
காதல், தேர்தல் இரண்டுக்குமே ‘வாக்கு’ ரொம்ப முக்கியம். இரண்டிலுமே தோற்ற பிறகு வருத்தப்படக் கூடாது.
கிருஷ்ணா, சென்னை-17.
சசிகலா, குஷ்பு, பிரேமலதா இவர்களில் யாருக்கு நல்ல வாய்ஸ் இருக்கிறது?
சசிகலாவுக்கு கம்மிதான். குஷ்புவுக்கும் பிரேமலதாவுக்கும் நல்ல போட்டி இருக்கும். ஏனென்றால், இருவருக்குமே நல்ல கணீரென்ற குரல். நீங்கள் அந்த ‘வாய்ஸை’ப் பற்றித்தானே கேட்டீர்கள்?
வண்ணை கணேசன், சென்னை.

அரசியலில் ஒரு பிரச்னை தீர்வதற்குள் மற்றொரு பிரச்னை தலைதூக்கிவிடுகிறதே?
அதுதான் அரசியல்; அதற்காகத்தான் அரசியல்; அதனால்தான் அரசியல். பிரச்னைகள் இல்லாமல் அரசியல் இல்லை. அரசியல் இயந்திரத்தின் அச்சே பிரச்னைகளில்தான் சுழல்கிறது!
எச்.மோகன், மன்னார்குடி.
பல்டி - அந்தர்பல்டி இரண்டுக்கும் அரசியல்ரீதியாக ஓர் உதாரணம்?
`எட்டுவழிச் சாலையை தி.மு.க எதிர்க்கவில்லை’ என்பது பல்ட்டி. `ஒருபோதும் தி.மு.க எட்டுவழிச் சாலையை எதிர்த்ததே இல்லை’ என்பது அந்தர் பல்ட்டி!
கோடந்தூர் மனோகரன், சின்னதாராபுரம்.
காதல் தோல்வி, தேர்தல் தோல்வி... ஒப்பிடுக?
காதல், தேர்தல் இரண்டுக்குமே ‘வாக்கு’ ரொம்ப முக்கியம். இரண்டிலுமே தோற்ற பிறகு வருத்தப்படக் கூடாது. ஏனென்றால், அடுத்தடுத்து ஜெயிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன!
‘டாவு கட்டி தோத்துப்போனவன் எல்லாம் கண் மூடிட்டா
ஓட்டுப் போட ஆளே இல்லையடா’ என்கிறார் கவிஞர் வைரமுத்து.
வண்ணை கணேசன், சென்னை.
`மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்ந்தால், ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்’ எனும் உயர் நீதிமன்ற எச்சரிக்கை?
வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த அளவுக்கு இது நடைமுறைக்கு வரும் என்பதுதான் கேள்விக்குறி. இந்த ஆண்டின் தொடக்க நிலவரப்படி, இந்தியாவில் 58,098 பேர் இந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்களில் 43,000 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொடூரப் பணியின்போது இறக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இது ரொம்பவே வருத்தத்துக்குரிய விஷயம்.
ஆதிரை வசந்த், காரைக்கால்.
ஆன்லைன் சூதாட்டம், போதைப்பொருள்கள், மது இவை உடனே நாட்டில் ஒழிக்கப்படுமா?
வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இவற்றின் பின்னிருந்து விளையாடும் கைகள் அதிகாரத்தின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பவை.
பிரேம், தாம்பரம்.
‘பொன்னியின் செல்வன்’ சர்ச்சை?
சாம்பல் பூத்திருந்த ராஜராஜ சோழன் பிரச்னையை மீண்டும் ஊதிப் பற்றவைத்திருக்கிறது.
கண்ணன், மதுரை.
நடிகர் போடும் வேஷம்... அரசியல்வாதி போடும் வேஷம்... என்ன வேறுபாடு?
ஒருவரின் வேஷம் இரண்டரை மணி நேரம் ஏமாற்றும். மற்றொருவரின் வேஷம் ஐந்து ஆண்டுகள் ஏமாற்றும்!
தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்ற பழமொழிக்கு சமீபத்திய உதாரணம்?
வேறு யார்... நம் பிரதமர் மோடிதான்!
நடராஜ், நாகப்பட்டினம்.
பா.ஜ.க-வுக்கு இன்னும் அண்ணாமலை தேவைப்படுகிறாரா?
ஆனால், அண்ணாமலைக்கு பா.ஜ.க தேவைப்படுகிறதே!

திலகர் ஈஸ்வரன், சேலம்.
தமிழகத்தில் மீண்டும் ‘காமராஜர் ஆட்சி வரும்’ என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகிறாரே?
ஏன், ராமதாஸர் ஆட்சிக் கனவு என்னாச்சு?

ஆனந்த், நெல்லை.
பெரும்பாலும், டைரியின் முதல் பக்கத்தில் ஏன் கவிதையை எழுதிவைக்கிறார்கள்?
வீட்டு வாசலில் ஏன் அழகான கோலம் போடுகிறோம், அதே காரணம்தான். தொடக்கம் அழகாக இருக்க வேண்டுமல்லவா... மேலும், நாம் முக்கியமாகக் கருதி குறித்துவைக்கும் வரிகள் நம் இயல்பைப் பிரதிபலிப்பவை.
‘விடுதலைமீது நான் கொண்டுள்ள வேட்கைக் கனவால்தான் பூமி சுழன்றுகொண்டிருக்கிறது. சிறைக்கூடத்திலும்கூட விடுதலையாயிருந்த காதலன் மஜ்னு போன்றவன் நான்!’
இந்த உருதுக் கவிதையை, தனது சிறை டைரியின் முதல் பக்கத்தில் எழுதிவைத்திருந்தவர் பகத் சிங்!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!