
தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகாவுக்குப் புலம்பெயர்ந்த முரசு ஒக்கலிகா என்பவரின் வழித்தோன்றல்தான் ‘ஹிரியா கெம்பே கௌடா’.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், அனுதினமும் அங்கே அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஹிஜாப் சர்ச்சையில் தொடங்கி, பள்ளி வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசத் திட்டமிடப்பட்டது வரை பா.ஜ.க-வினரின் ஒவ்வொரு நகர்வும் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த வாரம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், கெம்பே கௌடாவுக்குச் சிலை திறக்கப்பட்டது. இது தேர்தலுக்கான பா.ஜ.க-வின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில், 28 தொகுதிகளுக்கு மேல், ஒக்கலிகா சமூகத்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் 15 சதவிகிதம் பேர் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த கெம்பே கௌடாவுக்கு பிரமாண்ட சிலை நிறுவியிருக்கிறது பா.ஜ.க என அரசியல் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
யார் கெம்பே கௌடா?!
தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகாவுக்குப் புலம்பெயர்ந்த முரசு ஒக்கலிகா என்பவரின் வழித்தோன்றல்தான் ‘ஹிரியா கெம்பே கௌடா’. இவர் விஜயநகரப் பேரரசின் கீழ் கர்நாடக மாநிலம், ஏலஹங்கா பகுதியை ஆட்சிசெய்தவர். ‘ஃபவுண்டர் ஆஃப் பெங்களூரு’ என்றழைக்கப்படும் இவர் பெங்களூரு பகுதியில் கோட்டை, கோயில்கள், நீராதாரங்களை அமைத்ததுடன், பெங்களூரை வணிகத்தலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர். இவருக்குத் தற்போது, 108 அடி உயரத்தில் 120 டன் எஃகு, 98 டன் வெண்கலக் கலவையில் மொத்தம் 218 டன் எடையில் ‘செழுமையின் அடையாளம்’ எனச் சிலை திறந்து வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
முன்பு, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 2013-ல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு ‘கெம்பே கௌடா’ பெயரைச் சூட்டியது. மேலும் 2017-ல் கெம்பே கௌடா ஜயந்தி, அவர் பேரில் விருதுகளை அறிவித்தது.
2018-ல் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க., கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாரைப் பண மோசடி வழக்கில் கைதுசெய்தது. இதனால், ‘தங்களது சமூகத்தின் மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே டார்கெட் செய்கிறது’ என்று பா.ஜ.க-வுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சரிவிலிருந்து மீளவும், ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளைக் கவரவும் மீண்டும் காங்கிரஸ் வழியிலே மோடி ‘கெம்பே கௌடா’வை வைத்து அரசியல் செய்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
குஜராத்தில் ‘படேல்’ சிலை, கர்நாடகாவில் ‘கௌடா’ சிலை... தேர்தல் கலக்கத்தில் பா.ஜ.க நிலை!