Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

அன்றே சொன்னார் அண்ணா.... ‘சட்டம் ஓர் இருட்டறை; அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு!’

@அந்திவேளை.

தனியார் பள்ளிகளின் அமைப்பு, ‘ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்’ என்று பதறுகின்றதே?

கல்விக் கட்டணம்தான் அவர்களுக்கான அஸ்திவாரமே. அந்தக் கட்டணம்தான் அவர்களில் பலரையும் ‘கல்வி வள்ளல்கள்’ என்றாக்கி வைத்துள்ளது. அதுவே ஆட்டம் கண்டுகிடக்கும்போது பதறத்தானே செய்வார்கள். அதுசரி, ஒரு சந்தேகம்... கொடுத்தால்தான் ‘வள்ளல்’ என்பார்கள். வாங்கி வாங்கிக் குவிக்கும் இவர்களையும் ‘வள்ளல்’ என்கிறார்கள். பதில் தெரிந்தால், கொஞ்சம் சொல்லுங்களேன்!

@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்தான தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் இருவரின் தீர்ப்பில் ஏகப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நெற்றியடிக் கருத்து, ‘போயஸ் கார்டன் சொத்தை கையகப்படுத்தி, மிகப் பெரிய தொகையை இழப்பீடாக வழங்குவதற்கு பதில் மாநிலத்தின் உட்கட்டமைப்பு பணி, குடிநீர் வசதி, நீர்நிலைகளைச் சுத்தப் படுத்துவது போன்ற வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தலாம். ஏராளமான அத்தியாவசியப் பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கும்போது, `நினைவு இல்லம்’ என்ற பெயரில் பொதுமக்கள் பணம் வீணாக்கப்படக் கூடாது. ஆட்சியாளர்கள், முதலமைச்சர்களாக இருந்த தங்களின் தலைவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற விரும்புவதன் மூலம் தேவையில்லாமல் பொதுமக்களின் பணம் நினைவு இல்லங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது.’

இதை அவர்கள் உத்தரவாகவே போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... எதிர்காலத்தில் இதுபோன்ற ‘நினைவு’ப் பிரச்னைகள் தோன்றாமலும் தடுத்திருக்கும்.

@பேரா.கரு.பாலகிருஷ்ணன், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

`கொரோனா, உலகமயமாக்கலுக்கு எதிரானது’ என்று கருத முடியுமா?

கொரோனாவால் எது எதுவெல்லாம் பாதிப்படைகிறதோ... அவை அத்தனைக்குமே அதன்மீது பழியைப் போடலாம், கவலையே படாதீர்கள். அது என்ன மானநஷ்ட வழக்கா போடப்போகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

@கா.கு.இலக்கியன், செங்குன்றம், சென்னை.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அரசுகள் செய்ததைவிட பொதுச்சமூகம் அதிகமாக உதவிகள் செய்துகொண்டிருக்கிறது என்பது உண்மைதானே?

நூற்றுக்கு நூறு உண்மை. பல்வேறு மத அமைப்புகள், சமூக அமைப்புகள், நண்பர்கள் குழுக்கள், ரசிகர் மன்றங்கள், தன்னார்வல அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிக்கரம் நீட்டிக்கொண்டே உள்ளனர். இவையெல்லாம் நடக்காமல் போயிருந்தால், பீகாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அம்மா இறந்ததுகூடத் தெரியாமல், அவருடைய சடலத்தின் மீதிருந்த போர்வையை அந்தக் குழந்தை விலக்கும் கண்ணீர்க் காட்சி போல ஏகப்பட்ட காட்சிகளைக் காண வேண்டிய நிலை, ‘இந்த தேசத்தின் மனசாட்சி’களுக்கு ஏற்பட்டிருக்கும்!

@லி. மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1.

தமிழகத்தில் ஊரடங்கு பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டது போலல்லவா தெரிகிறது?

என்னது... தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறதா. ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க’ #coronacompassions

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

நீதிமன்றங்களில் தங்கள் தரப்புக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவதில், நியாயங்களைக் காட்டிலும் தி.மு.க வக்கீல்களின் வாதத்திறமைதானே முன்னிலை வகிக்கிறது?

அன்றே சொன்னார் அண்ணா.... ‘சட்டம் ஓர் இருட்டறை; அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு!’

@மு.கல்யாணசுந்தரம், நடூர், கோவை மாவட்டம்.

ஊரடங்கை மீறிப் பிறந்தநாள் கொண்டாடிய தெலங்கானா மாநில ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பற்றிச் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரின் வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதே..?

தெலுங்கு சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் அங்குள்ள அரசியல்வாதிகள் நிஜத்தில் பல மடங்கு அதிக உக்கிரம்தான், எப்போதுமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ஆ.பிரகாஷ், நூம்பல், சென்னை.

