
விசாரணையில், பல ஆண்டுகளாக இரு மாநில சோதனைச் சாவடிகளைக் கடந்து, நம் எல்லைக்குள்ளும், வனப்பகுதியிலும் கேரளாவிலிருந்து வெளியேறும் மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுவருவதும் தெரியவந்தது
‘திடக்கழிவு மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் இதுவரையிலும் அபராதம் விதிக்கப்படாத ஒரே மாநிலம்’ எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறது கேரளா. இதையொட்டி கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். ஆனால், “தொடர்ந்து திடக்கழிவு மட்டுமின்றி ஆபத்தான மருத்துவக்கழிவுகளையும், மின்னணுக் கழிவுகளையும் தமிழ்நாட்டில் கொட்டிவருகிறது கேரளா. கடந்த 2021-ம் ஆண்டு, மருத்துவக்கழிவுகளை, தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் கொட்டியதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னகப் பிரிவுகூட வழக்கு பதிந்தது” என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்த முரண்பாடு தொடர்பாக விசாரித்தோம்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மருத்துவக்கழிவுகளைக் கொட்டியதாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில், பொள்ளாச்சி, நீலகிரி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் கழிவுகளைக் கொட்டியதாக காவல்துறை, பசுமை தீர்ப்பாயம் என பல்வேறு தரப்பிலிருந்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ”

எல்லையில் புதைக்கப்படும் மருத்துவக்கழிவுகள்!
கடந்த 2021-ம் ஆண்டு, பொள்ளாச்சி ஆனைமலை அருகே கேரளாவைச் சேர்ந்த மூன்று லாரிகள் அனுமதியின்றி தனியார் நிலத்தில் மருத்துவக்கழிவுகளைக் குழி தோண்டிப் புதைக்க முற்பட்டபோது, பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டன. விசாரணையில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதே பகுதியில் நிலத்தில் குழி தோண்டி கேரளாவின் மருத்துவக் கழிவுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் புதைக்கப்பட்டு வந்ததும் அம்பலமானது. இந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
விசாரணையில், பல ஆண்டுகளாக இரு மாநில சோதனைச் சாவடிகளைக் கடந்து, நம் எல்லைக்குள்ளும், வனப்பகுதியிலும் கேரளாவிலிருந்து வெளியேறும் மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுவருவதும் தெரியவந்தது. இதனால், “இரு மாநில அதிகாரிகளும் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு, கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றும், ``கேரளாவின் மருத்துவ, இறைச்சிக்கழிவுகள் முறையாக அழிக்கப்படுகின்றனவா என்பது குறித்து அந்த மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கேரள அரசின் விளக்கம்!
இது தொடர்பாக பதிலளித்த கேரள அரசு, மருத்துவக்கழிவுகளைக் கையாள கேரளாவில் பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய இரண்டு இடங்களில் கழிவு மேலாண்மை மையங்களை அமைத்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த மையங்களின் மூலம் நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் 61 டன் மருத்துவக்கழிவுகளில், 59 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள சுமார் 2.4 டன் மருத்துவக்கழிவுகள் பிற வழிகளில் அகற்றப்பட்டன எனவும் கேரள அரசு தெரிவித்தது. இதனால், கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஆனைமலைப் பகுதியில் கேரளாவின் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாகப் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்த குற்றச்சாட்டைக் கேரள அரசு திட்டவட்டமாக மறுத்தது. மேலும், மாநிலத்தின் மருத்துவக்கழிவுகள் அகற்றப்படுவதில் முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதியளித்தது.
தீர்ப்பாயத்தின் குற்றச்சாட்டுக்கு கேரள அரசு அளித்த விளக்கமும், பதியப்பட்ட வழக்கின் விவரங்களும் முரண்படுகின்றன. இது தொடர்பாக ஆனைமலை முன்னாள் தாசில்தார் வெங்கடாசலம் நம்மிடம், “கேரளாவைச் சேர்ந்தவர்களால் ஒப்பந்தம் போடப்பட்டு, ஆனைமலைப் பகுதிகளில் சுமார் 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு, கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எங்களிடம் பிடிபட்டது கேரள மாநில பதிவு எண்களைக்கொண்ட லாரிகள்தான். கழிவுகளைக் கொட்டியது வெளியே தெரியாமலிருக்க, குழி தோண்டி அவற்றைப் புதைத்திருந்தார்கள். ஆனால், பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்த நிலத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது” என்றார்.

கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடு வாரியம்
கோவையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ‘ஓசை’ காளிதாஸிடம் பேசினோம். “மருத்துவக்கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகளை உணர்ந்தே, கடந்த 2002-ம் ஆண்டு ‘மருத்துவக்கழிவு மேலாண்மைச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன்படி மருத்துவக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும். ஆனால், சட்டவிரோதமாக கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகப் பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்பட்டுவருகின்றன. இதைக் கண்காணிக்கவேண்டிய மாசு கட்டுப்பாடு வாரியம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. குறிப்பாக, கேரளாவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளிலேயே இந்த மருத்துவக் கழிவுகள் ஏற்றி அனுப்பப்படுகின்றன. கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை என எல்லையோர மாவட்டங்கள் அனைத்திலும் இந்தப் பிரச்னை தொடர்கதையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குப்பையைக் கொட்டுவதில் கேரள அரசு நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், அவற்றைத் தடுக்கிற, கண்காணிக்கிற தன் பொறுப்பிலிருந்து அது தவறிவிட்டது” என்றார். கேரளாவின் மருத்துவக்கழிவுகள் தங்கள் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன என்று கர்நாடகாவிலும் புகார்கள் குவிகின்றன.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசும்போது, “கேரள அரசு மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதிசெய்திருக்கிறது. இதற்கு கேரள அரசின் மீது பழி போடுவது சரியானது அல்ல. இது பசுமை தீர்ப்பாயத்தின் பாராட்டைப் பொறுக்க முடியாமல், குறிப்பிட்ட சிலர் பரப்பும் வதந்தி” என்றார்.
கேரள அரசுமீது தவறு இருக்கிறதோ இல்லையோ, நம் எல்லையையும், சோதனைச் சாவடிகளையும் நாம் எவ்வளவு மோசமாகக் கண்காணிக்கிறோம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது!