சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அனுபமா என்னும் போராளி!

அனுபமா - அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபமா - அஜித்

அன்றைக்குப் பிரசவித்த அதே உணர்வு இப்போ எனக்கு ஏற்பட்டிருக்கு. பிறந்த பிறகு கொஞ்சநேரம்தான் நான் அவனோட இருந்தேன்

அம்மா என்றால் அன்பு என்பார்கள்; ஆனால், “அம்மா என்றால் அனுபமா” எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைக்காகப் பாசப் போராட்டம் நடத்தி உலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் கேரளத்தின் அனுபமா.

திருவனந்தபுரம் பேரூர்க்கடையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்த அனுபமாவுக்கு சிறுவயதிலேயே இடதுசாரி சிந்தனை மேலோங்கி இருந்தது. அவரின் தந்தை ஜெயச்சந்திரன் சி.பி.எம் கட்சியின் பேரூர்கடை ஏரியா கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். அனுபமா படிக்கும் காலத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவராக இருந்து உரிமைக்காகப் போராடும் குணத்தை வளர்த்துக்கொண்டார். அவருக்கும் அதே மாணவர் சங்கத்தின் பேரூர்கடை மண்டலத் தலைவரான அஜித்துக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது. அஜித்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தாலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இதனால் திருமணத்துக்கு முன்பே அஜித்துடன் நெருங்கிப் பழகியதால் அனுபமா கருவுற்றார். 2020 அக்டோபர் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அனுபமா. அவர் வீட்டில் இளைய மகள் என்பதால் அக்காவின் திருமணம் முடிந்த பிறகு குழந்தையைத் தருகிறேன் எனக் கூறி, பிறந்த மூன்றாம் நாள் பிள்ளையைப் பிரித்திருக்கின்றனர் அவரின் பெற்றோர். சிசேரியன் காரணமாக உடலளவில் சோர்ந்துபோயிருந்த அனுபமாவுக்கு துணைக்கும் யாரும் இல்லாததால் அப்பாவை எதிர்த்துப் போராட சக்தியற்றுப்போனார்.

அனுபமா என்னும் போராளி!

‘அக்காவின் திருமணம் முடிந்தபிறகு குழந்தையைத் தந்துவிடுவார்கள்’ என்ற நம்பிக்கையில் நரக வேதனையுடன் நாள்களைக் கடத்தினார். அக்காவின் திருமணமும் நடந்து முடிந்தது. அனுபமா தன் குழந்தையைக் கேட்டார். பெற்றோர் ஏதேதோ காரணங்களைச் சொல்லி மழுப்பினர். அதற்குள் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, குழந்தையின் தந்தை அஜித்துடன் இணைந்து குழந்தையை மீட்க தீவிரமாக முயன்றார். பேரூர்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெற்றோரை அழைத்து விசாரித்தது போலீஸ். தந்தை ஜெயச்சந்திரன் ஒரு பேப்பரைக் காட்டி, “அனுபமாவின் ஒப்புதலோடு குழந்தை ஆந்திரத் தம்பதிக்குத் தத்துக்கொடுக்கப்பட்டுவிட்டது” என அதிர்ச்சித் தகவலைக் கூறினார். “சொத்து தொடர்பான பேப்பர் எனக் கூறி ஏமாற்றிக் கையெழுத்து வாங்கி, குழந்தையைத் தத்துக்கொடுத்துவிட்டார்கள்” என வெடித்தார் அனுபமா. ஆனால் போலீஸ் அந்த கேஸ் ஃபைலையே மூடிவிட்டது. நீதி கேட்டு உள்ளூர் சி.பி.எம் அலுவலகம் முதல் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர் வரை சென்று தலைவர்களைச் சந்தித்து மனு கொடுத்தார். உள்ளூர் அதிகாரிகள் முதல் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம் வரை தட்டிப்பார்த்தார், விடிவு கிடைக்கவில்லை. விஷயத்தை மீடியாமூலம் வெளிப்படுத்தினார். தலைமைச் செயலகம், குழந்தைகள் நலக்குழு அலுவலகம் எனத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தார். அதிகாரிகள் பதறினர், அரசு பணிந்தது. போலீஸ் மூடிய ஃபைலை மீண்டும் திறந்தது. குழந்தையின் முதல் பிறந்தநாளான அக்டோபர் 19-ம் தேதி அனுபமாவின் பெற்றோர், சகோதரி, தந்தையின் நண்பர்கள் என 6 பேர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனாலும், ஆவேசம் குறையாத அனுபமா அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். குழந்தைகள் நலக்குழு விரைந்து செயல்பட்டு நவம்பர் 21-ம் தேதி ஆந்திரத் தம்பதிகளிடமிருந்து குழந்தையைத் திருவனந்தபுரத்துக்கு அழைத்துவந்தது. 22-ம் தேதி குழந்தை, அனுபமா மற்றும் அஜித்தின் மாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. நவம்பர் 23-ம் தேதி அது அனுபமா - அஜித் தம்பதிகளின் குழந்தை என உறுதியானது. நவம்பர் 24-ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அனுபமாவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. போராட்டப் பந்தலில் இருந்து குழந்தையுடன் வீடு திரும்பிய அனுபமா, “என் குழந்தையை சட்டவிரோதமாகத் தத்துக்கொடுத்த அனைவருக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும். குழந்தையுடன் தெருவோரத்தில் போராடுவதில் சிரமம் என்பதால், வேறு வடிவத்தில் போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கும்” என்றார்.

அனுபமா என்னும் போராளி!

