2019-ல் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற காலிஸ்தானி சார்பு குழு, கனடாவின் ஒன்டாரியோவில் காலிஸ்தானி அமைக்க வாக்கெடுப்பு பயிற்சியை ஏற்பாடு செய்தது. 'காலிஸ்தானி வாக்கெடுப்பு' என்பது, பஞ்சாப்பிலிருந்து தனிநாடு அமைக்க சீக்கிய சமூகத்தினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயலும் கோரிக்கையாகும். இதற்கு கனடாவில் உள்ள இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கனடாவின் மிசிசாகாவில், கடந்த திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடியபோது காலிஸ்தானி சார்பு குழுவுக்கும் இந்தியர்களுக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. கனட காவல்துறையின் கூற்றுப்படி, 400-500 பேர் இந்திய மூவர்ணக் கொடியை அசைத்தபடி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டபடியும், காலிஸ்தான் ஆதரவு குழு பதாகைகளை ஏந்தி, 'ராஜ் கரேகா கல்சா' என்றும் கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து மோதல் கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த நிலையில், கனடா அரசு காலிஸ்தானி சம்பந்தமான வாக்கெடுப்பு நடத்த எவ்வாறு அனுமதித்தது என இந்திய தரப்பு கேள்வி எழுப்பியிருக்கிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடிய உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, "கனடாவில் நாங்கள் அனைத்து மதத்தினரையும் நேசிக்கிறோம். கனடாவில் அனைத்து மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க தரப்பு, ``இந்தச் சம்பவம் காலிஸ்தான் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி" என விமர்சித்திருக்கிறது.