கட்டுரைகள்
Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

கடலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கடலூர்

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதேநேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ்.

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதேநேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், கடலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, கோவை, நெல்லை, விருதுநகர், புதுச்சேரி, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற, உங்கள் பணி தொடரட்டும்’ என்றனர். அந்த வாழ்த்தும் வரவேற்பும் கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

சென்னை, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றைத் தொடர்ந்து, `கடலூர்-200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.

அன்பு கடலூர் சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிந்துகொள்வோம்.

1. கடலூர் பெயர்க் காரணம்

கெடிலம் மற்றும் பெண்ணையாறு வங்காள விரிகுடா கடலோடு சந்திக்கும் முகத்தூவரத்தில் அமைந்துள்ளது கடலூர் நகரம். முற்காலத்தில் `கூடலூர்' என்று அழைத்துள்ளனர். பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலப்பதால் `கடலூர்' என்று அழைக்கப்படுகிறது

2. ஆங்கிலேயர்களின் தலைநகரம்

இந்தியாவுக்கு வாணிபம் செய்யவந்த ஆங்கிலேயர்கள், செஞ்சி மன்னரிடமிருந்து கடலூரிலிருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றியபோது, ஆங்கிலேயர்கள் கடலூர் புனித டேவிட் கோட்டையைத் தங்கள் மகாண தலைநகராக மாற்றி, இந்தியாவின் தென் பிராந்தியத்தை சில காலம் இந்தக் கோட்டையிலிருந்து ஆட்சிசெய்துள்ளனர்.

3. சோழர்களின் ஆட்சி

கடலூர் பகுதி சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பர்யப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் இதை அறியமுடிகிறது.

4. முகலாயர்களின் ஆட்சி

முகலாயர்களின் ஆட்சியின்போது கடலூரில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்ததால், `இஸ்லாமாபாத்' என்றும் அழைத்துள்ளனர். இதற்குச் சாட்சியாக, கடலூர் முதுநகரில் அமைந்துள்ள மசூதி மற்றும் பெரும்பாலான வீடுகள் பாரசீக வடிவமைப்பில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

5. ஹைதர் அலி கட்டுப்பாட்டில்...

1780ஆம் ஆண்டில், மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் கடலூர் இருந்தது. அவர் மறைவுக்குப் பின்னர், 1783ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

6. துறைமுகம் கட்டமைப்பு

ஆங்கிலேயர்கள் கெடிலம் ஆற்றின் முகத்துவாரத்தை பெரிய துறைமுகமாக மாற்றினர். நெல்லிக்குப்பத்தில் தொடங்கிய சர்க்கரை ஆலைக்கும், பரங்கிப்பேட்டையிலிருந்த இரும்பாலைகளுக்கும் தேவையான சரக்குகளைக் கொண்டுவரவும், கப்பல் போக்குவரத்துக்கும் துறைமுகத்தைப் பயன்படுத்தினர்.

7. ஆங்கிலேயர்களின் ஏற்றுமதித் தளம்

கடலூர் துறைமுகத்திலிருந்து கைத்தறி துணிகள், உணவுப்பொருள்கள், மஞ்சள் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதிசெய்தனர். வெளிநாட்டு வணிகர்கள் மஞ்சள் வாணிபத்தில் ஈடுபட்டபோது, மஞ்சள்கொல்லையாக இருந்த பகுதியே தற்போதைய மஞ்சக்குப்பம். துறைமுகம் அமைந்துள்ள பகுதி, முதுநகர் (Cuddalore Old Town) எனப்படுகிறது.

8. ஆங்கிலேயர் பெயர்களில் ஊர் மற்றும் தெருக்கள்

வில்லியம் கம்மிங் என்பவர், 1776ஆம் ஆண்டில் கடலூர் பகுதி ஆட்சியாளராக இருந்தார். 1767் முதல் 1769 வரை ஆட்சிசெய்த ஹென்ரி ப்ரூக்கர் பெயரால் `புருக்கீச்பேட்டை' பிறந்தது. ஆட்சியாளராக இருந்த வெலிங்டன் துரை என்பவரின் நினைவாக வெலிங்டன் தெருவும், ராபர்ட் கிளைவ் நினைவாக கிளைவ் தெருவும் உள்ளது. 1796ஆம் ஆண்டில் ஆங்கிலேய படைத் தளபதியாக இருந்த பிரான்சிஸ் கேப்பர் என்பவரின் பெயரே கேப்பர் மலை.

9. பரங்கிப்பேட்டை துறைமுகம்

கடலூர் மாவட்டத்தில் ஆங்கிலேயர்களின் முக்கிய கப்பல் துறைமுகமாக இருந்தது பரங்கிப்பேட்டை. இந்த ஊரை மஹ்மூதுபந்தர், போர்ட்டோநோவோ மற்றும் முத்து கிருஷ்ணகிரி என்றும் அழைத்துள்ளனர்.

10. கேப்பர் மலை

மலைப்பகுதிகள் இல்லாத கடலூரில், செம்மண் மலையாக சுமார் 100 அடி உயரத்தில் கேப்பர் மலை அமைந்துள்ளது. 1796 ஆம் ஆண்டில் ஆங்கிலேயப் படைத் தளபதியாக விளங்கிய பிரான்சிஸ் கேப்பர் இங்கே மாளிகை கட்டி வாழ்ந்தார். அதில், அதிக எண்ணிக்கையிலான கதவுகள் இருந்தன.

11. மத்திய சிறைச்சாலை

கேப்பர் மலையில், 1865ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் சிறைச்சாலையைக் கட்டினர். இங்கே சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறை வைக்கப்பட்டனர். புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியார், தமிழ்நாட்டுக்கு திரும்பியபோது, கைதுசெய்து இங்கே அடைத்துள்ளனர்.

12. ஆங்கிலேயர் காலக் கட்டடங்கள்

1850ஆம் ஆண்டு கட்டப்பட்ட செயின்ட் மேரீஸ் மாதா கோயில், பான்பரி வணிக வளாகம், பாரி விருந்தினர் மாளிகை, முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருந்த கட்டடம் போன்றவை ஆங்கிலேயர் காலக் கட்டடங்கள். அப்போது கட்டப்பட்ட தூக்கு மேடை இன்னமும் உள்ளது.

13. செயின்ட் டேவிட் கோட்டை

தேவனாம்பட்டினம் அருகே, கடற்கரையையொட்டி ஓடும் கெடிலத்தின் வடகரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் டேவிட் கோட்டை அமைந்துள்ளது. இது 1683ஆம் ஆண்டில் கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 1712ஆம் ஆண்டு, ராஜா தேசிங்கின் தந்தை சாரூப்சிங் இந்தக் கோட்டையில் தங்கியுள்ளார்.

14. திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன், மணியாச்சி ரயில் நிலையத்துக்கு கடலூரின் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்துதான் கிளம்பியுள்ளார்.

15. கடலூருக்கு வந்த காந்தியடிகள்

1921 மற்றும் 1927ஆம் ஆண்டுகளில் கடலூர் நகருக்கு காந்தியடிகள் வருகைத் தந்துள்ளார். கெடிலம் மணற்பரப்பில் மக்கள் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

பேருந்து நிலையம்...
பேருந்து நிலையம்...

16. தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்

ஆரம்பத்தில் கடலூர் மாவட்டமும் விழுப்புரம் மாவட்டமும் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தது. 1993 செப்டம்பர் 30ஆம் தேதி, தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம், விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது. மாவட்டங்களுக்குப் பெரியோர்களின் பெயர் வைக்கும் முறையை மாற்றி, மாவட்ட தலைநகரங்களின் பெயரில் அழைக்கப்படும் என்ற மாற்றம் வந்தது. இதனால், தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம் என்பது கடலூர் மாவட்டம் என மாறியது.

17. மாவட்டத்தின் எல்லைகள்

கடலூர் மாவட்டத்தின் எல்லைகளாக கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டமும், தெற்கே அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும், தென்கிழக்கே தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரியும் அமைந்துள்ளன.

புவியியல்

18. வடகிழக்குப் பருவ மழை

வட கிழக்குப் பருவ மழையால் அதிக அளவில் பயனடையும் மாவட்டம் கடலூர். வட கிழக்குப் பருவ மழை காலத்தில், வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள், புயலாக உருவாகித் தொடர் மழை பெய்யும். கடலூர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 1,050 மில்லிமீட்டர் முதல் 1,400 மில்லிமீட்டர்கள் வரை.

19. இயற்கை பாதிப்புகள்

கடலோரத்தில் அமைந்துள்ள இந்த மாவட்டம், தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. 1976, 1985, 1995, 2005, 2015 வெள்ளப் பெருகினாலும், 2004 சுனாமி, 2008 நிஷா புயல், 2011 தானே புயல் என இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து மீண்டெழுந்துள்ளது கடலூர்.

20. கடலூரை புரட்டிப்போட்ட சுனாமி

2004 டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த சுனாமி, கடலூர் மாவட்டத்தின் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், எம்.ஜி.ஆர்.திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைப் புரட்டிபோட்டது. 610 பேர் பலியானார்கள். 7,000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், விசைப்படகுகள், 4,000 மீன்பிடி படகுகள், 650 ஹெக்டேர் விவசாய நிலங்கள், 2000 வீடுகள் சேதமடைந்தன.

21. ஒளியைப் பறித்த தானே புயல்

கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்தியது `தானே' புயல். கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே 2011 டிசம்பர் 30ஆம் தேதி, புயல் கரையைக் கடந்தது. 41 பேர் பலியானார்கள். மூன்றரை லட்சம் வீடுகள் சேதமடைந்தன, 1 லட்சத்து 8,000 ஹெக்டேர்களில் முந்திரி, பலா, வாழைப் பயிர்கள் அழிந்தன. 45,000 மின்கம்பங்கள் சாய்ந்து, ஒரு மாதத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது.

22. முதன்மையான மீன்பிடித் தொழில்

கடலூர் மாவட்டம், 57.5 கிலோமீட்டர் தூர கடலோரப் பகுதியைக் கொண்டுள்ளது. கடலூரில் ஆரம்பித்து கிள்ளை வரை 49 கடற்கரையோர மீனவ கிராமங்களில் மீன்பிடித் தொழிலை முதன்மையான தொழிலாகக் கொண்டுள்ளது.

23. கடலூர் மீன்பிடித் துறைமுகம்

கடலூர் மாவட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காகக் கடலூர் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுள்ளது. கடலூர் மாவட்டத்தில் முடசல் ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, அன்னங்கோயில் மற்றும் பேட்டோடை ஆகிய மீன்பிடித் தளங்களும் உள்ளன.

24. வெள்ளம் சூழும் கடலூர்

கெடிலம், பரவனாறு, பெண்ணையாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு ஆகிய 5 ஆறுகள் பாசனத்துக்கு உதவுகின்றன. இவை, இறுதியாக வங்க விரிகுடாவில் கலக்கின்றன. வட கிழக்கு பருவ மழைக் காலங்களில் மாவட்டத்தில் பெய்யும் அதிகப்படியான மழை மற்றும் ஆறுகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களைச் சூழ்ந்து அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

25. வடிகால் மாவட்டம்

சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் வடிகாலாக உள்ளது கடலூர். இந்த மாவட்டங்களில் பெருக்கெடுக்கும் மழை நீரானது பெண்ணையாறு, கெடிலம், மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு ஆகிய ஆறுகள் வழியாகக் கடலூர், கடலூர் துறைமுகத்தை அடுத்த அக்கரைக்கோரி மற்றும் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் அருகில் கடலில் கலக்கிறது.