தன் குழந்தையை ஒரு வருடப் போராட்டத்துக்குப் பிறகு மீட்ட அனுபமாவிடம் பேசினேன், “அன்றைக்குப் பிரசவித்த அதே உணர்வு இப்போ எனக்கு ஏற்பட்டிருக்கு. பிறந்த பிறகு கொஞ்சநேரம்தான் நான் அவனோட இருந்தேன். டி.என்.ஏ டெஸ்ட் பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததும் மகனைப் பார்க்க அனுமதி கொடுத்தாங்க. அப்ப குழந்தை தூங்கிட்டு இருந்தான். ஒரு வருஷத்துக்குப் பிறகு என் மகனைப் பார்த்தப்ப எனக்கே தெரியாம எனக்குக் கண்ணீர் வழிந்தோடியது. அதன் பிறகு கோர்ட் உத்தரவு பிரகாரம் என்கிட்ட குழந்தையைக் கொடுத்தாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் குழந்தையைப் பிரசவிச்சிருந்தாலும், குழந்தை என்கிட்ட வந்த சமயத்தில மீண்டும் பிரசவிச்ச உணர்வு என்கிட்ட வந்தது. என் மகன் என் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறான். குறுகிய நேரத்திலேயே என்னுடன் ஒட்டிக்கிட்டான்” எனச் சொன்னபோதே குழந்தை சிணுங்கியது.

“நான் கர்ப்பமா இருக்கும்போதே கூகுள்ள என் மகனுக்குச் சூட்ட பெயர் தேடினேன். அப்ப எய்டன் (Aiden) அப்பிடிங்கிற பெயர் பிடிச்சிருந்ததனால அந்தப் பெயரையே வைக்கணும்னு முடிவு செய்திருந்தேன். அந்தப் பெயருக்கு லிட்டில் பயர் அதாவது ‘தீப்பொறி’ங்கிறதுதான் அர்த்தம்னு பின்னாடிதான் தெரிய வந்தது. ஆனா அவங்க, `உன் மகனுக்கு என்ன பெயர் வைக்கணும்’னுகூட கேட்காம குழந்தையைப் பிரிச்சுட்டாங்க” என சோகமானவரிடம் மகனை எதிர்காலத்தில் எப்படி உருவாக்கப் போகிறீர்கள் எனக் கேட்டோம்.

“அவனை நல்ல மனிதனாக வளர்க்கணும் என்பதுதான் எங்க ஆசை. இப்போது டாக்டர், இன்ஜினீயர், அதிகாரிகள் நிறையபேர் உண்டு. ஆனால் நல்ல மனுஷன்களைக் காணக்கிடைக்கவில்லையே. அதனாலதான் என் மகனை நல்ல மனசுள்ள மனிதனாக மாற்ற வேண்டும் என்பதே எங்க விருப்பம், லட்சியம் எல்லாமே” எனப் பட்டென்று சொன்னவரிடம், அதிகாரவர்க்கத்திற்கு எதிராகப் போராடியபோது பயம் ஏற்படவில்லையா எனக் கேட்டதும் மெல்லிய புன்னகை வீசியவர், தொடர்ந்தார்.

“ஆரம்பத்தில் மீடியாக்களுக்கு முன்னாடி வராம சமாதானமா பேசி முடிக்கலாம்னுதான் நான் நினைச்சேன். வேற வழி இல்லாமத்தான் தெருவில இறங்கிப் போராடத் தொடங்கினேன். போராட்டத்தில் இறங்கிய சமயத்திலயும் சரி, இப்பவும் சரி, பயம்ங்கிறது ஏற்படவே இல்ல. ஏன்னா நானும், அஜித்தும் கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்தவங்க. சொந்த மகனோட விஷயம்ங்கிறதனால சொந்தக் கட்சியை எதிர்த்தே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். போராட்டத்தில நாங்கள் உறுதியாக நின்றபோது எங்க பக்கம் நியாயம் இருக்கிறத எல்லோரும் உணர்ந்துகிட்டாங்க. அவங்க எங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. இந்தப் போராட்டம் இவ்வளவு பெருசா ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல” என்று பெருமூச்சு விட்டுத் தொடர்கிறார்.

அனுபமா என்னும் போராளி!

“என் பெற்றோர் மேல ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை அதன் போக்கில் நடந்துகொண்டிருக்கு. இது என் குழந்தைக்கு மட்டுமான பிரச்னை என குறுகிய வட்டத்தில் நான் பார்க்கவில்லை. இதுபோல எத்தனை குழந்தைகளோ தத்துக்கொடுக்கப் பட்டிருக்கும். அந்தக் குழந்தைகள் என்ன கஷ்டங்களை அனுபவிச்சுக்கிட்டு இருக்குன்னு யாருக்குமே தெரியாது. அந்தக் குழந்தைகளின் நிலை என்னவென்று வெளிப்படுத்தணும்ங் கிறதுக்காகத் தான் நான் போராட்டத்தைத் தொடர்ந்துகிட்டிருக்கேன். குழந்தைகள் நலக்குழு தலைவர் சிஜூ கான் மீது மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து சட்டவிரோதமாக குழந்தையைத் தத்துக்கொடுத்த அத்தனை அதிகாரிங்க மேலேயும் நடவடிக்கை எடுக்கணும்ங் கிறதுதான் என் போராட்டத்தின் நோக்கம்” என்கிறார்.

பிரசவம் என்பதே ஒரு தாய்க்குப் பெரிய போராட்டம். அந்தப் போராட்டத்துக்குப் பிறகு தன் மகனை மீட்க ஒரு மகத்தான போராட்டம் நடத்தி வெற்றி கண்ட மகிழ்ச்சி அனுபமாவின் கண்களில் விரிகிறது.