தமிழ்நாட்டில் வலுவான கட்டமைப்புள்ள திராவிடக் கட்சிகளை, சமீபகாலமாக கார்ப்பரேட் நிறுவன நபர்கள் வழிநடத்துகிறார்கள். இது கலாசார மாற்றமா, தலைமையின் பலவீனமா அல்லது கொள்கைக் குறைபாடா?

சிலபல கார்ப்பரேட் கம்பெனிகள் சேர்ந்துதான் ஆட்சிக்கு வரும் கட்சியையே பல காலமாகத் தீர்மானிக்கின்றன. இப்போது தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து சொல்வதற்கும்கூட கார்ப்பரேட் நிறுவன வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேசத்தை இரண்டாவது தடவையாக பா.ஜ.க ஆண்டுகொண்டிருப்பதற்கும் கார்ப்பரேட் நிறுவன வழிநடத்துதல்தானே காரணம். ‘காலமாற்றம்’ என்றோ அல்லது ‘காலக்கொடுமை’ என்றோ அவரவர் விருப்பத்துக்கேற்ப எடுத்துக் கொண்டு நகர வேண்டியதுதான்!

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.

ஊரடங்கின்போது விதிகளை மீறி மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு?

அது, அரசாங்கச் சொத்துகளைக் கொள்ளையடித்த மாபெரும் குற்றம். அந்தந்தப் பகுதியின் வருவாய்த்துறை, காவல்துறை, கலால்துறை மற்றும் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள், கட்சிப் பிரதிநிதிகள் என அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நடத்தியிருக்கும் கொடுங்குற்றம். ஆனால், நடவடிக்கை என்று எடுக்க ஆரம்பித்தால், ஆட்சியே ஆட்டம் கண்டுவிடுமே!

@ரவிச்சந்திரன்.வி.

மாற்றுக்கட்சியைச் சேர்ந்த நண்பரைச் சந்தித்து பேசியது அவ்வளவு தவறா?

அவர், ‘மாற்றும் கட்சி’யைச் சேர்ந்தவர் என்பதுதானே பிரச்னை!

@ஆர்.அஜிதா, கம்பம், தேனி மாவட்டம்.

‘அ.தி.மு.க அரசுதான் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்’ என ‘இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்’ இருவரும் கூட்டாக அறிக்கை விடுகிறார்களே?

என்ன, உங்களுக்கு இது எந்த அளவுக்கு உண்மை என்று உடனடியாக தெரிய வேண்டும்... அவ்வளவுதானே. உடனே ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடத்திப் பார்த்துவிட்டால் தெரிந்துவிடப் போகிறது. இதைப் பற்றிய கூட்டறிக்கையை விரைவில் எதிர்பார்ப்போம்!

@சாந்தி மணாளன், கருவூர்.

‘கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்’ என்று சீனா கூறியுள்ளதே?

இத்தனை நாள்களாக ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டு, இப்போது தயார் என்று கூறுவது... சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்கிறது.

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான் குளம், தென்காசி மாவட்டம்.

‘ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப் பட்டிருப்பதை தி.மு.கழக பேச்சாளர் களுக்கான எச்சரிக்கையாகப் பார்க்கிறோம்’ என்று பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் கூறியுள்ளது பற்றி?

நாவடக்கமற்ற அனைத்துக் கட்சிப் பேச்சாளர்களுக்குமான எச்சரிக்கையாக இது அமைவதுதான் சிறப்பு. ஆனால், ‘ஆளுங்கட்சி வாய் என்றால் மணக்கிறது... எதிர்க்கட்சி வாய் என்றால் நாறுகிறது’ என்பது போலத்தானே போலீஸின் நடவடிக்கைகள் அமைகின்றன.

@மு.மதிவாணன், அரூர்.

இந்தியாவில், ‘கொரோனா’, ‘கோவிட்’ என்றெல்லாம் பெயர் சூட்ட ஆரம்பித்துவிட்டார்களே?

‘சானிடைஸர், குவாரன்டைன் என்று இரட்டைக் குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது’ என்ற செய்தியும் படபடக்கிறது. குழந்தைகளைத் தங்களுடைய உடைமைகளாகப் பெற்றோர் பார்ப்பதால் வரும் பிரச்னை இது. எதிர்காலத்தில் இதுபோன்ற பெயர்களால் அந்தக் குழந்தைகள் சுமக்கப்போகும் அவமானங்களைக் கணக்கில்கொள்ளத் தவறுவது மிகவும் ஆபத்தானது. கடவுளின் பெயராக இருந்தாலும்கூட, கேலி கிண்டல்களுக்கு இலக்காகி, மன உளைச்சலுடன் நிற்கும் பலரை தற்போதும் நாம் கண்முன்னே பார்க்கிறோம்தானே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!