26. வண்டலும் கரிசல் மண்ணும்

கடலூர் மாவட்டத்தில் செம்மண், சரளை மண், கரிசல் மண், மணல் கலந்த கடலோர வண்டல் மண் காணப்படுகின்றன. சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் கறுப்பு நிற மணலும், கடலூர் மற்றும் சிதம்பரத்தின் கடற்கரைப் பகுதிகளில் மணல் பாங்கான பகுதியில், ஆற்றுப்படுகைகளுக்கு இடையே வண்டல் மண்ணும் மிகுந்து காணப்படுகிறது.

27. மழை நீரே முதன்மை சொத்து

கடலூர் மாவட்டத்தில் 60 சதவிகிதம் பாசனம், மழையைச் சார்ந்துள்ளது. வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வெலிங்டன் நீர்த் தேக்கம் ஆகியவை பாசன ஆதாரமாக விளங்குகிறது. மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள், காவிரி டெல்டாவின் கடை மடை பகுதிகள். நெய்வேலி சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆறுகளில் மழைக் காலங்களில் மட்டுமே நீர் ஓட்டம் உள்ளது.

28. வேளாண்மை

கடலூர் மாவட்டத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியத் தொழிலாக இருக்கிறது வேளாண்மை. 80 சதவிகித மக்கள் வேளாண்மையை நம்பியுள்ளனர். இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 75 சதவிகிதம் விவசாய பயன்பாட்டில் இருக்கிறது. இதில், 60 சதவிகிதம் பாசன முறையையும் 40 சதவிகிதம் மழையையும் நம்பி உள்ளது.

29. பணப்பயிரும் தோட்டப்பயிரும்

பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் பகுதியில் பணப்பயிராக உள்ள முந்திரி 60 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் நெல், கரும்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், எள், பாசிப்பயறு, உளுந்து, கரும்பு, வாழை, நிலக்கடலை போன்ற பயிர்களும் உற்பத்திசெய்யப்படுகிறது. தோட்டப் பயிர்களான வெண்டை, கத்திரி, தக்காளி, முருங்கை போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

30. சுகாதாரப் பணியில்...

கடலூர் மக்களுக்கு உதவும் வகையில், 9 அரசு பொதுமருத்துவமனைகள் உள்ளன. அதில் 1,484 படுக்கைகள் உள்ளன. ஒரு சித்த மருத்துவமனையும், 1 யுனானி மருத்துவமனையும் இம்மாவட்டத்தில் உள்ளது. 80 ஆரம்பச் சுகாதார நிலையங்களும், 319 துணை சுகாதார மையங்களும் செயல்படுகின்றன. தவிர, பல தனியார் மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன.

31. சில்வர் பீச்

கடலூரில் அமைந்துள்ள `சில்வர் பீச்'மிக நீளமான கடற்கரை. இங்கு நூற்றாண்டை கண்ட பழம்பெறும் கலங்கரை விளக்கம் உள்ளது. அகன்ற மணற் பரப்புகொண்டது. மேலும் இங்கு, பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய செயின்ட் கோட்டையும் உள்ளது.

32. அலையாத்திக் காடுகள்

இங்குள்ள பிச்சாவரம் பகுதியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் உள்ளது. இவ்வகைக் காடுகளில் வளரும் மரங்களுக்கு வேர்கள் நிலப்பரப்புகளுக்கு மேல் இருக்கும். ஆக்ஸிஜன் காற்றை உற்பத்தி செய்வதிலும், கடல் அரிப்பைத் தவிர்ப்பதிலும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பதிலும் இவ்வகை அலையாத்திக் காடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

33. அலைகள் எழாத உப்பங்கழி ஓடை

பிச்சாவரத்தின் வடக்கு எல்லையில் வெள்ளாறும், தெற்கு எல்லையில் கொள்ளிடமும் பாய்கின்றன. இந்த ஆறுகள் அலையாத்திக் காடுகள் இருப்பதால், அலைகள் எழாத உப்பங்கழி ஓடையாக மாறி, படகு போக்குவரத்துக்கும் படகு சவாரிசெய்யவும் ஏதுவாக இருக்கிறது. இந்தக் காடுகள், சுனாமி பேரலையிலிருந்து தற்காப்புகொண்டது.

34. பிச்சாவரம் - அழகிய அலையாத்தித் தீவு

சிதம்பரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் அமைந்துள்ளது. சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான அரிய வகை மூலிகைகளையும் கொண்டுள்ள தீவு. இந்தத் தீவுக்கு படகு வசதி உள்ளது. இங்கு இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள், இயற்கை அழகை அள்ளி தரும். அலையாத்திக் காடு முழுவதும் சுற்றிப் பார்க்க, கால்வாய் வசதியாக இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் வனத்துறை சார்பில் படகு வசதி செய்யப்பட்டுள்ளது.

பிச்சாவரம் படகு குழாம்
பிச்சாவரம் படகு குழாம்

35. அரிய பறவைகளை ஈர்க்கும் அலையாத்தி

பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காட்டுக்குப் பல நாடுகளிலிருந்தும் பலவிதமான பறவைகள் வருகை தருகின்றன. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரோன்ஸ், நாரைகள், கொக்குகள், மீன்கொத்திப் பறவை இனங்களில் அதிக அளவில் வருகை தருகின்றன. நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், இங்கு அதிக அளவில் பறவையினக் கூட்டங்களைப் பார்க்கலாம்.

36. சினிமா ஷூட்டிங் ஸ்பாட்

இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியான பிச்சாவரத்தில், ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி விஷால் நடித்த துப்பறிவாளன் உட்பட நடந்துள்ளன.

37. பிச்சாவரம் ஜமீன்

பிச்சாவரத்தில் ஜமீன் குடும்பத்தினர் வாழ்ந்துவந்தனர். இவர்கள் சோழர் பரம்பரையில் வந்த வாரிசுகள், ஆன்மிக வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் சூரப்ப சோழனாரின் முன்னோர்கள் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில், சிறிது காலத்துக்கு முன்னர் வரை இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

38. அக்கரைத் தீவு

கடலூர் அருகே உப்பனாற்றுக்கும் கடலுக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவுக்குக் கிழக்கு எல்லையாகக் கடலும், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் நடுப்பகுதியும், தெற்கு - மேற்கு எல்லையாக உப்பனாறும் அமைந்துள்ளது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு, கோரி ஆகிய மூன்று சிற்றூர்கள் உள்ளன.

39. அருவா மூக்கு திட்டம்

கடலூர் மாவட்டத்தில், பரவனாறு கடலில் கலக்கும் இடத்தில் கெடிலம் ஆறும் கடலில் கலக்கிறது. கெடிலம் ஆறு, மேட்டுப் பகுதியிலிருந்து அக்கரைக்கோரி முகத்துவாரத்தில் முதலில் கடலுக்குள் செல்கிறது. ஆனால், வளைந்து நெளிந்து வரும் பரவனாற்றுத் தண்ணீர், கடலுக்குள் உள்வாங்காமல் தேங்கி நிற்பதால், பரவனாற்றின் கரைகள் பல இடங்களில் உடைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, பரவனாற்றை நேரடியாகக் கடலில் கலக்கும் வகையில் ஆலப்பாக்கம் - பூண்டியாங்குப்பம் இடையில் அருவா மூக்கு பகுதியில் கடலில் கலக்கும் வகையில் அருவா மூக்கு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது தமிழக அரசு.

40. பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள்

வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி, வெலிங்டன் நீர்த்தேக்கம் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள். இவை இல்லாமல் 592 சிற்றணைகளும் 270 கால்வாய்களும் பாசனத்துக்குப் பிரதான நீர் ஆதாரமாக விளங்குகின்றன.

41. வீராணம் ஏரி

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும்கொண்டது. ஆரம்பக் காலத்தில் 74 மதகுகளும், வாய்க்கால்களும் இருந்தன. தற்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. ஏரி வெட்டியபோது 1,445 கன அடி நீரைத் தேக்கிவைக்கும் திறன்கொண்டதாக இருந்தது. தற்போது 935 கன அடி மட்டுமே தேக்க முடிகிறது. இந்த ஏரியிலிருந்தே தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்படுகிறது.

42. சோழர்காலத்து ஏரி

முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் வெட்டப்பட்டதே, வீராணம் ஏரி எனப்படும் வீரநாராயணன் ஏரி. பராந்தகச் சோழன், ராஷ்டிரக்கூட மன்னர்கள் தென்னாட்டை நோக்கி படை எடுத்து வரக்கூடும் என்பதால், அவரின் மூத்த மகனாகிய ராஜாதித்தனை ஒரு பெரும் படையுடன் திருமுனைப்பாடி நாட்டுக்குச் செல்ல பணிந்தார். அப்போது படை வடக்கு நாட்டின் படையை எதிர்கொள்ள ஆயத்தமாகக் காத்திருந்த நேரத்தில், வீரர்கள் பயனுள்ளதாக செய்யலாமே என்று அணையைக் கட்டி தன் தந்தையின் பெயரை வைத்தார்.

43. வத்தியத்தேவனின் வாழ்க்கையில்...

'பொன்னியின் செல்வன்' நாவலின் நாயகன் வந்தியத்தேவன் வீரநாராயண ஏரி வழியாகக் குதிரையில் பயணம் தொடங்கியுள்ளான். வந்தியத்தேவன் பயணத்தைத் தொடங்கிய ஆடி 18-ஐ முன்னிட்டு, வெளிநாட்டிலிருந்தும் பலரும் வீர நாராயண ஏரிக்கு வருகிறார்கள்.

44. மேட்டூர் டு வீராணம் ஏரி

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், 188 கிலோமீட்டர் பயணித்து கல்லணைக்கு வருகிறது. பின்னர், கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, அணைக்கரை கீழணையில் தேக்கிவைக்கப்பட்டு பின்னர், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

45. பாசன வசதி வழங்கும் வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் மூலம் கிழக்குக் கரையில் உள்ள 28 பாசன மதகுகள், எதிர்க் கரையிலுள்ள 6 பாசன மதகுகள் மூலமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 123 கிராமங்களில் 48,456 ஏக்கர் பரப்பில் விளை நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன.

46. புதிய வீராணம் 35 வருட திட்டம்

வீராணம் ஏரியிலிருந்து 235 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சென்னை. இந்த ஏரியிலிருந்து சென்னைக்குக் குடி நீர் கொண்டுசெல்ல 1968ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பின்னர் 2004ஆம் ஆண்டில், புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு விநாடிக்கு 77 கன அடி தண்ணீர் சென்னைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

47. பெருமாள் ஏரி

குறிஞ்சிப்பாடி அருகில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, 12ஆம் நூற்றாண்டில், இரண்டாம் பராந்தகச் சோழனால் உருவாக்கப்பட்டது. நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், வாலாஜா ஏரி, விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் பெய்யும் மழை நீர், செங்கால் ஓடையின் வழியாக பரவனாற்றிலிருந்து பெருமாள் ஏரிக்கு வருகிறது. ஒரு காலத்தில் 16 கிலோமீட்டர் நீளமும் 1 கிலோமீட்டர் அகலமும் இருந்த ஏரி, தற்போது 8 கிலோமீட்டர் நீளமே உள்ளது.

