போதும்... பல திட்டங்களும் வேகமெடுக்கும்; இந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கும்.

கழுகார் பதில்கள்

@ஸ்ரீ.பூவராகவன், காங்கேயம்.

தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடைக்காமல், தனியார் கல்லூரிகள் பலவும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக் கின்றனவாமே?

தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இதையெல்லாம் பெரும்பாலான கல்லூரிகள் நெருக்கடியாகப் பார்ப்பதில்லை. கூடுதல் லாபமாகத்தான் பார்க்கின்றன. ஐந்தாயிரம், ஆறாயிரத்துக்கே ஆசிரியர்கள் கிடைத்து விடுகிறார்கள். அப்படியிருக்கும்போது தகுதி என்று சொல்லி நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று எதற்காக அள்ளிக் கொடுக்க வேண்டும். இதனால், தகுதியான ஆசிரியர்களும்கூட, கிடைக்கும் பத்தாயிரம், பதினைந்தாயிரத்தோடு எதிர்பார்ப்பை முடித்துக்கொள்கிறார்கள். பரிதாபம், மாணவர்கள்தான்.

சித்தை கே.சிவமைந்தன், ஏழாயிரம்பண்ணை.

அரசியல் நாயகர்களைவிட, அரசியல் வில்லன்கள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் தோன்றுகிறார்களே?

அரசியலைப் பொறுத்தவரை வில்லன்கள்தான் நாயகர்களே!

ஜ.ஜானி, போரூர், சென்னை.

ஆவின் பால், மருந்துகள் போன்றவற்றையும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தரக்கூடாது. கண்ணாடி பாட்டில்கள் போல வேற எதையாவது யோசிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதே?

இது, அரிசிப்பானைக்கு பயந்து, கழுநீர்ப்பானையில் விழுந்த கதையாகத்தான் நம்மைச் சிக்கவைக்கும். உண்மையில் கண்ணாடி பாட்டில், மண் பானை போன்றவையும் ஆபத்தானவையே. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அவை மட்காது. ‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானியப் பானை ஓடுகள் புதுச்சேரி அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டன’ என்று பெருமையோடு பகிரப்படும் தகவல்கள் எல்லாம்தான் இதற்குச் சரியான சான்று. அதிலும், தாறுமாறான இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் பாட்டில் களையும் பானைகளையும் இஷ்டம்போல அனுமதித்தால், அடுத்த பத்து ஆண்டுகளிலேயே உடைந்த பாட்டில்கள், பானையோடுகள் மீதுதான் நாம் காலடியே வைக்க முடியும். ‘ஒருதடவை வாங்கிச் சென்ற பாட்டிலை மறுபடி யும் கொண்டுவந்தால்தான் பால், மருந்து, மது என எதுவாக இருந்தாலும் தரப்படும்’ என்பதை வழக்கமாக்க வேண்டும். இதைவிட, ‘வீட்டிலிருந்து கட்டாயம் பாத்திரம் கொண்டு வரவேண்டும்’ என்பதைக் கட்டாயப்படுத்துவது இன்னும் சிறப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@க. சந்திரசேகர், மதுரை.

‘மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்று சிந்திக்காமல், உதயநிதிக்கு இப்போதே மகுடம் சூட்டியது ஏன்?

காத்திருந்து காத்திருந்து, காலங்கள் போய்விட்டன ஸ்டாலினுக்கு. அதேபோல உதயநிதிக்கும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பதறுகிறார்கள். நீங்கள் என்னவென்றால்... மக்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கேட்டு வெறுப்பேற்றுகிறீர்கள். அதுசரி... டாக்டர் ராமதாஸ், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர் களைப் பற்றியெல்லாம் பேசவே மாட்டேன் கிறீர்களே!

@வே.சவரிமுத்து, மேற்கு மாம்பலம்.

‘சரவண பவன்’ ராஜகோபாலுக்கு மூன்றாம் திருமண யோசனையைச் சொன்ன ஜோசியரைத்தானே உண்மையில் சிறைக்கு அனுப்பவேண்டும்?

அப்படிப் பார்த்தால் நம் ஊரில் ஏகப்பட்ட பேர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்குமே?

@உதயகுமார், குறிஞ்சிப்பாடி.

‘வைகோவை எதிர்கொள்ளப் பயந்து, அவர் எம்.பி ஆவதைத் தடுக்க முயல்கிறது பி.ஜே.பி அரசு’ என்கிற குற்றச்சாட்டு?

பி.ஜே.பி ரேஞ்சுக்கு, இந்தக் குற்றச்சாட்டு ரொம்பவே ஓவர்.

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘தி.மு.க நினைத்தால்தான் ஊழலை ஒழிக்கமுடியும்’ என்று கனிமொழி கூறுகிறாரே?

நூற்றுக்குநூறு உண்மை.

@காந்தி, திருச்சி.

‘ராட்சசி’ படம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்மீது குற்றம்சாட்டுகிறதே?

கழுகார் பதில்கள்

அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக் கொண்டே கந்துவட்டி, தேங்காய் விற்பனை, வீட்டு புரோக்கர், மாதாந்தர சீட்டு என்று பற்பல வேலைகளைச் செய்து பணம் பார்க்கும் ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். கல்வி புகட்டும் வேலையில் துளிகூட அக்கறையில்லாமல் பாடவேளைகளிலும்கூட இப்படி ‘பிசினஸ்’ செய்துகொண்டிருப்பது கண்கூடு. இதற்கு மாணவர்களைப் பயன் படுத்துபவர்களும் உண்டு. இதெல்லாம் குற்றப்பட்டியலில் வரும்தானே?

கழுகார் பதில்கள்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு