மனைவியை வைத்துப் பொறி... 68 வயது முதியவருக்குக் குறி... கேரள போலீஸிடம் சிக்கிய ஊர்சுற்றித் தம்பதி

“என் கணவரால் நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அவர் நம் உறவுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார்” என்று பேசி முதியவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார் ரஷிதா.
சொகுசு வாழ்க்கை வாழ, மனைவியைப் பொறியாக வைத்து 68 வயது முதியவரை வலையில் சிக்கவைத்து, பணம் பறித்த ஊர்சுற்றி ஜோடி கேரளா போலீஸில் சிக்கியிருக்கிறது!
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஷிதா. இவருக்கும், திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் பகுதியைச் சேர்ந்த நிஷாத் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. திருணமாகி சிறிது காலம் திருச்சூரில் இருந்தவர்கள், பின்னர் ஆலுவா பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.

சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இருவருக்கும் ஆசை. அதற்காக ‘மலாய்மல்லூஸ்’ (MalayMallus) என்ற யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் ரஷிதா சமையல், அழகுக் குறிப்பு வீடியோக்களை வெளியிட்டுவந்தார். பிறகு கணவருடன் இணைந்து பயணிக்கும் V-Logger வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை V-Logger புகழ் தம்பதியாகவே அடையாளப்படுத்திவந்தனர். ஆனால், திரைமறைவில் இவர்கள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மலப்புரம் மாவட்டம், கல்பங்கசேரி பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒரு தொழிலதிபர். ரஷிதா தன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து, முதியவருக்கு நட்பு அழைப்பு விடுத்திருக்கிறார். சில நாள்களிலேயே மெசெஞ்சரில் சாட்டிங் செய்யும் அளவுக்கு இருவரிடையே நட்பு வளர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாகவே, முதியவரைத் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார் ரஷிதா. “என் கணவரால் நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அவர் நம் உறவுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார்” என்று பேசி முதியவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார் ரஷிதா. நிஷாத்தின் கண் முன்பே இருவரும் உறவை வளர்த்து வந்திருக்கின்றனர்.

அதன் பிறகுதான் ரஷிதா தன் வேலையைத் தொடங்கியிருக்கிறார். “என் கணவர் ஹோட்டல் பிசினஸ் தொடங்க வேண்டும்” என முதியவரிடம் பணம் கேட்டிருக்கிறார். அதை நம்பி முதியவரும் பணம் கொடுத்துவந்திருக்கிறார். அந்தப் பணத்தில் ஆலுவா பகுதியில் அப்பார்ட்மென்ட் வீடு, எஸ்.யூ.வி கார், ஐபோன் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். மேலும் அப்பார்ட்மென்ட்டில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளனர். பின்னர் திட்டமிட்டபடி முதியவரை அப்பார்ட்மென்ட்டுக்கு வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்திருக்கிறார் ரஷிதா. இந்தத் தனிமையை ரகசிய கேமராக்கள் மூலம், வீடியோவாகப் படம் பிடித்திருக்கிறார் நிஷாத்.
ஒரு கட்டத்தில் முதியவர் பணம் தருவதை நிறுத்தவே... ‘தனிமையில் இருக்கும் பலான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம்’ என்று மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினர் இந்தத் தம்பதி. பயந்துபோன முதியவர், அவர்கள் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்கும் ஏ.டி.எம் மெஷினாகவே மாறிப்போனார். மறுபக்கம் இந்தப் பணத்தில் ஊட்டி, வயநாடு, மைசூர், கோவா, லடாக், காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கும் காரிலேயே சுற்றித் திரிந்துள்ளனர் இந்தத் தம்பதியர். முதியவரோ சுற்றும் முற்றும் கடன் வாங்கி, சிக்கிச் சீரழிந்த பிறகே இதிலிருந்து மீள்வது பற்றிச் சிந்தித்திருக்கிறார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் ரஷிதா – நிஷாத் தம்பதியைக் கைதுசெய்துள்ளனர் போலீஸார். அண்மையில்தான் இந்தத் தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். எனவே, நிஷாத்தை மட்டும் சிறையில் அடைத்து, ரஷிதாவை ஜாமீனில் விட்டிருக்கிறது போலீஸ்.

இது குறித்து கேரளா போலீஸ் கூறுகையில், “முதியவரை மிரட்டி, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.23 லட்சம் வாங்கியுள்ளனர். அவரின் நடவடிக்கையில் சற்று மாற்றம் ஏற்பட்டதால், அப்பார்ட்மென்ட்டிலிருந்து மாறி திருச்சூரில் ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். `V-Logger தம்பதி’ என்பது ஊரை ஏமாற்றும் செயல். உண்மையில் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தெல்லாம் இவர்களுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகு எந்த வீடியோவும் வெளியிடவில்லை. எனவே, பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதைத்தான் இவர்கள் முழுநேர வேலையாகப் பார்த்துவந்திருக்கின்றனர். இவர்களால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய, இருவரின் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்துவருகிறோம்” என்றனர்.
ரஷிதா, ஃபேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அந்த வகையில் பலருடன் சாட்டிங் செய்ததற்கான ஆவணங்களையும் போலீஸார் திரட்டியுள்ளனர். அவற்றில், சில கரைவேட்டிகளும்கூட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது. இதனால் விரைவில் இந்த வழக்கு கேரளா தாண்டியும் பரபரக்கும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!