48. வாலாஜா ஏரி

வடலூருக்கு அருகே கரைமேடு கிராம பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி, 12 வாய்க்கால்கள், 15 கதவுகள்கொண்ட கதவணை இருந்துள்ளது. முன்பு, இந்த ஏரி மூலம் இப்பகுதி மக்கள் முப்போகம் விளைவித்துள்ளனர். 1664 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மண் சரிந்து மண்ணோடு மண்ணாகக் கட்சியளித்த ஏரியைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்.எல்.சி நிறுவனம் தூர் வாரியது. என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் இதில் தேக்கப்பட்டு, வடலூர், குறிஞ்சிபாடி பகுதி விவசாயத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

49. வெலிங்டன் ஏரி

திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் என்ற கிராமத்தில், அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் 1918ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மழைக் காலத்தில், வெள்ளாறு வழியாக தொழுதூர் அணைக்கட்டுக்கு வரும் தண்ணீர் சேமிக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவு உயர்ந்ததும், வெலிங்டன் ஏரிக்கு அனுப்பப்படும். திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காவில் சுமார் 24,000 ஏக்கர் பாசனத்துக்கு உதவுகிறது.

50. வீராணத்துக்கு வரும் வடவாறு

அணைக்கரை கீழணையிலிருந்து வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய், குமிக்கி மண்ணியாறு மற்றும் வடவாறு ஆகிய 4 கால்வாய்கள் பிரிகின்றன. வடக்கு ராஜன் கால்வாய் வழியாகப் பாயும் தண்ணீரால் கடலூர் மாவட்டமும், தெற்கு ராஜன் மற்றூம் குமிக்கி மண்ணியாறு கால்வாய்கள் வழியாகப் பாயும் தண்ணீர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வடவாறு வழியாகப் பாயும் தண்ணீர், 22 கிலோமீட்டர் பயணித்து வீராணம் ஏரியை வந்தடைகிறது.

51. வீராணம் ஏரியில் ஜலகண்டீஸ்வரர்

வீராணம் ஏரியின் தெற்குமுனை, லால்பேட்டை பகுதியில், நீர்மட்டம் காட்டும் ஜலகண்டீஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரி முழுக் கொள்ளவைத் தாண்டும்போது, தண்ணீரை வெள்ளியங்கால் வாய்க்காலில் வெளியேற்றுவதற்காக 14 மதகுகள் அமைத்துள்ளனர். ஏரியின் நீர்மட்டத்தை அறிவதற்காக இந்த மதகுகள் இருக்கும் பக்கத்தில், ஜலகண்டீஸ்வரர் சிலையை நிறுவியுள்ளனர். இந்தச் சிலையின் கழுத்துப் பகுதிக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால், ஏரி முழுக் கொள்ளவு எட்டிவிட்டதாகக் கணக்கு.

52. கெடிலம் ஆறு

விழுப்புரம் மாவட்டத்தில் தோன்றி, கடலூரில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இந்த நதியைப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

53. வெள்ளாறு

சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலையில் தோன்றி ,193 கி.மீ தூரம் பயணித்து, பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்த நதியின் முக்கிய துணை ஆறான மணிமுத்தாறு, ஶ்ரீ முஷ்ணம் அருகே வெள்ளாற்றுடன் இணைக்கிறது. இந்த நதிக்கரையில் உள்ள புவனகிரிதான், மகான் ஶ்ரீ ராகவேந்திரர் பிறந்த ஊர். இங்கு அவருக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

54. கொள்ளிடம்

காவிரி ஆறு திருச்சி அருகே முக்கொம்பில் இரண்டாகப் பிரிகிறது. இங்குதான் மேலணை உள்ளது. இதில் வடகிளையே 'கொள்ளிடம் ஆறு' எனப்படுகிறது. 150 கி.மீ தூரம் ஓடி, பரங்கிப்பேட்டைக்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் கடலில் கலக்கிறது. இந்த நதி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் இடையேயான எல்லையில் பாய்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்

55. வனம்

கடலூர் மாவட்டத்தில் 4116.05 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இதில் பாதுகாக்கப்பட்ட காடுகள் 3689.05 ஹெக்டேரும், நிலங்களாக 427 ஹெக்டேரும் உள்ளன. காடுகள் அதிகமாக உள்ள பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், திட்டக்குடி வருவாய் வட்டங்களில் உள்ளன.

56. சமவெளிப் பகுதி கடற்கரை

கடலூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3678 சதுர கிலோமீட்டர். வடக்கில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வரை 68 கிலோமீட்டருக்குக் கடற்கரைப் பகுதி உள்ளது. தெற்குப் பகுதியில் கொள்ளிடம் நதி வரை பரவியுள்ளது. 6 கிலோமீட்டருக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியுள்ளது. வடக்கு கடற்கரைப் பகுதியில், மணல் குன்றுகள் மற்றும் சதுப்புநிலங்கள் உள்ளன.

உள்ளாட்சி

57. மக்கள்தொகை

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கடலூர் மாவட்டத்தின் மக்கள்தொகை 26,05,914. ஆண்கள் 13,11,697 பேர். பெண்கள் 12,94,217 பேர். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 14.02 சதவிகிதம். 1000 ஆண்களுக்கு 987 பெண்கள்தான் இருக்கின்றனர்.

58. கடலூர் ரயில் மார்க்கம்

சென்னையிலிருந்து விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை என ஒரு வழித்தடம் சென்னையிலிருந்து விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் வழியாக மற்றொரு வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து இயங்கிவருகிறது. கடலூர் முதுநகரிலிருந்து விருத்தாசலம் வழியாக சேலத்துக்கு ரயில் பாதை உள்ளது.

59. பேருந்துகள்

புதுச்சேரி, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, விருத்தாசலம் ஆகிய ஊர்களுக்குச் செல்ல, பேருந்து வசதிகளும், சென்னை, திருச்சி, சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கும் செல்ல விரைவுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

60. நெடுஞ்சாலையும் கிழக்கு கடற்கரை சாலையும்

கடலூரிலிருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் பிற நகரங்களைச் சென்றடைகிறது. கடலூரிலிருந்து சித்தூர் வரை (கடலூர் - நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி, சித்தூர்) இணைக்கும் S.H.9 சாலை, கடலூர் முதல் சேலம் வரை (கடலூர், வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், சேலம்) செல்லும் S.H.10 சாலை, கடலூர் - சங்காராபும் (கடலூர், பாலூர், பண்ருட்டி, அரசூர், திருக்கோவிலூர், சங்கராபுரம்) வரையிலான S.H.68 சாலை ஆகியவை முக்கியமானவை. கிழக்கு கடற்கரை சாலையும் கடலூர் நகரின் வழியே பயணிக்கிறது.

61. மாவட்ட வருவாய் கோட்டங்கள் மற்றும் வட்டங்கள்

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் என மூன்று வருவாய் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம். குறிஞ்சிப்பாடி என 10 வட்டங்கள் உள்ளன.

62. வருவாய் வட்டங்கள்

கடலூர், பண்ருட்டி, அண்ணா கிராமம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், நல்லூர், விருத்தாசலம், மங்களூர், மேல் புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் என 14 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுகின்றன. கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், விருத்தாசலம் ஆகியவை நகராட்சிகள்.

63. பாராளுமன்றத் தொகுதிகள்

கடலூர், சிதம்பரம் ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளும், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய தொகுதிகளையும் உள்ளடக்கியது.

64. சட்டமன்றத் தொகுதிகள்

கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய 9 சட்ட மன்றத் தொகுதிகள் மாவட்டத்தில் உள்ளன. இதில் திட்டகுடி, காட்டுமன்னார் ஆகிய தொகுதிகள் தனித் தொகுதிகள்.

என்.எல்.சி.அனல்மின் நிலையம்
என்.எல்.சி.அனல்மின் நிலையம்

65. அரசு மருத்துவமனை

கடலூர் அரசு மருத்துவமனை, நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராகவும் இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பராயலு ரெட்டியார், கடலூர் அரசு மருத்துவனை சிறப்பாகச் செயல்படும் வகையில் வெளிநாட்டிலிருந்து இரண்டு பயிற்சி செவிலியர்களை வரவழைத்திருக்கிறார். 1918ஆம் ஆண்டில் கலெக்டர் லாங்கர் பரிந்துரையின் பேரில், மேலும் இரண்டு பயிற்சி செவிலியர்களால் பொது மருத்துவம், அறுவைசிகிச்சை போன்ற பிரிவுகள் தொடங்கப்பட்டு, பின்னர் பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

66. அரசு தோட்டக்கலை பண்ணைகள்

கடலூர் மாவட்டத்தில், தமிழக அரசின் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், விருத்தாசலத்தில் மண்டல ஆராய்ச்சி நிலையம், கடலூரில் கரும்பு ஆராய்ச்சி நிலையம், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம், நெய்வேலி, விருத்தாசலத்தில் தோட்டக்கலைப் பண்ணைகள் ஆகியன உள்ளன.

67. தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலையம்

விருத்தாசலத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம், செயல்பட்டுவருகிறது. 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம், பொதுமக்களுக்கு வேளாண் பயிற்சித் திட்டங்கள், செயல் விளக்கங்கள், கருத்தரங்குகள், முகாம்கள், பண்ணை ஆலோசனை சேவைகள் செயல்படுத்தப்படுகிறது.

68. பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்

காய்கறி விதைகள் ஆராய்ச்சியில் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையம் மிக முக்கியமானது. 1905ஆம் ஆண்டு, மதராஸ் மாகாணத்தின் இரண்டாவது விவசாய ஆராய்ச்சி நிலையமாகத் தொடங்கப்பட்டது. தக்காளி, மிளகாய், பாகல், புடலங்காய் மற்றும் பலா ஆகியவற்றில் புதிய ரகங்கள் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

69. வானிலை அறிவிப்பு மையம்

மஞ்சக்குப்பத்தில் வானிலை அறிவிப்பு மையம் செயல்பட்டுவருகிறது. கடலூரின் வெப்ப நிலை, காற்று ஈரப்பதம், கடல் தன்மை, மேக மூட்டம், மழை வாய்ப்பு, புயல் எச்சரிக்கை ஆகியவற்றை பொது மக்களுக்கு அளித்துவருகிறது.

70. கடலோரப் பாதுகாப்பு படை

தேவனாம்பட்டினத்தில், கடலோர பாதுகாப்புப் படை செயல்பட்டுவருகிறது. இது, கடல் வழியாக ஊடுருவ முயலும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை நவீன கப்பல்கள் மூலம் கண்காணிப்பது, கடலில் சிக்கிக்கொள்ளும் மீனவர்களுக்கு உதவி செய்வது உட்பட, பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது.

71. பேருந்து நிலையம்

கடலூர் பேருந்து நிலையம் மிகப் பழைமையானது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து வசதியையும், புதுச்சேரி நகரத்தோடு இணைப்பில் இருப்பதால், பேருந்து வசதி நிறைந்துள்ளது.

72. முக்கிய ஊர்களின் தொலைவு

கடலூரிலிருந்த தமிழக தலைநகரான சென்னை 190 கிலோமீட்டரிலும், புதுச்சேரி 23 கிலோமீட்டரிலும், மதுரை 343 கிலோமீட்டரிலும், திருச்சி 189 கிலோமீட்டரிலும், சேலம் 199 கிலோமீட்டரிலும் உள்ளன.

73. கடலூர் அரசு அருங்காட்சியகம்

கடலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் உள்ள கட்டடத்தில், அரசு அருங்காட்சியகம் இயங்குகிறது. 1989 நவம்பர் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவசம்.

