சமூகம்
அலசல்
Published:Updated:

விழிபிதுங்கவைக்கும் விழிஞ்ஞம் அதானி துறைமுகம்! - மோடியாக மாறுகிறாரா பினராயி விஜயன்..?

விழிஞ்ஞம் அதானி வர்த்தகத் துறைமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
விழிஞ்ஞம் அதானி வர்த்தகத் துறைமுகம்

முடங்கியுள்ள துறைமுகப் பணியை மீண்டும் தொடங்க மத்திய படையின் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அதானி குழுமம் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது

விழிஞ்ஞம் அதானி வர்த்தகத் துறைமுகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவரும் நிலையில், இந்தத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி 130 நாள்களுக்கும் மேலாக மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், ‘துறைமுகத்தின் பாதுகாப்புக்கு மத்தியப்படை வருவதற்குத் தடையில்லை’ என்று கேரள அரசு கிரீன் சிக்னல் கொடுத்திருப்பது போராட்டக்காரர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

விழிபிதுங்கவைக்கும் விழிஞ்ஞம் அதானி துறைமுகம்! - மோடியாக மாறுகிறாரா பினராயி விஜயன்..?
விழிபிதுங்கவைக்கும் விழிஞ்ஞம் அதானி துறைமுகம்! - மோடியாக மாறுகிறாரா பினராயி விஜயன்..?

கேரள மீனவர்களின் போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக லத்தீன் கத்தோலிக்க சபை பிஷப் தாமஸ் ஜே.நெட்டோ, பாதிரியார்கள் உள்ளிட்டவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அந்த வழக்கு சம்பந்தமாக செல்டன் என்பவரை விழிஞ்ஞம் போலீஸார் கைதுசெய்தனர். அதைக் கண்டித்து கடந்த மாதம் 27-ம் தேதி விழிஞ்ஞம் காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது மேலும் நான்கு பேரை போலீஸ் கைதுசெய்தது. இதையடுத்து வெடித்த கலவரத்தில் காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதலில் அதிகாரிகள் உட்பட 64 போலீஸார் காயமடைந்தனர். ரூ.84 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக சுமார் 3,000 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இது குறித்து, “துப்பாக்கிச்சூடு நடத்தும் நிலையை எதிர்பார்த்தே போராட்டம் நடத்தப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கானோர் இறந்திருப்பார்கள். ஆனால், போலீஸ் இதைச் சிறப்பாகக் கையாண்டது” என்று கேரள அரசு கூறியது. மேலும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினருடன், துறைமுக எதிர்ப்பாளர் களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் மாநில உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை ‘தேசத்துரோகச் செயல்’ என கேரள மீன்வளத்துறை அமைச்சர் அப்துல் ரகுமான் கருத்து தெரிவிக்க, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் தியோடோசியஸ் டி’க்ரூஸ், “அமைச்சர் அப்துல் ரகுமான்தான் தேசத்துரோகி. அவரது பெயரிலேயே அது இருக்கிறது” என்று விமர்சித்தார். மதரீதியிலான இந்த விமர்சனம் பெரிதாக வெடிக்க, பாதிரியார் தியோடோசியஸ் டி’க்ரூஸ் மன்னிப்புக் கேட்டார். ஆனால் அவரது மன்னிப்பை அமைச்சர் அப்துல் ரகுமான் ஏற்கவில்லை.

அப்துல் ரகுமான் - டி’க்ரூஸ்
அப்துல் ரகுமான் - டி’க்ரூஸ்

இந்த நிலையில், முடங்கியுள்ள துறைமுகப் பணியை மீண்டும் தொடங்க மத்திய படையின் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அதானி குழுமம் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. உயர் நீதிமன்றமும் இதற்கென மத்திய அரசின் கருத்தைக் கேட்டிருக்கும் நிலையில், ‘சி.ஐ.எஸ்.எஃப் மத்திய படை வருவதற்குத் தடையில்லை’ என கேரள சி.பி.எம் அரசு தெரிவித்திருக்கிறது. இதனால், போராட்டத்தை ஒடுக்க பினராயி விஜயன், மோடியாக முயல்கிறார் என்றும், ஸ்டெர்லைட் படுகொலைபோல விழிஞ்ஞம் போராட்டம் மாறிவிடக் கூடாது என அச்சம் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.