அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

எல்லா மாநில அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும்’ என்று பொதுநல வழக்கு ஒன்று சென்ற ஆண்டு போடப்பட்டது.

எஸ்.பூவேந்த அரசு, பொன் நகர், சின்னதாராபுரம்.

ஓட்டமெடுத்து ரேஸில் முந்தவேண்டிய சமயத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவரும் ரொம்ப மெதுவாக நடக்கிறார்களே?

நல்லவேளை... பின்னோக்கி நடக்கவில்லை என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், இராமநாதபுரம், கோவை.

இந்திய ஒற்றுமைப் பயணம் ராகுல் காந்திக்குக் ‘கை’கொடுக்குமா?

உடனிருப்பவர்கள் ‘காலை’ வாராமல் இருந்தால்... கைகொடுக்கலாம்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

இப்போதெல்லாம் பார்க்கும் மனிதர்கள் யாவரும் சுயநலவாதிகளாக, காரியவாதிகளாகவே இருக்கிறார்களே..?

எப்போதுமே மனிதர்கள் அப்படித்தானே இருந்துவருகிறார்கள்... மூவாயிரம், நான்காயிரம் அண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்களை, வரலாற்றை வாசித்தாலும் இதே நிலைதான் இருந்திருக்கிறது. போலவே, எல்லாக் காலங்களிலும் குறைந்த அளவாயினும் நல்ல மனிதர்கள் இருந்துவந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். சரி, கண்ணாடி முன்னால் நாம் யார்?

பெ.பச்சையப்பன், கம்பம்.

விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் உங்கள் பார்வையில் எப்படி இருந்தது?

பக்தர்களின் வீடுகளிலும், ஒருசில பொது இடங்களிலும் பக்தியையும் மகிழ்ச்சியையும் பார்க்க முடிந்தது. ஆனால், பொது இடங்களில் நடந்த பல கொண்டாட்டங்களில் பக்தர்கள் என்ற போர்வையில் குடித்துவிட்டு ஆடியவர்களையும் பார்க்க முடிந்தது. ஊர்வலம் செல்வதிலும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கும் விதத்திலும் பாதுகாப்பையும், சூழலியல் அக்கறையையும் அடுத்த முறையாவது அரசும் மக்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் அரசியல்வாதிகளா, சினிமா கலைஞர்களா?

யாருடைய எதிர்காலத்தைப் பற்றி?

சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி.

சமீபத்திய அரசியல் வாய்க்கொழுப்பு?

ஜார்க்கண்டில் அரசியல் களேபரங்கள் அனல் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில், டெல்லிக்குச் சென்று திரும்பினார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன். ஜார்க்கண்டில், பசந்த் சோரன் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தும்கா தொகுதியில், கடந்த 10 நாள்களில் இரண்டு மைனர் சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தொகுதியே பரபரப்பாக இருக்க, ‘இந்த நேரத்தில் டெல்லி விசிட் எதற்கு?’ என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் “சமீபத்திய டெல்லி விசிட் எதற்காக?” என்று நிருபர்கள் பசந்த் சோரனிடம் கேட்டனர். அதற்கு, “உள்ளாடைகள் வாங்கத்தான் டெல்லிக்குச் சென்றேன். டெல்லியில்தான் வழக்கமாக நான் உள்ளாடைகள் வாங்குவேன்” என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் வாய்க் கொழுப்புதானே?

கழுகார் பதில்கள்

மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ஒருபக்கம் “தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் எங்களுடன் பேசிவருகின்றனர்” என்று எடப்பாடி பழனிசாமியும், இன்னொரு பக்கம் “அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 50 பேர் எங்களுடன் பேசிவருகின்றனர்” என்று ஆர்.எஸ்.பாரதியும் கூறிவருகிறார்களே?

இது பா.ஜ.க-வின் ஃபார்முலாவாச்சே... இதை ஏன் இவர்கள் காப்பியடிக்கிறார்கள்?!

திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

“பதவியில் இருந்தபோது ஓ.பி.எஸ் வசூல் ராஜாவாகத் திகழ்ந்தார்” என்று ஜெயக்குமார் சொல்வது, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஊழல் நடந்தது என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்தானே?

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்கிறது பழமொழி நானூறு!

பொன்விழி, அன்னூர்.

‘பிரதமரின் புகைப்படத்தை இங்கு வைக்க வேண்டும்’ என்று பல இடங்களில் பா.ஜ.க-வினர் பிரச்னை செய்துவருகிறார்கள். சட்டப்படி பிரதமர் படம் எங்கெங்கு இருக்க வேண்டும்?

‘எல்லா மாநில அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும்’ என்று பொதுநல வழக்கு ஒன்று சென்ற ஆண்டு போடப்பட்டது. விசாரணையின்போது, “வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லோரது புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என்று அரசு அறிவிக்கை எதுவுமில்லை. ஒவ்வோர் அரசு அலுவலகமும் சட்டப்படி இதில் முடிவெடுத்துக்கொள்ளலாம்” என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு கூறியது. ஆகவே, அது அந்தந்த அரசு அலுவலகங்களின் முடிவுதான்.

எஸ்.இராமதாஸ், வாணரப்பேட்டை, புதுச்சேரி.

“கேரளாவுக்கு எதிர்காலம் ஒன்று இருக்குமானால் அது பா.ஜ.க-தான்” என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி?

ஓ... தேவாவே சொல்லிட்டாரா?

கழுகார் பதில்கள்

சுப்ரமணியன், மொரப்பூர்.

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவை ஒட்டி, தன் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்திருக்கிறாரே சசிகலா?

சில நகைச்சுவைகள் தீவிரமான தொனியில் இருக்கும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!