74. பரங்கிப்பேட்டை

கடலூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் பரங்கிப்பேட்டை அமைந்துள்ளது. இந்த ஊருக்கு முதலில் ஐரோப்பியர்கள், போர்ச்சுகீசியர்கள் வந்துள்ளனர். இவர்களுக்குப் பின்னர் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு வந்துள்ளது. போட்டோநோவோ என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பரங்கிபேட்டை என்றானது. இது சிதம்பரம் வட்டத்தில், வெள்ளாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்

75. விருத்தாசலம்

கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்திகொண்ட நகராட்சி, விருத்தாசலம். திருமுதுகுன்றம் என்ற நல்ல தமிழ்ப் பெயரின் வட மொழி ஆக்கம் விருத்தாசலம். விருத்தம் என்றால் முதிர்ந்த என்று பொருள், அசலம் என்பது மலையின் வட மொழி சொல்.

76. நெய்வேலி

கடலூரிலிருந்து 30 கிலோமீட்டரில் நெய்வேலி நகரம் அமைந்துள்ளது. 1870ஆம் ஆண்டிலேயே நிலக்கரி இருப்பதை ஆங்கிலேயர்கள் கண்டறிந்துள்ளனர். 1956ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தொடங்கிவைத்தார். இங்கு நிலக்கரி நிறைந்த சுரங்கங்களும், மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களும் அமைந்துள்ளன.

77. நெய்வேலி டவுன்ஷிப்

நெய்வேலி டவுன்ஷிப் நன்கு திட்டமிட்டு 30 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வட்டம் என்பது ஒரு சதுர கிலோமீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடப்பட்டுள்ளன. முதல் வட்டத்தில் என்.எல்.சி. நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது, மற்ற வட்டங்களில் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

78. படப்பிடிப்பு தளமான நெய்வேலி

மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ள நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில், அதிக மரங்களுடன் அமைதியான சூழல் இருப்பதால், படப்பிடிப்புகள் அதிகம் நடந்துவருகின்றன.

79. நெய்வேலி உருவான வரலாறு

தற்போதுள்ள நெய்வேலி நகரம் உள்ள இடத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் நெய்வேலி கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர், 1935ஆம் ஆண்டு தன் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது, கறுமையான பொருள் வெளிப்பட்டது. அதனை அரசு ஆய்வு செய்ததில், பழுப்பு நிலக்கரி என்பது தெரிந்தது. பின்னர், மத்திய அரசு 1956ஆம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தைத் தொடங்கியது.

80. சுரங்க கிராமங்கள்

என்.எல்.சி. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, நிலக்கரியை வெட்டி எடுக்கவும், தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகள் கட்டவும், பெருமாத்தூர், வேலுடையான்பட்டு, தாண்டவன்குப்பம், கூரைபேட்டை, நெய்வேலி, கங்கைகொண்டான், வேப்பங்குறிச்சி உட்பட 23 கிராமங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு விருத்தாசலம் அருகே விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய கிராமங்களில் இடம் வழங்கப்பட்டது.

81. என்.எல்.சி அனல்மின் நிலையம்

மத்திய அரசுக்குச் சொந்தமான என்.எல்.சி நிறுவனத்தில் முதல் அனல்மின் நிலையம், இரண்டாவது அனல்மின் நிலையம், முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கம், இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் 2890 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது.

82. நிலக்கரி சுரங்கங்கள்

என்.எல்.சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்க முதல் சுரங்கம், இரண்டாவது சுரங்கம், முதல் சுரங்கம் விரிவாக்கம் என மூன்று திறந்தவெளிச் சுரங்கங்கள் உள்ளன. ஆசியாவிலேயே பெரிய அளவில் திறந்தவெளிச் சுரங்கம் நெய்வேலியில்தான் உள்ளது.

83. சூரிய சக்தி - காற்றாலை மின் உற்பத்தி

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், தூத்துக்குடி, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் கால் பதித்துள்ளது. அந்தமானிலும் சூரிய ஒளி மின் உற்பத்தியைச் செயல்படுத்திவருகிறது. நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், சூரிய ஒளி மூலம் 141 மெகாவாட்டும், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 858 மெகாவாட் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியும் செய்துவருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் காற்றாலை மூலம் 51 மெகாவாட் மின் உற்பத்தி செய்துவருகிறது.

84. பண்ருட்டி

கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, 200 ஆண்டுகளாக வணிக நகரமாகத் திகழ்கிறது. `பண்ணு' என்றால் தமிழ் இசை. `ருட்டி' என்றால் பாடல். பலாப்பழத்துக்கும் முந்திரிக்கும் புகழ்பெற்ற ஊர்.

கடலூர் துறைமுகம்
கடலூர் துறைமுகம்

85. பண்ருட்டி பலாப் பழம்

பண்ருட்டி பலாவுக்குத் தனிச் சுவை உண்டு. இதற்குக் காரணம், அதன் அலாதியான சுவை, இப்பகுதியின் மண் வளம், தட்பவெப்ப நிலையே.

86. பண்ருட்டி முந்திரி

இந்தியா முழுவதும் முந்திரி பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்குத் தனிச் சுவை உண்டு. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் 28,500 ஏக்கர் ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. 22,168 மெட்ரிக் டன் முந்திரி ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

87. அந்நியச் செலாவணி

பண்ருட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் 1,000 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறது.

88. நெல்லிக்குப்பம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்று நெல்லிக்குப்பம். இந்துக்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் நிறைந்த ஊர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் 225 ஆண்டுகளுக்கு முன்பு 1788ஆம் ஆண்டு, `இ.ஐ.டி பாரி இந்தியா' என்ற இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. 1842-ல், மிட்டாய் தயாரிக்கும் கம்பெனியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

89. கோனான்குப்பம்

விருத்தாசலத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கோனான்குப்பம். இங்குள்ள புனித பெரிய நாயகி அன்னை ஆலயம், மிஷனரி கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியாரால் கட்டப்பட்டது. இங்கே தங்கிய வீரமாமுனிவர், `தேம்பாவணி' என்றும் காப்பியத்தைத் தமிழில் எழுதினார். இங்கே ஒவ்வோர் ஆண்டும் 10 நாள்கள் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

90. ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம், கடலூரிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள ஸ்ரீபூவராக சுவாமி கோயில், தென்னிந்தியாவில் உள்ள 8 சுயம்பு ஷேத்திரங்களில் ஒன்று. இக்கோயிலில் ரதம் போன்ற வடிவிலான மண்டபத்தில், போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையிலுள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

91. சிதம்பரம்

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. ஆலய நகர் என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. நாட்டியம், கட்டடக்கலை, பக்தி புகழ்பெற்ற நகரம். பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயர் உண்டு. தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் `தில்லையம்பலம்' மற்றும் `திருச்சிற்றம்பலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

92. காட்டுமன்னார்கோவில்

சிதம்பரத்திலிருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது காட்டுமன்னார்கோவில். வைணப் பெரியார்களான நாதமுனிகளும், அவரது மூதாதையரான ஆளவந்தாரும் தோன்றிய தலம். கல்வெட்டுகளில் வீரநாராயணசதுர்வேதி மங்கலம் எனப் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் பராந்தகனால் இந்த ஊர் இங்கு, அமையப்பட்டுள்ளது. வீரநாராயண பெருமாள் கோயில், அனந்தீஸ்வரர் ஆகிய கோயில்கள் உள்ளன.

தொழிற்சாலைகள்

93. சிப்காட் தொழிற்சாலை

கடலூர் முதுநகருக்கு அருகில் சிதம்பரம்-கடலூர் சாலையில், 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்சாலை அமைந்துள்ளது. 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன்மூலம், பின்தங்கிய பகுதியில் மருந்து, ஆயுர்வேதம், உயிரியல் உரம், கட்டுமான பொருள்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

94. சர்க்கரை ஆலைகள்

கடலூர் மாவட்டத்தில், சேத்தியாத்தோப்பில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை, நெல்லிக்குப்பத்தில் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை, பெண்ணாடம் அருகே இறையூரில் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை, விருத்தாசலம் அருகே ஏ.சித்தூரில் ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய நான்கு சர்க்கரை ஆலைகள் இருந்தன. இதில், அம்பிகா மற்றும் ஆரூரான் ஆகியவை இரண்டு வருடங்களாக இயங்கவில்லை.

சில்வர் பீச்
சில்வர் பீச்

95. கடலூரில் வெட்டிவேர்

கடலூர் மாவட்டத்தின் கடற்கரையோரம், மணல் பாங்கான இடங்களில் அதிக அளவில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. மூலிகை குணம் வாய்ந்த இதிலிருந்து, அபிஷேகப் பொருள்கள், நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் ஆயுர் வேத மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.

96. செராமிக் தொழிற்பேட்டை

விருத்தாசலம் நகரில் செராமிக் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் அழகிய பொம்மைகள், விதவிதமான அகல் விளக்குகள் உட்பட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கிறது.

97. குறிஞ்சிப்பாடி கைலி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தயாரிக்கப்படும் கைத்தறி லுங்கிக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல மதிப்பு உண்டு.

98. சிதம்பரம் கவரிங்

சிதம்பரம் கவரிங் மிகவும் பிரசித்திபெற்றது. தமிழகத்தில் பல நகரங்களிலிருந்து கவரிங் நகைகளை இங்கு வந்துதான் கொள்முதல் செய்கின்றனர். சிதம்பரத்துத் தண்ணீரால் செய்யப்படும் நகைகள் சீக்கிரம் கறுக்காது. அணிந்தால் சருமப் பிரச்னை இருக்காது. பல ஊர்களின் நகைக் கடைகளில் இங்கே சிதம்பரம் கவரிங் கிடைக்கும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

99. பெண்களின் குடிசைத் தொழில்

பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், முந்திரிப்பருப்பைப் பதப்படுத்தும் தொழிலில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை மிகக் கவனமாகச் செய்யவேண்டும். முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்தெடுக்கும்போது, வெளியேறும் பால் நம்மீது பட்டால், அந்த இடம் வெந்துவிடும்.

100. முந்திரி சார்ந்த தொழில்கள்

பண்ருட்டி பகுதியில், முந்திரிப்பருப்புகளை உடைத்துப் பதப்படுத்தி, தரம் பிரித்து ஏற்றுமதி செய்யவும், சார்புத் தொழிலாக முந்திரி எண்ணெய், புண்ணாக்கு போன்றவற்றைத் தயாரிக்கவும் பல நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் இப்பகுதியின் 80 சதவிகித மக்கள் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்

கல்வி நிறுவனங்கள்

101. கல்வி

கடலூர் மாவட்டத்தில் 1,730 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 226 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 219 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. உயர்கல்விக்கு வலுசேர்க்கும் வகையில், 7 பொறியியல் கல்லூரிகள், ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், 15 தொழில் பயிற்சி மையங்கள், 34 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், இதர சிறிய கல்வி நிறுவனங்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழகமும் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்துகின்றன.

102. அண்ணாமலை பல்கலைக்கழகம்

கல்வியில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்கும் வகையில், ராமசாமி செட்டியார் என்பவரால், சிதம்பரத்தில் 1915ஆம் ஆண்டு, ராமசாமி செட்டியார் பள்ளி தொடங்கப்பட்டது. உயர் கல்வியை அளிக்கும் நோக்கில், அவரது மகன் அண்ணாமலை செட்டியார் 1923ஆம் ஆண்டு தனது தாயார் நினைவாக, மீனாட்சி கல்லூரியைத் தொடங்கினார். 1930 மார்ச் 25ஆம் தேதி, சென்னை ஆளுநர் ஜார்ஜ் பெரடரி ஸ்டான்லி என்பவரால், அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம், கடற்கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், இயற்கையோடு இணைந்த சூழலில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 கிலோமீட்டரில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், எல்லா வகையான பாடங்களும் போதிக்கப்படுகின்றன. 1,25,000-க்கும் மேற்பட்ட நூல்களைக்கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. தமிழகம் மட்டுமிமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும், ஏராளமானவர்கள் படிக்கிறார்கள்.

