அலசல்
Published:Updated:

நாங்க போலீஸ் இல்லை... பொறுக்கி... பாலியல் குற்றவாளிகளாகும் கேரள காவல் அதிகாரிகள்!

நாங்க போலீஸ் இல்லை... பொறுக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
நாங்க போலீஸ் இல்லை... பொறுக்கி

வயநாடு மாவட்டம், அம்பலவயல் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய ஒருவன் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

ஜெயிலில் இருக்கும் கணவனை விடுவிக்க உதவுவதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த கேரள போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர் பணிசெய்த காவல் நிலையத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இப்படி நான்கு போலீஸ் அதிகாரிகள்மீது பாலியல் வழக்கு பாய்ந்திருப்பது கேரளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

சம்பவம் 1

எர்ணாகுளம், திருக்காக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கணவரை விடுவிக்க உதவுவதாகக் கூறி அவரின் மனைவியை நெருங்கிய கோழிக்கோடு கோஸ்டல் இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனு, இரு முறை அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண், கொச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனு ஆஜராகவில்லை. எனவே, கடந்த 13-11-2022 அன்று கோழிக்கோடு கோஸ்டல் போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனு-வை திருக்காக்கரை போலீஸார் கைதுசெய்தனர்.

நாங்க போலீஸ் இல்லை... பொறுக்கி... பாலியல் குற்றவாளிகளாகும் கேரள காவல் அதிகாரிகள்!

இதே இன்ஸ்பெக்டர் முளவுக்காடு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த சமயத்தில், அங்கு புகார் அளிக்க வந்த பட்டதாரிப் பெண்ணை பலாத்காரம் செய்ததாக ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டவர். அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவருக்கு, தண்டனைப் பணியாக கோழிக்கோடு கோஸ்டல் காவல் நிலையத்தில் பணி வழங்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதே சேட்டையைச் செய்து, பாலியல் வழக்கில் கைதாகியிருக்கிறார்!

சம்பவம் 2

வயநாடு மாவட்டம், அம்பலவயல் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய ஒருவன் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இதையடுத்து அவன்மீது போக்சோ வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக, பலாத்காரம் செய்யப்பட்ட இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர் அம்பலவயல் போலீஸார். கடந்த ஜூலை 26-ம் தேதி ஊட்டிக்கு அழைத்துச் சென்ற சமயத்தில் அம்பலவயல் ஏ.எஸ்.ஐ டி.ஜி.பாபு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இனிக்க இனிக்கப் பேசி, மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதுடன், அந்தச் சீண்டல்களை செல்போனில் போட்டோவாகவும் எடுத்து சிலருக்கு அனுப்பியிருக்கிறார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.ஐ டி.ஜி.பாபு மீது கடந்த 12-ம் தேதி போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், விஷயம் இன்னும் சீரியஸாக அணுகப்பட, அந்த போலீஸ் அதிகாரி தலைமறைவாகிவிட்டார்.

 பி.ஆர்.சுனு, டி.ஜி.பாபு, வினோத்குமார்
பி.ஆர்.சுனு, டி.ஜி.பாபு, வினோத்குமார்

சம்பவம் 3

திருவனந்தபுரம் மாவட்டம், அருவிக்கரை பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், கணவரால் கைவிடப்பட்டவர். அவரை மறுமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி வளைத்திருக்கிறார் திருவனந்தபுரம் விஜிலென்ஸ் போலீஸ் அதிகாரி ஸாபு பணிக்கர். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், நிர்வாண வீடியோவும் எடுத்து மிரட்டிவந்திருக்கிறார் அந்த அதிகாரி. சமீபத்தில் தன் நண்பர்கள் மூலம் பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்திலும் பகிர்ந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண், அருவிக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜிலென்ஸ் அதிகாரி ஸாபு பணிக்கர் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பி.கே.ஸ்ரீமதி
பி.கே.ஸ்ரீமதி

சம்பவம் 4

கோழிக்கோடு மாவட்டம், கோடஞ்சேரி காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராக இருந்தவர் வினோத்குமார். இவர் 13 வயது சிறுமியையும், 12 வயதுள்ள அவளின் தங்கையையும் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்தே பாலியல் பலாத்காரம் செய்துவந்திருக்கிறார். இது குறித்து சிறுமிகளின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூராச்சுண்டு போலீஸார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவில் போலீஸ் ஆபீஸர் வினோத்குமார் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

இவை நவம்பர் மாதத்தில் மட்டும் பதிவான வழக்குகள். இதற்கு முன்பு, திருவனந்தபுரத்தில் தனது கடையிலுள்ள வாடகைதாரர்களை வெளியேற்றும்படி புகார் அளிக்கச் சென்ற பெண் டாக்டரை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர், கோழிக்கோட்டில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணைக் கைவசப்படுத்தி அவருடைய கணவனையும் மகளையும் விரட்டிய எஸ்.ஐ என்று கேரள போலீஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுப் பட்டியல் மிக நீளமானது.

“அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்தச் சம்பவங்களைவைத்து காவல்துறைமீது களங்கம் கற்பிக்க வேண்டாம்” என கேரள போலீஸ் உயரதிகாரிகள் கூறுகின்றனர். அதே சமயம் கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதியோ, “பாலியல் வழக்கில் குற்றவாளியான திருக்காக்கரை இன்ஸ்பெக்டர் சுனு நிரந்தரக் குற்றவாளி. வேலியை பயிரை மேய்கிறதா?” என கொந்தளித்திருக்கிறார்.

களங்கங்களைக் களையுமா கேரள போலீஸ்?