103. அண்ணாமலையின் பிரபலங்கள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், நெடுஞ்செழியன், சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், பழ.நெடுமாறன், ஞானசம்பந்தன், இயக்குநர்கள் பாலசந்தர், டி.ராஜேந்தர், உள்படப் பலர் படித்துள்ளனர்.

104. முதல் தனியார் பல்கலைக் கழகம்

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் 1,000 ஏக்கரில் அமைந்துள்ளது. அறிவியல், பொறியியல், மேலாண்மை, விவசாயம் மற்றும் கலைகளில் உயர் படிப்புகளை வழங்கி வருகிறது. தொலைதூரக் கல்வி மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கிவருகிறது. பெரும் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள், தனித்துவ கற்பித்தல் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர், ஆய்வு மையம் மற்றும் கணினி பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

105. மாநில அரசு நிர்வாகம்

1929 ஆம் ஆண்டு அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்ட, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதனால், 2013ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

106. பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளி

பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது சேவா மந்திர் பள்ளி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருக்கோவிலூரில் தங்கியிருந்த ஆனிமேரி பீட்டர்சன், வெளிநாடு செல்வதற்கு கப்பலில் பரங்கிப்பேட்டை வந்துள்ளார். அந்தப் பகுதியில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைக் கண்டு வருந்தினார். பெண்கள் கல்வியில் முன்னேறுவதே பெண்ணடிமைத்தனத்தை அகற்றும் என்று அந்தப் பகுதியில் குடிசை அமைத்து, கல்வியறிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அது பள்ளியாக உருவெடுத்தது.

107. காந்தி வந்த சேவா மந்திர் பள்ளி

காந்தியடிகள் பங்குபெறும் கூட்டங்களுக்குச் செல்லும் ஆனிமேரி, அறவழிக்கொள்கை குறித்து கடிதம் எழுதி, காந்தியிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பெண் குழந்தை முன்னேற்றத்துக்காக ஆனிமேரி கல்விக்கூடம் நடத்திவருவது குறித்து அறிந்து காந்தியடிகள் அவரைப் பாராட்டினார்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சிதம்பரம் வந்த காந்தியடிகள் பரங்கிப்பேட்டையில் ஆனிமேரி பீட்டர்சன் நடத்திவந்த பள்ளிக்கு வந்தார். அப்போது, குடிசையில் இருந்த பள்ளிக்குக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டினார். அந்தப் பள்ளிக்கு சேவா மந்திர் என்றும் பெயரிட்டார். ஏழைப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளிக்கு வந்த காந்தியின் நினைவைப் போற்றும் வகையில், அவர் அணிந்திருந்த மிதியடியைப் பெற்று, அதை இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

சேவா மந்திர் பள்ளி நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடியபோதெல்லாம், தனது அரிஜன சேவை நிதியிலிருந்து உதவி செய்துள்ளார் காந்தி. டென்மார்க் நாட்டிலிருந்து கிடைக்கும் உதவிகளைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் அறிவுரை செய்துள்ளார்.

108. பள்ளிக்குக் கடிதம் எழுதிய காந்தி

1941 பிப்ரவரி 16ஆம் தேதி, பள்ளியின் கல்விச் சேவை குறித்து பள்ளிக்குக் கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார் காந்தியடிகள். அதில், பெண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்து கேட்டுள்ளார். அந்தக் கடிதமும் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

109. ஒரு லட்சம் பெண் குழந்தைகளுக்குக் கல்வி

கிறிஸ்துவ வழிப்பாட்டுப் பள்ளியாக இருந்தாலும், காந்தியின் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களைக்கொண்ட, உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்பட்டுவருகிறது சேவா மந்திர் பள்ளி. இதுவரையில் ஒரு லட்சம் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளித்த பெருமையைப் பெற்றுள்ளது.

110. புனித டேவிட் பள்ளி

கடலூரின் முதுநகரில் இருக்கும் கடலூர் புனித டேவிட் பள்ளி, 1717ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் இயங்கிவரும் இப்பள்ளி, 300 ஆண்டுகள் பழைமையானது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

111. அரசு செராமிக் கல்லூரி

விருத்தாசலம் அரசு செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில், அரசு செராமிக் கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் பட்டயப் படிப்பைப் படிக்க 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருந்தால் போதும். 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 3 ஆண்டுக்கால படிப்பு மற்றும் 6 மாதப் பயிற்சி அளிக்கப்படும். 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 2 ஆண்டுக்கால படிப்பும் 6 மாதப் பயிற்சியும் அலிக்கப்படும்.

112. பரங்கிப்பேட்டை கடல் ஆய்வு மையம்

பரங்கிப்பேட்டையில் சதுப்புநிலம், ஆறு, நீரோடைகள் அமைந்துள்ளன. இந்த ஊரில் கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து, கடல் உயிரின ஆய்வு மையம் ஒன்றை நிறுவியுள்ளனர்.

113. கடல் உயிரினங்கள் அருங்காட்சியகம்

பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரின ஆய்வு மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் உள்ளது. இதைக் காண பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகிறார்கர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சித் தொகுப்புகள் அடங்கிய நூலகமும் இங்கு இயங்கிவருகிறது.

114. செயின்ட் ஜோசப் பள்ளி

கடலூரில் 1868ஆம் ஆண்டு, புனித வளனார் மேல்நிலைப் பள்ளி எனப்படும் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. 1884ஆம் ஆண்டில் ஒரு கல்லூரியாக உயர்த்தப்பட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தது. நிதி கட்டுப்பாடுகள் காரணமாக, 1909ஆம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளியாக மாறியது. பின்னர், 1991ஆம் ஆண்டு, புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மறுபிறப்பு எடுத்துள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

115. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி

பண்ருட்டியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி 2007 பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியைத் தொடங்கியதன் மூலம், கடலூரில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாத குறையைப் போக்கியது தமிழக அரசு.

116. கடலூரில் பொறியியல் கல்லூரிகள்

கடலூரில் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, ஜெயராம் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஆனீஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலாஜி போன்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

117. கடலூரின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, முட்லூர் அரசு கலைக் கல்லூரி, கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி, கிருஷ்ணசாமி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, மூங்கிலடி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்வேலி ஜவஹர் கல்லூரி, கருங்குழி ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீமுஷ்ணம் பத்மநாப ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இமாகுலேட் பெண்கள் கல்லூரி, சிஎஸ்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

118. தமிழ் நூல் காப்பகம்

விருத்தாசலத்தில், தமிழ் நூல் காப்பகம் என்ற தனியார் நூலகம், அமைந்துள்ளது. இந்தத் தனியார் நூலகத்தை எழுத்தாளர் பல்லடம் மாணிக்கம் என்பவர் வீட்டுக்கு அருகில், தனியாகப் பெரிய கட்டடத்தில் அமைத்து, ஆயிரக்கணக்கான நூல்களை வைத்துள்ளார்.

ஆன்மிகத் தலங்கள்

119. பாடலீசுவரர் கோயில்

திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்திலிருந்து1 கிலோமீட்டர் தூரத்தில் பாடலீஸ்வரர் கோயில் உள்ளது. தோன்றாத்துணை நாதராக இறைவனும், தோகையம்பிகையாக அம்மையும் இருக்கின்றனர். புலிக்கால் முனிவர் பூஜித்ததால் இப்பெயர் பெற்றுள்ள தலமாக உள்ளது. அப்பரை கல்தூணில் கட்டி கடலில் எறிந்தபோது, `சொற்றுணை வேதியன்' என்னும் பதிகம்பாடி, அக்கல்லையே தெப்பமாகக்கொண்டு கரையேறியவர் என்பதால், கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரில் உள்ளது. வருடா வருடம் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறும்.

120. ஸ்ரீதேவநாத பெருமாள் கோயில்

கடலூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருவந்திபுரம் கிராமத்தில் வைணவத் தலமான ஸ்ரீ தேவநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. ஆகம மவிதிமுறைகளின்படி, தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப்படுகிறது. தேவநாதர் பெருமாளாகவும், வைகுந்த தாயார் நாயகியாகவும் காட்சியளிக்கின்றனர். திருப்பதியில் உறையும் பெருமாளை சின்னவர் என்றும், திருவந்திபுரம் தேவநாத பெருமாளை பெரியவர் என்றும் சொல்வார்கள். வேதாந்த தேசிகரால் பாடல்பெற்ற தலம். ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில், பகல்பத்து உற்சவம், சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெறும்.

121. திருமாணிக்குழி

கடலூரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இக்கோயிலில் மாணிக்க வரதர் இறைவனாகவும், மாணிக்கவல்லி இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர். ஆண்டவர் முன்பு எப்போதும் திரையிடப்பட்டே இருக்கும். திரையில் 11 உருத்திரர்களுள் ஒருவரான வீமர் என்பவரின் திரு உருவம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. முதலில் இவருக்கு எல்லாவித பூஜையும் நடந்தப்பட்டு, அதன்பிறகே திரை விலக்கப்பட்டு, இறை வழிப்பாடு நடைபெறும். மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவம்கொண்டு மாவலியை அழித்த பிறகு, இங்கு வந்து சிவனை வழிப்பட்டதாகப் புராணம். கோயிலில் லிங்கம் இருக்கும் பகுதி, சிறிது பள்ளமாக இருக்கும். அங்கு எப்போதும் தண்ணீர் சுரந்துகொண்டிருக்கும். எனவே, மாணி வழிப்பட்ட குழி, மாணிக்குழி ஆயிற்று.

122. திருத்தினை நகர்

புதுச்சத்திரம் ரயில் நிலையத்திலிருந்து வட மேற்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. சிவக்கொழுந்தீசர் இறைவனாகவும், பெரியநாயகி இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர். அதிசயிக்கத்தக்க வகையில் தினை விளைந்த காரணத்தால், `திருத்தினை நகர்' என்ற பெயர் ஏற்பட்டது.

123. தியாகவல்லி

கடலூர் புகைவண்டி நிலையத்துக்கு அருகில் உள்ள ஆலப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வட கிழக்கே, 3 கிலோமீட்டர் தொலைவில் திருச்சோபுரம் அமைந்துள்ளது. இந்த ஊரை தியாகவல்லி என்றும் அழைக்கிறார்கள். முதல் குலோத்துங்கச் சோழ மன்னனின் பட்டத்தரசி தியாகவல்லி, கோயிலை திருப்பணி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. சோபுரநாதர் இறைவனாகவும், சோபுரநாயகி இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர்.

124. திருவதிகை

பண்ருட்டி ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலையில் கெடிலம் ஆற்றின் வட கரையில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. மகேந்திரவர்மன் இங்கு குணதரவீச்சுரம் என்னும் கோயிலைக் கட்டினார். அதிகை வீரட்டநாதர் இறைவனாகவும், அதிகைநாயகி அம்மையாகவும் காட்சியளிக்கின்றனர்.

கெடிலம் ஆற்றுப் பாலம்
கெடிலம் ஆற்றுப் பாலம்

125. சிவபுரி

சிதம்பரத்திலிருந்து 2.5 கிலோமீட்டரில் திருநெல்வாயில் அமைந்துள்ளது. இது, தற்போது `சிவபுரி' என்று அழைக்கப்படுகிறது. உச்சிநாதர் இறைவனாகவும், கனகாம்பிகை இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர்.

126. காரைமேடு

சிதம்பரத்தை அடுத்த சிவபுரிக்கு அருகில் திருக்கழிப்பாலை அமைந்துள்ளது. காரைமேடு என்று தற்போது அழைக்கப்படுகிறது. பால்வண்ணநாதர் இறைவனாகவும், வேதநாயகி இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர்.

127. அண்ணாமலை நகர்

சிதம்பரம் அருகில் திருவேட்களம் அமைந்துள்ளது. இது தற்போது `அண்ணாமலை நகர்' என்று அழைக்கப்படுகிறது. பாசுபதேஸ்வரர் இறைவனாகவும், நல்லநாயகி இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர். வைகாசி மாதம் விசாக நாளில் அர்ச்சுனனுக்கு அம்பு கொடுக்கும் விழா சிறப்பாக நடைபெறும்.

128. திருநாரையூர்

சிதம்பரம் - காட்டுமன்னார்கோயில் சாலையில், சிதம்பரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாரை பூசித்த ஊர் என்பது ஐதீகம். தேவாரங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர். அவரால் பூஜிக்கப்பட்ட பொல்லாப்பிள்ளையாரும் இங்குள்ளார்.

129. திருக்கடம்பூர்

காட்டுமன்னார்கோயிலிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருக்கடம்பூர் அமைந்துள்ளது. மேலக்கடம்பூர் என்றும், கரக்கோவில் என்றும் இத்தலத்துக்குப் பெயர் உண்டு. கோயிலின் கருவறை தேர் போன்று அமைந்துள்ளது. அமுதகடேசுரர் இறைவனாகவும், சோதிமின்னம்மை இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர். மேலும், இக்கோயிலுக்கு 2 கிலோமீட்டர் தொலைவில், கீழக்கடம்பூரில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது.

130. திருநெல்வாயில் அரத்துறை

விருத்தாசந்த்தை அடுத்த பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், வெள்ளாற்றின் வட கரையில் அமைந்துள்ளது, திருநெல்வாயில் அரத்துறை. தற்போது திருவட்டதுறை என்று அழைக்கப்படுகிறது. அரத்துறையப்பர் இறைவனாகவும், ஆனந்தநாயகி அம்மையாகவும் காட்சியளிக்கின்றனர்.

131. திருத்துங்கானைமாடம் (பெண்ணாடம்)

விருத்தாசலத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்துங்கானைமாடம். தற்போது பெண்ணாடம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் விமானம், யானையின் முதுகு போல இருப்பதால், துங்கானை மாடக் கோயில் வகையைச் சார்ந்தது. கலிக்கம்ப நாயனார், அச்சுத களப்பாளர் வாழ்ந்த ஊர்.

132. திருநாவலூர்

பண்ருட்டியிலிருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருநாமநல்லூர். தற்போது திருநாவலூர் என்று அழைக்கப்படுகிறது, சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த ஊர். இங்குள்ள வரதராசப் பெருமாள் கோயில் நாவல் மரம், சுந்தரமூர்த்தி நாயனார் சிலை ஆகியவை காணத்தக்கவை.

133. விருத்தகிரீஸ்வரர் கோயில்

விருத்தாசலம் மணிமுத்தாற்றங்கரையில் மிகப் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நடு நாட்டுச் சிவ தலங்களில் முக்கியமானதாகும். சமயக்குறவர்களால் பாடல்பெற்ற இத்தலம், பிரம்மனும் அகத்தியரும் வழிப்பட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர், பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது ஐதீகம். இறைவன் பழமலைநாதராகவும், பெரியநாயகி விருத்தாம்பிகை ஆகியோர் இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர்.

134. விருத்தகாசி

விருத்தாசலத்தில் உயிர்விடும் எல்லா உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி, தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்றூவார். இறைவன் பழமலை நாதர், பஞ்சாட்சர உபதேசத்தை புரிந்தருளி, அந்த உயிர்களைத் தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பதால், விருத்தகாசி என்று வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது விருத்தகாசி. இங்கு மணிமுத்தாற்றில் நீராடி, மூலவர் பழமலை நாதரை வழிப்பட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

135. விருத்தகிரீஸ்வரரின் சிறப்புகள்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரம், நந்தி, கொடிமரம், தேர் என எல்லாம் ஐந்து, ஐந்தாக இருப்பது மற்றொரு சிறப்பாகும். மேலும், சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை லிங்கங்களாக இத்தலத்தில் முருகப் பெருமான் பிரதிஷ்டை செய்துள்ளார். இது, கோயிலின் வட மேற்கு பகுதியில் தனி சந்நிதானத்தில் உள்ளது.

136. விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று

முருகனுக்கு இருப்பதுபோல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில், முதல் வெளிப் பிராகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி, சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் ஆறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

137. திருக்கூடலையாற்றூர்

விருத்தாசலத்திலிருந்து கிழக்கில் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருக்கூடலையாற்றூர். மணிமுத்தாறு, வெள்ளாறும் கூடும் இடமாதலால் இப்பெயர் பெற்றது. நெறிகாட்டு நாயகர் இறைவனாகவும், புரிகுழலம்பிகை இறைவியாகவும் காட்சியளிக்கின்றனர்.

138. இராஜேந்திரப்பட்டினம்

விருத்தாசலத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவெருக்கத்தம்புலியூர். தற்போது இராஜேந்திரபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. திருநீலகண்டேசுரராக இறைவனும், நீலமலர்க்கண்ணியம்மையாக இறைவியும் காட்சியளிக்கின்றனர்.

139. வேலுடையன்பட்டு கோயில்

நெய்வேலியில், வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர், சித்திரகடாவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில், முருகனின் கையில் வேலுக்குப் பதிலாக வில் காணப்படும்.

140. நெய்வேலி நடராஜர் கோயில்

நெய்வேலி வட்டம் 16-ல், சிறப்பு வாய்ந்த நடராஜர் கோயில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் சிலை வெண்கலத்தால் ஆனது. இந்தச் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை எனக் கூறப்படுகிறது.

141. முகாசபரூர்

விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூர் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இவர் ஏழை எளிய மக்களுக்காக, தான் எழுதிய நூல்கள் மூலம் பல அரிய பொக்கிஷத்தை அள்ளிக் கொடுத்தவர். பிணிகளையும் வினைகளையும் அகற்ற வழி கண்டவர். செம்பு உலோகத்தைப் பொன்னாக்கி தன் குருவுக்குக் கொடுத்தவர். இவர், முகாசபரூரில் ஹரிக்கும் சிவனுக்கும் இடையே அமர்ந்த நிலையில் சமாதியாகியுள்ளார். இங்கு வியாழன்கிழமை, பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாள்களில் சிறப்பு பூசை நடைபெறும்.

142. கொளஞ்சியப்பர் கோயில்

விருத்தாசலம் நகரிலிருந்து மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில், மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ளது. கொளஞ்சி வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய கொளஞ்சியப்பர் ஆலயத்தில், பரிவார மூர்த்திகளாக முனியப்பர், வீரனார், இடும்பன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கு, பங்குனி உத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

143. பிராது கட்டுதல்

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில், தனிச் சிறப்பான வழிபாடு நடக்கிறது. திருமணத் தடை, குழந்தையின்மை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்க, கடன் பிரச்னை தீர எனப் பல்வேறு பிரச்னைகளில் துன்பப்படும் பக்தர்கள், கடிதமாக எழுதி, கொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். பின்னர், அந்தக் கடிதத்தை முனியப்பர் சன்னிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டிவிடுவார்கள். இப்படிச் செய்த 3 நாள்கள், அல்லது 3 வாரங்கள், அல்லது 3 மாதங்களுக்குள் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

144. பிணி தீர்க்கும் வேப்ப எண்ணெய்

மணவாள நல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, பிணி தீர்க்கும் வேப்ப எண்ணெய். கை கால்களில் வலி, காயம் மற்றும் பலதரப்பட்ட தோல் சம்பந்தமான நோய்களால் கஷ்டப்படும் பக்தர்கள், வேப்ப எண்ணெய்யை ஸ்ரீகொளஞ்சியப்பர் சந்நிதியில் வைத்து அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த எண்ணெய்யை அறுகம்புல்லால் தொட்டு, பிரச்னை உள்ள இடத்தில் தடவிவந்தால், நிவாரணம் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

145. வடலூர் இராமலிங்க வள்ளலார்

வடலூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர், வள்ளலார்தான். `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இராமலிங்க சுவாமி, வடலூரில் சத்திய ஞாச சபையை நிறுவினார். இந்தச் சபை, தாமரை வடிவில் எண்கோணமுடையதாகப் புதிய முறையில் காட்சியளிக்கிறது. இங்கு, தைப்பூச தினத்தில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி, ஒளி வடிவாய்க் காணும் தைப் பூச ஜோதி தரிசனம், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரம் அன்றும் ஜோதி தரிசனம் நடைபெறும்.

146. சித்தி வளாகம்

வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில், வள்ளலார் சித்திபெற்ற சித்தி வளாகம் அமைந்துள்ளது. இங்குதான் வள்ளலார் சன்மார்க்க உலகில் பெரும் புகழ்பெற்ற அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பாடியதும், வள்ளலார் ஞான யோக அனுபவங்களை ஆறாம் திருமுறையின் பிற்பகுதி பாடல்களைப் பாடினார். இங்கிருக்கும்போதுதான் தன் உடலைப் பிறர் பார்க்காதபடி மறைத்துக்கொண்டிருக்கும் அளவு சித்துக்களைப் பெற்றார்.

147. தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி

வடலூர் அருகில் உள்ளது கருங்குழி கிராமம். இந்தக் கிராமத்தில், வள்ளலார் இராமலிங்க அடிகளார் 1858 முதல் 1857 வரை தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்தபோதுதான் 1965ஆம் ஆண்டில், சமரச வேத சன்மார்க்க சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அதைத்தான் பிற்காலத்தில் `சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' என்று மாற்றியமைத்துள்ளார். மேலும், இங்கு வசிக்கும்போதுதான் நீரால் விளக்கை ஏற்றி அற்புதம் நிகழ்த்தியதாகத் தெரிவிக்கிறார்கள். அதனால், இந்த ஊருக்கு நற்கருங்குழி என்ற பெயரும் உண்டு.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #14 - கடலூர் 200 - இன்ஃபோ புக்

148. பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில்

சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில், பாபாஜி கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 1203ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், சுவேதநாத ஐயருக்கும் ஞானாம்பிகை தம்பதியினருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், நாகராஜா. இவர் பிறந்த இடம், வாழ்க்கை விபரம் பற்றி யோக முறையில் அவருடைய நேரடி சீடரான யோகி எஸ்.ஏ.ஏ. ராமையா தெரிவித்துள்ளார். யோகி ராமையா 1975ஆம் ஆண்டில், பாபாஜி பிறந்த இடத்தில் கோயில் கட்டியுள்ளார்.

149. திருவந்திபுரம் ஹயக்ரீவர்

கடலூரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில், ஔஷதகிரி மூலிகை மாலையின் உச்சியில் லஷ்மி ஹயக்ரீவர் கோயில் அமைந்துள்ளது. கல்விக் கடவுள் சரஸ்வதிக்கே கல்வி அறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். இவரைத் தரிசித்தால் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு பெருகும், குடும்ப கஷ்டம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கல்விக் கடவுள் என்று சொல்லப்படும் ஹயக்ரீவருக்குத் தமிழகத்திலேயே முதன்முதலில் கோயில் அமையப்பெற்ற தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம் என்பதால், ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூஜைக்கு உகந்த நாள். தினமும் காலை 8.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 வரையிலும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

150. சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில்

சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில், அனந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூலவராக அனந்தீஸ்வரரும் சௌந்தரநாயகி இறைவியாகவும் கட்சியளிக்கின்றனர். பதஞ்சலி தீர்த்தமாகவும் இருக்கிறது. இக்கோயில், நவராத்திரி, ஆனித் திருமஞ்சனம், கந்த சஷ்டி, அன்னாபிஷேகம், கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரையில் பதஞ்சலி புறப்பாடு நடைபெறும்.

151. சிதம்பரம் இளமையாக்கினார் கோயில்

சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்கு மேற்குத் திசையில், இளைமையாக்கினார் கோயில் அமைந்துள்ளது. வியாக்ரபாதர், நடராஜரின் ஆனந்த நடனத்தைக் காண விரும்பி, சிதம்பரம் வந்து, தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, குடில் அமைத்துத்தவமிருந்தார். இறைவன் அருளால் இவர் புலிக்கால் பெற்றதால், இத்தல இறைவன் திருப்புலீஸ்வரர் என்றும், திருப்புலீஸ்வரம் என்றும் பெயர்பெற்றது. திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த தலம் இது. நீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை மீண்டும் அளித்ததால், இறைவன் இத்தலத்தில் இளமையாக்கினார் எனப் பெயர்பெற்றார். தை மாதம் விசாக நட்சத்திரத்தில், திருநீலகண்டருக்கு திருவோடளிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கிருத்திகை அன்று கணம்புல்லருக்கும், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் பூஜை நடக்கும்.

152. சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெறும். நடனக் கலையின் தலைவர் நடராஜர். அவர் ஆடும் நாட்டியம் பிரபஞ்ச இயக்கம். இதன் அடிப்படையில், நடராஜப் பெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் விழா இது. ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியின்போது ஐந்து நாள்கள் நடைபெறும். வெளிநாடுகளிலிருந்தும் நாட்டியக் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டு, தங்கள் நாட்டியத்தை நடனக் கடவுளுக்கு சமர்பிப்பார்கள்.

153. பஞ்ச பூதத் தலங்கள்

சிவபெருமானின் ஐந்து பண்பு நலன்களை எடுத்துக்காட்டும் ஆலயங்களே பஞ்ச பூதத் தலங்களாக வழிபடப்படுகிறது. சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஆகியவை அந்தத் தலங்கள் ஆகும்.

154. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில்

கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடியில் புகழ்பெற்ற வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. வசிஷ்ட்டர் என்ற முனிவர் இங்கு வசித்ததால், திருவட்டக்குடி என்று அழைக்கப்பட்டு, திட்டக்குடி என்று மாறியது. இங்கு இறைவன் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்புரிவதால், வைத்தியநாத சுவாமி என்று பெயர் பெற்றுள்ளார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால், சுவாமிக்கு தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. நடுநாட்டு தலங்களில் சக்தி வழிபாட்டினை சிறப்பித்து கூறும் தலங்களில் முதன்மையானது. இங்கு வைத்தியாநாத சுவாமியையும், அசனாம்பிகை அம்மனையும் வழிப்பட்டால் நோய் குணமடையும் என்பது ஐதீகம். சுவாமி திருமண கோலத்தில் வீற்றிருப்பதால் இங்கு திருமணத்தை நடத்துவது சிறப்பு.

155. சிதம்பரம் நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல்பெற்ற தலம். இத்தலம், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லைக் கூத்தன் கோயில் என்றும், சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் இக்கோயில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். திருமூல நாதர் மூலவராகவும், நடராஜர் உற்சவராகவும், உமையாம்பிகை தாயாராகவும் அருள்பாலிக்கின்றனர்.

156. சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்ற பெயரில் பலரும் பல விதமான செய்திகளைப் பரப்பிவருகின்றனர். ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியலும், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்கள்தான் அந்த ரகசியம் என்று பலரும் சொல்கிறார்கள்.

157. பூமத்திய ரேகையில் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடம், உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி. மேலும், நடராஜர் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் `ஆனந்தத் தாண்டவம்' என்ற திருக்கோலம், காஸ்மிக் நடனம் என்று ஆய்வுகளால் கருதப்படுகிறது.

158. வானவியலின் உச்சக்கட்ட அதிசயம்

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கை அம்சங்களில் வானைக் குறிப்பது சிதம்பரம் நடராஜர் கோயில். காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், புவியைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்றும் சரியான நேர்க்கோட்டில், அதாவது 79 டிகிரி 41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இன்றைய அறிவியல் கருவிகள் உதவியுடன் நாம் பார்ப்பதை அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டிருப்பது அதிசயமாகும். இது பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் அடிப்படையில் அமைந்துள்ளது ஆச்சர்யம்.

159. பொற்கூரை

நடராஜர் கோயிலில் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது, மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவை சுவாசிப்பதைக் குறிக்கிறது. இந்த பொன்தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 72,000 எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கிறது.

160. பொன்னம்பலம்

நடராஜர் கோயிலில் பொன்னம்பலம் இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது, உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய 5 படிகள் ஏற வேண்டும். இந்தப் படிகள், பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சி,வா,ய,ந,ம என்ற 5 எழுத்தே அவை. இறைவன் இதயக் கமலத்தில் இடம்பெற ஐந்தெழுத்து மந்திரமே ஒரே வழி என்பதை உணர்த்துவதாக இது உள்ளது.

161. 28 ஆகமங்களைக் குறிக்கும் தூண்கள்

பொன்னம்பலத்தில் இருக்கின்ற 28 தூண்கள், 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிமுறைகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 குறுக்குச் சட்டங்களைக் கொண்டுள்ளது. இது 64 கலைகளைக் குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பலவித சட்டங்கள், மனித உடலில் ஓடும் ரத்தக்குழாய்களைக் குறிக்கின்றன.

162. மனித உடல் அடிப்படையில் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக்கூடிய நவ தூர வாயில்களைக் குறிக்கின்றன. அதனால், இந்தக் கோயில் மனித உடல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். மேலும், பொற்கூரையின் மேலிருக்கும் 9 கலசங்களும் நவ சக்திகளைக் குறிக்கின்றன. அர்த்த மண்டபத்திலுள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், அந்த மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபத்தின் 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றன.

163. தில்லைக் காளி கோயில்

சிதம்பரம் நகரின் புறநகர்ப் பகுதியில், தில்லைக் காளி கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் 1229 முதல் 1278ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நேரத்தில் கட்டப்பட்டுள்ளது. தெய்வமாகிய காளி தேவி, சிவபெருமானிடம் நாட்டியப் போட்டியில் தோற்றுவிட்டு இங்கு சென்றார் என்று புராணக் கதையில் கூறுப்பட்டுள்ளது.

164. ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோயில்

கடலூரிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே பாமா ருக்குமணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கோபுரம், ஏழுமலை மாடத்துடன் காட்சியளிக்கிறது. தினம் ஒரு கால பூஜை நடந்துவருகிறது. வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை தீபம், தைத் திருநாள் போன்றவை முக்கியத் திருவிழாக்கள் ஆகும்.

வடலூர்
வடலூர்

165. ஞானியார் மடம்

சைவமும் தமிழும் தழைத்தோங்க உருவாக்கப்பட்ட மடங்களில் ஒன்று, கடலூர் திருப்பாதிரிபுலியூரில் இருக்கும் ஞானியார் மடம். திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களை அறிந்துள்ள பலரும், ஞானியார் மடத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மடம் விளம்பரப்படுத்திக்கொள்ளாமலேயே சைவத்துக்கும், தமிழுக்கும் மிகப்பெரும் தொண்டாற்றிவருகிறது.

166. பரங்கிப்பேட்டை தர்காக்கள்

பரங்கிப்பேட்டையில் இஸ்லாமியத் துறவிகளுக்கு என நினைவுச் சின்னங்கள் உள்ளன. அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மீர் சாஹிப், மாலுமியார் ஆகிய இறையாளர்களின் பெயரால் தர்காக்கள் உள்ளன.

ஆன்மிக சான்றோர்கள்

167. அப்பர் எனும் திருநாவுக்கரசு நாயனார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூரில், புகழனார் - மாதினி தம்பதிக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருநீக்கியார். கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். தேவார மூவருள் இரண்டாமவர் என்றும் கூறுவர்.

168. சுந்தரமூர்த்தி நாயனார்

கடலூர் மாவட்டம், திருநாவலூர் கிராமத்தில், சடையானார்-இசைஞானியார் தம்பதிக்குப் பிறந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன். இவர், சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர், பல தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியுள்ளார், இப்பாடல்களைத் ‘திருப்பாட்டு' என்றும் ‘சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பார்கள்.

169. வள்ளலார்

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார், வடலூர் அருகே உள்ள மருதூரில் இராமையா பிள்ளை-சின்னம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆறாவது மாதத்தில் தந்தையை இழந்தார். அதன்பின்பு, தயாருடன் சென்னை அருகே பொன்னேரி, ஏழுகிணறு ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பாடியவர். வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியவர், கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

170. தருமசாலை

1867ஆம் ஆண்டில் தருமசாலையைத் தொடங்கினார் வள்ளலார். இங்கே வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அன்று வள்ளலார் பற்றவைத்த அடுப்பு, இன்று வரை அணையாமல் உணவு தயாரிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது. மக்களின் துயரங்களில் ஒன்றான பசியைப் போக்கிட வழி வகுத்த வள்ளலார் பெயரால், லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது.

171. ஆறுமுக நாவலர்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நல்லூர், என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு கந்தப்பிள்ளை - சிவகாமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஆறுமுக நாவலர். சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவ சமய வளர்ச்சி ஆகியவற்றுக்காகப் பணிபுரிந்தவர். தமிழகம் வந்த ஆறுமுக நாவலர், சைவ சமய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிவிட்டு, சிதம்பரம் வந்தார். 1864ஆம் ஆண்டில், சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.

172. ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள்

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள், வைணவ நெறியையும், மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர். சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் திம்மண்ணபட்டர் - கோபிகாம்பாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர். இயற்பெயர், வேங்கடநாதன். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும். இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிந்துகொண்டிருப்பதாகவும் அவரை பின்பற்றுவோர் நம்புகிறார்கள். ஆந்திராவிl மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில், உயிருடன் ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

173. பதஞ்சலி முனிவர்

இன்று உலகமெங்கும் பின்பற்றப்படும் யோகக் கலையை முறையாக வகுத்தவர் பதஞ்சலி முனிவர்.இவரின் யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய ‘பதஞ்சலி யோக சூத்திரம்' என்ற நூல், யோக கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. சிதம்பரம் வந்த பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதருடன் நடராஜரின் திருநடனம் கண்டு மகிழ்ந்துள்ளார். சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயிலில், பதஞ்சலி சந்நிதி உள்ளது. யோக கலையை எழுதிய பதஞ்சலிக்குத் தனி சந்நிதி இருப்பதால், யோகாசன கலையில் தேற விரும்புபவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். நாகதோஷம் நீங்கவும், கல்வி கலைகளில் சிறந்த இடம்பெறவும் பதஞ்சலியை வணங்குகிறார்கள்.

174. நந்தனார்

நடராஜரைக் காண்பதற்கு சிதம்பரம் வந்த நந்தனார், ஊருக்குள் வரத் தயங்கி ஊருக்கு வெளியிலிருந்தே கோபுரத்தைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கியிருந்துள்ளார். அன்றிரவு தில்லை வாழ் அந்தணர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கனவில் நடராஜர் தோன்றி, நந்தனாரை சிறப்புகள் செய்து அழைத்து வாருங்கள் எனக் கூறியுள்ளார். உடனே அவரை பூரண மரியாதையுடன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லும்போது, ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நடராஜர் சொன்னது உண்மை என்றால், அக்னி பரீட்சை வைப்போம் என்கிறார். அதற்கு உடன்பட்ட நந்தனார், கொழுந்துவிட்டு எரியும் குண்டத்தில் ஈசனை நினைத்தவாறே இறங்கியுள்ளார். அதன்பின்பு, பட்டாடை உடுத்தி அழகிய தெய்வீக தோற்றத்துடன் வெளிப்பட்டுள்ளார். கோயிலுக்குச் சென்ற நந்தனார், நடராஜரை வணங்கி, கருவறைக்குள் நுழைந்து பெரும் ஜோதியாக இறைவனுடன் ஐக்கியம் ஆனதாகக் கூறப்படுகிறது.

175. சேக்கிழார்

இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார், பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக்கொண்டு பெரிய புராணம் எழுதியுள்ளார். இரண்டாம் குலோத்துங்கச் சோழன் ஆணைப்படி சிதம்பரம் வந்த சேக்கிழார், அங்கு கோயில்கொண்டிருக்கும் இறைவன் நடராஜர் அடியெடுத்துக் கொடுக்க, பெரியபுராணத்தை எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

அரசியல்வாதிகள்

176. கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்கள்

சென்னை மாகாண முதலமைச்சர் சுப்புராயலு செட்டியார், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி நிறுவனர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் ஜெயகாந்தன், புதுவை முன்னாள் முதல்வர் வி.வைத்தியலிங்கம் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் பிறந்த முக்கியத் தலைவர்கள்.

177. மாநில தலைவர்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க. மாநில பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தின் தலைவர் வேல்முருகன் ஆகியோரும் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்கள்.

178. கடலூர் அஞ்சலையம்மாள்

கடலூர் அஞ்சலையம்மாள், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை. 1890ஆம் ஆண்டு, கடலூர் முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தார். மகாத்மா காந்தி 1921ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதில் பங்கேற்ற தென் இந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும் வீட்டையும் விற்று விடுதலைப் போராட்டத்துக்கு உதவினார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், மறியல் போராட்டம், தனியார் அறப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

179. குழந்தையுடன் சிறையில் அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள், 1921ஆம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில், தனது 9 வயது குழந்தை அம்மாகண்ணுவுடன் பங்கேற்றார். அப்போது கைதுசெய்யப்பட்போது, குழந்தையையும் சிறையிலேயே வளர்த்தார். இருவரையும் சந்திக்க வந்த காந்தியடிகள், அம்மாகண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறு பெயரிட்டு, தன்னுடன் வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.

180. தென் இந்தியாவின் ஜான்சி ராணி

காந்தியடிகள் 1922ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, கடலூர் வழியாகக் கும்பகோணம் சென்றார். அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என முடிவுசெய்தார் அஞ்சலையம்மாள். ஆனால், காந்தியைச் சந்திக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து குதிரை வண்டியில் வந்து சந்தித்தார். அஞ்சலையின் துணிவைப் பாராட்டிய காந்தியடிகள், அவரை தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைத்தார்.

181. கர்ப்பிணியாகச் சிறைவாசம்

தடையை மீறி காந்தியடிகளைச் சந்தித்தார் என்பதற்காக, கர்ப்பிணியாக இருந்த அவரை ஓராண்டு சிறையில் அடைத்தனர். சிறையிலேயே குழந்தை பிறந்ததால், பரோலில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் பிறந்த ஆண் குழந்தைக்கு ஜெயில் வீரன் என்று பெயரிட்டார். பின்னர், குழந்தைக்கு 3 மாதமாக இருந்தபோது, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

182. சிலையை உடைத்த அஞ்சலையம்மாள்

மக்களைக் கொன்று குவித்த ஆங்கிலேயப் படைத் தளபதி நீலன் என்பவருக்குச் சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலையை அகற்றும் போராட்டத்தை அஞ்சலையம்மாள் முன்னின்று நடத்தினார். கையில் வைத்திருந்த கோடாரியால் சிலையை வெட்டி உடைக்க முயன்றபோது, ஆங்கிலேயர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினார்கள். இவருக்கும் கணவர் முருகப்பாவுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

183. மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர்

தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர் அஞ்சலையம்மாள். ‘சுதந்திரம் ஒன்றே குறிக்கோள், அதை அடையாமல் சாகமாட்டேன்' என்று முழக்கமிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

184. கி.வீரமணி

கடலூர் மாவட்டம், முதுநகரில் 1933ஆம் ஆண்டில் பிறந்தவர் கி.வீரமணி. இவரின் இயற்பெயர் சாரங்கபாணி. பத்தாவது வயதில் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து பெரியாரால் கட்சியின் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பெரியார், மணியம்மை ஆகியோரின் மறைவுக்குப் பிறகு இயக்கத்தை நடத்திவருகிறார். 2003ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவற்றின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

185. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி

கடலூரில் பிறந்தவர் சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி. பின்னாளில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி என்று அழைக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையிலும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். முன்னாள் அமைச்சரான இவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்து சட்டமன்றத்தில் இவரது படத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். கடலூரின் மஞ்சக்குப்பத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

186. சுப்புராயலு ரெட்டியார்

1855 அக்டோபர் 15ஆம் தேதி, விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சுப்புராயலு ரெட்டியார். சென்னை மகாணத்தில் இரட்டை ஆட்சிமுறையின் கீழ் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில், நீதிக்கட்சி வெற்றிபெற்ற பிறகு, மாகாணத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 மாதங்களே முதல்வராக இருந்தவர், 1921 ஜூலை 11ஆம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். நவம்பர் மாதம் காலமானார்.

187. பூவராகவன்

கடலூர் மாவட்டம், இருப்பு கிராமத்தில் பிறந்தவர் பூவராகவன். முன்னாள் முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

188. சிதம்பரம் ஜெயராமன்

சிதம்பரத்தில் பிரபல கர்நாடக இசை வாய்ப்பட்டுக் கலைஞரான சுந்தரம் பிள்ளையின் மகன், ஜெயராமன். நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகரும் ஆவார். 1940 முதல் 1970 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘பராசக்தி' படத்தில் வரும் ‘கா... கா... கா...', ‘ரத்த கண்ணீர்' படத்தில் வரும் ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்..' பாடல் உள்பட பல்வேறு பாடல்கள் புகழ்பெற்றவை.

189. வழக்கறிஞர் இளம் வழுதி

கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தி.மு.க-வின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர். தி.மு.க-வின் முதல் வழக்கறிஞரும், முதல் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் ஆவார். மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்.

190. பண்ருட்டி ச.இராமச்சந்திரன்

கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் பிறந்தவர் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ச.இராமச்சந்திரன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் அமைச்சரவைகளில் அங்கம் வகித்தவர்.

191. தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன். இவர் 2001ஆம் ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பாட்டாளி மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். 2012ஆம் ஆண்டில், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார்.

திரைஉலகப் பிரபலங்கள்

192. தங்கர்பச்சான்

திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகம் படைத்த தங்கர்பச்சான், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்தரக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். `அழகி,' `பள்ளிக்கூடம்,' `ஒன்பது ரூபாய் நோட்டு,' `சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' உள்பட பல திரைப்படங்களை இயங்கியுள்ளார். மேலும், வ.கவுதமன், பாரதி, வீரபாண்டியன், கே.ஆர்.ஜெயா போன்ற இயக்குநர்களும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே.

இலக்கியவாதிகள்

193. ஜெயகாந்தன்

1934 ஏப்ரல் 24ஆம் தேதி, தண்டபாணி-மகாலெட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஜெயகாந்தன். முருகேசன் என்ற இயற்பெயரை, ஜெயகாந்தன் என மாற்றிக்கொண்டார். தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் முக்கியமானவர். திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர்.

194. கவிஞர் அறிவுமதி

விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணணூரில் பிறந்தவர், கவிஞர் அறிவுமதி. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். திரைப்படப் பாடலாசிரியராகவும் உள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். மதியழகன் என்பது இயற்பெயர். தனது நண்பர் அறிவழகன் பெயரையும், தனது பெயரையும் சேர்த்து அறிவுமதி என்று வைத்துக்கொண்டார்.

195. குறிஞ்சி வேலன்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர், சாதித்ய அகாடமி விருதுபெற்ற குறிஞ்சி வேலன். ‘திசை எட்டும்' என்ற காலாண்டிதழின் ஆசிரியர். கால்நடை ஆய்வாளராகத் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார். பொற்றேகாட் எழுதிய ‘விஷக்கண்' நாவலின் மொழிபெயர்ப்புக்காக, 1994ஆம் ஆண்டில் சாதித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, மணிமேகலை மன்ற விருது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் சிறந்த எழுத்தாளர் விருது பெற்றுள்ளார். தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் சிறந்த சிற்றிதழ்கான பரிசு உள்பட பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

196. ஆயிஷா இரா.நடராசன்

கடலூரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நடந்தேறும் உளவியலை மையமாக வைத்து இவர் எழுதிய ‘ஆயிஷா' என்கிற சிறார் குறு நாவல், இன்று வரை லட்சம் பிரதிகள் கடந்து, விற்பனையாகின்றது. பள்ளி முதல்வராக இருக்கும் இவருக்கு 2014ஆம் ஆண்டு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

197. இமயம்

கழுதூர் கிராமத்தில் பிறந்தவர், எழுத்தாளர் இமயம். இவரது இயற்பெயர் அண்ணாமலை. தனது முதல் புதினமான ‘கோவேறு கழுதைகள்' மூலம், தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘செடல்', ‘எங் கதெ' போன்ற புதினங்களும், சிறுகதை தொகுதிகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் திரு.வி.க. விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, கனடா நாட்டின் இயல் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

198. சு.தமிழ்செல்வி

விருத்தாசலத்தில் வசித்துவருகிறார் தமிழ்செல்வி. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருபவர். ‘மாணிக்கம்', ‘கீதாரி' உள்பட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரின் ‘மாணிக்கம்' என்ற நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருது பெற்றுள்ளது. ‘கீதாரி' என்ற நாவல், சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘கிட்ணா' என்ற பெயரில் திரைப்படமாக வர இருக்கிறது.

199. கண்மணி குணசேகரன்

விருத்தாசலம் அருகே உள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விருத்தாசலம் பணிமனையில் பணிபுரிந்துவருகிறார். அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி, பூரிணி பொற்கலை உள்பட பல நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘நடு நாட்டுச் சொல்லகராதி' என்னும் நூல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசைப் பெற்றுள்ளது.

விளையாட்டு வீரர்

200. கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்

பிரபல கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கடலூரில் பிறந்தவர். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த தொடக்க ஆட்ட வீரராக இருந்தவர்.அதிரடி ஆட்டக்காரர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராகவும், தேர்வுக் குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

உதவி: கே.ஆர்.ராஜமாணிக்கம்

நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை